பகடையாட்டம் (புதினம்)

(பகடையாட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் எழுதிய இரண்டாவது தமிழ் நாவல். 2003ல் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது 200 பக்கங்களைக் கொண்டது.

இந்தியாவின் வட எல்லையில் இமையமலையடுக்குகளுக்குள் கதை நிகழ்வதாகப் புனையப்பட்டுள்ளது. திபெத்தின் அருகே உள்ள ஒரு கற்பனை நகரத்தில் (திபெத்தை நினைவுறுத்தும் சோமிட்சியா என்ற சிறிய நாடு) கதை நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மலைப்பகுதியில் ஒரு மடாலயம் உள்ளது. அதன் மதத் தலைவரும் அரசியல் அதிபருமாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர் சோமிட்சு (லாமா) இந்தியாவுக்குத் தப்பிவருவதன் பின்னணிதான் கதை. அவரது அமைச்சரும் காவலருமான ஈனோங் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்து தப்பி இந்தியாவரும் சோமிட்சு இமையமலைச்சாரலில் இந்திய ராணுவ முகாமில் இருக்கும் மேஜர் கிருஷ் முன் சரணடைகிறார்.

அன்றிரவு மர்மமான முறையில் அவர் காணாமல் போகிறார். மேஜர் கிருஷ் அதன் விளைவுகளால் பதவி இழந்து மனம் உடைந்து ஊர் திரும்புகிறார். எளிமையாகச் சொல்லப்போனால் இந்நாவலின் கதை இதுதான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனான பஞ்சன்லாமா திபெத்தில் இருந்து தப்பி இந்தியா வந்த உண்மைச் சம்பவத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை இது. சோமிட்சு தப்பி ஓடியது ஒரு சிறிய ஆனால் முக்கியமான அரசியல் நிகழ்வு. ஏராளமான மனிதர்கள் அதனுடன் மிகப்பெரிய வலையொன்றால் பிணைக்கப்பட்டவர்கள் போலத் தொடர்புகொண்டுள்ளனர். அவ்வரசியல் நிகழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாகப் பாதிக்கிறது.

கதை வடிவம்

தொகு

இந்நாவலின் நோக்கம் அதன் வடிவில்தான் வெளிப்படுகிறது. இந்நாவல் எதையும் முடித்துச் சொல்ல முயலவில்லை. உண்மையில் ஒன்றோடொன்றுச் சிக்கிச்சிக்கி விரியும் நிகழ்ச்சிகளின் இயக்கத்தை மட்டும் சித்தரித்துக் காட்டிவிட்டு நின்றுவிடுகிறது. இதன் அனுபவமும் செய்தியும் இவ்வடிவில்தான் உள்ளது. இது வாசகனுடன் பகடையாட விழையும் நாவல். நாவலுக்குள் நிகழ்ச்சிகளின் பின்னலுக்குள் உள்ள அதே பகடையாட்டத்தை நாவலாசிரியனும் வாசகனுடன் ஆடுகிறான்.

பல்வேறு கதைக்கோடுகள் இதில் உள்ளன. மேஜர்கிருஷின் கதை ஒருகோடு. அதை மீட்டுச்சொல்லும் சந்திரசேகரின் நோக்கு ஒரு கோடு. சூலியசு லுமும்பா, வேய்சு முல்லர் போன்ற பயணிகளின் கதைகள் தனிக்கோடுகள். நேரடியாகச் சொல்லப்படும் சோமிட்சியாவின் நிகழ்வுகள் ஒரு கோடு. இவற்றைத் தன் வசீகரமான மர்ம மொழியில் குறுக்காக ஊடுருவும் சொமிட்சிய மத- சோதிட மூலநூலின் தத்துவமும் தொன்மமும் கலந்தச் சொற்களினாலான ஒரு கோடு. பின்னிபின்னி வண்ணப்பூக்களும் கொடிச்சுருள்களுமாக விரியும் காஷ்மீர் கம்பளம் போன்றது இதன் கதை. இக்கோடுகளின் பின்னலை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருப்பதே இந்நாவலின் கலையனுபவமாகும். பல்வேறு கோணங்களில் பல கதைகளைச் சொல்லி அவற்றை இணைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் யுவ சந்திரசேகர். மாற்று யதார்த்தம் என அவர் சொல்லும் ஓர் உண்மையை இந்நாவலிலும் அவர் சொல்லியிருக்கிறார். மர்ம, திகில் கதைகளுக்கு உரிய வடிவத்தை இதற்கு யுவன் தெரிவுசெய்துள்ளார். உத்வேகமான வாசிப்பனுபவத்தைக் கடைசி வரை அளிக்கக் கூடியதாக உள்ளது இந்த வடிவம்.

மொழி நடை

தொகு

யுவனின் இந்நாவலில் குறைந்தது ஐந்து வகையான வேறுபட்ட மொழிநடைகளின் அழகிய பின்னலைக் காணலாம். புராதன நூல் ஒன்றின் எளிமையும் மர்மமும் கொண்ட சோமிட்சிய மதநூலின் மொழி. நேரடியாகக் கதைசொல்லும் ஹெமிங்வேதனமான மொழி. கிராமத்து நிகழ்வுகளை எளிய மதுரை வட்டாரக்கொச்சை உரையாடலுடன் சொல்லும் மொழி. ஐரோப்பிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பகுதிகள், லுமும்பாவின் பழமொழிகள் மண்டிய ஆப்ரிக்க மொழி என இந்நாவல் உருவாக்கும் அனுபவத்தை நம்பகமாக நிறுவுவதில் இம்மொழி உத்திகள் முக்கியமான வெற்றியை அடைந்துள்ளன.

இந்நாவலின் முக்கியமான இன்னொரு கூறு மெல்லிய நகைச்சுவையுடன் கச்சிதமான மொழியில் ஆங்காங்கே மின்னிச்செல்லும் தத்துவார்த்தமான அவதானிப்புகள் எனலாம். அவை நாவலின் பகடையாட்டத்தைத் தத்துவதளத்துக்கு நகர்த்தி வாசகனைப் புதிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இவை, வாசிப்பை ஆர்வமூட்டும் அனுபவமாக்கும் துளிகளாக நாவலெங்கும் பரந்துகிடக்கின்றன. வேடிக்கையான ஆனால் ஒருவகையான முழுமை கொண்ட தர்க்கத்துடன் முன்வைக்கப்படும் இந்தச் சோமிட்சியப் பிரபஞ்சத் தரிசனம் நாவல் முழுக்க விரிந்து அந்தத் தத்துவச் சிந்தனைகளையும் வேடிக்கையாக மாற்றிக் காட்டுவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க அனுபவங்களுள் ஒன்று எனலாம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடையாட்டம்_(புதினம்)&oldid=2058780" இலிருந்து மீள்விக்கப்பட்டது