பகழிக் கூத்தர்

தமிழ்ப்புலவர்

பகழிக் கூத்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை செம்மையாகக் கற்றிருந்த தமிழ்ப்புலவர்.[1] வைணவரான இவர் தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சன்னாசி என்னும் சிற்றூரில் தர்பாதனர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவ்வூர் அந்நாளில் சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட செம்பிநாடு என்னும் பகுதியில் இருந்தது. இவர் தமிழிலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். "திருமாலைத் தவிர வேறு எக்கடவுளையும் போற்றிப்பாட மாட்டேன்" என்று உறுதிபூண்டிருந்த தீவிரமான வைணவர். 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் தொகு

பகழிக் கூத்தர் ஒருமுறை கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டார். வைணவத் தொழுகை அந்நோயைக் குணப்படுத்தவில்லை. எனவே, "தனக்குள்ள வயிற்று நோயைத் தீர்த்து வைத்தால் உன் மீது பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" எனத் திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிக்கொண்டார். வயிற்றுவலி சில நாள்களிலேயே தீர்ந்துவிட்டது. எனவே தனது நேர்ச்சையின்படி திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தை 103 பாடல்களில் பாடினார் என்பது தொன்மம். அந்நூல் திருச்செந்தூர் கோயிலில் புலவர்கள் பலரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. இந்நூல் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, அலங்காரம் முதலிய அனைத்தும் ஒரு சேர அமையப் பெற்ற நூலாக அமைந்துள்ளது.

சபையோர் இவரது பிள்ளைத்தமிழின் சிறப்பை உணர்ந்திருந்தும் இவருக்குரிய மரியாதை செய்யாமல் பாராமுகமாய் இருந்து விட்டனர். முருகப்பெருமான், தமிழால் தம்மைப் பாடுவோருக்குத் தாம் செய்யும் அருளைக் காட்டுவதற்காகத் தாமே தமது மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தைப் பகழிக் கூத்தர் உறங்கிக்கொண்டிருந்த போது பகழிக்கூத்தரின் மார்பில் அணிவித்துவிட்டுச் சென்றார். மறுநாள் முருகப்பெருமானின் மாணிக்கப்பதக்கம் காணாது தேடித் தம் தவறுணர்ந்த சபையோர் பகழிக் கூத்தரைப் பல்லக்கிலேற்றிச் சென்று பலவாறு சிறப்பித்தனர்.[2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகழிக்_கூத்தர்&oldid=3292095" இலிருந்து மீள்விக்கப்பட்டது