படையல் என்பது இந்து சமய வழக்கங்களில் கடவுளைத் தொழும்போது வைத்து வணங்கப்படும் பொருட்களையும், உணவுப் பண்டங்களையும் குறிக்கும். பொதுவாக தமிழர் கலாச்சாரத்தில், கடவுளின் படங்களுக்கோ, சிலைகளுக்கோ சூடம் காட்டி, தேங்காய் உடைத்த பிறகு அனைவருக்கும் படையல் பரிமாறப்படும்.

தீபாவளிப் பண்டிகைக்காகப் படைக்கப்பட்டுள்ள பொருட்கள்
குலப்படையல்

குலப் படையல் மக்கள் குழுவாகக் கூடியிருந்து படைப்பதும் உண்டு. விசேஷ நாட்களில் சாமிவீடு என அழைக்கப்பெறும் இடத்தில் இப்படையல் நடந்தேறும். இதனோடு சேர்த்து சாமியாடுதலும் அருள்வாக்குப் பெறுதலும் நடக்கும்.

முன்னோருக்குப் படையல்

தொகு
 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில், ஒரு வீட்டில் முன்னோருக்கு இடப்பட்ட படையல்

தமிழர் சமூகங்கள் பலவற்றில் முன்னோர்களுக்கு அவர்கள் இறந்த நாளிளோ அல்லது வேறு ஏதாவது நாளிலோ ஆண்டுக்கு ஒருமுறை படையளிடும் வழக்கம் உள்ளது. படையளிடும் நாளில் முன்னொரின் படத்தை வைத்தோ அல்லது வைக்காமலோ முன்னோருக்கு புதிய வேட்டி, துண்டு, சேலை ஆகியவற்றையும், வடை, பாயாசம் ஆகியவற்றொடு மூன்று வாழை இலைகளில் உணவு பதார்தங்களை படையலிட்டு வழிபடுவர். அந்த மூன்று இலைகளில் உள்ள ஒரு இலையில் வைக்கப்பட்ட உணவை காக்கைகளுக்கு வைத்து அந்த காக்கைகள் உண்ட பின்னரே உண்பர். முன்னோர் காக்கைகள் வடிவில் வந்து படையல் உணவை உண்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது. சில சமயம் காக்கைகள் உண்ண வரவில்லையானால், பசுவுக்கு அந்த உணவை அளித்து உண்ணச்செய்து பிறகு உண்பர். படையலிட்ட இலையில் உள்ள உணவை குடும்ப உறுப்பினர்களில் இலைகளுக்கு பகிரப்பட்டு உண்ணப்படும். வீட்டுப் பிள்ளைகளுக்குத் திருமணம் என்றால், குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்பு முன்னோர்களுக்கு படையல் போடும் வழக்கம் உள்ளது.

நகரத்தார் படையல்

தொகு

நகரத்தார் இல்லங்களில் ஆண்டுக்கு ஒருமுறை ‘படைப்பு’ என்னும் படையல் இடுகின்றனர். இதில் அந்தக் குடும்பத்தின் அத்தனை கிளைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வர். ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பனை நார் பேழையில் (இப்போது வயர் கூடையில்) முந்தைய ஆண்டு முன்னோருக்கு வைத்துப் படைத்த துணிமணிகள் இருக்கும். படைப்பு நாளில் அந்த வீட்டின் ஆண்கள் இந்தப் பேழையை எடுத்துக் கொண்டு அந்த ஊரின் நல்ல தண்ணீர் ஊருணிக்கு செல்வார்கள். அங்கே, முன்னோர்களின் துணிகளைத் துவைத்து அங்கேயே காயவைத்து, மடித்து பேழையில் வைத்து எடுத்துக் கொண்டு வீடு திரும்புவார்கள். அந்த வருட படையலுக்காக எடுத்திருக்கும் புதுத் துணிகளையும் ஊருணியில் நனைத்துச் செல்வதுண்டு.

மாலையில், கருப்பட்டி பணியாரம் சுட்டு, பால் சோறும் வடையும் வைத்து முன்னோருக்கு படையல் தயாராகும். வாழைக்காயும் கத்தரிக்காயும் படையலில் கட்டாயம் இருக்கும். இத்துடன் தங்களுக்குப் பிடித்தமான பதார்த்தங்கள், வேட்டி - சேலை, உள்ளிட்டவைகளை வைப்பதுண்டு. பிள்ளைகளுக்கு படிப்பு வரவேண்டும் என்பதற்காக நோட்டுப் புத்தகங்களையும் வாங்கி வைக்கிறார்கள். மூன்று அல்லது ஐந்து இலைகளில் படையல் போடுவர். பூசை முடிந்ததும் இந்த இலைகளில் யார் சாப்பிடுவது என்பதில் கணக்கோடு, ஒரு இலையை படைப்பு வீட்டாருக்கு ஒதுக்கிவிட்டு மீதி இலைகளில் உள்ளவற்றை பகிர்ந்து உண்பர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. குள. சண்முகசுந்தரம் (13 சூலை 2017). "நல்லது சொல்லும் நகரத்தார் படைப்பு வீடு". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படையல்&oldid=3577691" இலிருந்து மீள்விக்கப்பட்டது