பண்டாரவன்னியன் (கூத்து)

பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலப்பரப்பில் அரசாண்ட ஒரு குறுநில மன்னனின் காவியம் ஆகும். இது கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டது. இக்காவியம் தென்மோடிக் கூத்து வடிவத்தில் முல்லைமணி வே. சுப்பிரமணியத்தினால் வடிவமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இது முள்ளியவளையில் வழங்கி வரும் கோவலன் கூத்தை ஒத்த மெட்டிலேயே பாடப்பட்டும் அதே பாணியிலேயே ஆடப்பட்டும் வருகிறது. இவை வடமோடி, தென்மோடி வரையறைகளில் அடங்காமல் பிரத்தியேகமான 'முல்லைமோடி' என்றழைக்க கூடிய தனிப்பாணியில் இருப்பதாக பேராசிரியர் சு. வித்தியானந்தன் கூறியுள்ளார்.

கதைதொகு

பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான்.

அவனது ஒரே சகோதரி பெயர் நல்லநாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவைப் புலவன் அவள் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னனான காக்கைவன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்கக் கண்ட காக்கைவன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்தச் சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை மன்னன் அறிந்து அவர்களின் காதலுக்கு சம்மதிக்கிறான்.

வன்னியில் பண்டாரவன்னியன் திறை செலுத்த மறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டிப் பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர்.

அத்தருணத்தில் காக்கைவன்னியன் பண்டரவன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, தான் திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க் கவேண்டாமென்ற ஆலோசனையையும் மீறி "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக் கொள்கிறான். மன்னனைத் தனிய கூட்டிவந்து ஒட் சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் காக்கைவன்னியன்.

இன்றும் நம்பி துரோகம் செய்பவர்களை "நீ காக்கை வன்னியன் பரம்பரையோ" என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது.