பதனி டோலா படுகொலை

பதனி டோலா படுகொலை என்பது பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற நிலப்பிரபுக்களின் படை படுகொலை செய்த நிகழ்வாகும்.

பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தின் கீழ்வெண்மணிப் படுகொலைகளுக்கு இணையானது. அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.) லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர். ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.

பின்னணி

தொகு

இந்தியாவில் நிலவுடமை சமூகத்தின் கொடுங்கோன்மை நிலவும் மாநிலங்களில் பீகார் முக்கியமானது. பார்ப்பன, பூமிகார், ராஜ்புத், லாலா முதலான சாதிகள் பீகாரின் கிராமப்புறங்களை சொத்துடமை – அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றனர். குறிப்பாக பூமிகார், ராஜ்புத் சாதிகளின் பணக்கார பிரபுக்கள் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களைக் கொடூரமாக அடக்கிக் கொடுமைப்படுத்துகின்றனர்.

1970களில் இருந்து நக்சலைட் இயக்கம் இம்மக்களின் மீதான கொடுமையை முறியடிக்க போராட ஆரம்பித்தது. பார்ட்டி யூனிட்டி, எம்.சி.சி (இந்த இரண்டு குழுக்களும் மக்கள் யுத்தக் குழுவுடன் இணைந்து தற்போது மாவோயிஸ்ட்டு கட்சியாக செயல்படுகின்றனர்), லிபரேஷன் போன்ற நக்சலைட்டு கட்சிகள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களை அணிதிரட்டி போராட ஆரம்பித்தனர். இவற்றில் எம்.சி.சி எனப்படும் மாவோயிசக் கம்யூனிச மையத்தின் பங்களிப்பு பிரதானமானது.

தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சலைட்டு கட்சிகளில் சேர்ந்து ஆயுத பாணியாகி நிலப்பிரபுக்களின் நிலங்களைக் கைப்பற்றி நிலமற்ற வறிய விவசாயிகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்தது, நிலப்பிரபுக்களின் குண்டர் படையை உடனுக்குடன் எதிர்த்து முறியடித்தது, கூலி விவசாயிகள் தங்களது கூலியை உயர்த்தக் கோரி போராடியது, தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் வன்முறை செய்யும் ஆதிக்க சாதி வெறியர்கள் நக்சலைட்டுகளின் மக்கள் மன்றத்தில் தண்டிக்கப்பட்டது என்ற தொடர்ச்சியான போராட்டத்தால் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் கோபமடைந்தனர்.

90களில் பண்ணையார்கள் சாதிக்கொரு குண்டர் படையை நிறுவி நக்சலைட்டுகளை ஒழிக்க முயன்று வந்தனர். ஆளுக்கொரு பகுதி என சிறிய அளவில் செயல்பட்டு வந்த அந்த படைகளில் முக்கியமான சவர்னா சேனா, சன்லைட் சேனா போன்றவை இணைந்து ரன்வீர் சேனா தோன்றியது. ரன்வீர் சேனா 1994 ஆம் ஆண்டு போஜ்பூர் மாவட்டத்தில் பிரம்மேஸ்வர் சிங்கால் தோற்றுவிக்கப்பட்டது.

படுகொலை

தொகு

ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய மூன்று மணி நேர தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும். இந்தப் படை நூற்றுக்கணக்கில் தலித் மக்களைக் கொடூரமாக கொன்றிருக்கிறது. 'பெண்களையும், குழந்தைகளையும் கூட இரக்கமில்லாமல் கொன்றதற்கு காரணம், குழந்தைகள் வளர்ந்து நக்சலைட்டுகளாகி விடுவார்கள், பெண்கள் அத்தகைய எதிர்கால நக்சலைட்டுகளை பெற்றுக் கொடுக்கிறார்கள்' என்று ரன்வீர் சேனா அறிவித்தது.

வழக்குகளும் தீர்ப்புகளும்

தொகு

கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்து வந்தது. இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010 இல் தீர்ப்பளித்தது. பாட்னா உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது

பின் விளைவுகள்

தொகு

ரன்வீர் சேனாவின் தலைவர் பிரம்மேஷ்வர் சிங், ஜூன் 1 – 2012 அன்று பீகார் மாநிலம், போஜ்பூர் மாவட்டத் தலைநகர் ஆராவில் சுட்டுக் கொல்லப்பட்டான். நவாதா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கட்டிரா மொஹல்லா என்ற இடத்தில் இவன் காலை நடைப் பயிற்சிக்கு சென்ற போது ‘அடையாளம்’ தெரியாத ஆறு பேர் சுட்டுக் கொன்றனர்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதனி_டோலா_படுகொலை&oldid=2221463" இலிருந்து மீள்விக்கப்பட்டது