பத்துப்பின் பௌலிங்

பத்துப்பின் பௌலிங் (Ten-pin bowling) என்பது போட்டியிட்டு விளையாடும் ஒரு விளையாட்டு ஆகும். இதிலே, பந்து உருள்வதற்குரிய ஒடுங்கிய, நீளமான தளம் ஒன்றின் ஒரு முனையில் அடுக்கப்பட்டுள்ள பத்துப் பின்களில், முடிந்த அளவு கூடிய பின்களைப் பந்தை உருட்டி விழுத்துவதற்கு, விளையாடுபவர்கள் முயற்சிப்பர். விளையாடுபவர்கள், ஒவ்வொரு தடவை விளையாடும்போதும், பத்துப் பின்களையும் ஒரே உருட்டலில் விழுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருப்பர். எனினும் ஒவ்வொருவருக்கும் ஒரு தடவையில் இரண்டு உருட்டல்களுக்கு அனுமதி உண்டு.

பௌலிங் பந்தும், பின்களும்

இவ்விளையாட்டு, ஐக்கிய இராச்சியத்திலும், ஐக்கிய அமெரிக்காவிலும் மிகவும் பிரபலமானது. இவ்விளையாட்டுக்கு உதவியான தொழில் நுட்பத்தின் வளர்ச்சியுடன், இவ்விளையாட்டுக்கான மக்கள் ஆதரவும் பெருகி வந்தது. இதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு நாடுகளிலும், வேறெந்த விளையாட்டையும் விட பங்குபெறல் வீதம் (participation rate) கூடுதலாக உள்ள விளையாட்டு இதுவேயாகும். இவ்விரு நாடுகளிலும், பௌலிங் விளையாட்டுக்கான தேசிய கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. இவை இவ்விளையாட்டுக்குரிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி வருகின்றன.

விளையாடல் தொகு

 
Lanes in a ten-pin bowling alley

பத்துப்பின் பௌலிங்கின் ஒரு விளையாட்டு, பத்துச் சுற்றுக்களைக் கொண்டது. இந்த ஒவ்வொரு சுற்றும், சட்டகம் (frame) என அழைக்கப்படுகின்றது. அடுக்கப்பட்டுள்ள பத்துப் பின்களையும் அடித்து வீழ்த்துவதற்கு ஒவ்வொரு சட்டகத்திலும் இரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஒரே உருட்டலில் பத்துப் பின்களையும் வீழ்த்தினால், அது அடி (strike) எனப்படும். அவ்வாறன்றிச் சில பின்களோ அல்லது முழுவதுமோ எஞ்சியிருப்பின் இரண்டாவது சந்தர்ப்பத்தில் அவற்றை முழுமையாக வீழ்த்த முயலலாம். அவ்வாறு இரண்டாவது சந்தர்ப்பத்தில் முழுவதும் வீழ்த்தப்பட்டால், அது ஸ்பெயர் (spare) எனப்படும். இவ்வாறு எல்லாப் பின்களையும் வீழ்த்தினால், ஊக்கப் புள்ளிகள் (bonuses) வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாடும்போது, ஒவ்வொரு சட்டகத்தையும் ஒருவர் பின் ஒருவராக விளையாடுவர். பத்தாவது சட்டகத்தில் விளையாடுபவர் புள்ளி பெறும் விதத்தைப் பொறுத்து மேலதிகமான ஒரு சந்தர்ப்பத்துடன் மூன்று உருட்டல்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும்.

 
பத்துப் பின்கள் அடுக்கப்படும் முறை

தற்காலத்தில் பெரும்பாலும், ஒவ்வொரு உருட்டலின் முன்னும், பின்கள் தன்னியக்கமாகவே பொறிகள் மூலம் அடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு சட்டகமும் தொடங்கும்போது பத்துப் பின்களும் முழுமையாக அடுக்கப்பட்டிருக்கும். அடுக்கும் முறையும், அவற்றை எண்களினால் குறிக்கும் முறையும் அருகிலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்துப்பின்_பௌலிங்&oldid=3679459" இலிருந்து மீள்விக்கப்பட்டது