பத்தேவியாக் கோட்டை

பத்தேவியாக் கோட்டை என்பது, இன்றைய சக்கார்த்தாவில் சிலிவுங் ஆற்றுக் கழிமுகத்தருகே இருந்த ஒரு கோட்டை. இக்கோட்டை, ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசியாவுக்கான தலைமை நிர்வாக மையமாக விளங்கியது.[1] கிழக்கிந்தியத் தீவுப் பகுதியில் ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் அதியுயர் அதிகாரியும், கிழக்கிந்தியா தொடர்பான விடயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட கிழக்கிந்திய சபையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவருமான ஆளுனர் நாயகத்தின் வதிவிடமும் இக்கோட்டையிலேயே இருந்தது.[1]

ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆசிய வணிகப் பேரரசின் நிர்வாக மையமான பத்தேவியாக் கோட்டை.

வரலாறு

தொகு

ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் முதல் ஆளுனர் நாயகம் பீட்டர் போத், கம்பனியின் வணிக நிலை ஒன்றை அமைப்பதற்காக 2,500 சதுர வாடெம் (10,000 சதுர யார்){{sfn|American Universities Field Staff|1966|p=237} அளவு கொண்ட நிலப்பகுதியை சயகார்த்தாவில் பெறுவதற்குப் படைத்தலைவன் சாக் லேர்மிட் என்பவனை நியமித்தான்.[2] அக்காலத்தில் பெரிய தொகையான 1200 ரியாலைப் பெற்றுக்கொண்டு, சயகார்த்தாவின் ஆட்சியாளன் சயவிக்கார்த்தா நிலத்தையும் வணிக நிலை அமைப்பதற்கான அனுமதியையும் வழங்கினான்.[3] இந்த நிலம் சிலிவுங் ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது. 1612 இல் ஒல்லாந்தர் அங்கே ஒரு வணிக நிலையை நிறுவினர். இது "நசுசவ் இல்லம்" (Nassau Huis) எனப்பட்டது. இந்த உடன்படிக்கை பின் வந்த ஆளுனர் நாயகங்களான செரார்ட்டு ரெயின்சுத், லாரென்சு ரியேல் காலங்களிலும் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.[2]

 
பழைய சக்கார்த்தாக் கோட்டையையும் (a) புதிய கோட்டைக்கான திட்டத்தையும் (b) காட்டும் வரைபடம்.

யான் பீட்டர்சூன் கோயென் பதவியேற்ற பின்னர் புதிய கட்டிடங்களைக் கட்டி[4] வணிக நிலையை விரிவாக்கியதுடன் அக்கட்டிடங்களைச் சுற்றி 9 அடி உயரமும் 6 - 7 அடிகள் தடிப்பும் கொண்ட கற்சுவர் எழுப்பி ஒரு சதுரமான கோட்டை ஆக்கியதுடன், அதில் பீரங்கிகளையும் பொருத்தினான். இது சக்கார்த்தாக் கோட்டை என அறியப்பட்டது. இவ்விடயத்தில் சயவிக்கார்த்தாவுக்கும், ஒல்லாந்தருக்கும் இடையே முறுகல்நிலை ஏற்பட்டுப்[2] பிரித்தானியரின் உதவியுடன் ஒல்லாந்தரை வெளியேற்ற சயவிக்கார்த்தா முயன்றான். சயவிக்கார்த்தாவின் மேலரசான பன்டென் சுல்தானகம், முன் அனுமதியின்றிப் பிரித்தானியருடன் நட்புறவு உடன்படிக்கை ஏற்படுத்தியதற்காகச் சயவிக்கார்த்தாவைப் பதவியில் இருந்து அகற்ற முயன்றது. இது ஒல்லாந்தரின் நிலையை வலுப்படுத்தியது. தொடர்ந்து 1619 மார்ச்சில் பெரிய புதிய கோட்டையொன்றைக் கட்டுவதற்கான திட்டம் உருவானது. பழைய சக்கார்த்தக் கோட்டையை விட இது ஒன்பது மடங்கு பெரியது. 1619 இல் சயகார்த்தாவை இடித்து அழித்த கோயென் மக்களையும் அவ்விடத்தில் இருந்து துரத்திவிட்டான். அவ்விடமும் புதிய திட்டத்தின் ஒரு பகுதி ஆகியது.[5] 1621ல் புதிய கோட்டைக்கும், வணிக மையத்துக்கும் "பத்தேவியா" என்னும் பெயர் வழங்கப்பட்டது.

சக்கார்த்தாக் கோட்டைக்குச் சற்றுக் கிழக்கில் புதிய கோட்டையின் கட்டுமான வேலைகள் 1620 இல் தொடங்கின.[6] கட்டுமானப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக புதிய கோட்டை வேலைகள் நீண்டகாலம் நடைபெற்றன. கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய சக்கார்த்தாக் கோட்டை புதிய கோட்டைக்குள் அடங்கியது. 1627க்கும் 1632க்கும் இடைப்பட்ட காலத்தில் பழைய கோட்டை இடிக்கப்பட்டது.

அந்தோனியோ வான் டியெமெனின் பதவிக் கால முடிவில் கோட்டை அது இறுதிவரை கொண்டிருந்த வடிவத்தையும் ஒழுங்கமைப்பையும் பெற்றுவிட்டது. எனினும், சுவர்களுக்குள் மாற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.[7] அதேவேளை பத்தேவியாவின் கடற்கரையும் மாற்றம் அடைந்துகொண்டிருந்தது. பத்தேவியாக் கோட்டை தாழ்வான கரையோரச் சமவெளிப் பகுதியில் இருந்ததால் கால்வாய்களில் நீர் ஒடமுடியாமல் இருந்தது. கடற்கரையோரத்தில் வண்டல்மண் படிவு ஏற்பட்டது. இந்த மண்படிவு காரணமாக தொடக்கத்தில் கடற்கரையில் இருந்த கோட்டை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கரையில் இருந்து 2 கிலோமீட்டர்கள் உள்ளே இருந்தது. கடற்பெருக்குக் காலங்களில் கடல் நீருடன் வரும் நகரின் கழிவுகளும், நச்சுத்தன்மை கொண்ட ஜெலி மீன்களும் கடற்கரையை மூடிக்கிடந்தன. கடல்நீர் வடிந்த பின்னர் ஆங்காங்கே கடல் நீர் தேங்கி நின்றது. அப்பகுதி மண்ணிலிருந்து கிளம்பும் நச்சு ஆவிகள் நோயைப் பரப்புவதாக பத்தேவியா மக்கள் நம்பினர். மாசடைந்த கால்வாய்கள், தேவாலய வளாகங்கள், தரக்குறைவான குடிநீர் என்பனவும் பத்தேவியாவின் சரிவுக்குக் காரணமாக அமைந்தன.[8]

1751 இல் கோட்டையின் நிலப்பக்க மதிலும், வாயிலும் உடைக்கப்பட்டு கோட்டை முன்னுள்ள வெளிக்குத் திறந்துவிடப்பட்டது. 1756 இல் கடற்பக்க மதில் திருத்திக் கட்டப்பட்டது.[7] இந்தக் காலப்பகுதியில் பத்தேவியாவின் சுகாதாரக் குறைவு காரணமாக மக்கள் சுத்தமான, நகரின் தென் பகுதிக்கு இடம் பெயரலாயினர். 1809 இல் நிர்வாக மையமும் தென்பகுதிக்கு மாற்றப்பட்ட பின்னர் கோட்டையை இடிக்கத் தொடங்கினர். கோட்டையின் கற்கள் டயென்டெல் மாளிகை கட்டுவதற்குப் பயன்பட்டன.[1] கோட்டை இருந்த இடத்தில் தொழிற்சாலைகளும், களஞ்சியசாலைகளும் கட்டப்பட்டன.[7]

அமைப்பு

தொகு
 
கோட்டை முன்னுள்ள வெளிக்குத் திறந்து விடப்பட்ட நிலையில் 1762ல் பத்தேவியாக் கோட்டையில் தளப்படம்.

முழுமையாக இருந்த நிலையில் பத்தேவியாக் கோட்டை சதுர வடிவம் கொண்டது. நான்கு மூலைகளிலும் அம்புத்தலை வடிவக் கொத்தளங்கள் இருந்தன. இவற்றுக்கு விலை உயர்ந்த மணிகளின் பெயர்கள் இடப்பட்டிருந்தன. கலி பெசாரை நோக்கியிருந்த வடமேற்குக் கொத்தளம் முத்தின் பெயரால் அழைக்கப்பட்டது. "எருமை வயல்" பகுதியை நோக்கிய வடகிழக்குக் கொத்தளத்துக்கு வைரத்தின் பெயர் இடப்பட்டது. தென்மேற்குக் கொத்தளம் நீலக்கல்லின் பெயர் பெற்றது. தென்கிழக்குக் கொத்தளம் மாணிக்கத்தின் பெயரிட்டு அழைக்கப்பட்டது. இவ்வாறான தனித்துவமான பெயர்கள் காரணமாக பத்தேவியா மலே மொழியில் "வைர நகரம்" எனப் பொருள்படும் "கோட்டா இந்தான்" என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டது. கொத்தளங்கள் மண் நிரப்பி அமைக்கப்பட்டவை வெளியில் முருகைக் கற்களால் மூடப்பட்டிருந்தன. வடக்கு - தெற்கு அச்சு வழியாகக் கோட்டை 290 டிரெடென்கள் நீளமும், கிழக்கு - மேற்கு அச்சு வழியாக 274 டிரெடென்கள் அகலமும் கொண்டது.[1] 17 ஆம் நூற்றாண்டில் பத்தேவியாவுக்குச் சென்ற பயணிகள் கோட்டை பெரியதும், பலம் வாய்ந்ததும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.[9]

கோட்டைக்கு உள்ளே பல்வேறு நிர்வாகக் கட்டிடங்களும், முற்றங்களும் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டில் கோட்டை 15 பீரங்கிகளாலும், ஐந்து முதல் ஆறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டது.[10]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தேவியாக்_கோட்டை&oldid=2177627" இலிருந்து மீள்விக்கப்பட்டது