பன்னிரண்டாம் செட்டியார் கதை

காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள்

தொகு

காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒரு வணிக (செட்டி) குலத்தில் பிறந்த பெண்ணை மணக்க விரும்பினான். காவிரி பூம்பட்டினத்து வணிகர்கள் இதற்கு உடன்படவில்லை. எனவே மன்னன் அவர்கள் வசித்த நகருக்குத் தீயிட்டான். காவிரி பூம்பட்டினத்து வணிகர் குலத்தைச் சேர்ந்த பதினோரு பேர் தீயிலிருந்து தப்பி அந்த நகரை விட்டு வெளியேறி நாட்டின் பல இடங்களுக்குச் சென்றனர். அவ்வாறு புறப்பட்ட வணிகர்களில் பதினொருவர் தங்கள் பொருட்களுடன் அய்யர்மலைக்கு (வாட்போக்கிக்கு) வந்து சேர்ந்தார்கள்.[1]

பன்னிரண்டாம் பங்கு

தொகு

அந்தப் புண்ணிய மலையின் அடியில் அமர்ந்து தங்களுடன் கொண்டு வந்த பணத்தை பதினோரு பங்காகப் பிரித்தார்கள். ஆனால் பன்னிரண்டு பங்குகள் வந்தன. மீண்டும் பதினோரு பங்காகப் பிரித்தார்கள். இப்போதும் பன்னிரண்டு பங்குகள் வந்தன. வியப்பும் திகைப்புமாய் செய்வதறியாது நின்ற அவர்கள் முன் சிவபெருமான் மனித வடிவில் தோன்றி அந்த பன்னிரண்டாவது பங்கு தன்னுடையதென உரிமை கொண்டாடினார். வணிகர்களும் அப்படியே கொடுத்து விட்டார்கள். இரத்தினகிரீஸ்வரரும் உளம் மகிழ்ந்து தனது சிவ வடிவினைக் காட்டினார். பன்னிரண்டாம் பங்கினைப் பெற்றதற்குப் பதிலாக இவ்வினத்தவர் திருமணங்களில் மணமகன் இறைவனுடைய தேரில் உலா வரும்படி வரம் அருளினார்.[1]

பன்னிரண்டில் ஒன்று சிவனுக்கு

தொகு

அது முதல் அவர்கள் வருவாயில் பன்னிரண்டில் ஒரு பங்கு இறைவனுக்குச் சேர்க்கிறார்கள். இக்காரணத்தை முன்னிட்டு அவர்களுக்கு பன்னிரண்டாம் செட்டியார்கள் என்ற பெயர் ஏற்பட்டது. இப்போது இவ்வினத்தினர் பல ஊர்களில் பரவி இருக்கின்றனர். இரத்தினகிரீஸ்வரரையே தங்கள் குல தெய்வமாகக் கொண்டு அறச்செயல்கள் புரிகின்றனர். பன்னிரண்டாம் பங்கு பெற்ற வரலாறு வாட்போக்கிக் கலம்பகம், இரத்தினகிரி உலா ஆகிய சிற்றிலக்கியங்களிலே சொல்லப்பட்டிருக்கிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 அய்யர்மலை எனப்படும் இரத்தினகிரி தல வரலாறு (திருவாட்போக்கி). அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில், அய்யர்மலை, குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம். 2008 .p56 . ரூ.25
  2. Edgar Thurston. Castes and tribes of southern India (Volume 2) . (page 7 of 36). Asian Educational Services, 2001 – 3280 pages