பயனர்:அகராதி/மணல்தொட்டி

வெயில் பெய்து கொண்டிருக்கும் இப்பகற் பொழுதில் தொடங்குகிறது ஒரு யுத்தம் என்னோடு எனக்கு . நீயே சொல் எவ்வளவு வருடங்கள் தான்  பொங்கி வரும் அன்பை பிடித்து வைத்து இருக்கிறது .நரம்புகள் எல்லாம் துடிக்கிறது. .தலை வெடிக்கும் போலிருக்கிறது. சூடேறிச் செல்லும் காற்று புயலாகி நிற்கிறது. விழிகள்  எரிகிறது.  இதயம்  ஏங்குகிறது.

உள்ளம் வரித்த பேரன்பை உயிர் கூட்டுக்குள் பொத்தி வைத்திருக்கிறேன் .அதனின் எண்ணற்ற சிறகுகள் படபடக்கும் ஓசை நெஞ்சை பிளக்கிறது போல் இருக்கிறது.  இந்த நிலாவும் ,இந்த மரமும், இந்தப் பூவும் இந்தக் காற்றும்,   இந்தச் சூரியனும் உன்னிடத்தில்  இல்லையா?

என்ன செய்வாய் நீ !

கேள் .என்னிடம் ஆயிரம் வாசல்கள் இருக்கின்றன அனைத்தும் அடைத்து தனித்து  இருக்கிறேன் .

வார்த்தைகளில் நனைக்கும் , வெயிலிலும் குளிரும் கூடு இங்கு  இருக்கிறது .ஏன் இப்படி நம்மை நமக்குப் பிடித்தது இவ் வினாவிற்குள் எதை விடுவது என்று மெல்லியதாகச் சின்ன சிரிப்பை பரிமாறிக் கொள்கிறது காலம்  .

இலக்கணங்கள்  இலக்கியங்கள் புராணங்கள் காவியங்கள் காப்பியங்கள்  எல்லாம் கூட நம்மால்தான் பொருள் பெறுகிறார்போல் ஒரு மாயத்தோற்றம் வருகிறது.  

அன்றைய பயணத்தில்  ஒரு ஊர் கடக்கையில் சித்திரை விழாவின் பொருட்டு   'நேரத்தோடு கிடைக்குமா நினைக்கும் போது இனிக்குமா'

பாடல் வரி ஒலிக்கிறது. தெளிவான இசை, வார்த்தைகளை இசை  உள்ளிழுக்காமல் .இசைக்குள் பொருள் புரியாது போகாமல் ,தெளிவான, இனிமையான இசைக்கு,  அழகழகான வார்த்தைகளும் குரல்களும் ரம்யம்.  காதலில் விழும் வார்த்தைகள்.  அவ்விடம் கடந்த பின்னரும் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றது  . கிடைக்கவே இல்லையெனினும் நினைக்கும் போது இனிக்கும்  என்றாலும் தத்தளிக்கும் தளும்பும் மனம் தேடத்தானே செய்யும். நேரம் தாண்டினாலும் நிலைக்கும் நேயம்  நினைத்து நினைத்து உயிர் பூக்கச் செய்யும்தானே. . .

நீ எவ்வளவு என்னை உணர்கிறாயோ அவ்வளவு நான். அவ்வளவும் நான்.   காற்று  உன்  உடலில் இருக்கிறது தேவையான அளவு நீ சுவாசிக்கிறாய் இது இல்லாமல் உலகில் உன்னைச் சுற்றி இருக்கிறது. அப்படித்தான் நான். நீ எவ்வளவு என்னை உணர்கிறாயோ அவ்வளவு நான். அவ்வளவும் நான். உனக்குள்ளும் உன்னைச் சுற்றியும் ...

உனக்காகவே பிறந்து காத்துக் கொண்டிருக்கும் இதயம்  என்னுடையது.  என் இருப்பிடம் நீ. என் இருப்பும் நீ  . ஆறுதல் தேறுதல் என்று எதுவும் இல்லை இதற்கு , நினைவின் தவிப்பில் ஆழத்தில் உடல் தவிக்கிறது சிறு நடுக்கத்துடன்  அழுந்தப் பற்றுகிறேன் கால்விரல்களால் பாதம் படரும் விரிப்பை. .. கண்களா? அது அப்படியே அதன் கண்ணீர் விடும் வேலையைச் செய்கிறது .நாம் பேசும் பெரும்பொழுதுகள் எல்லாம் தன்னை நீட்டித்துக் கொள்ளும் ஆவலினை கடக்க இயலாது தலையணையிடமும் சிறிது சிதறவிட்டுச் செல்கிறது இரகசியங்களை,  நம்மையும் விட  நம்மைப் பற்றிய அதிகச் செய்திகள்  அறிந்தவையாக தலையணைகள் கிசுகிசுக்கக்கூடும்.  இந்த முறை  எபபொழுது வருவாய் என கேட்க வில்லை. எப்பொழுதாவது வருவாயா. ...

காதல்? ம்ம்ம் காதல் இதனை எப்படி  உருவக  உவமைப் படுத்துவது ... நாம் . ஆம் நீயும் நானும்தான் இந்தக் காதல், இதன் பொருள்.  இந்த வார்த்தை தொலைந்து இந்தக் காலம் தொலைந்தால் கூட நாம் இருப்போம் இதே அன்போடு அதுதான் நாம். அதனால்தான் நாமே இது ...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:அகராதி/மணல்தொட்டி&oldid=2725505" இலிருந்து மீள்விக்கப்பட்டது