பயனர்:தினேஷ்குமார்/மணல்தொட்டி

நேபாளத்தின் ஹெலம்பு பள்ளாதாக்கில் உள்ள மிலரெபா கொம்பா என்னுமிடத்தில் அமைந்துள்ள மிலரெபாவின் சிலை

ஜெத்சன் மிலரெபா (திபெத்திய மொழி: རྗེ་བཙུན་མི་ལ་རས་པ) (காலம்: கி.பி. 1052 முதல் கி.பி. 1135 வரை) திபெத்தின் தலைசிறந்த யோகியாகவும் கவிஞராகவும் கருதப்படுகிறார். இவர் மார்ப்பா லோட்ஸாவாவின் சீடரும், திபெத்திய பௌத்தத்தின் கக்யு பிரிவில் முக்கியத்துவம் வாய்ந்தவரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

மேற்கு திபத்தின் குங்தாங் மாநிலத்தில் அமைந்த க்யா கட்ஸா என்ற சிற்றூரில் ஒரு வளமான குடும்பத்தில் மிலரெபா பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு மிலா தோபகா என்று பெயரிட்டனர்.

மந்திரவாதம் தொகு

மிலரெபாவின் தந்தையின் மறைவிற்கு பிறகு அவரது உறவினர்கள் இவரது சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். தாயின் கட்டளைப்படி வீட்டிலிருந்து வெளியேறி செய்வினை பற்றி கற்க சென்றார். தனது உறவினர்களை பழி தீர்க்க, அவர்கள் மகனின் திருமணத்தின் போது மிக பெரிய பனிமழையை பொழிய வைத்தார். அதில் 35 பேர் உயிரிழந்தனர். ஆனால் அவரது உறவினர்கள் உயிர் தப்பியதாக கருதப்படுகிறது. இவரது மீது ஆத்திரமடைந்த கிராமத்து மக்கள் இவரை தேடுவது குறித்து தனது தாய் மூலம் தெரிந்து கொண்ட மிலரெபா, கிராமவாசிகளின் பயிர்களை அழிக்க மற்றொரு பனிமழையை பொழியவைத்தார்.

இவரது பல செயல்கள் சோ கி த்ரோன்மா என்னுமிடத்தை சுற்றியே நிகழ்ந்தது. இவரது வாழ்க்கையும் பாடல்களும் குங்தாங் மன்னரான த்ரி நம்கியால் தே-ன் உதவியோடு சங்க்யோன் ஹெருகா என்பவரால் தொகுக்கப்பட்டது.

மிலரெபா தனது முதிர் பிராயத்தில் தான் இளமையில் செய்த தீஞ்செயல்களை குறித்து மிகவும் வேதனை பட்டார் என்பது ரேசுங்பா என்பவரோடு நிகழ்ந்த அவரது உரையாடல்கள் மூலம் அறியப்படுகிறது.

அமானுஷ்ய வேகம் தொகு

மிலரெபா, தான் மந்திரவாதம் கற்கும் முன் ஒரு மாதத்திற்க்கும் மேல் நடந்து கடந்த தொலைவை, மந்திரவாதம் கற்ற பின் சில நாட்களிலேயே கடப்பதாகக் கூறியதாக தனது "திபெத்தில் மந்திரவாதமும் மர்மமும்" (Magic and Mystery in Tibet) என்ற நூலில் பிரெஞ்சு ஆய்வாளர் டேவிட் நீல் குறிப்பிட்டுள்ளார். மிலரெபா மந்திரவாதம் கற்ற இடத்தில் குதிரையை வேகமாக ஓடக்கூடிய துறவி இருந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவர் இடைநில்லாமல் அதிவேகமாக ஓடும் இந்த திறமை, திபெத்தில் "லுங்-கோம்-பா" என அறியப்படுகிறது.

மார்ப்பாவின் சீடர் தொகு

தனது இளமைக் காலத்தில் தான் செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் தேடிய மிலரெபா, மார்ப்பாவிடம் சீடராக சேர்ந்தார். மார்ப்பா மிகவும் கடுமையான ஆசிரியராக விளங்கினார். அவருக்கு கற்பிக்கத் துவங்கும் முன், மிலரெபாவை மூன்று முறை ஒரு தூணை எழுப்பச் சொல்லியும் பின்னர் அதை தகர்க்கவும் ஆணையிட்டார். பின்னர் இறுதியாக, மிலரெபாவை பல அடுக்குக் கட்டடம் ஒன்றை கட்டப் பணித்தார். 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த அந்த கட்டடம் இன்றும் இருக்கிறது. துவக்கத்தில் மிலரெபாவை பயிற்றுவிக்க மார்ப்பா மறுத்தபோது, அவர் மீது இறக்கம் கொண்ட மார்ப்பாவின் மனைவி, மற்றொரு துறவியான லாமா கோக்துன் சுதோர் என்பவருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்தனுப்பினார். அவரிடம் தியானம் கற்றார் மிலரெபா. ஆனால், முன்னேற்றம் இல்லாததைக் கண்டு, தன்னை மார்ப்பா நிராகரித்ததை மிலரெபா ஒப்புக்கொண்டார். அப்போது கோக்துன் சுதோர், மார்ப்பாவின் ஆசிர்வாதம் இல்லாம்ல் செய்யப்படும் பயிற்சி வீணே என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கு பிறகு மீண்டும் மார்ப்பாவிடம் திரும்பி அவரை தன்னை சீடனாக ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைத்தார் மிலரெபா. பயிற்சிக்கு பின் மார்ப்பாவிடமிருந்து விடைபெற்ற மிலரெபா தனது விடாமுயற்சியால் 12 வருடங்கள் கழித்து ஞானம் அடைந்தார். அதற்கு முன் "மிலா தோபகா" என்றழைக்கப்பட்ட அவர், அதன் பின்னரே மிலரெபா என்றழைக்கப் பட்டார். "மில" என்ற திபெத்திய சொல்லுக்கு மாமனிதர் என்று பொருள்; "ரெபா" என்றால் பருத்தி ஆடை உடுத்தியவர் என்று அர்த்தம். தனது 45 வயதுக்குப் பின் த்ரகர் டாசோ என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அவ்விடம் தற்போது மிலரெபா குகை என்று வழங்கப்படுகிறது.