பயனர்:திருவின்ராஜன்/மணல்தொட்டி

தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை

தொகு

இந்த உலகம் நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற ஐம்பூதங்களின் கலவையால் உருவானது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு மூலதாரமாக  இருப்பவை ஐம்பூதங்களே. ஐம்பூதங்களின் இயல்புகளை உணர்ந்த நம்முன்னோர்கள் அவற்றின் தோற்றத்தினையும், பேராற்றலையும், தனித்தன்மையினையும், அதனோடு இயைந்து வாழ்கின்ற வாழ்க்கை முறையினையும் சங்க இலக்கியங்களில் எடுத்துக் கூறுகின்றனர். இவற்றுள் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக விளங்குவது நீர், உணவுயின்றி கூட ஒரு மனிதனால் சிலநாட்கள் வாழமுடியும் ஆனால் தண்ணீர் இல்லாமல், ஒரு நாள் கூட உயிர் வாழ்வது மிகக்கடினம்.  மனிதர்களுக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது நீரே ஆகும். இந்த பூமியின் மொத்த பரப்பில் 70.8சதவீதம் பரப்பளவு நீரால் சூழப்பட்டுள்ளது. (இவை ஆறுகள், ஏரிகள், கடல்கள், பெருங்கடல்கள்) இந்த பூமி நீரால் சூழப்பட்டாலும் பெரும்பான்மையான நீர் கடல்களில் உப்பு நீராக உள்ளன. இந்த கடல் நீரை நிலத்தில் வாழும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் நேரடியாக எடுத்துக்கொள்ளமுடியாது. எனவே நம் முன்னோர்கள் மழை நீரை சேமிக்க பல வழிமுறைகளைக் கையாண்டனர். கடல் நீர் ஆவியாகி மழையாக பொழிகிறது, மலைகளில் பொழிகின்ற மழைநீர் காற்றாறாக ஓடி கடலில் கலக்கும். காற்றாறு வெள்ளத்தை தடுத்து ஏரி, குளம், குட்டை, கண்மாய்களில் நீரை சேகரித்து வேளாண்மைக்காகவும் குடிநீர் தேவைக்காகவும் பயன்படுத்தினர். சங்க காலத்தில்  வாழ்ந்த மக்கள் நீர் மேலாண்மை செய்து இயற்கையோடு எவ்வாறு இயைந்து ஒன்றி வாழ்ந்தனர் என்பதனை இக்கட்டுரையில் காண்போம்.

“நிலம் தீ நீர் வளி விசும்போ டைந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெரி வழா அமைத்

திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும்” (தொல் – 1589)

என்கிறார் தொல்காப்பியர்.

நீரின் முக்கியத்துவம்

தொகு

            நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த திருவள்ளுவர் வான்சிறப்பு என்ற அதிகாரத்தின் வாயிலாக நீரின் சிறப்புகளை எடுத்துக் கூறுகிறார். வானத்தில் இருந்து மழைப்பொழிவு இல்லையேல் பூமியில் பசும்புல் காண்பதே அரிது என்கிறார். இந்த உலகம் நிலைப்பெற்று இயங்குவதற்கு காரணமாக நீர் அமைகிறது நீர் இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்பதை,

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு  (திருக்குறள் – 20)

என்கிறார் திருவள்ளுவர்.

இன்று பெரும் வணிகப்பொருளாக இருப்பது நீரே. நீரை முதன்மையாக கொண்டு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அனைத்து தொழில்களும் இயங்குகின்றன. மழைப்பொழிவு குறைவால் நீர் பற்றாக்குறை ஏற்படின் அந்நிலத்தில் வாழும் உயிர்கள் வாழ்விடத்திற்காக பிற இடங்களுக்கு செல்கின்ற சூழலை நாம் அறிவோம். ஆகையால் மனிதர்கள் நெடுங்காலமாக நீரை சேகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.

மழைநீரை சேகரித்தல்

தொகு

பெருமழை பொழிகின்ற போது மழை நீர் பெருக்கெடுத்து கடலை நோக்கி பாயும், அந்த நீரை தடுத்து ஏரி, குளங்களில் சேகரித்து வைப்பர் அப்படி ஏரி, குளங்களில் நீரை சேகரிப்பவரே மன்னவன் என்று இளங்கோவடிகள் கூறுகிறார்.

“இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்

பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப

மழைபிணித்து ஆண்ட மன்னவன்” ( வரி 26 -28) என்கிறார் இளங்கோவடிகள்.

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தை தன் முயற்சியால் வெற்றிபெற்று பெரும்புகழ் பெற்றவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். நெடுஞ்செழியனிடம் குடபுலவியனார், வலிமையால் போர்செய்து, பெற்றவெற்றியால் கிடைக்கின்ற புகழ் நிலையற்றது. எனவே, நிலைத்த புகழ் அடைவதற்கு உயிர்களுக்கு இன்றியமையாத தேவையாக உள்ள நீரையும், உணவினையும் படைப்பவனே தலைச்சிறந்த  இறைவனாக (மன்னவனாக) போற்றப்படுவார். எனவே, இதனை

“நீரின் றமையா யாக்கை கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத்தோரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்

உணவெனப் படுவத நிலத்தோடு நீரே

நீரு நிலனும் புணரியோரீண்

டுடம்பு முயிரும் படைத்திசி னோரே

……….. ……………… ……………….

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே” (புறம்- 18, 18-30)

என்ற மேற்கண்ட இப்பாடலில், நீர் இன்றி அமையாது இந்த உடம்பு. உணவு கொடுத்தவரே உயிர் கொடுத்தவர் ஆவார். உணவு உண்பதனால் உண்டானது இந்த உடம்பு, உணவு என்பது நிலமும் நீரும் சேர்ந்து உருவானது எனவே, உடம்பிற்கு இன்றியமையாத தேவையாக இருப்பது நீரே, அத்தகைய நீரை கொடுத்தவர் உயிர் கொடுத்தவரே, எனவே உயிர் வாழ்வதற்கு தேவையான நிலத்தையும் நீரையும் உண்டாக்கியவர் உடம்பையும் உயிரையும் படைத்தவர் ஆவார், எனவே, போர்த்தொழிலை விடுத்து பள்ளமான நிலத்தில் நீரை தேக்கிவைத்து உணவு உற்பத்திக்கு வழிவகை செய்வதன் மூலம் நிலைத்த புகழை அடைய முடியும் எனவே மற்ற புகழைவிடவும் நீரை சேகரித்து உயிர்கள் வாழ்வதற்கான வழிவகைகளை செய்க என்கிறார் குடபுலவியனார்.  

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் நாட்டு வளத்தை மாங்குடி மருதனார் கூறுகின்ற போது. நீரின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார். மதுரைக்காஞ்சியில் மருதநிலத்தின் சிறப்பினை கூறும்போது, மேகங்கள் கடலில் உள்ள நீரை உறிஞ்சி மேகங்களாக மாற்றி வேறு இடத்தில் இரவு பகல் எதுவென்று அறியமுடியாத அளவுக்கு மழையாக பொழிகிறது. பெய்த மழை நீரானது கீழ் கடலை நோக்கி பாய்ந்து வரும். அவ்வாறு, பாய்ந்து வருகின்ற மழை நீரை தடுத்து பள்ளமான இடங்களில் சேகரித்து விவசாயம் செய்வர். அதனால் விளைந்த கதிர்மணிகளை யானைகள் விரும்பி உண்ணும், அப்போது அந்த யானைகள் உண்பதை பொருட்படுத்தாமல் இருப்பர் அந்தளவுக்கு விளைச்சல் அதிகமாக இருந்தன என்று ஆசிரியர் கூறுகிறார். இந்நிகழ்வை,

குண கடல் கொண்டு குட கடல் முற்றி,

இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது,

அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி,

-------------- ----------- ----------- ----------

நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி,

களிறு மாய்க்கும் கதிர்க் கழனி;

ஒளிறு இலஞ்சி; அடை நிவந்த

முள் தாள சுடர்த் தாமரை,

கள் கமழும் நறு நெய்தல்,

(மதுரைக்காஞ்சி 238 – 250)

என்கிறார் மாங்குடி மருதனார்.

நீரின் சிறப்பு

தொகு

நீர் உயிர்களை காக்கும் அரணாக விளங்குகிறது. நல்ல நீரையை நாம் நிலத்தில் தடுத்து பாதுகாத்தால் அது உயிர்களை அரணாக நின்று பாதுகாக்கும் என்பதை,

           “மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்” (திருக்குறள்: 742)  

உயிர்களை அரண் போல இருந்து காப்பது எதுவென்றால் மணிபோல் தெளிந்த நீரும், மண்ணும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் அரணாக இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர்.

மூன்று பக்கம் கடல் நீரால் சூழப்பட்ட போதிலும் வானத்தில் இருந்து மழைநீர் பொழியாமல் போனால் பூமியில் உயிர்கள் பசியால் வாடி துன்புறுவர்,

           “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

         உள்நின் றுடற்றும் பசி”  (திருக்குறள் – 13)

என்கிறார் திருவள்ளுவர்.

           இயற்கையை கடவுளாக வழிபடுகின்ற மரபு சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் மங்களவாழ்த்துப் பாடலில் திங்களையும் ஞாயிற்றையும் போற்றியப்பிறகு மாமழையைப் போற்றுகிறார் இளங்கோவடிகள்.  

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான்சுரத்த லான்” (சிலப்பதிகாரம் -  

நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக விளங்குகின்ற நீரை கடவுள் வரிசையில் வைத்து இளங்கோவடிகள் போற்றுகின்றார்.

நீரின் பயன்பாடு

தொகு

பதிற்றுப்பத்து பாடலில் மூன்றாம் பத்தில் சேரமன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவனின் சிறப்புகளையும் நாட்டு வளத்தையும் பாலைக்கௌதமனார் பாடியுள்ளார். இவர் பாடிய ஒரு பாடலில் நீரீன் பயன்பாடு பற்றி பாடியுள்ளார்,

“பொன்செய் கணிச்சித் திண்பிணி யுடைத்துச்

சிரறுசில வூறிய நீர்வாய்ப் பத்தற்

கயிறுகுறு முகவை மூயின மொய்க்கும்

ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த” ( பதிற்றுப்பத்து 22: 10-14)

கொங்கர் இனத்தவர்கள் தம் நாட்டில் பாறைகளை உடைத்து கிணறு வெட்டி, கயிற்றில் வாளியை(பத்தல்) கட்டி நீரை முகப்பர், அப்போது ஆனிரைகள் வந்து நீரை மொய்க்கும் என்று கூறுகிறார். கொங்கரை வென்றவன் சேரமன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்ற செய்தியை மேற்கண்ட பாடலின் வாயிலாக அறியலாம்.

பட்டினப்பாலை பாடலில் ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறுகின்றபோது, வான்முகந்த நீர் நிலத்தின் மீது பரவியதால் உணவுபொருட்கள் மிகுதியாக விளைந்தன. அப்படி விளைந்த பொருட்கள் கடலில் இருந்து மேகம் நீரை மலைப்பகுதியில் பொழியும் அந்த நீர் திரும்பவும் கடல் முழுவதும் வந்து பரவும் அதுபோல நிலத்தில் உருவான உணவு பண்டங்கள் காவிரிபூம்பட்டினத்து கப்பலில் வந்து குவிந்து கிடந்தன  என்று கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகிறார்.

“வான் முகந்த நீர் மலைப் பொழியவும்,

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்,

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்,

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்,

அளந்து அறியாப் பல பண்டம்

வரம்பு அறியாமை வந்து ஈண்டி”  (பட்டினப்பாலை: 126 -132)

கடலிலிருந்து மேகம் முகந்து சென்ற நீர் மலையில் பொழிந்து ஆறாக ஓடிவருவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மலையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரிலுள்ள நாவாயில் பரப்பப் பட்டன. அந்தப் பண்டங்கள் அளந்தறிய முடியாதபடி பற்பலவாகக் குவிந்துகொண்டிருந்தன. என்று சோழ மன்னன் கரிகாற்பெருவளத்தானின் நாட்டின் சிறப்பினை ஆசிரியர் கூறுகிறார்.

பூமியில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவையாக இருப்பது நீர். நிலத்தில் தாவரங்கள், விலங்குகள் இன்னும் பிற உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்கு ஆதரமாக விளங்குவது நீர். நமக்கு தேவையான உணவு பொருட்களை நிலத்தில் உற்பத்தி செய்வதற்கு ஆதரமாக இருப்பது நீர். எனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம்முன்னோர்கள் நீரின் சிறப்பினை உணர்த்து கடல்நீர் ஆவியாகி மழையாக பொழிந்து கடலை நோக்கி செல்கின்ற ஆற்றுநீரை தடுத்து, ஏரி, குளம், குட்டை, கால்வாய், கிணறு போன்ற வழிமுறைகளில் நீரை சேகரித்து விவசாயத்திற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தினர் என்பதை மேற்கண்ட சான்றுகள் வாயிலாக அறியலாம். 21ஆம் நூற்றாண்டில் கூட நம்முடைய அரசு நீர் சேகரிப்பதற்காக பெரியபெரிய நீர்பிடிப்பு அணைகளையும், தூர்ந்து போன ஏரிகளை தூர் வாரியும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு வீடுகள் தோறும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. சில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் நீர் பிடிப்பு பகுதியை சுத்தப்படுத்தியும் ஆழப்படுத்தும் பணியையும் செய்து வருகின்றனர். நிலத்தில் நீரை சேகரிப்பதால் உணவு உற்பத்தி அதிகமாகும் அதனால் உயிர்கள் நிலத்தில் நிலைத்து வாழ்வதற்கான நிலைகள் ஏற்படும் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக நாம் அறியலாம்.

துணை நூற் பட்டியல்

தொகு

1.   தொல்காப்பியம் பொருளதிகாரம், நச்சினார்க்கினியார் உரை சி.வை. தாமோதரம்பிள்ளை,  சென்னை

2.   திருக்குறள், சாரதா பதிப்பகம், சென்னை – 600 014

3.   சங்க இலக்கியம், பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630307

4.   சங்க இலக்கியம், எட்டுத்தொகை, கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630307