பயனர்:பிரபு சீனிவாசன்/மணல்தொட்டி

பருப்பின் மகத்துவமம் By கே. ராமச்சந்திரன் http://www.dinamani.com/editorial_articles First Published : 03 November 2015 01:31 AM IST இதுகாறும் அரிசிப் பஞ்சம், வெங்காயம் தட்டுப்பாடு என்று ஆட்சியாளர்களைப் பயமுறுத்திய உணவுப் பொருள்களில் இப்போது பருப்பும் தனது பங்குக்கு பயமுறுத்தத் தொடங்கி உள்ளது. பருப்பின் முழுமையான வரலாற்றினை 1963-இல் இருந்து சற்று புரட்டிப் பார்ப்போம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முடிவுற்றபின், பருப்பு வகைகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படாமல் பெரும்பாலும் நமது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பயிர் செய்து நமது சுய தேவையைப் பூர்த்தி செய்து கொண்டோம். எந்தக் காலத்திலும் துவரை சாகுபடி தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இருந்தது இல்லை. காரணம் நமது மண் வளமா அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவில்லை.
பொதுவாக, மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா பகுதியில் மிகுதியாக துவரை சாகுபடி செய்யப்பட்டது. அதன் அறுவடைக்காலம் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையாகும். 1963-இல் 100 கிலோ எடை கொண்ட மூட்டை ஒன்றின் விலை 48 ரூபாய் முதல் 55 வரை ஆகும். விளையும் இடத்திலிருந்து தமிழகத்துக்கு ரயில் மூலம்தான் கொண்டு வர முடியும். இப்போது போல் லாரி போக்குவரத்து அந்த நாளில் கிடையாது. ரூபாய் ஐந்து செலவில் தமிழகத்துக்குக் கொண்டு வரலாம். 
100 கிலோ துவரையைப் பருப்பாக உடைத்தால் 75 முதல் 77 கிலோ வரை பருப்பு கிடைக்கும். நியாயமான லாபத்தைச் சேர்த்து வணிகர்கள் ரூபாய் 75 வரை 100 கிலோ பருப்பை விற்று வந்தனர். அநேகமாக ஏப்ரல், மே மாதங்களில் இந்தப் பகுதி துவரை அனைத்தும் உபயோகித்துத் தீர்ந்து விடும்.
அகில இந்திய அளவில் துவரை வரத்து மிக அதிகமாக உள்ள சந்தையானது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லாட்டூர் என்பதாகும். சென்ற ஆண்டு தென் மேற்குப் பருவமழை லாட்டூர் பகுதியில் பொய்த்து விட்டதால் நாட்டின் துவரை விளைச்சல் பாதிக்கப்பட்டது உண்மை. 
ஏப்ரல் மாத இறுதியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் துவரை அறுவடை தொடங்கி விடும். மிகப்பெரிய மாநிலமானதாலும் வளமான மண், வற்றாத ஜீவநதிகள் பாயும் மாநிலமானதாலும் அங்கு விளையும் துவரை மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த அறுவடை வரை தட்டுப்பாடின்றி நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு தாராளமாக அனுப்பப்பட்டு வந்தது. 
மத்தியப் பிரதேசத்தில் காதர்வாடா, பிப்பிரியா பகுதிகளில் விளையும் துவரை அந்த மாநிலத்தின் தேவைக்குப் போதுமானதாக உள்ளது. 1976-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் பருத்தி அதிகமாக விளையும் பகுதியான பரூச் மாவட்டத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைக்கவில்லை என்று துவரை விதைத்து நல்ல மகசூல் கண்டதோடு விவசாயிகளும் பயன் பெற்றனர். 
இன்று வரை அந்தப் பகுதியிலிருந்து தமிழகத்துக்குத் துவரை வந்து கொண்டிருக்கிறது. பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஆங்காங்கு விளையும் துவரை அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவில் உள்ளது.
1963-இல் 48 ரூபாய் முதல் 55 வரை விற்ற துவரை, 1971-ஆம் ஆண்டில் 103 ரூபாய் விலையைத் தொட்டுவிட்டது. இது பணவீக்கத்தின் காரணமாக இருக்கலாமே ஒழிய, தட்டுப் பாட்டினால் நேரிட்ட விலையேற்றம் அல்ல. 1979-ஆம் ஆண்டில் 100 கிலோ துவரை விலை 400 ரூபாயாக உயர்ந்தது. 
இந்த விலை ஏற்றத்துக்கு பணவீக்கத்தையோ அல்லது விளைச்சல் குறைச்சலையோ காரணம் காட்ட இயலாது. 2013-இல் குவிண்டால் 4,400 ரூபாய்க்கு விற்ற துவரை இரண்டு ஆண்டுகளில் 3,300 ரூபாய் கூடி ரூபாய் 7,700 ஆனதன் காரணம் என்ன என்று எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. 
அதுமட்டுமல்ல. 2015 அக்டோபரில் துவரை விலை குவிண்டால் ரூ. 14,000-க்கும், துவரம் பருப்பு ரூ. 20,000-க்கும் மேல் விற்கத் தொடங்கிய பின்னர்தான் அரசு விழிக்கத் தொடங்கி இருக்கிறது.
தற்போது இந்தக் கட்டுரையின் முக்கியமான பகுதிக்கு வருவோம். என்ன காரணத்தினால் இந்தத் திடீர் விலையேற்றம்? புள்ளி விவரக் கணக்கின் படி இந்த ஆண்டு விளைச்சல் 12 சதவீதம் குறைவு என்று தெரிகிறது. ஆனால், விலை கூடுதல் 300 சதவீதம். என்ன காரணம் என்று ஆராய்வோம். அதற்கு முன்னதாக என் மனதில் தோன்றும் இரண்டு வினாக்களுக்கு யாராவது விடை பகன்றால் நலம். 
நாடெங்கும் பருப்பு விலை ஏறுகிறது என்ற கூக்குரல் அரசின் காதில் எட்டிய உடன் அவர்கள் கொடுத்த முதல் அறிக்கை என்னவென்றால் விளைச்சல் குறைவின் காரணமாக ஏற்பட்ட இந்தத் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய 5,000 டன் பருப்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும், அடுத்த சில நாள்களில் கூடுதலாக 2,000 டன் இறக்குமதி செய்து விலை ஏற்றத்தைத் தடுத்து விடுவோம் என்றும் கூறினார்கள். 
ஆனால், தற்போது ஒரு லட்சம் டன் பதுக்கப்பட்ட பருப்பு பிடிபட்டுவிட்டதாகவும் விரைவில் அது மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டு குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகிக்கப் படும் என்றும் கூறுகிறார்கள். உள்நாட்டிலேயே பதுக்கப்பட்ட பருப்பு ஒரு லட்சம் டன் இருப்பது தெரியாமல் 5,000 டன் பருப்பு வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் போகிறோம் என்பது இந்த நூற்றாண்டிலேயே மிகப் பெரிய முரண்பாடு எனலாம்.
சரி, உள்நாட்டில் ஒரு லட்சம் டன் பதுக்கல் பருப்பு பிடிபட்டுப் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்தி வெளியாகி உள்ளது. சாதாரணமாக தங்கம் அல்லது போதைப்பொருள் கடத்தப்பட்டால், கடத்தி வந்தவரின் பெயர் மற்றும் புகைப்படம் எல்லா ஊடகங்களிலும் வெளியிடப்படும் அல்லவா? இவ்வளவு பருப்பு யாரால் பதுக்கப்பட்டது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லையே ஏன்? 
பொதுமக்களிடம் வியாபாரிகள் பதுக்கிவிட்டு இன்னும் விலை ஏற்றத்தைச் செயற்கையாகச் செய்து கொள்ளை அடிக்க நினைக்கிறார்கள் என்ற பிரசாரத்தை அரசு மேற்கொள்கிறது. இதன் பின்னணி என்ன? நம் நாட்டில் எதற்கு வேண்டுமானாலும் பினாமி தாராளமாகக் கிடைப்பார்கள். நாட்டில் உள்ள தேச விரோத சக்திகள் வணிகர்கள் என்ற போர்வையில் சில பினாமிகளை உருவாக்கி அவர்கள் மூலமாக இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டது தான் உண்மை. அதற்கும் பல அதிகாரிகள் உடந்தையாக இருக்கக்கூடும். 
நாட்டில் உளவுத் துறை பயங்கரவாதிகளைக் கண்காணிக்க மட்டுமல்ல, இது போன்ற சமூக விரோதிகளை இனம் கண்டு அரசுக்கு எச்சரிக்கை செய்யும் பணியும் அவர்களுடையதுதான்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஊகவணிகம், இணையவழி வர்த்தகம் என்ற பெயரில் பயறு, பருப்பு வகைகளையும் அனுமதித்ததால் செயற்கையான விலையேற்றம் அரங்கேறத் தொடங்கியது. பின்னர் இதுவே சமூக விரோதிகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்து விட்டது. 
என்னவோ இந்த 2015-ஆம் ஆண்டில்தான் 12 சதவீத விளைச்சல் குறைவு என்று கூறுகிறார்களே, இதற்கு முன்னர் இவ்வாறு 12 சதவீத விளைச்சல் எந்த ஆண்டும் குறைந்ததில்லையா அல்லது அப்போதெல்லாம் வணிகர்களுக்குப் பதுக்கத் தெரியவில்லையா? இதற்கு அரசு என்ன பதில் கூறப் போகிறது?
பொதுவாக, தமிழக மக்களும் தமிழக வணிகர்களும் சட்டத்தை மதித்து நடப்பவர்கள். இதற்குத் தமிழக அரசும் ஒரு காரணம். ஒரு லட்சம் டன் பருப்பு பிற மாநிலங்களில் பதுக்கப்பட்டிருந்தும் 100 டன் பருப்பு கூட இங்கு பதுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 
பருப்பு என்றால் பொதுவாக துவரம் பருப்பை நாம் எண்ணினாலும், அரசு கைப் பற்றிய அனைத்தும் துவரம் பருப்புதானா என்று தெரியவில்லை. துவரம் பருப்பு தவிர உளுந்தம் பருப்பு, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, பட்டாணிப் பருப்பு, லென்டில் எனப்படும் மசூர் பருப்பு போன்றவையும் நுகர்வோர் அன்றாடம் பயன்படுத்தும் வகைகளில் சில. 
துவரம் பருப்புக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் பயன்படுத்துவது உளுந்தம் பருப்பு. துவரை சாகுபடிக்கும் உளுந்து சாகுபடிக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழக மண் உளுந்து சாகுபடிக்கு ஏற்றதாக இருப்பதால் நமது தேவையை சுமார் 30 சதவீதம் பூர்த்தி செய்ய வல்லது நமது வேளாண்மை. 
மேலும், துவரம்பருப்பு போன்று நாட்டு மக்கள் அனைவரும் உளுந்தம் பருப்பை தமிழக மக்கள் போல் பயன்படுத்துவதில்லை. ஆனால், நமது தேவையைக் கருத்தில் கொண்டே பல வட மாநிலங்களில் உளுந்து பயிரிடப்படுகிறது.
இறுதியாக, வருங்காலத்தில் இது போன்ற விலை ஏற்றம் வராமல் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும் என்று காண்போம்.
1) மேலே குறிப்பிட்ட வளமான பகுதிகளில் அதாவது உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு தனது நேரடிப் பார்வையில் துவரையைப் பயிரிடச் செய்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாடு தன்னிறைவு மட்டுமல்ல, ஏற்றுமதியும் செய்யும் அளவுக்கு விளைச்சலை உயர்த்த முடியும்.
2) சமூக விரோதிகள் பதுக்கலை ஏற்படுத்தி அரசு மீது மக்கள் வெறுப்பு கொள்வதை உளவுத் துறை தடுக்க வேண்டும்.
3) தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நமக்குள்ள வசதிகளில் பயறு பருப்பு விளைச்சலை நமது தேவை முழுவதற்கும் உற்பத்தி செய்ய இயலாது என்றே கருதப்படுகிறது. எனினும், வேளாண் விஞ்ஞானிகளின் கருத்தையும் கேட்டறிந்து கொள்வது நல்லது.

http://www.dinamani.com/editorial_articles