பயனர்:வசந்தன் பெருமாள்/மணல்தொட்டி
மலையகத்தின் பண்பட்ட கவிஞரும் தொல்காப்பிய ஞாயிறுமான செ.சீனி நைனா அவர்களின் கவிதையில் காணப்படும் மொழியுணர்வு.“சீனி நைனா” கவிதைகளில் வெளிப்படும் மொழியுணர்வு
வசந்தன் த/பெ பெருமாள் ஆசிரியர் கல்விக் கழகம் சுல்தான் அப்துல் அலிம் வளாகம், சுங்கை பட்டாணி, கடாரம்.
அமுதான தமிழே நீ வாழி – என் ஆவியிலே கலந்து நாவினிலே தவழும் அமுதான தமிழே நீ வாழி தாய்தரும் பாலினிலும் நீயிருந்தாய் – அவள் தாலாட்டுப் பாடலிலும் தேன்கலந்தாய் ஆயிரம் மொழிகளிலும் நீசிறந்தாய் – நான் அழைத்தாலும் அயர்ந்தாலும் துணையிருந்தாய் ! காப்பியனைத் தமிழுலகம் ஆளவைத்தாய் – இங்குக் காலமெல்லாம் வள்ளுவனை வாழவைத்தாய்
தமிழ் வாழவேண்டும் எனும் விருப்பம் கொண்டதாக பரந்துபட்ட தமிழ்ச் சமூகம் காணப்படுகின்றது. அதனைப் பெருமளவில் மறுதலிப்பதாகவே புலம்பெயர்ந்த மண்ணில் வாழ்வியல் யதார்த்தங்கள் காணப்படுகின்றன. புலம்பெயர்ந்த சூழலிலே தமிழைக் காக்க வேண்டி தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகலாவிய நிலையில் வாழுகின்ற தமிழர்கள் அன்னைத் தமிழிலின்பால் நேசம் கொண்டு அரிய பல இலக்கியப் படைப்புகளைப் படைத்து உலகமயத் தாக்கத்தை எற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் சங்க இலக்கியம் முதல் இன்னாளிலுள்ள தற்கால இலக்கியம் வரை பல்வேறு பரிணாமங்கள் பெற்றுத் தமிழகத்துக்கு நிகராக புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய படைப்புகள் உலக அங்கிகாரம் பெற்று விளங்குகின்றது. அவ்வகையில் மொழியுணர்வை வெளிப்படுத்துவதாக கவிஞர் சீனீ நைனா அவர்களின் கவிதைகள் அமைந்துள்ளது. இதனைச் சார்ந்தே இந்த ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
முன்னுரை
தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் உலக இலக்கியத்திற்கு நிகராக பீடுநடைப் போடுகிறது என்றால் அவை மிகையன்று. அவ்வகையில் மலையகம் பெற்றத் தமிழ்த்தாயின் திருமகனார் தொல்காப்பிய ஞாயிறும் இறையருட் கவிஞருமான அமரர் திரு. சீனி நைனா முகம்மது அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த தேன்கூடு எனும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற பல கவிதைகள் மொழியுணர்வினைத் தூண்டவல்லதாக அமைந்துள்ளது. இத்தகைய கவிதைகளைத் தேர்ந்தெடுத்து என் ஆய்வுக்கு உட்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரையை நகர்த்தியுள்ளேன்.
கவிதைகளில் வெளிப்படும் மொழியுணர்வு
கவிஞர் அவர்கள் பல்வேறு கோணங்களிலே தமது மொழியுணர்வினை வெளிகொணர்கின்றார். தான் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து மலையகத்திற்கு வந்திருக்கும் செய்தியினை “என் காதலி” எனுமோர் கவிதையில் பகர்வதை அறிய முடிகிறது. காட்டாக, “யான்பிறந்த பொன்னாடாம்......ஏற்றமிக்க தென்னாட்டில்” எனும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றது. தமிழைத் தன் நேசமிகு காதலியென இலக்கிய நடை குன்றாமல் வர்ணனை செய்திருப்பது கவிதைக்கு முத்தாய்ப்பாக அமைகிறது. வாழ்நாளில் தமிழுக்குத் தொண்டாற்றிய மாபெரும் கவிஞர் இவர் தமிழைப்பற்றி இவ்வாறு கூறி தன் மொழி உணர்வை வெளிப்படுத்துகிறார்.
“நல்லவளாய் வாழுகின்றாள் நானிலத்தில் பெண்ணிவளை வல்லவளாய் ஆக்குதலே வாழ்வினில் என்குறிக்கோள்” மேலும், தமிழ்மொழியானது ஐம்பொறிக்கும் நல்லமுதமாய்; உயிருக்கு அருமருந்தாய் விளங்குகின்றது என்று நயம்பட மொழிகிறார். “நான்குறிக்கும் பெண்ணிவளோ.... நல்லமுதம் ஐம்பொறிக்கும்” எனும் வரிகளில் இக்கருத்தைப் பறைசாற்றுகிறார். சுருங்கக்கூறின் பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்த மொழி தமிழ்மொழி எனவே, அதைத் தொழுது சுவைத்திட வேண்டும் என்கிற கூற்றை கவிஞர் முன்னிறுத்துகிறார்.
ஐயா அவர்கள் தமிழுக்கொன்றெனில் சீறி பாயும் சிங்கம்போலவே தமது கவிதையின் வாயிலாக ஆங்காங்கே எறிகணைகளைப் பாய்ச்சுகிறார். தமிழின் தரத்தைத் தாழ்த்துவார் முகத்தினில் உமிழ்வதாய் நறுக்குத் தெளித்தாற் போல் “தமிழ் வஞ்சகர்கள்” என்ற கவிதையில் நயம்பட உரைத்திருக்கிறார்.
தாயைத் துகிலுரிந்து நாயின் குளிர்தடுப்போன் சேயென்றால் ஞாலம் சிரிக்காதோ! – தாயின் மொழிகொன்று மாற்றார் மொழிகாப்போன் வந்த வழியே பழிதான் கழி! என்ற வரிகளில் கவிஞரின் உளக்கூற்று தென்படுகிறது. பெயரில் மட்டும் தமிழ் என்று அடையாளமிட்டுக் கொண்டு உணர்வால் மொழிப் பற்றற்றவர்களைச் சாடுவதின் வழி தமது மொழியுணர்வின் வெளிப்பாட்டை நாம் காணமுடிகிறது. மேலும், “சோறுமட்டும் போதுமா?” எனும் கவிதையில் தமிழ்ச்சோறு போடுமா என்று கேட்பவர்கள் என்றுமே கீழானோர்கள் என்பதை மிகுந்த உணர்ச்சியோடு பாடியுள்ளார். சான்றாக, சோறுபோடும் மொழிகளெல்லாம் சொந்தமொழி ஆகுமா? உனக்குச் சோறுமட்டும் போதுமா? – நிலை மாறும்போது தாயைக்கூட மாற்றிக்கொள்ளத் தோன்றுமா? – தன் மானமுனக்கு வேண்டுமா? என்ற கவிதை வரிகள் காட்டுகின்றது. அத்தோடு, தமிழை இழிவென எண்ணுகின்றவனைத் தரங்கெட்டவன் என்று “சோறு மட்டும்போதுமா” எனும் கவிதையில் கூக்குரலிடுவதைக் கீழ்கண்ட கவிதை வரிகள் மெய்பிக்கின்றன. மொழிகட்கெல்லாம் அன்னையான முன்னைமொழி தமிழடா – அது உன்னை ஊக்கும் அமுதடா – அதை இழிவெனநீ எண்ணிவிட்டால் இழிந்திடுமுன் தரமடா – மெல்ல அழிந்திடுமுன் இனமடா!
கவிஞர் தமிழ்மொழியுணர்வு பெருக்கெடுக்கின்ற போது அஃனி பிழம்பைப் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. கவிஞனுக்கு உணர்ச்சி மேலோங்கும் போது அது கவிதையாகப் பிறப்பெடுக்கின்றது. அவ்வாறு இறையருட் கவிஞர் தமிழைத் தரம் தாழ்த்துவோருக்குச் சம்மட்டியில் அடிப்பதன் வாயிலாக தன்னகத்தில் கொண்டுள்ள மொழியுணர்வின் வெளிப்பாடினை நம்மால் உய்த்துணர முடிகிறது. மூச்சுக்கு முந்நூறு முறை தமிழைப் பற்றி சபையில் பேசுபவனின் குடும்பங்களில் தமிழ் வாழ்வத்தில்லை. ஆனால், ஊறுக்கு மட்டும் உபதேசிப்பவராய் பலரிங்கு நமது சமூதாயத்தில் இருக்கிறார்கள். வெறும் வயிற்றுப் பிழைப்புக்கும் விளம்பரங்களுக்கும் தமிழை நாடுவோரைக் கவிஞர் தமிழ் வஞ்சகர்கள் எனும் கவிதையில் இவ்வாறு பகர்கின்றார்.
தின்று கொழுத்ததெல்லாம் தீந்தமிழின் சோறெனினும் பன்றியா நன்றியுடன் பாராட்டும்...... இன்று நம்மில் பலர் இப்படித்தான் வாழுகின்றனர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆக, இத்தகைய துணிச்சலோடு கவிஞர் அவர்கள் தமது மொழியுணர்வினை இம்மாதிரியான கவிதையின் ஊடே வெளிப்படுத்துகிறார்.
“எல்லாம் தமிழிலே” எனும் கவிதையில் கவிஞர் அவர்கள் தமிழால் தான் பெற்ற பேற்றினையும் தமிழே அனைத்து மொழிகளுக்கும் மூலமென்று மகிழ்ச்சியுடன் மொழிகிறார். சான்றாக, “மொழிகள் யாவும் தாயைத் தேடி- முடிவில் கண்டது தமிழிலே” எனும் வரிகள் எடுத்துரைக்கிறது. மேலும், அமுதம்போல் சுவைக்கும் தமிழானது இளமையின் இருப்பிடமாக திகழ்கின்றது என்ற கருத்தையும் முன் வைக்கின்றார். சான்றாக “அழிவில் லாத இளமை வாழும் – அருமை கண்டது தமிழிலே” என்ற வரிகளில் உணர்த்துகின்றார். இவ்வாறு தமிழ்மொழியானது வெறும் ஓர் இனத்தின் அடையாளமாக நின்றுவிடாமல் இளமைக்கு விருந்தாக, நோய்க்கு நல்மருந்தாக, அறிவுக்கு சுடராக இப்படி பல்வேறு நிலையில் அருள் பாலிக்கின்றது என்பதைக் கவிஞர் பாடுகின்றபோது அவர் தமிழ் மீது கொண்டிருக்கின்ற பற்றையும் மொழியுணர்வினையும் படம் பிடித்துக் காட்டுகின்றது என்றால் அவை மிகையன்று நல்ல கவிஞனுக்குத் திறம் சேர்ப்பது அவனது ஆக்ககரமான சிந்தனையும் அதர்மதத்தையும் குற்றங்களையும் கண்டு துணிச்சலுடன் சூளுரைப்பதேயாகும். ஐயா அவர்கள் கற்றறிந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் இப்படி யாரென்றும் பாராமால் தன் தாய்மொழிக்கு இழுக்கு வந்து சேர்ந்திடும்போது மிகத் துணிச்சலோடு சூளுரைப்பதைக் காண்கையில் அவரது மொழியுண்ரவு உச்சத்தில் நிற்பதை நாம் உணரமுடிகின்றது. ஒருமுறை “தமிழ்மொழியில் கலப்பு வேண்டும்; அதைத் தடுப்பது கிறுக்குத்தனம் என்று எழுதியவருக்கு மறுமொழியாக இவ்வாறு தமது “கலகம் வேண்டாம்” எனும் கவிதையில் சூளுரைக்கின்றார்.
சிவேலு சுவாமிகள் ஐயா – தமிழ் சிதைப்பார்க்கு நீர்துணை கையா? ...................................................... வெல்லத் தமிழிலே வேம்பைக் கலந்திட விழைவோன் தமிழனா என்று – தமிழ் வெட்குதே நும்செயல் கண்டு ....................................................... தமிழாலே வாழ்க்கையின் தரத்தில் உயர்ந்தபின் தமிழையே சிதைக்கத் துணிந்தீர் – உண்ட தமிழ்நன்றி கொன்றால் தொலைந்தீர் ! என்று உணர்ச்சிப் பொங்க பாடியிருப்பது அவரது அதீத மொழியுண்ர்வைப் பறைசாற்றுகிறது.
“ தப்பெல்லாம் சரியாச்சே தமிழா!” எனும் கவிதையில் தமிழர்தம் செய்த கேடுகளுள் ஒன்றான் தமிழ்மொழி சிதைவைப் பற்றி பாடுகிறார்; வேதனை கொள்கிறார் என்பதனை அவரின் கவிதை வரிகள் உரைக்கின்றன. தாய்தந்தை என்ற சரியான சொல்லை – தாய் மற்றும் தந்தை என்றும், அப்படியா என்று சரியாக வினவாமல் ஆமாவா என்று வினவுதல், தொடக்கமதனை – துவக்கமென்றும், சின்னபின்னம் மறுவி சின்னாபின்னம் என்றும், முன் தானை - முந்தானையாக, கொப்பூழ் – தொப்புளாய்...... இப்படி நல்ல பல தமிழ்ச் சொற்கள் மறுவி சிதைந்திருப்பதைக் கண்டு வேதனைக் கொண்டவராய் தம் கவிதையில் இவ்வாறு பாடுகிறார்:
உன்மொழி செம்மொழி என்று – இந்த உலகமே உணர்ந்தும்நீ உணராமல் நின்று தன்விழி தான்குத்திக் கொண்டு - இங்குத் தவிக்காதே பின்னாலில், தமிழா திருந்து
தொடர்ந்து, அண்மையில் தமிழ்மொழியினைச் செம்மொழி என அறிவித்ததும் “செம்மொழி யாவினும் செம்மொழி” என்று தாய்த்தமிழைப் பாடி மகிழ்கின்றார். இப்பாடல் வல்லின மெய் இல்லாத ஆசிரியத் தாழிசையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கவிதையில் தாய்த்தமிழே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகின்றது என்ற கருத்தை முன்னிறுத்தி “எம்மொழி யாயினும் அம்மொழி சேய்மொழி – எம்மொழி தாயடியோ ! என்று பாடி களிக்கின்றார். அத்தோடு, தமிழ்மொழியினது தொன்மையையும் அதன் சிறப்புகளையும் புனைந்திருப்பதன் வாயிலாக அவரது தமிழ் ஆளுமையும் மொழியுணர்வினையும் நாம் அறிய முடிகிறது. சான்றாக இவ்வரிகள் அமைகிறது.
இம்மொழி போலொரு வண்மொழி தொன்மொழி மண்மிசை ஏதடியோ! எம்முறை தேரினும் எந்நெடுங் காலமும் செம்மொழி ஈதடியோ! முடிவுரை
புலம்பெயர்ந்த தமிழர்தம் இலக்கியங்களில் ஒன்றான கவிதை இலக்கியத்தில் மலையகத்தின் தொல்காப்பிய ஞாயிறு ஐயா திரு.சீனி நைனா அவர்களின் கவிதைகள் மலைநாட்டு கவிதைகளின் உச்சம் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. அதிலும் தமது மொழியுணர்வை வெளிக்கொணரவல்ல கவிதைகளில் சொல் சுவையும் பொருட் சுவையும் மிகுந்திருப்பதைக் கவிதையை உய்த்துணரும்போது நமக்கு நன்கு புலப்படுகிறது. கவிதையில் ஆங்கங்கே வால் எடுத்து வீசுவதாய் தமிழுக்கு மாசுற செய்பவர்களைக் கடுமையாக சாடுவதன் வாயிலாக அவர் மொழியின் மீது கொண்டுள்ள அளாதியான பற்றையும் நன்மதிப்பையும் நாம் அறிய முடிகின்றது. ஆக, வெறும் கவிதை இன்பத்தை மட்டும் தரவல்ல கவிதைகளைக் காட்டிலும் இன்பத்தோடு நம் அறிவை உரசிப் பார்ப்பதற்கு வித்திடுகின்ற கவிதைகளே வரலாற்றில் இடம்பெறுகின்றன என்பது மறுப்பதற்கில்லை. வேறூன்றப்பட்ட மனித விழுமியத்திற்கு இருப்பிடமாகவும் அவை அமைந்துவிடுகின்றன என்பது குறப்பிடத்தக்கதாகும். எனவே, ஐயாவின் கவிதைகளைப் படித்து நம்மை வளப்படுத்திக் கொள்கின்ற அதே வேளை மொழியுணர்வோடு வாழ்வில் துலங்கினால் நிச்சயம் தமிழ் இந்நாட்டில் என்றென்றும் தழைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
முந்தியநூல் அத்தனைக்கும் முத்திரைத் தொல்காப்பியமும் பிந்தியெல்லாம் கல்வி பெறுங்குறளும் – சிந்தையெல்லாம் முத்தமிழ்த்தேன் பெய்யும் முதற்சிலம்புக் காப்பியமும் புத்தமிழ்தம் என்றுணர்ந்து போற்று