பயனர்:2210381gowthamshrivel/மணல்தொட்டி

பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் மைல் கல்லாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி பூரிக்கும் ஆர்வத்தில் திரைப்படம் பார்க்கவுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் கதையை சுருக்கமாக பொன்னியின் செல்வன் பேசும் சோழ சாம்ராஜ்யத்தின் கதையை எளிமையாக புரிய வைக்க வேண்டுமாயின் பராந்தக சோழர் காலத்தில் இருந்து துவங்கினால் போதும்.


தமிழகத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சோழ, சேர, பாண்டிய மன்னர்களே ஆண்டு வந்தனர். நடுநடுவே அந்நியப் படைப்பால் இந்த மூவேந்தர்கள் துரத்தப்பட்ட வரலாறும் உண்டு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டு களப்பிரயர் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தினர். சுமார் 200 வருடங்கள் களப்பிரயர் ஆட்சிக்காலம் நீடித்தது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவர்களும், பாண்டியர்களும் எழுச்சிப் பெற்றனர். இந்த காலகட்டத்தில் இவ்விரு அரசுகளுக்கும் கட்டுப்பட்ட சிற்றரசாக சோழ அரசு இருந்தது.

சுமார் 300 வருடங்கள் சிற்றரசாக கட்டுப்பட்டு இருந்த சோழ அரசு மீள்வதற்கு எட்டாம் நூற்றாண்டில் நடந்த பல்லவ - பாண்டிய போர் வழி வகுத்தது. திருப்புறம்பியத்தில் நடந்த போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக விஜயாலய சோழர் தனது படைகளுடன் கலந்து கொண்டார். போரில் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சோழர்கள் மீண்டனர்.

அதன் பிறகு விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்யன் பல்லவர்களுடன் போர் புரிந்து காஞ்சியை தலைநகராகக் கொண்ட தொண்டை நாட்டை கைப்பற்றினான். அவனது மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய மன்னன் இராஜசிம்மனை போரில் தோற்கடித்தான். தோல்வியுற்ற பாண்டியன் இலங்கைக்கு தப்பிச் சென்று சிங்கள மன்னனிடம் அடைக்கலம் பெற்றான். அவனுடன் பாண்டிய மணிமுடியும், இந்திர ஆரமும் ஈழத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இரண்டைக் குறித்து விரிவான விவரணை பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்றுள்ளது.

முதலாம் பராந்தகனுக்கு நான்கு புதல்வர்கள். அதில் மூத்தவனான இராஜேந்திரன் தலக்கோணத்தில் நடந்த போரில் ராஷ்டிரக்கூடர்களால் தோற்கடிக்கப்பட்டு தலை கொய்யப்பட்டான். இதனால் முதலாம் பராந்தகனின் இரண்டாவது மகன் கண்டராதித்யன் அரியணை ஏறினான். கண்டராதித்யனின் மனைவி செம்பியன் மாதேவியார். இவரைக் குறித்து பொன்னியின் செல்வனில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சிவ, வைணவ ஆலயங்களுக்கு இவர் அள்ளிக் கொடுத்ததாக கல்கி புகழ்ந்து எழுதியுள்ளார். இவர்களின் மகன் உத்தமசோழன். இவனைக் குறித்தும் பொன்னியின் செல்வனில் வருகிறது. பெண்களைப் போல் பல்லக்கில் பயணிக்கும் பலவீனமான நபராக கல்கி இவனை சித்தரித்துள்ளார். மகன் ஆன்மிகப் பணி செய்ய வேண்டும் என்பதே செம்பியன் மாதேவியாரின் விருப்பமாக இருந்தது.

கண்டராதித்யனுக்குப் பிறகு அவரது மகன் உத்தமசோழன் அரியணை ஏறாமல், கண்டராதித்யனின் தம்பி அரிஞ்சயர் சோழ அரியணை ஏறினார். அவர் சொற்ப நாளே அரசாண்டார். அவரது மறைவுக்குப் பின் அரிஞ்சயரின் மகன் இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தரச்சோழர் அரியணை ஏறினான். இவரை நோய்வாய்ப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் புதினத்தில் நீங்கள் பார்க்கலாம்.

இதில் உத்தமசோழனின் நிலைதான் பரிதாபம். அப்பாவுக்குப் பின் அவன் அரியணை ஏறாமல் அப்பாவின் தம்பி சித்தப்பா அரியணை ஏறினார். அவர் அல்ப ஆயுசில் சென்று சேர, அப்போதும் அரசப் பதவி உத்தமசோழனுக்கு வரவில்லை. சித்தப்பாவின் மகன் அரியணை ஏறினார். அவருக்குப் பிறகாவது அரியணை வரும் என்றுப் பார்த்தால் சித்தப்பாவின் மகன் சுந்தர சோழருக்கு யானை மாதிரி இரண்டு பையன்கள். மூத்தவன் ஆதித்யக் கரிகாலன். இளையவன் அருண்மொழி வர்மன். ஒரு சகோதரி குந்தவை.

இந்த ஆதித்யக் கரிகாலனாக விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். குந்தவை, த்ரிஷா, அவரை காதலிக்கும் வந்தியத்தேவனாக கார்த்தி. வந்தியத்தேவன் குறித்து வலலாற்றில் சிறு குறிப்பே உள்ளது. ஆனால், கல்கி தனது கற்பனையில் விரித்து அந்த கதாபாத்திரத்தை பொன்னியின் செல்வனின் நாயகனாக்கினார்.

மீண்டும் வரலாற்றுக்கு வருவோம். முதலாம் பராந்தகனிடம் தோற்று ஈழம் சென்ற இராஜசிம்மனின் மகன் வீரபாண்டியன் போர் புரிந்து மதுரையை சோழர்களிடமிருந்து மீட்டான். இந்தப் போரில் சோழ இளவரசினின் தலைகொண்டதால் அவனுக்கு சோழன் தலைகொண்ட பாண்டியன் என்ற பட்டப்பெயர் கிடைத்தது. இந்த சோழ இளவரசன் யார் என்பது குறித்து வரலாற்றில் துல்லியமான தகவல் இல்லை. பராந்தகனின் நான்காவது மகன் உத்தமசீலியாக இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் யூகம்.

சுந்தர சோழர் தனது ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியன் மீது படையெடுத்தார். இந்தப் போரில் கலந்து கொண்ட அவரது மூத்த மகன் ஆதித்ய கரிகாலன் (படத்தில் விக்ரம்) வீரபாண்டியனை தோற்கடித்து அவனது தலையை துண்டித்து கொலை செய்தான். இதனால் பாண்டியன் தலைகொண்ட பரகேசரி என்ற பட்டம் அவனுக்குக் கிடைத்தது. இந்த வீரபாண்டியனின் காதலியாக நந்தினி (படத்தில் ஐஸ்வர்யா ராய்) என்ற கற்பனை கதாபாத்திரத்தை கல்கி படைத்திருந்தார்.

இந்த நந்தினி மீது சிறுவயது முதலே மோகம் கொண்டவராக ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தை கல்கி எழுதியிருப்பார். நந்தினி இரைஞ்சிக் கேட்டும் மசியாமல் வீரபாண்டியனின் தலையை கொய்வான் ஆதித்ய கரிகாலன். இதற்காக வஞ்சம் தீர்க்க, சோழர்களின் படைத்தலைவரும், வயதில் கிழவருமான பெரிய பழுவேட்டரையரை (படத்தில் சரத்குமார்) நந்தினி திருமணம் செய்து அரண்மனைக்கு வருவது போல் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டிருக்கும். இவர்களின் சதிக்கு உத்தம சோழனின் பதவியாசையை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆதித்ய கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டதால் சிங்களத்தில் வெற்றிக் கொடி நாட்டிய சுந்தர சோழனின் இரண்டாவது மகனும், ஆதித்ய கரிகாலனின் தம்பியுமான அருண்மொழி வர்மன் அரியணை ஏறியிருக்க வேண்டும். மக்களின் பேராதரவும் அவனுக்கு இருந்தது. ஆனால், அவன் தனது சித்தப்பா உத்தமசோழனுக்கு பட்டம் சூட்டினான் என்பது வரலாறு.

இந்த வரலாற்றில், ஆதித்ய சோழன் வீரபாண்டியனின் தலைகொண்டது, அருண்மொழிவர்மனின் சிங்கள படையெடுப்பு, ஆதித்ய கரிகாலனின் மர்ம மரணம் என ஒருதுளி வரலாற்றை விரித்துப் பேசுவதுதான் பொன்னியின் செல்வன். இதில் இடம்பெற்றுள்ள ஆழ்வார்க்கடியான் (ஜெயராம்), பூங்குழலி (ஐஸ்வர்யா லக்ஷ்மி), நந்தினி (ஐஸ்வர்யா ராய்), நடித்துள்ளனர். வந்தியத் தேவன் தன் மீதான கொலைப் பழியில் இருந்து எப்படி மீண்டு வருகிறார், அருள்மொழி வர்மன் சோழ தேசத்தை பழுவேட்டரையர் மற்றும் நந்தினி ஆகியோரின் சதியில் இருந்து எப்படி மீட்கிறான் என்பது தான் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன் அருள் மொழி வர்மன் எனும் இராஜராஜ சோழனின் பெருமை பேசுவதாக இருந்தாலும் கதையின் நாயகன் வந்தியத் தேவன் தான்.

. இது தேசிய தமிழரின் திரைப்படம்.