பயனர்:2220381meenal.s/மணல்தொட்டி


காடவராய மன்னனின் இசைக்குதிரைகள்..

நம் முன்னோர்கள் காலத்தில் பல்வேறு இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டன. இதற்கும் மேலாக, ஏழு ஸ்வரங்களை எழுப்பும் விதமாக திருக்கோயில்களில் இசைத்தூண்கள் அமைக்கப்பட்டன. 

இவற்றிற்கெல்லாம் மணிமகுடமாக இசையை எழுப்பும் இசைக் குதிரைகள், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், சேந்தமங்கலத்தில் காடவராய மன்னனால் அமைக்கப்பட்டுதுள்ளது.

காடவராய மன்னர்கள் குறித்தும் அவர்கள் காலத்தில் கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட இந்த இசைக்குதிரைகள் குறித்து பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த இரண்டு இசைக்குதிரைகளும், மூன்றாம் இராஜராஜசோழனைச் சிறையிட்ட காடவராய மன்னர்களால் உருவாக்கப்பட்டது ஆகும்.

இப்பெருமைமிகு, கம்பீரமான சிலைகள் இன்று, இலைமறைக் காய்களாக, கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. 

இந்த இசைக்குதிரைகள் பற்றியும், இதனை உருவாக்கிப் பெருமை சேர்த்த காடவராய மன்னர்களைப் பற்றியும் வெளி உலகிற்கு எடுத்துக் கூறி, இந்த இரண்டு இசைக் குதிரைகளைக் காப்பாற்றி நம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதே, இக்கட்டுரையின் நோக்கம்.

இசைக்குதிரைகள் பற்றி அறியும் முன்பாக, இதன் பெருமைக்குக் காரணமான காடவராயர்களைப் பற்றியும் அறிந்து கொள்வது முக்கியம்.

பிற்காலச் சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள், காடவராயர்கள் ஆவர். இவர்களை பல்லவர் வழிவந்தவர்கள், பிற்காலப் பல்லவர்கள் என்றும், இருவேறு விதமாக வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்களின் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தொடங்கி, பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை நீள்கின்றது. இவர்கள் பெருகானூர் நாட்டைச் சார்ந்தவர்கள். கடலூர், வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் பகுதிகளில் ஆட்சி புரிந்தவர்களாவர்.

காடவராயர்கள் நாட்டின் தலைநகரமாக இன்றைய உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் விளங்கியது.

சோழன் ஆளுகைக்குட்பட்ட சிற்றரசர்களில் இவர்களே முதன்மையானவர்களாக விளங்கினர். இதற்குக் காரணம், மூன்றாம் குலோத்துங்கச்சோழனின் மகளை, முதலாம் கோப்பெருங்சிங்கனான காடவராயன் மணம் புரிந்தான் என்பதாகும்.

வீரசோழ காடவராயனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஏழிசை மோகனன் மணவாளப் பெருமாளுக்கு, வாணிலை கண்ட பெருமாள், இராசராஜ காடவராயன் என்ற பெயர்களும் உண்டு. இவன் பெயராலேயே வாணிலை கண்டீசுவரம் திருக்கோயில் அமைந்தது. இவர்கள் காலத்தில் எழுப்பப்பட்டதே மிகப்பெரிய கோட்டை, வாணிலை கண்டீசுவரம் திருக்கோயில், மண்டபம், திருக்குளம், இசைக்குதிரைகள் ஆகும்.

காடவராயர் ஆட்சியில், சைவ சமயம் செழிப்பாக இருந்தது. என்றாலும், வைணவம், சமணத்திற்கும் உடைய கௌரவம் தரப்பட்டது. குறிப்பாக, சிதம்பரம், திருவண்ணாமலை கோயில்களுக்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்தனர். அதேபோல, திருவயிந்திரபுரம் பெருமாளுக்கும் இராஜகோபுரம் எழுப்பப்பட்டது. இம்மன்னர்கள் தமிழ் மீதும், பரதம், இசை இவற்றின் மீதும் பேராவல் கொண்டு ஆதரித்தனர்.

இதற்குச் சான்றாக சிதம்பரம் கோயிலின் கிழக்கு மற்றும் தெற்கு கோபுர வாயில்களில் உள்ள பரதநாட்டியச் சிற்பங்கள் அமைந்துள்ளன. இம்மன்னர்கள் புலவர்களை ஆதரிக்கும் வள்ளல்களாகவும் விளங்கினர். நீர் நிலைகள் உருவாக்கப்பட்டு, நீர் மேலாண்மை வெகு சிறப்பாக பேணப்பட்டது. மன்னராட்சியும், பொற்கால ஆட்சியாக திகழ்ந்தது.

கி.பி. 1231இல் போசள மன்னன் வீரநரசிம்மன் தன் மகனின் திருமணத்திற்காக கருநாடகம் சென்றபோது, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், சோழநாட்டின் மீது படையெடுத்து, சோழனை தோல்வியுறச் செய்தான். போசள நாட்டின் மன்னன் வீரநரசிம்மன் மகளை மணம் முடித்த மூன்றாம் இராஜராஜன், தன் மாமனாரின் உதவியை நாடி, போசளநாட்டிற்குச் சென்றான்.

அப்போது அவனை திருவண்ணாமலை அருகேயுள்ள தெள்ளாறில் வழிமறித்த காடவராய மன்னனான, முதலாம் கோப்பெருஞ்சிங்கன், சோழனைச் சிறைபிடித்தான். தன் நாட்டின் தலைநகரான சேந்தமங்கலத்தில், சோழனை, சிறையில் அடைத்தான்.

இதனை வயலூர், கரந்தைக் கல்வெட்டுகள் உறுதிசெய்கின்றன.

இதனால் கோபம் கொண்ட வீரநரசிம்மன், பெரும்படையினை காடவராயன் நாட்டிற்கு அனுப்பினான். அப்படை, தொண்டைமாநல்லூர், திருவக்கரை, திருவந்திபுரம் ஆகிய ஊர்களை சூரையாடிய கையோடு சேந்தமங்கலம் நோக்கிப் புறப்பட்டது. இதனால் பின்வாங்கிய, முதலாம் கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராஜராஜ சோழனை விடுவித்தான் என திருவயிந்திரபுரம் கல்வெட்டு கூறுகின்றது.

என்றாலும், சேந்தமங்கலம் சிதைக்கப்பட்டது. இதன் மிச்சங்களே இன்று நாம் காணும் தடயங்கள் ஆகும். இவற்றையே இந்தியத் தொல்லியல் துறை தற்போது பராமரித்து வருகிறது.

காடவராயன் குறித்த மற்றொரு கருத்தும் கூறப்படுகிறது. சோழர்களால் தோற்கடிக்கப்பட்ட பல்லவர்களே, சோழர் படையில் தளபதிகளாகப் பணியாற்றினர். இவர்களே பிற்காலச் சோழர்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது. சோழ வேந்தர்களால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ வம்சத்தினர் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1178-1216) மகளை மணந்து, அதே வம்சத்து வழிவந்த மூன்றாம் இராஜராஜ சோழனை (1216-56) சிறைபிடித்து சோழ வம்சத்தினரை பழிதீர்த்ததாக கூறப்படுகிறது.

காடவராயர்களுக்கு இருந்த இசை மீதான ஆர்வமே, இசைக்குதிரைகள் அமைக்கும் பணிக்கு உந்து சக்தியாக அமைந்தது. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இசைத்தூண்கள் அமைத்த வேளையில், கோப்பெருஞ்சிங்கன் இசைக் குதிரைகளை உருவாக்கி தனி முத்திரை பதித்தான்.

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இசைத் தூண்களை தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், பிற்காலப் பல்லவர்களாக விளங்கிய, காடவராயர் காலத்தில், குதிரை சிலைக்குள் இசையை வரவழைக்கும் விதமாக வடிவமைத்தது மிகவும் பாராட்டத்தக்க செயலாகும். இவை காடவராய மன்னர்களின் கலைநயத்தையும், அறிவியல் அறிவையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அரும்பெரும் வரலாற்றுப் பின்னணி கொண்ட சேந்தமங்கலத்தில் கோயில் எதிரே, சுமார் 100 அடி தூரத்தில் மிகப்பெரிய திருக்குளம் அமைந்துள்ளது.

கோயிலுக்கும், குளத்திற்கும் இடையே வீடுகள் எழும்பி உள்ளதால், அங்கு விசாரித்து செல்ல வேண்டும்.

பிரம்மாண்ட குளத்தின் வடக்குக் கரையோரம், சீறிப்பாயும் விதமாக இரண்டு பிரம்மாண்ட கல் குதிரைகள், தேர் இழுக்கும் வகையில், எழிலாக அமைந்துள்ளன. இரு குதிரைகளுக்கும் இடையே, கல்மண்டபம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த சிலையின் மேலே இருந்து குளம்புகள் வரை, சிறுகல் எடுத்து தட்டிக்கொண்டே வந்தால், விதவிதமான இசைகள் எழும்புவது, வியப்பாக உள்ளது. ஆனால், குளம்புகள் மற்றும் நிற்கும் மேடையில் மட்டும் இசை எதுவும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல, உடைந்து கீழே விழுந்த மற்றொரு குதிரையினை இந்தியத் தொல்லியல் துறை பீடத்தின் மீது தூக்கி நிறுத்தி வைத்துள்ளது. இந்த குதிரையும் இசை எழுப்புவது நமக்கு வியப்பளிக்கின்றது. இந்த இசை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய உடைத்தார்களா அல்லது பகைமன்னர்களின் ஆவேசத்தால் உடைக்கப்பட்டதா என்பது ஆய்வுக்குரியது.

பெரிய சதுரவடி கருங்கல் பீடம், அதன் மீத தாமரை இதழ்களைக் கொண்ட மூன்றடுக்கு பீடம், அதன்மீது ஏறி அமர்ந்து தாவிச் செல்லும் கோலத்தில் குதிரை அமைந்துள்ளது. குதிரையின் கால்களில் அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்கள், முதுகில் பட்டாடை விரித்த கோலம்; அதிலும் வேலைப்பாடுகள் கொண்ட தோற்றத்தில் மிளிர்கின்றது. கழுத்தில் மாலை, அழகிய மணிகளைக்கோர்த்த மணிமாலைகள், தலைக்கு அணிவரிசை, வாயில் கடிவாளம் என மொத்த குதிரையின் வடிவமும் கலைநயம் கொண்டு விளங்குகின்றது

பாயும் குதிரையின் அருகே இதே அழகு கொண்ட மற்றொரு குதிரை சிலை இதே கலை நயத்துடன் விளங்குகின்றது. இவ்விரு சிலைகளையும் சுற்றி இந்தியத் தொல்லியல் துறையால், இரும்பு முள்வேலி அமைக்கப்பட்டு கதவுகள் போடப்பட்டுள்ளன. என்றாலும், கோயிலுக்கு எதிரே 100 அடி தூரத்தில் உள்ள இந்த இடத்திற்குச் செல்ல எளிதான வழியில்லை. சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் தடை செய்கின்றன. அதேபோல, பிரம்மாண்டமான திருக்குளம் முழுவதும் புதர்மண்டிக் கிடக்கின்றது.

நீர்மேலாண்மையைச் சிறப்பாகச் செய்துவந்த காடவராய மன்னரின் தலைநகரிலேயே இது நிகழ்ந்துள்ளது வருத்தத்திற்குரியது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில், விழுப்புரம்-திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், கெடிலம் ஆறு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது, சேந்தமங்கலம் ஊரில் அமைந்துள்ள வாணிலை கண்டீசுவரம் திருக்கோயில்.

தமிழர்களின் பழம்பெருமையைப் பேசுவதைக் காட்டிலும், அவற்றிற்கு கண்கண்ட சாட்சியங்களாக அமைந்துள்ள நம் முன்னோர்களின் பொக்கிஷங்களைக் காப்பாற்றி, அவற்றை நம் சந்ததியினருக்காக பாதுகாத்து விட்டுச் செல்வதே, அவர்களுக்கு நாம் செய்யும் உதவியாகும். இதன் வாயிலாக நம் பெருமைகளை இந்த உலகிற்கு எளிதில் வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும்.

இக்கலைப் பொக்கிஷத்தைப் பராமரித்து, இத்தலத்தைச் சுற்றுலாத் தலமாக்கி உலகறியச் செய்தல் வேண்டும் என்பதே ராஜப்பா காடவராயராகிய எனது விருப்பமாகும்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2220381meenal.s/மணல்தொட்டி&oldid=3601654" இலிருந்து மீள்விக்கப்பட்டது