பயனர்:2220381meenal/மணல்தொட்டி

நம்பியாரின் வாழ்க்கை வரலாற்று  : சிறு குறிப்பு

நம்பியார் என்ற பெயருக்கு முன்னால் இருக்கும் எம்.என். என்ற இரு எழுத்துக்களில் எம் என்பது அவருடைய தந்தையார் கெளு நம்பியாரின் இல்லப்பெயரான ‘மஞ்சேரி’யைக் குறிக்கும். என். என்பது பெற்றோர் அவருக்கு இட்ட நாராயணன் என்ற பெயரைக் குறிக்கும். நம்பியார் பிறந்தது கேரளத்தின் கண்ணனூர் அருகில் உள்ள செருபழசி என்ற சிற்றூரில். 1919 மார்ச் 7. கெளு நம்பியார் – லட்சுமி அம்மாள் தம்பதியின் கடைசி மகன். கேரளத்தில் பிறந்தாலும் ஊட்டியில் வளர்ந்தவர். அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தவர்.

நம்பியாருக்கு 13 வயதாக இருந்தபோது 1930-ல் ஊட்டியில் முகாமிட்டிருந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ஸ்ரீ மதுரை தேவி வினோத பாலகான சபாவின் நாடகங்களைக் கண்டு கலை ஆர்வம் கொண்டார். ஆண்கள் மட்டுமே இருந்த அக்குழுவில் நம்பியாரைச் சேர்ந்துவிட்டவர் அவருடைய அண்ணன். முதலில் நாடகக் குழுவில் நம்பியாருக்குக் கிடைத்த பணி சமையல் உதவியாளர் வேலை. நாடகக் குழுவுடன் சேலம், மைசூர், தஞ்சை என நம்பியாரின் கலைப்பயணம் தொடங்கியது. அங்கே நடிப்புடன் வாய்ப்பாட்டும் ஆர்மோனியமும் கற்றுக்கொண்டார் நம்பியார்.

கோவை அய்யாமுத்து எழுதி, நவாப் ராஜமாணிக்கம் அரங்கேற்றிய ‘நச்சுப் பொய்கை’ என்ற நாடகத்தில் பெண் நீதிபதி வேடம் நம்பியாருக்கு 15-வது வயதில் கிடைத்தது. மாதம் மூன்று ரூபாய் ஊதியமும் கிடைத்தது. நவாபின் ‘பக்த ராம்தாஸ்’ நாடகத்தை 1935-ல் படமாக்கினார் பத்திரிகையாளர் முருகதாசா. நாடகத்தில் நடித்த அனைவருமே பழம்பெரும் நடிகரான டி.கே.சம்பங்கியுடன் நகைச்சுவை வேடத்தில் மாதண்ணாவாக நடித்தார் நம்பியார். நவாப் குழுவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இருந்த கே.சாரங்கபாணி விலக, அவர் ஏற்ற நகைச்சுவை வேடங்கள் அனைத்தும் நம்பியாருக்கு வந்துசேர்ந்தன. இப்போது மாதச் சம்பளம் 15 ரூபாயாக உயர்ந்தது. நவாப் குழுவிலிருந்து 23 வயதில் விலகிய நம்பியார் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே ‘கவியின் கனவு’ நாடகத்தில் ராஜகுரு வேடம் ஏற்று, முதல் வில்லன் நடிப்பை மேடையில் வெளிப்படுத்திப் புகழ்பெற்றார்.

ஓவியர் மாதவனின் பரிந்துரையுடன் ஜுபிடர் பிக்சர்ஸில் கம்பெனி நடிகராகச் சேர்ந்தார். முதல் படத்தில் நடித்த 9 ஆண்டுகளுக்குப்பின் ஜுபிடரில் நம்பியார் நடித்த படம், 1946-ல் வெளியான ‘வித்யாபதி’. ‘வித்யாபதி’ படத்தில் ஏற்ற நாராயண பாகவதர் என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்துக்காக மொட்டை அடித்துக்கொண்டார் நம்பியார். ‘வித்யாபதி’ வெளியான அதே ஆண்டில், தனது உறவுப்பெண்ணான ருக்மணியை மணந்துகொண்டார்.

ஜுபிடரின் ‘ராஜகுமாரி’ (1947) படத்தில் எம்.ஜி.ஆருடன் முதன் முதலில் இணைந்தார் நம்பியார். அதில் கதாநாயகன் எம்.ஜி.ஆருக்கு உதவும் பாகு என்ற நகைச்சுவை சாகசக் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ‘ராஜகுமாரி’யில் நம்பியாரின் சிறந்த நடிப்புத் திறமைக்குப் பரிசாக ‘கஞ்சன்’, ‘கல்யாணி’, ‘நல்ல தங்கை’ உட்பட ஐந்து படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அறிஞர் அண்ணா எழுதிய ‘வேலைக்காரி’யும், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘திகம்பர சாமியா’ரும் நம்பியாரின் திரை வாழ்க்கையை வேறு திசையில் திருப்பிவிட்டன.

‘சர்வாதிகாரி' படத்தில் மகாவர்மன் என்ற சர்வாதிகாரியாக நடித்த நம்பியாரை அடக்கும் நாயகன் பிரதாபனாக எம்.ஜி.ஆர் நடித்ததும் பெரும் திருப்பமாக அமைந்தது. ‘சர்வாதிகாரி’ படத்துக்குப் பின்னரே எம்.ஜி.ஆர் கதாநாயகன் என்றால் நம்பியார்தான் வில்லன் என்ற நிலை உருவானது. திரையில் நம்பியாரின் வில்லத்தனம் எம்.ஜி.ஆர். எனும் சாகசக் கதாநாயகனின் பிம்பம் வேகமாக வளர முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தது. பி.எஸ்.வீரப்பா. எஸ்.ஏ.அசோகன்.ஆர்.எஸ்.மனோகர் என்று பெரிய வில்லன் நடிகர்கள் புகழ்பெற்றிருந்த போதும் எம்.என்.நம்பியாரின் இடத்தை யாராலும் கைப்பற்ற முடியவில்லை. திருமணத்தின்போது நம்பியாருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்தவர் எம்.ஜி.ஆர் .எம்.ஜி.ஆரைவிடக் (1917) குறைந்த வயதுடையவர் நம்பியார் (1919), படவுலகில் எம்.ஜி.ஆரைவிட (சதிலீலாவதி 1936) ஓராண்டு மூத்தவர் (பக்த ராமதாஸ் 1935). சர்வாதிகாரி’ படத்தில் இடம் பெற்ற எம்.ஜி.ஆர் – நம்பியார் வாள் சண்டை இருவருக்குமே தனித்த முத்திரையாக அமைந்து போனது.

அது முதல் எம்.ஜி.ஆர்-நம்பியார் நடிக்கும் ராஜா-ராணி கதைகளில் வாள் சண்டை கட்டாய அம்சமாக இடம்பெறத் தொடங்கியது. எத்தனை வில்லன்கள் வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு வில்லன் நம்பியார்தான் என்ற நிலையை, ‘மந்திரிகுமாரி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசகட்டளை’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ தொடங்கிப் பல வெற்றிப் படங்கள் உருவாக்கின. தோல்விப் படமே என்றாலும் போட்ட முதலுக்கு நஷ்டமில்லாத வசூல் உறுதி என்ற நிலையை உருவாக்கியது இந்த ஹீரோ – வில்லன் கூட்டணி. எம்.ஜி.ஆரின் ஆஸ்தான வில்லன் என்றபோதும் சிவாஜி, ஜெமினி கணேசனுக்கும் வில்லனாக நடிக்கத் தயங்கவில்லை நம்பியார்.

எம்.ஜி.ஆர் முதல் சரத்குமார் வரை பல தலைமுறைக் கதாநாயகர்களுடனும் திரையில் வில்லனாகத் தொடர்ந்த ஒரே நடிகர் நம்பியார். எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.அசோகன் போன்ற பெரிய வில்லன் நடிகர்களையும் திரைப்படங்களில் மிரட்டிய வில்லாதி வில்லன் இவர் மட்டும்தான். கொடூர வில்லனாகப் புகழ்பெற்றுவிட்ட நிலையில் ‘பாசமலர்’ ‘ரகசிய போலீஸ் 115’, ‘கண்ணே பாப்பா’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடம் ஏற்று நடித்து, நம்பியாரா இவர் என வியக்க வைத்திருக்கிறார். ‘மக்களைப் பெற்ற மகராசி’யில் எம்.என்.ராஜத்துடன் இணைந்து ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ டூயட் பாடினார். அதில் நம்பியாரின் நடிப்பைப் பார்த்து, “நீ ஏன் கதாநாயகனாக நடிக்காமல் போனாய்?” என உடன் நடித்த சிவாஜியைக் கேட்க வைத்தவர்.

கதாபாத்திரத்துக்காகச் சிறப்பு ஒப்பனை போட்டுக்கொண்ட முதல் வில்லன் நடிகர் நம்பியார்தான். ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக 109 வயதுக் கிழவராக 3 மணிநேரம் சிறப்பு ஒப்பனை போட்டுக்கொண்டார். பழுத்த பழமாக, அந்தக் கிழ ஜமீன்தார் வேடத்தில் அளவான நடிப்பை வழங்கி வியக்க வைத்தார். அதைக் கண்டு, ‘நம்பியாருக்குச் சிறந்த துணை நடிகருக்கான ஜனாதிபதி பதக்கம் கிடைக்கலாம்’ என்று பத்திரிகைகள் எழுதின. “‘திகம்பர சாமியார்’ படத்துக்கு நான் போட்ட 11 வேடங்களைவிட, கிழட்டு ஜமீன்தார்தான் நான் லயித்து நடித்த வேடம்” என நம்பியார் தன்னையே ரசித்துக் கூறியிருக்கிறார். நம்பியாரின் சிறந்த நடிப்புக்கு உரிய விருதுகள் கிடைக்கவில்லை. ஆனால், 1968-ல் கலைமாமணி விருது, 1990-ல் எம்.ஜி.ஆர் விருது ஆகியவற்றைத் தமிழக அரசு வழங்கியது.

“கிராமப்புறங்களில் என்னைக் கண்டதும் பெண்கள் திட்டுவதும், பயந்து ஓடுவதும்தான் எனது நடிப்புக்குக் கிடைத்த உண்மையான விருது” என்று கூறியிருக்கிறார் நம்பியார். அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, வி.என்.ஜானகி, ஜெ.ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஆறு முதலமைச்சர்களுடன் கலையுலகில் இணைந்து பணிபுரிந்தவர் இவர் மட்டும்தான். நாயகன், நாயகனின் நண்பன், காமெடியன், வில்லன், குணசித்திரம் என்று பலவிதக் கதாபாத்திரங்களில் நடித்த நம்பியார் செந்தமிழ் வசனம் பேசி நடிக்கும் வேடங்களைப் பெரிதும் விரும்பினார். 'அம்பிகாபதி’ படத்தில் ஒட்டக் கூத்தராகவும், ‘ஹரிச்சந்திரா’ படத்தில் விஸ்வா மித்திரராகவும் நடித்ததைத் தனக்குப் பிடித்த கதாபாத்தி ரங்களின் பட்டியலில் வைத்திருக்கிறார்.

கடைசி யாகக் கடந்த 2006-ம் ஆண்டு விஜயகாந்துடன் நடித்த ‘சுதேசி’ என்ற படத்துடன் சுமார் 750 தமிழ்ப் படங்களில் அவர் நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கும் நம்பியார், ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ படத்தின் இந்தி மறு ஆக்கமான ‘தேவதா’ படத்திலும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘ஜங்கிள்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்தவர். எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பிறகு நம்பியாரிடம் “வாரியம் ஒன்றுக்குத் தலைவராக நியமிக்க விரும்புகிறேன்” என்றார். “நான் நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா சீஃப் மினிஸ்டர் சார்?” என்று மரியாதையாக மறுத்தார் நம்பியார். நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் ஏற்பட்ட உணவுப் பழக்கத்தால் சிறுவயது முதலே சைவ உணவுக்குப் பழகிக்கொண்டார் நம்பியார்.

வீட்டில் ஆம்லெட் சாப்பிட விரும்பும் பிள்ளைகளுக்குத் தனியாகச் சமையல் அறையும் சாப்பாட்டு மேஜையும் நம்பியாரின் கோபாலபுரம் வீட்டில் இருந்தன. நம்பியாரின் இசை ஞானத்தை நன்கு அறிந்த சிவாஜி, ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ படத்தில் கர்வம்பிடித்த சங்கீத வித்வான் வேடத்தில் நம்பியார் நடிக்க வேண்டும் என்று இயக்குநரிடம் பரிந்துரைத்தார். நம்பியார் தீவிர கிரிக்கெட் ரசிகர். புவியியல் புத்தகங்கள், பயண வழிகாட்டிப் புத்தகங்கள் ஆகியவற்றை விரும்பிப் படிப்பார். ராமரைப் போல் வாழ்ந்தவர் நம்பியார்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும் வில்லன் திலகம் எம்.என்.நம்பியாருக்கும் டூப் நடிகராகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் கே.பி.ராமகிருஷ்ணன். திரையில் மட்டுமின்றி இவ்விரு ஆளுமைகளின் தனிப்பட்ட வாழ்விலும் முக்கியமானராக சுமார் 50 ஆண்டுகள் வலம் வந்த இவருக்குத் தற்போது 87 வயது. சென்னை கோபாலபுரத்தில் நம்பியாரின் வீட்டருகே வசித்துவரும் ராமகிருஷ்ணனைச் சந்தித்தபோது நம்பியார் - எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்களைக் கொட்டித் தீர்த்தார்... அவரது நேர்காணல் அடுத்த வாரம்...

படப்பிடிப் பில் இருக்கும்போது கிரிக்கெட் ஸ்கோர் நிலவரங்களை ரேடியோவில் கேட்டுத் தெரிந்துகொண்டுவந்து தனது காதோரம் கூறும்படி தன் டூப் நடிகர் கே.பி.ராமகிருஷ்ணனிடம் கேட்பார்.

கால்ஷீட் கேட்டுவரும் தயாரிப்பாளர்களிடம் “என்னை நம்பி எனது டூப் ராமகிருஷ்ணனும் எனது தனி மேக்-அப் மேன் ராமுவும் இருக்கிறார்கள்” என்று கூறிவிடுவார். படப்பிடிப்பு இல்லாதபோது ராமாவரம் தோட்ட இல்லத்தின் திரையரங்கில் எம்.ஜி.ஆர். படம் பார்க்க அழைத்தால் தட்டாமல் செல்வார் நம்பியார். வாள் சண்டைகள் இடம்பெற்ற ராபின் ஹுட் வகை ஆங்கிலப் படங்களை ராமாவரம் ஹோம் தியேட்டரில் திரையிட்டு அவற்றிலிருக்கும் வாள் சண்டை பாணியைக் கவனித்து இருவரும் விவாதிப்பார்கள். பத்திரிகையாளர்களை மிக அபூர்வமாகவே சந்திப்பார் நம்பியார். பேட்டி கொடுப்பது அவருக்குப் பிடிக்காது.

“எம்.ஜி.ஆருடன் சண்டைக்காட்சிகளில் நடித்து எனது உடல் வலிக்கிறது, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களில் பேசிப் பேசியே என் வாய் வலிக்கிறது” என்று நகைச்சுவை ததும்ப பேட்டி கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆர் உட்படப் பலரும் வற்புறுத்தியும் சொந்த திரைப்படத் தயாரிப்பில் கடைசிவரை ஈடுபடாதவர் நம்பியார். தன்னை வளர்த்து அளித்த நாடகத் துறையை மறக்காமல், ‘நம்பியார் நாடக மன்றம்’ தொடங்கி ‘கவியின் கனவு’, ‘கல்யாண சூப்பர் மார்க்கெட்’ ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து நடத்தியவர். ‘கவியின் கனவு’ நாடகத்தில் சர்வாதிகாரியாக வேடமேற்று, ‘நாட்டு மக்கள் செம்மறியாட்டு மந்தைகள்’ என வசனம் பேசிய நாள் முதல் நம்பியாரையைப் போல நாடகத்திலும் திரையிலும் சர்வாதிகாரத் திமிரை நடிப்பில் துல்லியமாகக் காட்டிய நடிகர்கள் இல்லை என்கிறார் மூத்த விமர்சகர் ராண்டார் கை.

இளமையான காலம் தொடங்கி முதுமைவரை ‘ஹேண்ட்சம் வில்லன்’ என்று பெயரெடுத்த நம்பியார், படுத்ததுமே தூங்கிவிடுவார். kanjanjpg‘கஞ்சன்’ படத்தில் நாயகனாக எம்.என். நம்பியார், நாயகியாக டி.கே.கமலாright “அவருக்குக் கவலையே இல்லாத மனசு. நாமும் சந்தோஷமாக இருக்கணும் மற்றவர் களும் சந்தோஷமாக இருக்கணும் என்று நினைப்பார். இப்படிப்பட்டவருக்கு வில்லன் வேடமே கொடுங்குறாங்களே என்று நான்தான் அவரை நினைத்துக் கவலைப்பட்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் நம்பியாரின் மனைவி ருக்மணி. “வில்லன் வேடம் என்றால் என்ன மதிப்புக் குறைஞ்சு போச்சு… வில்லன் இல்லாத கதையில் ஹீரோவுக்கு மதிப்பு இல்லை” என்று கூறியிருக்கிறார் நம்பியார். எத்தனை சிக்கலான சூழ்நிலையிலும் நம்பியார் கோபப்பட்டதே இல்லை. படப்பிடிப்பில் விபத்து என்றாலும் பதற்றப்பட மாட்டார்.

நகைச்சுவை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கிய நம்பியாருக்குக் காலம் வில்லன் வேடங்களையே அதிகமும் கொடுத்திருந்து. ஆனால், நிஜ வாழ்க்கையில் அசல் நாயகனாக நம்பியார் வாழ்ந்தார். ஐயப்ப பக்தியைத் தமிழகத்தில் பிரபலப்படுத்திய மகா குருசாமியாக நம்பியார் அறியப்படுகிறார். தனது நாடக ஆசான் நவாப் ராஜமாணிக்கத்துடன் 1942-ல் முதல் தடவையாகச் சபரிமலைக்குச் சென்றார். அதன் பின்னர் 65 ஆண்டுகள் தொடர்ந்து சபரிமலைக்குப் புனித யாத்திரை சென்று வந்த ஒரே குருசாமி இவர் மட்டும்தான்.

அமிதாப் பச்சன், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, கன்னட நடிகர் ராஜ்குமார் எனத் திரையுலகப் பிரபலங்களுக்குக் குருசாமியாக இருந்து சபரிமலைக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இருமுடி கட்டும் நாளில், எம்.ஜி.ஆர். அனுப்பும் மாலையை முதல் மாலையாக அணிந்து மலைக்குக் கிளம்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கார்த்திகை மாதத்தை ‘ஐயப்ப சீசன்’ என்றபோது “ஐயப்ப னுக்கு ஏதுடா சீசன்... இது என்ன ஊட்டியா, கொடைக்கானலா?” என்று அவரது பாணியில் கண்டித்தவர். “மாலையிட்ட நாளில் தொடங்கி 41 விரத நாட்களும் தீய பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை விடுவிக்க மேற்கொள்ளும் தவப் பயிற்சி. ஐயப்பனுக்குச் செய்யும் தியாகம் அல்ல” என்று விளக்கினார்.

தன்னுடன் வரும் பிரபல நடிகர்கள் யாராக இருந்தாலும் மாலையைக் கழற்றிவிட்டு, சினிமா படப்பிடிப்புக்குச் செல்ல அவர் அனுமதித்தது இல்லை. யாத்திரை விஷயத்தில் அத்தனை கண்டிப்பானவர் நம்பியார்சாமி. நம்பியார் முருக பக்தராகவும் இருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை. ஊட்டி செல்லும்போதெல்லாம் அங்குள்ள பழமையான முருகன் கோயிலுக்கும் செல்வார். அந்தக் கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்கு முன் வெள்ளிவேல் ஒன்றைக் காணிக்கையாக அளித்தார். நம்பியார் சாமியின் வாழ்க்கை யில் சபரிமலை நிரந்தர இடம்பிடித்ததைப் போலவே, நீலகிரி மலையும் இடம்பிடித்துக்கொண்டது. எத்தனை லட்சம் கொடுத்தாலும் மே மாதத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளாத நம்பியார், கோடை முழுவதும் குடும்பத்தினருடன் ஊட்டியில் சென்று தங்கிவிடுவார்.

 நம்பியாருக்கு மனைவி சொல்லே மந்திரம். அவர் சொல்வதைத் தட்டவே மாட்டார். தனக்குத் தேவையான அனைத்தையும் அவரிடமே கேட்பார் நம்பியார். சுகுமாறன், மோகன் என இரண்டு மகன்கள், சினேகலதா என்ற ஒரே செல்ல மகள் என மூன்று வாரிசுகள். சுகுமாறன் நம்பியார் பாஜகவின் பொருளாளராக இருந்து மறைந்தவர். மோகன் நம்பியார் தொழில் அதிபர். கோவையில் வசிப்பவர். சினேகலதா சென்னையில் வசிக்கிறார்.

நம்பியாரின் பிள்ளைகள் சிறுவயது முதல் எம்.ஜி.,ஆரை ‘முரட்டு மாமா’ என்றுதான் அழைப்பார்கள். எம்.ஜி.ஆர், நம்பியார் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவர்களைச் செல்லமாக மிரட்டிக் கண்டிப்பார். எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒவ்வொரு வரையும் அழைத்து உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோது, அப்பாவைப் போலவே நம்பியாரின் வாரிசுகளும் மறுத்துவிட்டார்கள். அப்போது எம்.ஜி.ஆர்., “நாடக கம்பெனியிலும் சினிமா கம்பெனியிலும் எனக்கும் சேர்த்து சான்ஸ் கேட்டவர் உங்க அப்பா…” என்று பெருமை பொங்கக் கூறியிருக்கிறார். திரை நடிப்பைத் தாண்டி, பல திரைப்பட ஆவணப்படங்களில் தன் காலகட்டத்தைப் பற்றிக் கூறியிருக்கும் நம்பியார், ‘ஓவியம்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் கடைசியாக நடித்தார்.

இன்றும் பல மிமிக்ரி கலைஞர் களால் எடுத்தாளப்படும் கம்பீரமான குரல் எம்.என்.நம்பியாருடையது. நம்பியார் மிமிக்ரி செய்வதிலும் வல்லவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்.வீரப்பா போல் மட்டுமல்ல; சரோஜாதேவி போலவே இமிடேட் செய்து நடித்துக் காட்டி செட்டைக் கலகலப்பாக்கிவிடுவார். nambiyar-4jpg‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?’ பாடல் காட்சியில் எம்.என். ராஜமுடன்... ஒருமுறை பத்திரிகை ஒளிப்படக்காரர் உங்கள் வாளுடன் ஒரு போஸ் தாருங்கள் என்றபோது, “அது வீட்டில் இருந்தால் தலையில் கர்வம் ஏறிவிடலாம். ஆகவே, பயிற்சி வகுப்புக்குப் போனால் வாளை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவேன்” என்றார். ஆனால், பிஸியாக இருந்த காலத்தில் தற்காப்புக்காகக் குறுவாள் ஒன்றைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் நம்பியாருக்கு ஏற்பட்டது.

தன்னிடம் யார் ஆசீர்வாதம் வாங்க வந்தாலும், பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், பட்டுப்புடவை அணிந்து தம்பதி சமேதரராக மலர்தூவி ஆசீர்வதிப்பதை வழக்கமாக வைத்திருந்தது நம்பியார் தம்பதி. சென்னையில் இடப்புறம் கலைஞர் மு.கருணாநிதியின் வீடும் வலப்புறம் ஜெ.ஜெயலலிதாவின் வீடும் இருக்க கோபாலபுரம் ஆறாவது தெருவில் வசித்துவந்த நம்பியாரின் வீடு இருந்த இடம் தற்போது அபார்ட்மெண்ட் ஆகிவிட்டது. நம்பியார் வீடு இருந்த இடத்தின் ஒருபகுதியில் மகள் சினேகலதாவும் பேரன் தீபக் நம்பியாரும் வசித்து வருகிறார்கள். இறப்பதற்குக் கடைசி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிள்ளைகளின் ஆலோசனையைக் கேட்டு உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டார் நம்பியார்.

காலை 4 மணிக்கு எழுந்து, 4.30-க்கு மெரினாவில் நடைப்பயிற்சியும் 5.15 மணிக்கு அங்கேயே ஆயில் மசாஜும் செய்துகொண்டு, மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். மெரினாவுக்குச் செல்லாத நாட்களில் சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய இருவரும் காலை 6 மணிக்கு நம்பியாரின் வீட்டுக்கு வந்துவிட, மூவரும் டென்னீஸ் விளையாடுவது வழக்கம். சிவாஜியும் ஜெமினியும் வருவதற்கு முன்னர் ஒரு மணிநேரம் யோகா செய்துவிடும் நம்பியார், வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால் 100 சூரிய நமஸ்காரங்களைச் செய்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பார். உடற்பயிற்சிக்காகவே பேட்மிண்டன் கோர்ட், ஜிம், மணல் கொட்டிய மல்யுத்தக் களம் ஆகியவற்றை வீட்டில் உருவாக்கி வைத்திருந்தார்.

திரையில் பிரபலமாகி வந்த நாட்களில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் இணைந்தே சிலம்பம் கற்றுக்கொண்டனர். சென்னை, கொத்தவால்சாவடி மூணுகால் சந்து என்ற தெருவில் வசித்துவந்த கந்தசாமி அப்பா என்பவர்தான் இருவரது சிலம்ப குரு. எல்லா வெளியூர் படப்பிடிப்புகளுக்கும் மனைவியை கூடவே அழைத்துச் சென்று, அவர் சமைத்துத் தருவதை மட்டுமே சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர். 19 வயதில் ராணுவத்தில் சேரும் வாய்ப்பு நம்பியாருக்கு வந்தபோது அசைவம் உண்ண வேண்டியிருக்கும் என்பதற்காகவே அதை மறுத்தார்.

கறுப்பு வெள்ளை படக் காலத்தில் படப்பிடிப்பில் ரசிகர்கள் யாராவது தன் அருகில் வந்தால் கண்களை நெரித்து வில்லன் பார்வை பார்த்து அவர்களைத் தெறித்து ஓடச் செய்துவிட்டு குழந்தைபோல விழுந்து விழுந்து சிரிப்பார். நிஜத்திலும் ரசிகர்களை இப்படி மிரட்ட வேண்டுமா என்று எம்.ஜி.ஆர். ஒருமுறை கேட்க, ‘அவர்கள் இந்த நம்பியாரைத்தான் பார்க்க வாராங்க, அது அப்படியே இருக்கட்டுமே’ என்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:2220381meenal/மணல்தொட்டி&oldid=3695057" இலிருந்து மீள்விக்கப்பட்டது