பயனர்:Abbinaya R S 2110286/மணல்தொட்டி

ஆசாரக்கோவை மற்றும் திரிகடுகம் - அறிமுகம்

தொகு

சங்க காலத்தில் தோன்றிய 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ன அழைக்கப்பட்டது. இந்த நூல்கள் அனைத்தும் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அகத்தினை மற்றும் புறத்திணை எனப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆசாரக்கோவை கடைச்சங்கம் மருவிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். தற்சிறப்புப்பாயிரம் நீங்கலாக, நூறு வெண்பாக்களை உடையது. குறள்வெண்பா-சிந்தியல் வெண்பா-நேரிசைவெண்பா- இன்னிசை வெண்பா-பஃறொடைவெண்பா-சவலைவெண்பா என்கிற வெண்பாவின் வகையெல்லாம் இந்நூலில் உண்டு. இந்நூலின் பாக்கள், பத்துப் பாட்டு, சீவக சிந்தாமணி முதலிய இலக்கியங்களின் உரைகளிலும், இலக்கண விளக்கம் நன்னூல் பிரயோகவிவேகம் முதலான இலக்கணங்களின் உரைகளிலும், மேற்கோள்களாக வருகின்றன.

திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.

ஆசாரக்கோவை எடுத்துரைக்கும் கருத்துக்கள்

தொகு

மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை பற்றி எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான நீதி நூல் ஆசாரக்கோவை. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை பற்றி எடுத்து உரைக்கிறது. இப்பாடல் கூறும் சில கருத்துக்களை காணலாம்.

இந்நூலின் முதல் பாடலே நமக்கு எட்டு நல்லொழுக்கத்தை பற்றி எடுத்துரைக்கிறது. பிறர் உதவி மறவாமல் இருப்பது, பிறசெய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்வது, இனிய சொற்களை பேசுதல், துன்பம் செய்யாமல் இருத்தல், கல்வி அறிவு பெருத்தல், எல்லோரையும் சமமாக பேணுதல், அறிவுடையவராய் இருத்தல், நற்பண்புகள் உடையவரோடு நட்பு கொள்ளுதல் ஆகியவை ஆகும். ஒழுக்கம் தவறாமல் இருந்தால் நம் அடையும் நன்மைகள் பல - நல்ல பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், கல்வி, நோயின்மை, நிலத்துக்குரிமை என அனைத்தும் நாம் அடைய முடியும். நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நன்கு சிந்தித்து பெரியோரிடம் அறிவுரை கேட்டு, பின் செய்வது நன்மை பயக்கும். காலையில் கடவுளை வணங்குவது வாழ்க்கையில் நன்மை பயக்கும்.

உணவு உட்கொள்ளும் போது கிழக்கு நோக்கி ஆடாமல் அசையாமல் உணவிலே கவனம் கொண்டு எங்கும் பார்க்காமல் பேசாமல் உணவை மட்டும் சிந்தித்து சாப்பிட வேண்டும். தன் வீட்டுக்கு வரும் விருந்தினரிடம் இன்முகத்தோடு இன் சூழலோடு உணவு அளித்தல் முதலியான உதவி செய்து சிறப்பிக்க வேண்டும். நல்ல செல்வத்தை ஈட்ட நினைக்கும் மக்கள் காலையில் எழுந்து வீடு முழுவதும் சாணநீர் தெளித்து பின் அடுப்பினில் தீ மூட்டுதல் வேண்டும். ஆசிரியரிடம் நடக்கும் முறையை இப்பாடல் வரிகள் எடுத்துரைக்கிறது,

“நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்

இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்

சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக!......“ .

நன்மாணாக்கர் ஆசிரியர் முன் ஒழுக்கத்துடன் இருந்து, அவர் 'எழுந்து போ' என கூறுவதற்கு முன் எழுந்து போகார்; மற்றும் அவர் கூறும் கருத்துக்களை செவித்தாழ்ந்து கேட்க வேண்டும். இவ்வாறான கருத்துக்களை ஆசாரக்கோவை எடுத்துக் கூறுகிறது.

திரிகடுகம் எடுத்துரைக்கும் கருத்துக்கள்

தொகு

சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இந்நூலில் ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்கள் வாழ்விற்கு நன்மை செய்யும் ஆதலால் இந்நூல் இவ்வாறு அழைக்கப் படுகிறது. இப்பாடல் கூறும் சில கருத்துக்களை காணலாம். இந்த நூலின் முதல் பாடல் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது. உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே. ஒழுக்கமுடையோர் தொழில்கள் என இப்பாடல் குடிப்பிறப்பின் சிறப்பு குறையாத ஒழுக்கமும், இனிய குணத்தையுடையோர் ஏவிய தொழில்களைச் செய்வதும், வேதங்கள் கூறிய வழியில் நடத்தலும் என்று குறிப்பிடுகிறது. கற்றறியாதவரிடம் நட்பு கொள்வது மற்றும் மனைவியை துன்புறுத்துவதும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.

நல்ல விருந்தினனும், உயிரைக் கொல்லாது வாழ்பவனும், ஒழுக்கத்தை உடைய ஆசிரியனும் உயர்ந்தோர் ஆவார். குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும். தன்னை மதித்தவரை இகழாது இருத்தலும், செல்வம் வந்த போது நண்பர்களை மறவாமல் இருத்தலும், பகைவரின் செல்வம் கண்டு மகிழ்வதும் செய்தவர் அழியாப் புகழ் உடையார். நல்லவற்றைக் கற்றலும், இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும், முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும். சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை கீழ்க்குலத்தார்க்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும். நாம் ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை இப்பாடல் வரிகள் எடுத்துரைக்கிறது,

“தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;

சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;

ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,……”.

வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன. இளமைப் பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோரைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும். இவ்வாறான கருத்துக்களை திரிகடுகம் எடுத்துக் கூறுகிறது.

இரு பாடல்களின் ஒப்பிடு

தொகு

ஆசாரக்கோவை மற்றும் திரிகடுகம் , இவ்விரண்டு நூலும் நமக்கு வாழ்க்கையில் ஒழுக்கத்தை பற்றியான அறிவுரைகளை எடுத்துக் கூறுவதாகவே அமைந்துள்ளது. இந்த இரண்டு நூல்களுமே நம் முன்னோர்களை மதித்து செயல்களை சிந்தித்து செய்ய வேண்டும் என எடுத்துரைக்கிறது. இரண்டு நூல்களும் தலா 100 பாடல்களை கொண்ட தொகுப்பாகும். ஒருவர் காலையில் எழுந்த பின் வழிபாடு செய்வது முதல் உணவு சாப்பிடும் வரை அனைத்தையும் ஆசார கோவையின் மூலம் நாம் ஒழுக்கமான முறையை அறியலாம். திரிகடுகம் நம் செயல்களை சரியான வழியில் செயல்படுத்து பல அறிவுரைகளை எடுத்துரைக்கிறது.

ஆசாரக்கோவை நம் அன்றாட பழக்க வழக்கங்களை பற்றியான முறையை எடுத்துரைக்கிறது. பழக்கவழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பழக்கவழக்கங்கள் ஒருவரின் முக்கிய ஆளுமை மற்றும் வாழ்க்கைக்கான ஒழுக்கத்தை உருவாக்குகின்றன. எனவே சிறந்த வாழ்க்கை வாழ சிறந்த பழக்கங்களை கடைப்பிடிப்பது அவசியம்.

அதேபோல, திரிகடுகம் நம்மைச் சுற்றியுள்ள உறவுகளிடம் எப்படி ஒழுக்கத்துடன் மற்றும் உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எடுத்துரைக்கிறது. இது வேறுபட்ட நபர்களின் பொறுப்பைப் பற்றி அதிகம் கவனம் செலுத்துகிறது. ஒழுக்கமான வாழ்க்கையை வாழ என்ன செய்யக்கூடாது என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டுகிறது.

இரண்டு உரைகளும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ ஒருவர் பின்பற்ற வேண்டிய முக்கியமான கொள்கைகளை உள்ளடக்கியது. பெரும்பாலான பாடல்கள் எளிமையான வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன, அதை நிச்சயமாக ஒருவரின் வாழ்க்கையில் எளிதாக செயல்படுத்த முடியும்.

முடிவுரை

தொகு

ஆசார கோவை மற்றும் திரிகடுகம் ஆகிய நூல்களின் கருத்துக்களை இந்தக் கட்டுரை வாயிலாக நாம் அறிய முடியும். எளிமையான கருத்துக்களை கூறுவதாக இவை அமைகிறது.

தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வியலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேல்கணக்கு என பல பெயர்களால் வழங்கப்படுகிறது. இவ்வாறான அனைத்து பாடல்களும் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டத்தில் பாடப்பட்டவை. எல்லா பாடலும் நமக்கு வாழ்க்கையில் பயன்படும் கருத்துக்களையும் அறிவுரைகளையும் தருவதாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இலக்கணங்கள் வாயிலாக நம் முன்னோர்களைப் பற்றியான செய்திகளை நாம் அறிய முடியும். இவ்வாறாக தமிழ் இலக்கியம் இன்றெமையாக இடத்தை இன்றளவும் பிடித்திருக்கிறது என்றால் அது மிகவும் பெருமைக்குரியது தான்.