பயனர்:Ameen2210108/மணல்தொட்டி
தன் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக்கொள்வது ஒரு வாழ்க்கையா?
40 ஆண்டுக்காலம், தன் இளமைக்காலம் முழுவதையும் சம்பாதித்தல் – சேமித்தல் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கி, பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
கணக்குப்பிள்ளைகளைப் போல எப்போதும் வரவுசெலவுகளைப் பற்றியே பெற்றோர் பேசுவதால், இதுதான் வாழ்க்கை எனக் குழந்தைகள் நம்பத் தொடங்கிவிடுகின்றன.
2000-ம் ஆண்டிற்குப் பின்னர் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சொத்துகள் 150 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக குளோபல் வெல்த் ரிப்போர்ட் தெரிவித்திருக்கிறது. ஆனால், இது நற்செய்தியன்று. சொத்துகளாக வாங்கிப் போட்டாலும் அவர்கள் கடனாளியாக இருப்பதை வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, அவர்கள் மாதாந்திர ஸ்வைப் கணக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமை, நீதிமன்றங்களில் குவியும் லட்சக்கணக்கான வழக்குகள், செலுத்தாத கடனை வசூலிக்க ரெக்கவரி ஏஜென்ட்டுகளை நியமித்தல் என எல்லாமே ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன. நிறைய சம்பாதித்து, நிறைய செலவழித்து, நிறைய கடன்பட்டு, நிறைய துயருறுதல் வாழ்க்கையாக இருக்கும்போது அதற்கிடையே அன்பு, மகிழ்ச்சி எங்கே மலரும்?
இந்தியத் தம்பதியர் தமது நெருக்கத்தைத் தொலைப்பதற்குப் பணமும் குடும்பப் பொறுப்புகளும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தியச் சுற்றுலாத் தளங்களுக்குப் போனோமென்றால், ஜோடி ஜோடியாக வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். இளைய ஜோடிகளுக்கு இணையாக முதிய ஜோடிகளும் கைகளைக் கோத்துக்கொண்டு வலம் வருவார்கள். துணையுடன் போகக்கூடிய, குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் நெடும் பயணங்களுக்கு அவர்கள் திட்டமிடுகின்றனர்.
வீடுகள் கட்டுவது, நிலங்கள் வளைப்பது, நகைகளைச் சேர்ப்பது போன்ற சிற்றின்பங்களைத் தூர வைத்துவிட்டு, சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியைப் பயணங்களுக்கும் குடும்பத்தோடு இளைப்பாறுவதற்கும் செலவிடுகின்றனர்.
குழந்தை படிப்பை முடித்து வளர்ந்துவிட்ட பின்னரும் அதற்குச் சொத்து சேர்த்து, தன் வாழ்வை அவர்கள் அழித்துக் கொள்வதில்லை.
உலகப் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசான், தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துகளை அறப்பணிகளுக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்தார். உங்கள் மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? ‘என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார். திறமையற்றவர் எனில், நான் சம்பாதித்ததையும் அழிக்கவே செய்வார்.’’ எத்தகைய மேன்மையான புரிதல்!
ஆனால், நாம் நம் பிள்ளைகள் அழிக்க வேண்டுமென்பதற்காகவே உயிரை உருக்கிச் சொத்துகளைச் சேர்க்கிறோம். பெற்றோர் தம் சொத்துகளைப் பிள்ளைகளுக்குக் கைமாற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பதாலும், பிள்ளைகள் பெற்றோரின் பணத்தை முதலீடாக வைத்துக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வாய்ப்பு என அனைத்தையும் வரித்துக்கொள்வதாலும் பணக்காரராக இருப்பதென்பது பரம்பரை விஷயமாக இருக்கிறது. பத்துத் தலைமுறைகளுக்குச் சேர்த்து வைப்பதைப் பெற்றோர் நிறுத்தும்போது, புதையலைப்போல ஓரிடத்தில் குவிந்திருக்கும் பணம் மேலும் கீழுமாகப் பாயும். இதன்மூலம் சாமானியர்களும் தம் திறமையால் முன்னேறும் வாய்ப்பு எளிதாகிறது.
கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகன், சொத்துகள் தரப்படாததால் தன் உழைப்பில் முன்னேறும் அரிய வாய்ப்பைப் பெற்றார். அவர் சாதாரண வேலை பார்த்துக்கொண்டு சாமானியராக வாழக் கூடாதா என்ன? டாக்டர் பிள்ளை டாக்டராகவும், வங்கி ஊழியரின் வாரிசு வங்கி ஊழியராகவும், அரசியல்வாதியின் குழந்தை அரசியல்வாதியாகவும், நடிகர் மகன் நடிகராகவும்தான் ஆக வேண்டுமா?
நாம் நம் குழந்தைகளுக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தைக் கற்பிக்கவே இல்லை. எளிமை எனும் நல்வாழ்க்கைக்கான தத்துவத்தை, பிழைக்கத் தெரியாதவர்களுக்கான வழி என ஒதுக்குகிறோம். எளிமையை ஏழ்மையோடு சேர்த்துக் குழப்பிக்கொள்கிறோம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான வேறுபாட்டை மறந்தோம்.
கேட்டபோதெல்லாம் டிரஸ் வாங்கித் தராத பெற்றோரை, குழந்தைகள் கருமியாகப் பார்க்கின்றனர் எனில் அது யார் தவறு? என் முன்னாள் நண்பர் ஒருவர் தான் நிறைய சம்பாதிக்கிற போதும், தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறார். உறவினர் கேலி செய்தும், மனைவி கண்டித்தும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வில்லை. அதுமட்டுமன்று, பொருள்களின் பயன்பாட்டையும் தேவையையும் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். ஒருமுறை அவரின் மகள், 'அப்பா ஸ்கூல் பேக் கிழிஞ்சிருச்சு. நிறைய தடவை தைச்சுப் போட்டுட்டேன். காசு வரும்போது புதுப்பை வாங்கிக் கொடுங்க' என்று சொல்வதைக் கேட்டு என் கண்ணில் நீர் துளித்துவிட்டது.
நம் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்ப்போம். வீடா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா என்ற சந்தேகமே வந்துவிடும். 'சொந்த வீடு இல்லேன்னா வாழ முடியாது', 'சோஃபா இல்லேன்னா உட்கார முடியாது', 'டிவி இல்லேன்னா பொழுது போகாது', 'கார் இல்லேன்னா பக்கத்துத் தெருவுக்குக்கூடப் போக முடியாது', 'தினமும் ஒரு டிரஸ் போடலேன்னா மரியாதை கிடைக்காது', 'காஸ்மெட்டிக்ஸ் இல்லேன்னா அழகு வராது', 'காஸ்ட்லி சிகிச்சை இல்லேன்னா ஆரோக்கியம் வராது', 'செல்போன் இல்லேன்னா வாழவே முடியாது' என இப்படியான முடியாதுகள் நம் மூச்சைப் பிடித்து இறுக்குகின்றன.
உண்மை என்னவென்றால், நாம் இன்று வாங்கிக் குவிக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். அது நமக்குத் தெரியும். ஏனென்றால், நாம் சென்ற தலைமுறைக் குழந்தைகள். ஆனால், இந்தத் தலைமுறைக்கு அது தெரியாது. நம் முன்னோர்கள் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தவறிவிட்டோம்.
இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஒன்றரை லட்சம் பேராக இருக்கும் எண்ணிக்கை இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கப்போகிறது. புதிய பணக்காரர்கள் அதில் இடம் பிடித்திருப்பார். ஆனால், வேர்ல்ட் ஹேப்பினஸ் இண்டெக்ஸில் முன்னேறும் வாய்ப்பு தொலைதூரத்தில்கூட இல்லை.
ஏனென்றால், மகிழ்ச்சி என்பதற்கு நாம் வைத்திருக்கும் அர்த்தமும் உலகச் சமூகங்கள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறுபடுகின்றன. 'எந்த நாட்டில் வளர்ச்சி ஆரோக்கியமான சமநிலையில் இருக்கிறது? எங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லையோ, எங்கே தான் வாழ்கிற சமூகத்தின் மீது மக்கள் உச்சபட்ச நம்பிக்கை வைத்துள்ளனரோ, எங்கே அரசின்மீது நம்பிக்கை இருக்கிறதோ' அந்த நாட்டினர் மகிழ்ச்சியாக இருப்பதாக ஐ.நா சொல்கிறது. ஆனால், நாம் நமது மகிழ்ச்சியைச் சமூகத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. சக மனிதர்மீது அன்பும் மரியாதையும் இல்லாதவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பில்லை.
பணமிருந்தால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்ற உலகமயக் கருத்தியல் தோல்வியடைந்து விட்டது. வளர்ந்த நாடுகளில் பெருகும் மன அழுத்தமும் தற்கொலைகளும் நமக்கான எச்சரிக்கை. வாழ்வில் எளிமையையும் எளிய விஷயங்களையும் கற்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் அத்தகைய மகிழ்ச்சிக்குத்தான் ஏங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுடன் எப்படி வாழ்கின்றனர் என்பதுதான் முக்கியமே தவிர, எவ்வளவு சம்பாதித்தனர் என்பது ஒரு பொருட்டே அன்று.
வகுப்பில் என் ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார். ஆசை என்றால் என்ன? ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இறுதியில், விளக்கத்தை அளித்தார். 'தேவைக்கு மிஞ்சிய எல்லாமே ஆசைதான்.' நான் வாழ ஒரு வீடு வேண்டும் என நினைத்தால் அது தேவை. வீடுகள் வேண்டுமென நினைத்தால் அது ஆசை. அந்த வீடும் வாழ்நாள் கடனில்தான் கிடைக்கும் என்றால், அது தேவையில்லை என்றே அர்த்தம். வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டில் வசிப்பது ஒன்றும் இழுக்கான விஷயமல்ல. ஆயுள் முடிகிறவரை கட்டுகிற கடனை, குழந்தையின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகள், அனுபவங்களுக்குச் செலவிடுங்கள். கடனில் வீட்டை வாங்கிவிட்டு எங்கேயும் வெளியில் போக முடியாமல் குழந்தைகளைச் சொந்த வீட்டுச் சிறையில் அடைக்காதீர்கள்.
குழந்தைகளுக்குச் சரியாக வாழக் கற்றுக் கொடுத்து, தன் காலில் நிற்க வழி விட்டு, மறுபடியும் கிடைக்கவே கிடைக்காத இந்த அரிய வாழ்வை நீங்களும் கொஞ்சம் வாழுங்கள்.