பயனர்:Anandapriya/மணல்தொட்டி

தமிழ் முரசு

முன்னுரை

சிங்கப்பூரில் வெளியிடப்படும் ஒரே தமிழ்ச் செய்தித்தாள் தமிழ் முரசு ஆகும். தமிழ் முரசு, தமிழவேள் திரு கோ.சாரங்கபாணி அவர்களால் 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள பதினாறு செய்தித்தாtகளில் இதுவும் ஒன்று. தமிழ் முரசு தமிழ் பேசும் இந்திய மக்களுக்கு ஒரு முக்கியp பங்கை ஆற்றுகிறது. அதாவது செய்தித்தாள் மூலம், படிப்பவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டு நடப்புகளையும் விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களையும் தெரிந்துகொள்கின்றனர்.

தமிழ் முரசின் நோக்கம்

6-7-1935 அன்று வெளிவந்த தமிழ் முரசின் முதல் பிரதியில் இடம்பெற்ற தலையங்கத்தில், “முரசு அடித்து செய்தி பரப்புவது அன்றைய வழக்கம். பத்திரிகை அச்சிட்டு செய்தி பரப்புவது இன்றைய வழக்கம். மலாய் நாட்டில் தமிழர்கள் விரும்பிச் செய்யும் சீர்திருத்தங்களை, பண்டைய பெயரில், இன்றைய முறையில் பரப்புவதுதான் தமிழ் முரசு மேற்கொண்டுள்ள வேலை. முரசு கம்பீரமான ஒலியுடையது; வைரம் படைத்த நெஞ்சுடையது; இரக்கமான சித்தமுடையது. எங்கும் வெற்றி எதனினும் வெற்றி எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்ற ஜெயபேரிகையைத் தமிழ் முரசு இன்று ஒலிப்பதைக் கேளுங்கள். விழித்தெழுங்கள், உங்கள் கடமையைச் செய்யுங்கள்…” என்று தமிழவேள் கோ.சாரங்கபாணி எழுதியிருக்கிறார்.

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), இந்தியர் நற்பணிச் செயற் குழுக்கள் ஆகியவற்றின் உதவியுடன் தமிழ் முரசு வசதி வாய்ப்பு குறைந்தவர்களை எட்டி, அவர்களுக்குப் பல வழிகளில் உதவி வருகிறது. எத்தகைய உதவிகள் காத்திருக்கின்றன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது தமிழ் முரசின் தலையாய பணிகளில் ஒன்று. வாசகர்களைத் தொடர்ந்து கட்டிக்காப்பதே தமிழ் முரசின் பெரிய சவால். இதில் சரியாகச் செயல்பட்டால் தமிழ் முரசு வெற்றிகரமான நாளிதழாக விளங்கும். திங்கட்கிழமைகளில் வெளிவரும் மாணவர் முரசும் இளையர் முரசும் மாணவர்களுக்குப் பயனளிப்பதாக ஆசிரியர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் முரசு நிர்வாகம்

தமிழ் முரசின் உரிமையாளர் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (Singapore Press Holdings, எஸ்பிஎச்) நிறுவனம் ஆகும். ஒரு கட்டத்தில் தமிழ் முரசின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. வெகுவிரைவில் தமிழ் முரசு நாளிதழுக்கு முடிவு வந்துவிடும் என்ற பேச்சும் ஒருபுறம் வலம் வந்துகொண்டிருந்தது. தமிழ் முரசு நிலைத்திருக்க வேண்டுமானால் அது ’எஸ்பிஎச்’ நிறுவனத்தின் கீழ் வரவேண்டும் என்று அப்போது முரசின் ஆசிரியராக இருந்த திரு. வை.திருநாவுக்கரசு விருப்பப்பட்டார். எஸ்பிஎச்சின் அப்போதைய தலைவர் லிம் கிம் சானுடன் கோல்ஃப் விளையாடியபோது, தமிழ் முரசைக் காப்பாற்ற ’எஸ்பிஎச்’சால்தான் முடியும் என்றும் தமிழ் முரசை அந்நிறுவனத்தின் செய்தித்தாள் பிரிவில் சேர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தார். முதலில் மறுத்த ‘எஸ்பிஎச்’ நிர்வாகம் அப்போதைய அமைச்சர் திரு எஸ். தனபாலனும் தமிழ் முரசின் இப்போதைய தலைவர் எஸ்.சந்திரதாஸும் இணைந்து செய்த பரிந்துரையின்பேரில் தமிழ் முரசை வாங்கச் சம்மதித்தது. இதுதான் தமிழ் முரசு ’எஸ்பிஎச்’சின்கீழ் வந்த வரலாறு.

தமிழ் முரசு லாபகரமான நாளிதழாக மாறியது. செய்திக்குழுவை வலுவாக்கி ஊழியர் சலுகைகளை மேம்படுத்தியது, செய்தித்தாள் விற்பனையைக் கூட்டியது, புதிய முயற்சிகளைத் தொடங்கியது ஆகியவை தமிழ் முரசின் முக்கிய மைல்கற்கள். 1995ஆம் ஆண்டு ’எஸ்பிஎச்’ நிறுவனம் தமிழ் முரசு நாளிதழை அதன் நிறுவனர் கோ.சாரங்கபாணியின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கியது. வார இறுதியில் கிட்டத்தட்ட 26,000 பிரதிகள் விற்பனை ஆகின்றன. ஜப்பானிய ஆக்கிரமிப்பு, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்த நிகழ்வு, இனக் கலவரம், தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், கிட்டத்தட்ட தன் கதையை முடித்துக்கொள்ளும் நிலை போன்ற ஏராளமான சவால்களை எல்லாம் சமாளித்து தமிழ் முரசு 80ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவது உண்மையிலேயே வியப்பான விஷயம் என்று ஈராண்டுகளுக்குமுன் தமிழ் முரசின் இப்போதைய ஆசிரியர் ஜவஹரிலால் ராஜேந்திரன் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ் முரசு வடிவமைப்பு

1999ல் தமிழ் முரசு, செய்தித் தேர்வு, வடிவமைப்பு, அணுகுமுறை என எல்லாவற்றையும் மாற்றியது. அதே நேரத்தில் சமூகத்துடன் அணுக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியது. இந்திய இளையர்களுக்கான ‘ஃபுட்சால்’, தமிழ் ஆசிரியர்களுக்கான ‘நல்லாசிரியர் விருது’, ‘சிறந்த இந்தியக் குடும்ப விருது’ போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவ ‘கோசா கல்வி அறநிதி’யை உருவாக்கி, $1.1 மில்லியன் நிதி திரட்டியது. வாசகர் சமூகத்தின் உறுதியான ஆதரவு, நன்கு பயிற்சி பெற்ற, நிபுணத்துவ அறிவுடன் கூடிய, அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஊழியர்களைக் கொண்டு தமிழ் முரசு வெற்றிநடைபோட்டு வருகிறது.

தமிழ் இலக்கியத்திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற கருவி முரசு. பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் மக்களுக்குச் செய்திகளைச் சொல்ல முரசு அறைந்து ஒலியெழுப்பி அழைப்பார்கள். செய்தி பரப்பும் முற்காலக் கருவி முரசு. பழைய பெயரில் புதிய சாதனமாக சிங்கப்பூரில் உருவெடுத்ததே தமிழ் முரசு. தற்போது சிங்கப்பூர் இந்தியs சமூகத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, குறிப்பாகத் தமிழர்களின் பாராட்டைப் பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது.

தமிழ் முரசின் வளர்ச்சி

வார இதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் முரசு, தமிழர் சீர்திருத்தச் சங்கம் மூலம் தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. பல்லாண்டு காலமாக தமிழர்களின் சமூக நிலையை உயர்த்த வேண்டும் என்பதிலேயே திரு. கோசா தனிக்கவனம் செலுத்தி வந்தார். தமிழ் முரசின் சிரமமான காலகட்டத்தில் அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற திரு. வை.திருநாவுக்கரசு நாளிதழைக் கணினிமயப்படுத்தினார். தமிழ் முரசு நாளிதழை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாக்கினார். அதன்மூலம் தமிழ் முரசின் விற்பனையும் விளம்பர வருவாயும் கணிசமாக உயர்ந்தன. இன்று தமிழ் முரசு நாளிதழாகவும் இணையத்தளத்திலும் ஆழக்கால் பதித்துள்ளது. அத்துடன் ஆங்கில வார இதழான ‘தப்லா!’வையும் வெளியிட்டு வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் பேசாத இந்திய வம்சாவளியினருக்காக ஆங்கில வார இதழான ‘தப்லா!’வை தமிழ் முரசு 2008 அக்டோபர் 1ஆம் நாள் தொடங்கியது. அப்போது முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சுமார் 30,000 ‘தப்லா!’ பிரதிகள் இலவசமாக நாடெங்கும் விநியோகிக்கப்படுகின்றன. சிங்கப்பூரின் முக்கியச் செய்திகளையும் தமிழ்ச் சமூகத்துடன் மற்ற இந்தியச் சமூகங்களின் நடவடிக்கைகள், நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளுடனும் 2008 அக்டோபர் 11ஆம் நாள் சன்டெக் சிட்டியில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் வர்த்தக மாநாட்டில் ‘தப்லா!’ அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டது. இந்தியச் சமூகத்திற்கும் சிங்கப்பூருக்கும் அக்கறையுள்ள விவகாரங்களைப் பற்றி பயனுள்ள தகவல்களை, செய்திகளை வெளியிட்டு வருகிறது.

நம்முடைய பிரச்சினைகளையும் கண்ணோட்டங்களையும் தேசிய கலந்துரையாடலில் இடம்பெறச் செய்ய ஒரு நல்ல தளமாகத் தமிழ் முரசு விளங்கி வருகிறது. தமிழ்ச் சமூகத்திற்குச் செய்திகளையும் தகவல்களையும் கொண்டு சேர்க்கத் தமிழ் முரசு உயிர்நாடியாகத் திகழ்கிறது. முக்கிய விவகாரங்கள் குறித்து சிங்கப்பூரர்களுடன் தொடர்புகொள்ள அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய சாதனமாகவும் தமிழ் முரசு விளங்குகிறது. முக்கியமாக, ‘முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டம்’, ‘மெடிஷீல்ட்லைஃப்’, ‘லிட்டில் இந்தியா கலவரம்’ போன்ற முக்கிய விவகாரங்களில் இது குறிப்பிடத்தக்க பங்காற்றியது.

சின்னமும் விலையும்

1.1.1990 முதல் தமிழ் முரசின் தலைப்பில் இடம்பெற்று வரும் முரசு சின்னத்தை வரைந்தவர் தமிழ் முரசின் ஓவியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த திரு க.மனோகரன். அவரது கைவண்ணத்தில் தமிழ் முரசின் தலைப்பு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. தமிழர் சீர்திருத்தச் சங்க இல்லத்தில் (கிள்ளான் ரோடு) 1935 ஜூலை 6ஆம் நாள் சனிக்கிழமை முரசின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. சீர்திருத்தச் சங்கத்தின் செயலாளர் கோ.சாரங்கபாணி இதழின் ஆசிரியர். இதழின் விலை ஒரு காசு. 1935 ஆகஸ்ட் மாதத்திலேயே சிங்கப்பூரில் 1,500 பிரதிகளும் மலேசியாவில் 500 பிரதிகளும் விற்றன. வார இதழாகத் தொடங்கப்பட்ட தமிழ் முரசு மூன்று மாதங்களிலேயே வாரம் மூன்று முறை வெளிவரத் தொடங்கியது. சில வாரங்களிலேயே செய்தித்தாளைக் கைவிட சங்கம் முடிவு செய்தபோது திரு. கோசா தாமே அதை ஏற்று நடத்த முன்வந்தார். 2.5.1936 முதல் பெரிய அளவில் எட்டுப் பக்கங்களுடன் மூன்று காசு விலையில் வெளிவரத் தொடங்கியது. 1.12.1937ல் தமிழ் முரசு நாளிதழாகியது. மாணவர்களுக்காக மாணவர் மணி மன்றம் 1952ல் முரசின் தனிப்பக்கமாகவும் பின் 1953 ஜூலையில் மாணவர் மணி மன்ற மலராகவும் வெளிவரத் தொடங்கியது. தமிழவேள் 16.3.1974 அன்று காலமானார். தொடர்ந்து சீனரான திருமதி சாரங்கபாணியும் அவர் மறைவுக்குப் பின் அமரர் கோசாவின் புதல்வர்கள் திரு ஜெயராம், திரு பலராம் ஆகியோர் 19 ஆண்டுகள் செய்தித்தாளை நடத்தினர். 1974 முதல் 1988 வரை அமரர் ஜெயராம் தமிழ் முரசின் ஆசிரியராக இருந்தார். 1981ல் தமிழ் முரசு பிரதி 35 காசுகளாகவும் 1983ல் 40 காசுகளாகவும் விலை உயர்த்தப்பட்டது. 1988 டிசம்பரில் அமரர் வை.திருநாவுக்கரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 2.5.1991ல் எழுத்துகளை ஒவ்வொன்றாகக் கோக்கும் பழைய அச்சுக்கோக்கும் முறையிலிருந்து நாளிதழ் முழுமையாகக் கணினிவழி பதிப்புக்கு மாறியது. 6.7.1991ல் தமிழ் முரசு பிரதி 50 காசுகளானது. 7.10.1991 முதல் தமிழ் முரசு விநியோகப் பொறுப்பை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஏற்றது. 1.9.1993ல் தமிழ் முரசு ‘ஹிப்ரோ பிரிண்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உரிமையானது. சாரங்கபாணியின் மகள் ராஜம் சாரங்கபாணி பெரும்பான்மைப் பங்குதாரராக இருந்தார். பின்னர் தமிழ் முரசை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் வாங்கியது. 5.5.1995 முதல் தமிழ் முரசின் ஞாயிறு பிரதி 60 காசுகளாக உயர்த்தப்பட்டது. அதுவரை எல்லா நாட்களும் முரசின் விலை ஒன்றாகவே இருந்தது. 2.11.1995 முதல் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பத்திரிகையாக தமிழ் முரசு வெளிவந்து கொண்டிருக்கிறது. 1999ஆம் ஆண்டு டாக்டர் சித்ரா ராஜாராம் தமிழ் முரசின் ஆசிரியரானார். அவரையடுத்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் மூத்த செய்தியாளரான முருகையன் நிர்மலா 2005ல் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து தமிழ் முரசின் துணை ஆசிரியராக 2006 முதல் பணியாற்றிய திரு ஜவஹரிலால் ராஜேந்திரன், 2011ஆம் ஆண்டு தமிழ் முரசின் ஆசிரியரானார்.

மாணவர் மணி மன்ற மலர்

தமிழ் முரசு நாளிதழில் மாணவர்களுக்கென்று ’மாணவர் மணி மன்றம்’ என்ற தனிப்பகுதியை 1952ல் திரு. கோசா தொடங்கினார். அப்போது துணை ஆசிரியராக இருந்த திரு. திருநாவுக்கரசு தலைமையில் அந்தப் பகுதி திங்கட்கிழமைதோறும் வெளிவந்தது. ஓராண்டுக்குப் பின் 6.7.1953 முதல் வாரம் ஒருமுறை நான்கு பக்க அளவில் ‘மாணவர் மணி மன்ற மலர்’ என்ற பெயரில் தனி இணைப்பாக வெளிவரத் தொடங்கியது. மாணவர்களின் படைப்புகளையும் அதில் இடம்பெறச் செய்து அவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்த்தது.

திருநாவுக்கரசுவின் பங்களிப்பு

தமிழ் முரசு இன்றும் நிலைத்திருப்பதற்கு முக்கியக் காரணம் அதன் முன்னாள் ஆசிரியர் அமரர் வை.திருநாவுக்கரசு. தமிழ் முரசுக்காகவே சிங்கப்பூருக்கு வந்து, தமிழ் முரசைக் கணினிமயமாக்கி, முரசின் எதிர்காலத்தை உறுதி செய்து அதனை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தவர் திரு. அரசு. 1974ல் திரு. கோசா மறைந்தபிறகு தமிழ் முரசு சரியான தலைமையின்றி திசை தெரியாது தடுமாறியது. நாளிதழைத் தொடர முடியாத நிலை ஏற்பட்ட சமயத்தில் 1988 டிசம்பர் 27ஆம் நாள் தமிழ் முரசு ஆசிரியராகப் பொறுப்பேற்றார் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றிருந்த திரு. அரசு. ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாதிருந்த சூழ்நிலையில் தானும் ஊதியம் பெறாமலேயே அரும்பாடுபட்டு தமிழ் முரசைக் கணினிமயமாக்கி, ஐந்தே ஆண்டுகளில் லாபகரமான நாளிதழாக மாற்றினார். ஊழியர்களுக்கு ஊதியத்துடன் முதல் முறையாக போனசும் வழங்கினார். எல்லா ஊடகங்களுக்கும் விளம்பரத் துறை முதுகெலும்பு. தமிழ் முரசைப் பொறுத்தவரை அந்தத் துறை நாடி நரம்பாகவும் திகழ்ந்து வந்துள்ளது. அந்தக் கால தமிழ் முரசில் சிங்கப்பூர் நிறுவனங்களோடு தமிழ்நாட்டையும் சேர்ந்த வர்த்தகர்கள், திரைப்படத் துறையினர் பலரும் தமிழ் முரசில் எடுப்பாக விளம்பரங்களை வெளியிட்டு வந்தனர். காலத்திற்கேற்ப மாறிவரும் தமிழ் முரசுடன் அதன் விளம்பரத் துறையும் வளர்ச்சி கண்டு வருகிறது.

தமிழ் முரசின் புதுயுகம்

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் குரலாக ஒலிக்கும் தமிழ் முரசு செய்தித்தாளின் வாழ்வில் 1980களின் பிற்பகுதி முதல் புதிய யுகம் பிறந்தது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அப்போதைய முரசு, திரு. கோசாவின் பிள்ளைகள் வசம் இருந்தது. சிங்கப்பூர் கிடுகிடுவென வளரத் தொடங்கிய சூழலில், நான்கு அதிகாரத்துவ மொழி செய்தித்தாட்களில் தமிழ் முரசு மட்டும் அந்தக்கால அச்சுக்கோப்பு முறையை அப்போது பின்பற்றியது. பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அச்சுக்கோக்கும் வேலையைச் செய்ய முன்வரவிலை. அதோடு முரசுக்குச் செம்மையான விநியோகக் கட்டமைப்பும் இல்லை. ‘இந்தியாவுடன் தொடர்புள்ளவர்களே அதிகம் படிக்கும் நாளேடு. அவர்களுக்கு ஏற்ற செய்திகளையே அதிகம் தாங்கிவரும் செய்தித்தாள். அது முதியவர்களுக்குத்தான் ஏற்றது’ என்ற எண்ணத்துடன் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு பிரிவு வாசகர்கள் மட்டும் நாடும் நாளிதழாகவே தமிழ் முரசு 1980களின் பிற்பகுதி வரை இருந்தது. பிறகு முரசும் அதில் இடம்பெற்ற செய்திகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின.

தமிழ் முரசின் பன்முக சேவை

இன்று பள்ளிகள், அலுவலகங்கள், ஊழியர் குடியிருப்புகள் என நாட்டின் மூலை முடுக்கெங்கும் தமிழ் முரசு கிடைக்கிறது. முரசின் வாசகர்கள் பெருக்கத்துக்கு விநியோகம் ஒரு காரணம். 1991ல் தமிழ் முரசின் விநியோகப் பொறுப்பை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் ஏற்றபின்னர் தமிழ் முரசை வாங்குவது எல்லாருக்கும் எளிதானது. தமிழ் முரசு நாளிதழும் தம்முடைய தந்தையின் பணியும் தொடரவேண்டும், பெயர் நிலைக்கவேண்டும் என்பதே அமரர் சாரங்கபாணி குடும்பத்தினரின் ஒரே நோக்கம்.

“குடும்பச் சொத்தான தமிழ் முரசை சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்சிடம் ஒப்படைத்ததற்கான ஒரே காரணம் நாளிதழ் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான்” என்றார் தமிழ் முரசு நிறுவனரான அமரர் கோசாவின் மகள் ராஜம். துடிப்பான இளம் செய்தியாளர்கள் மற்றும் வாசகர்களால் தமிழ் முரசு என்றும் இளமையுடன் இருக்கிறது. ஆண்டுதோறும் பல மாணவர்களும் செய்தியாளர்களாக முரசில் அனுபவம் பெறுகிறார்கள். இளையருக்காக திங்கட்கிழமைகளில் வெளிவரும் இளையர் முரசில் இளையர்களே எழுதுகிறார்கள். மொழியோடு உறவாடவும் அனுபவத்தை விரிவாக்கவும் விடுமுறையில் முரசில் பணிபுரிய உயர்கல்வி நிலைய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் முரசு 15 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு சேவையையும் வழங்கி வருகிறது. அரசாங்கம் முதல் தனியார் வரை பல தரப்பினரும் முரசின் மொழிபெயர்ப்பு சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதனின் ‘உழைப்பின் உயர்வு’ என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்புகளில் ஒன்று. பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்களும் முரசின் ஆசிரியர் குழுவும் மொழிபெயர்ப்பு சேவையில் பங்காற்றுகின்றனர். தமிழ் முரசு செய்தித்தாளுக்கென்றே ‘www.tamilmurasu.com.sg’ என்ற இணையத்தளம் இருக்கிறது. 82, Genting Lane, #06-07, Singapore – 349567 என்ற முகவரியில் இயங்கி வரும் தமிழ் முரசை (65) 6319 6319 என்ற எண்ணில் தொலைபேசி வழியாகவும் (65) 6319 4001 என்ற எண்ணில் தொலைப்பிரதி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம். அமரர் கோ.சாரங்கபாணி தமிழ் முரசைத் தமிழர்களின் குரலாகவும் சமுதாய வளர்ச்சிக் கருவியாகவும் பயன்படுத்தி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார்.

References: https://en.wikipedia.org/wiki/Tamil_Murasu

www.sph.com.sg/our-businesses/newspapers/tamil-murasu

Tamil Murasu newspaper à 5-7-2015 Sunday à Main*

Book à சிங்கப்பூர்த் தமிழ் முன்னோடிகள் (கோ.சா) 

RAMASAMY ANANDAPRIYA (Sec 1E4)

இராமசாமி ஆனந்தபிரியா

ஈசூன் உயர்நிலைப் பள்ளி 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anandapriya/மணல்தொட்டி&oldid=2250986" இலிருந்து மீள்விக்கப்பட்டது