பயனர்:Bavish2210181/மணல்தொட்டி
மகாகவி சுப்பிரமணிய பாராதியாரும் சகோதரி நிவேதிதை அம்மையாரும்.
வீரத்துறவி சகோதரி நிவேதிதை அம்மையார் அவர்களின் நினைவு நாள் இன்று.
சகோதரி நிவேதிதை அம்மையார் அவர்கள் மகாகவி பாரதியாருக்குப் பாரதமாதா தரிசனத்தைக் காட்டிய நிகழ்வு.
சகோதரி நிவேதிதை அம்மையாரைச் சந்தித்த பின்புதான் மகாகவி பாரதியாருக்குப் ,பெண்கள் விடுதலை பற்றிய சிந்தனை தீவிரமாயிற்று;செயல்படுத்தவும் முனைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
சகோதரி நிவேதிதை அம்மையாரைத் தனது வழிகாட்டும் குருவாகவும் கொண்டார்.
பாரதியாரும் சகோதரி நிவேதிதை அம்மையாரும்.
பண்டைக் காலத்தில் பாரத நாட்டில் பெண்களுக்குப் பெருமதிப்பு இருந்தது. பெண்ணை ‘'வாழ்க்கைத் துணை’' என்று காட்டினார் வள்ளுவர். ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் தூதுவராகச் சென்றதைப் புறநானூறு காட்டுகிறது. பெண்களைச் சக்தியின் உருவமாகக் கருதியது பாரத நாடே. பெண்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் குறையலாயின. பெண்களுக்குக் கல்வி அறிவு தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பெண்கள் அடிமைபோல் நடத்தப்பட்டனர். பெண்களுக்கு உரிய சமூக அந்தஸ்து (social status) மறுக்கப்பட்டது.
மக்கள் தொகையில் பாதியாக விளங்கும் பெண்களுக்குக் கல்வியறிவு இல்லையென்றால் சமூகம் மேம்பட முடியாது என்றுணர்ந்த சான்றோர்கள் பெண் கல்வியை வற்புறுத்தினர். பாரதியும் பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
பாரதியிடம் இயல்பாகவே காணப்பட்ட சுதந்திர எண்ணம், அரசியல் மறுமலர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை பற்றிய அக்கறை யாவும் சகோதரி நிவேதிதை அம்மையாச் சந்தித்த பின் மேலும் தீவிரமடைந்து பாரதியைக் செயல்பட வைத்தன. பெண்ணுக்குச் சமூக விடுதலை கிடைக்காமல் நாட்டிற்கு அரசியல் விடுதலை அடைவதில் பலன் இல்லை என்ற எண்ணத்திற்கு வித்திட்டவர் சகோதரி நிவேதிதா.
கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார், "இன்னும் மனைவியைச் சமமாகப் பாவித்துப் பொது இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் எங்களிடையே ஏற்படவில்லை, தவிர காங்கிரசுக்கு என் மனைவியை அழைத்து வருவதால் பயன் என்ன?" என்று கூறினாராம். பாரதியாரின் பதிலைக் கேட்ட நிவேதிதாதேவி மிகுந்த கோபம் கொண்டு `"உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்? என்று கேட்டார்.
"பெண்களுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் சமூகம் எப்படிச் சீர்திருத்தம் பெறும், மனைவியை உன் வலது கை என மதித்து வா" என்று உபதேசம் செய்தாராம். (பாரதி வாழ்க்கைச் சித்திரம், பக்: 28) இந்த நிகழ்ச்சியே பெண் விடுதலை, பெண்ணுக்குச் சமஉரிமை என்னும் பொருள் பற்றி, பாரதியார் சிந்தனைகள் எழுச்சியுறக் காரணமாயின. அதன் விளைவாக அவர் படைப்புகளில் அவை வேகத்தோடும் வீச்சோடும் வெளிப்பட்டன.
பாரதி, `தேசிய கீதங்கள்’ என்ற நூலின் முகப்பில், தனது ஆன்மிக குருவான நிவேதிதா தேவிதான் அந்தப் பாடல்கள் உருவாகக் காரணமானவர் என்று புகழ்ந்து சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
பெண் விடுதலை பெற வேண்டுமானால் அவள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை. விழிப்புணர்வு (awareness) என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவைக் குறிக்கும். அதனால் பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார் பாரதியார். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு வங்கப் பெண்மணிகள் சுதேசிய இயக்கத்தில் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு வியப்புற்ற பாரதி தமிழ் நாட்டுப் பெண்களும் அவற்றையறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் சுதேசிய எண்ணத்தைப் பற்றி எழுதினார்.
ஆண்களுக்கு அடங்கியே வாழ்ந்து பழகிய தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பிறநாட்டுப் பெண்கள் எவ்விதம் இருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட விரும்பினார். எனவே, பெண் உரிமைக்காகப் போராடிய இயக்கங்களைப் பற்றி ‘தர்மயுத்தம்’ என்னும் தலைப்பில்,
"துருக்கி நாட்டில் பெண்களுக்குள்ளே, நடந்த விடுதலைக் கிளர்ச்சி, தென் ஆப்பிரிக்காவில் ‘பியேட்டர் மாரிஸ்பர்க் பட்டணத்தில் 1910-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘பெண்கள் விடுதலைச் சங்கம்,’ பிருத்தானியா, ‘ஸ்திரி சாம்ராஜ்யம்’ ஆகிய பெண்ணுரிமை இயக்கங்களைத் தமிழ் நாட்டுப் பெண்களுக்கு அறிமுகப்படுத்தினார். எல்லா நாடுகளிலும் பெண்கள் சுதந்திரம் பெற்று மனித இனத்தை மேன்மைப் படுத்த முயற்சி செய்கிறார்கள். தமிழ் நாட்டுப் பெண்கள் இதற்காக எந்த முயற்சியும் செய்யாமலிருக்கிறார்களே ஏன்?"
என்று வினா எழுப்பி அவர்களைச் சிந்திக்கச் செய்தார். (பாரதியாரும் சமூகச் சீர்திருத்தமும், பக் : 121).
ஆசியாவில் பெண்விடுதலைக்காகப் போராடிய சீனநாட்டு சியூசீன் என்ற பெண்ணைப் புகழ்ந்து அப்பெண் இயற்றிய பெண்ணுரிமை இயக்கப் பாடலைத் தமிழாக்கம் செய்தார். புதுச்சேரியில் கூடிய மகளிர் கூட்டத்தில் தம் மகள் சகுந்தலா பாரதியைக் கொண்டு அந்தப் பாடலைப் பாடச் செய்தாராம். (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும், பக்: 122) அப்பாடலில்,
விடுதலைக்கு மகளிரெல்லோரும் வேட்கை கொண்டனம்;
(பல்வகைப் பாடல்கள், பெண்விடுதலை - 1)
என்று பெண்கள் விடுதலை மீது விருப்பம் கொண்டதாகப் பாடியிருக்கிறார்.
மண்ணுலகில் உள்ள உயிர்கள் எல்லாம் கடவுள் என்றால் பெண்ணும் தெய்வம் அல்லவா? என்று கேட்டு அவளைத் தெய்வமாக மதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வ மன்றோ? , , , , , (பாரதி அறுபத்தாறு, பெண் விடுதலை - 45) எனத் தெளிவுபடுத்துகின்றார்.
பாரதி நடத்திய தர்மயுத்தத்தின் பலன் என்ன? தமிழ் நாட்டில் ‘பெண் விடுதலைக் கட்சி’ தொடங்கப்பட்டது. அந்தக் கட்சிக்குச் சதாசிவ அய்யர் என்ற நீதிபதியின் மனைவி மங்களாம்பிகை தலைவியானார். அவருக்குத் துணையாக நின்றார் அன்னிபெசன்ட் அம்மையார். பெண்கள் முன்னேற்றத்தில் தீராத ஆர்வம் கொண்டவர் பாரதி. அவர்கள் நகை, ஆடை போன்ற வீண்ஆடம்பரங்களை விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தார். அது தான் பெண் விடுதலைக்கு வழி வகுக்கும் என்பது அவர் எண்ணம். வேல்ஸ் இளவரசியின் எளிமையைப் பாராட்டி அதைப் பின்பற்றத் தூண்டினார்.
பெண்கல்வியின் அவசியத்தை எடுத்துக்காட்ட விரும்பிய பாரதி பிற்காலத்தில் சமூக சீர்திருத்தவாதியாக விளங்கிய டாக்டர். முத்துலக்ஷ்மி ரெட்டி எஃப்.ஏ. பரீட்சையில் தேறின செய்தியையும், பிற்காலத்தில் ‘சிஸ்டர்’ என்று அழைக்கப்பட்ட ஆர்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேஷனில் தேறிய செய்தியையும் ‘சக்கரவர்த்தினி’ பத்திரிகையில் வெளியிட்டார். (சக்கரவர்த்தினி, 1906 ஜனவரி, பக்: 143). பெண்களுடைய படிப்பில் பெற்றோர்கள் அக்கறை செலுத்த வேண்டுமென்று கூறினார். பெண்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றால்தான் இந்திய நாடு முன்னேறும் என்று நினைத்தார். அதனால்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்
(சரஸ்வதி தேவியின் புகழ் - 10)
என்று கலைமகளைப் பற்றிப் பெண்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கலைமகள் யார்? கல்விக்கு அதிபதி. கல்வித் தலைவியாம் கலைமகளைப் பற்றிப் பேசினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது அவரது எண்ணம். பெண் விடுதலை இயக்கத்தை நாட்டு விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாகவே பாரதியார் கண்டார்.
பெண்ணடிமைத்தனம் என்பது நாட்டிற்கே அடிமைத்தனம் என எச்சரித்த பாரதி, தேசிய விடுதலை இயக்கம் மூலம் விடுதலை போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பை இடம்பெறச் செய்தார். “பெண்ணுக்கு விடுதலை நீரில்லையென்றால்... பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை” என்ற வரிகள் ஒவ்வொரு ஆண்களையும் சிந்திக்க வைத்தது.
பெண்களுக்கு வெறும் கல்வி உரிமையும், எழுத்துரிமையும் மட்டும் கொடுத்துவிட்டால் போதாது. பெண்களை ருதுவாகும் முன்பு விவாகம் செய்ய கூடாது, அரசியல் உரிமை வேண்டும், சொத்தில் சம உரிமை வேண்டும், திருமணமின்றி வாழும் உரிமை உண்டு, வேலைக்கு செல்ல உரிமை உண்டு என பெண்களின் அத்தியாவசிய உரிமைகளுக்காக போராடிய தீர்க்க தரிசி தான் பாரதியார்.
பெண் என்பவள் யாருக்கும் அடிமை இல்லை. சமூகத்தில் தலை நிமிர்ந்து ஒளிரும் மிகப்பெரும் ஜோதி என கூக்குரலிட்டார். “பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா... பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா” என பெண்மையின் பெருமையை அழகாக எடுத்துரைத்தார்.
சமுதாயத்தில் உள்ள பழக்க வழக்கங்களால் பெண்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டன. அந்த உரிமைகளை வழங்கினால் பெண்கள் விடுதலை அடைவது திண்ணம் என்று நம்பிய பாரதியார், பெண்களுக்குரிய உரிமைகளாகக் கூறுவதைப் பாருங்கள்.
பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது.
அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது.
பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்.
கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும்.
பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அவளை அவமானப் படுத்தக்கூடாது.
பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.
என்பனவாகும். இவ்வுரிமைகள் பெற்றால் சமுதாயம் முன்னேறும். இவ்வுரிமைகளையும் விரைந்து அளிக்க வேண்டும் என்கிறார். (பாரதியும் சமூகச் சீர்திருத்தமும், பக்: 133)
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்”
ஆண் கல்வி கற்றால், அது குடும்பத்திற்கு மட்டும் பயன் தரும் ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் குடும்பம், நாட்டிற்கும் பயன்தரும் என அடுக்காக வசன மொழி பேசும் தலைவர்களும், பெண்கள் என்பவள் திருமணம் ஆகும் வரை தந்தை சொல் கேட்கிறவளாகவும், திருமணத்திற்கு பின் கணவனுக்கு அடிமையாகவும் இருக்க வேண்டும் என்ற நிலைமை இப்போது இருந்தாலும் அதனை ஓரள்வுக்கு மாற்ற அந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர் பாரதி என்றால் மிகையாகாது!
.