பயனர்:Chandrashekhar Durga/மணல்தொட்டி

மரின் பரேட்

ரின் பரேட் (Marine Parade) சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பேட்டையாகும். இந்த வட்டாரத்துக்கு வடக்குத் திசையில் கேலாங் வட்டாரமும், வடமேற்குத் திசையில் காலாங் வட்டாரமும் வடகிழக்குத் திசையில் பிடோக் வட்டாரமும் தென்மேற்குத் திசையில் மரீனா கிழக்கு வட்டாரமும் தெற்குத் திசையில் சிங்கப்பூர் நீரிணையும் உள்ளன.

மரின் பரேட்

பரப்பளவு:       6.12 km²

மக்கள் தொகை: 48,730

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின்  எண்ணிக்கை:   7863

பொருளடக்கம்:

  • வரலாறு
  • மரின் பரேட் இன்று
    • வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை
    • சமூகக் கட்டடம்
    • முதியவர்களுக்கும் ஏற்ற இடம்
    • வட்டாரத்திலுள்ள பள்ளிகள்
    • அரசியல்
  • உங்களுக்குத் தெரியுமா?
  • மேற்கோள்கள்

வரலாறு

இவ்விடத்தின் வரலாறு, காத்தோங் (Katong) என்றழைக்கப்படும் வட்டாரத்தின் எல்லையுடன் தொடர்புடையது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நடுப்பகுதிவரையிலான காலக்கட்டம் வரை சிங்கப்பூரிலுள்ள செல்வ பிரனாக்கான் (Peranakan) சமூகத்துக்கு இவ்விடம் ஒரு சொர்க்கமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், காத்தோங் வட்டாரம், நீரிணை-சீன கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் தனித்துவமிக்க கட்டட வடிவமைப்பைக் கொண்ட வட்டாரமாகவும் புகழ்பெற்றுள்ள இது, காத்தோங் லக்ஸா (Katong Laksa) என்ற உணவு வகை தோன்றிய இடமாகவும் திகழ்கிறது.

ஜப்பானிய ஆக்கிரமிப்புக்குப் பின்னர், கடற்கரை மோசமான நிலையில் இருந்தது. கடற்கரையில், வெடிக்காத ஜப்பானிய குண்டுகள் மற்றும் குப்பைகள் சிதறிக் கிடந்தன. ஆதலால் பிரிட்டிஷ் இராணுவம் அவ்விடத்தை அவ்வப்போது தூய்மைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது. மேலும், திரு ஜே.எம் ஜுமாபாய் (Jumabhoy) போன்ற அரசியல்வாதிகள் ஓர் உல்லாச நடைபாதையையும் (Promenade) பொதுமக்கள் உடை மாற்றும் அறைகள் போன்ற வசதிகளையும் உருவாக்க முற்பட்டார்கள். மரின் பரேட் என்ற பெயர், இந்த உல்லாச நடை பாதையிலிருந்துதான் வந்தது.

மரின் பரேட் இன்று

இன்று, மரின் பரேட் என்று அழைக்கப்படும் இந்த வட்டாரத்தில் காணப்படும் அடுக்குமாடி வீடுகள், 1970-களில், தீவின் கிழக்குக் கடற்கரையில் மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டவை. முற்றிலும் கடலிலிருந்து மீட்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்ட முதல் வீடமைப்புப் பேட்டை மரின் பரேட் தான்.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை

மரின் பரேட், சிங்கப்பூரிலுள்ள மிகவும் விலையுயர்ந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளைக்கொண்ட பேட்டைகளில் ஒன்றாக விளங்குகிறது.

குடியிருப்பாளர்கள் சுரங்கப்பாதைகள் மூலம் கிழக்குக் கடற்கரைப் பூங்காவுக்குச் (East Coast Parkway) செல்லலாம். மேலும், அங்கிருக்கும் பல பொழுதுபோக்கு வசதிகளைப் பயன்படுத்தியும் மகிழலாம்.

மரின் பரேட்டில் பல அக்கம் பக்கக் கடைகளும் பார்க்வே பரேட் (Parkway Parade) என்றழைக்கப்படும் மிகப்பெரிய கடைத் தொகுதியும் உள்ளது. அதில் அலுவலகங்களும் பேரங்காடியும் உள்ளன.

சமூகக் கட்டடம்

மரின் பரேட் சமூகக் கட்டடம் 2000-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. அது, மரின் பரேட் சமூக மன்றத்தையும் சமூக நூலகத்தையும் உள்ளடக்கியது. இந்த மூன்று-மாடிக் கட்டடத்தில், 263 இருக்கைகள் கொண்ட அரங்கம், கண்ணாடிச் சுவர் கொண்ட உடற்பயிற்சிக்கூடம், கூரையால் மூடப்பட்ட கூடைப்பந்து அரங்கம், விளையாட்டு அரங்கம், குளிர் சாதன வசதி கொண்ட மண்டபம் முதலிய வசதிகளும் உள்ளன. 

முதியவர்களுக்கும் ஏற்ற இடம்

இன்று மரின் பரேட், முதியவர்கள் வசிப்பதற்கு ஏற்ற வட்டாரமாக உருவாகி வருகிறது. முதியவர்களுக்குத் தேவையான வசதிகள் அவ்வப்போது மேம்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், முதியவர்களுக்கு உதவுவதற்காகப் பல நிகழ்ச்சிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன.

பள்ளிகள்

  • சி.எச்.ஐ.ஜே (காத்தோங்) தொடக்கப்பள்ளி (CHIJ {Katong} Primary)
  • ஙீ ஆன் தொடக்கப்பள்ளி (Ngee Ann Primary School)
  • தௌ நான் பள்ளி (Tao Nan School)
  • சி.எச்.ஐ.ஜே காத்தோங் கான்வெண்ட் (உயர்நிலை) (CHIJ Katong Convent)
  • செயிண்ட் பாட்ரிக்ஸ் பள்ளி (St. Patrick's School)
  • விக்டோரியா பள்ளி (Victoria School)
  • விக்டோரியா தொடக்கக் கல்லூரி (Victoria Junior College)     அரசியல் மரின் பரேட் வட்டாரம் மரின் பரேட் குழுத் தொகுதியின் (Marine Parade Group Representation Constituency) ஒரு பிரிவு ஆகும். இந்தக் குழுத் தொகுதியில், பிரேடல் ஹைட்ஸ், கேலாங் சிராய், கெம்பாங்கான்-சாய் சீ மற்றும் ஜூ சியாட் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.

மரின் பரேட் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள்

  • கோ சொக் டொங் (மரின் பரேட் பிரிவு)
  • டான் சுவான் ஜின் (கெம்பாங்கான்-சாய் சீ பிரிவு) 
  • தொங் சுன் ஃபை, எட்வின் (ஜூ சியாட் பிரிவு)
  • சியா கியான் பெங் (பிரேடல் ஹைட்ஸ் பிரிவு)
  • இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப் (கேலாங் சிராய் பிரிவு)

உங்களுக்குத் தெரியுமா?

மரின் பரேட்டுக்கு ஒரு ‘தீம் பாடல்’ (theme song) உண்டு! அதன் பெயர் “ர் லவ்லி மரின் பரேட்” (Our Lovely Marine Parade). இப்பாடல் முதலில் 5-பாடல் ஒலி நாடாவில் (5-song cassette tape) வெளியானது. சிங்கப்பூரர்களான மெல் ஃபெர்டினாண்ட்ஸ் மற்றும் டென்னிஸ் ஃபெர்டினாண்ட்ஸ் (Mel and Dennis Ferdinands) (தந்தையும் மகனும்) இந்த ஒலி நாடாவைத் தயாரித்தனர்.

மேற்கோள்கள்:

http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_1699_2010-08-06.html

https://www.iproperty.com.sg/resources/District.aspx?nid=15

http://www.streetdirectory.com/travel_guide/singapore/singapore_district/312/marine_parade.php

http://www.teoalida.com/singapore/hdbrecords/

http://www.hdb.gov.sg/cs/infoweb/about-us/history/hdb-towns-your-home/marine-parade

http://www.channelnewsasia.com/news/specialreports/parliament/news/marine-parade-shaping-up-to-be-more-seniors-friendly/515874.html

https://mustsharenews.com/marine-parade-song/

https://www.parliament.gov.sg/grc/marine-parade-grc

http://www.streetdirectory.com/stock_images/travel/scenery_normal/11906511890431/Marine_Parade_overview-3/

http://www.theindependent.sg/blatant-lawlessness-one-resident-describes-marine-parade-mps-decision-to-redraw-ward-boundaries-after-election/

http://www.mptc.org.sg/About-Our-MPs