பயனர்:Inqulab.s/மணல்தொட்டி
வாய்மொழி வழக்காற்றில் பக்கீர்சா பாடல்கள் முனைவர் சா.இன்குலாப்
முன்னுரை
உலகில் தோன்றியுள்ள பல்வேறு மதங்களில் மிகக் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த மதமாக இசுலாம் உள்ளது. அது தமிழகத்தில் பரவுவதற்கு இறைநேசர்களின் அயராத பிரசாரம் காரணமாக இருந்தது எனலாம். அவ்விறை நேசர்களின் பாதையைப் பின்பற்றிச் செல்வோர் பக்கீர்கள் என்றழைக்கப் படுகின்றனர். இவர்கள் இசுலாமியச் சமயக் கருத்துக்களைப் பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று சமயப் பணியாற்றுவதில் பெரும் பங்காற்றியுள்ளனர்.
இசைப்பாணர்கள்
இசுலாமியச் சமயத்தைப் பின்பற்றிய தமிழ்ப்புலவர்கள், தமிழில் நாட்டுப்புறக் கூறுகளைக் கொண்டு படைக்கப்பட்ட அம்மானை, பள்ளு, குறவஞ்சி, ஊசல் முதலான இலக்கிய வடிவங்களைப் பின்பற்றி பல்வேறு இலக்கியங்களைப் படைத்துள்ளனர். அப்புலவர்களின் பாடல்களை பக்கீர்கள் தங்கள் வாய்மொழி மூலம் சமயக் கருத்துக்கள் அடங்கிய இறைவணக்கப் பாடல்கள், கதைப்பாடல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் பாடிவருகின்றனர். அதனால் அவர்கள் இசுலாமிய இசைப்பாணர்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றனர்.
பக்கீர்கள்
பக்கீர்கள் சமயப்பிரசாரகர், பாடகர், இரவலர் என்னும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர். பக்கீர் என்ற சொல் `இரப்பவர்` அல்லது `இரவலர்` என்னும் பொருள் தரக்கூடிய பாரசீக சொல்லாகும். அதன்பொருள் எல்லாத் தேவைகளுக்கும் எதிர்ப்பார்ப்பவர் என்று பொருள். இந்தத் தேவை ஆன்மீகத்தேவையையும், உலகாயுதத் தேவையையும் குறிக்கிறது. தனிப்பட்ட அடையாளங்களுடன் காணப்படும் இவர்கள் முசுலிம்கள் பெருவாரியாக வாழ்கின்ற ஊர்களில் அவர்களை நாடிச்சென்று பாடல்களைப் பாடியும், பொருள்களை யாசித்தும் வாழ்க்கை நடத்துவோராக உள்ளனர். பாடுதல் ஒன்றையே தங்கள் தொழிலாகக் கொண்டுள்ள பக்கீர்களில் ஆண்கள் மட்டும் ஊர்ஊராகச் சென்று மக்கள் மகிழும் வண்ணம் பாடல்களைப் பாடி அவர்கள் கொடுக்கும் காசுகளைப் பெற்றுக்கொண்டு இரவு நேரத்தில் அந்தந்த ஊர்களில் தங்கிவிடுகின்றனர். இம்மாதிரியான வாழ்க்கைமுறை சங்ககாலப் பாணர் மரபோடு பொருந்திப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.
பக்கீர்களின் இசைப்பயிற்சி
பக்கீர்கள் முறையான இசைப்பயிற்சி ஏதுமின்றி பாடிவருகின்றனர். இதுகுறித்து கள ஆய்வு மேற்கொள்கையில் வழுத்தூரைச் சேர்ந்த லியாகத்அலி என்னும் பக்கீர் கூறுகையில், "முன்னோர்கள் படிச்சதைக் காதுல வாங்கியிருக்கோம்ல. ஏற்கனவே படிச்சிருக்காங்களே,அவங்க எந்த இசையில படிச்சாங்களோ அந்த இசையில படிச்சிக்கிட்டு இருக்கோம்"
என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவலின் மூலம் பக்கீர்கள் இசை குறித்து முழுமையாக அறியாமல் கேள்வி ஞானத்தின் வாயிலாகப் பாடுகின்றனர் என்பதை அறியமுடிகின்றது.
பக்கீர்களின் பாடல்கள்
இசுலாமியத் தமிழ்ப்புலவர்கள் இலக்கிய வழக்கில் பாடியுள்ள பப்பரத்தி அம்மானை, காட்டுபாவா சாகிபு அம்மானை முதலானவற்றை பாத்திமா நாயகி திருமணச் சரித்திரம், காட்டுபாவா கதைப்பாடல் என்றும், அரபு, பாரசீக மொழிகளில் உள்ள இலக்கிய வகையினை அடியொற்றி படைக்கப்பட்ட கிஸ்ஸா, மஸாலா முதலானவற்றையும் வாய்மொழிக்கூறுகளுட்ன் பாடியுள்ளனர்.
1.காட்டுபாவா கதை;
இறைநேசர்களுள் ஒருவரான நாகூர் ஆண்டவரின் பேரர் பாவா பக்ருதீன் என்பவரின் கதையைச் சொல்கிறது. அவர் காசியிலிருந்து வந்த ஏழு பிராமணப் பெண்களைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றுகையில் கொல்லப்பட்டார். அவருடைய கதையைக் கூறுகையில், "ஒன்பது நாளா வனத்தில் வந்தோம் - நாடி ஒருவர் துணையும் இல்லை நம்மளுக்கு ஒன்பது நாளா வந்த்தற்கு நமக்கு ஒருவர் துணையில்ல அக்காமாரே"
என்று பாடியுள்ளனர்.
2.மொய்தீன் ஆண்டவர் சரித்திரம்;
மொய்தீன் அப்துல்காதர் ஜிலானி என்று அழைக்கப்படுபவர். ஈராக்கிலுள்ள ஜிலான் நகரைச் சேர்ந்நவர். பக்கீர்கள் இவரைத் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மொய்தீன் ஆண்டவர் சரித்திரம் என்று பாடியுள்ளனர். அவருடைய பிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், "நபிகுலத் தோன்றலே நாயகி பாத்திமாவே ஒங்களோட வயத்தினிலே உதிக்கின்ற பாலகரும் எல்லா வலிகளுக்கும் மேல் வலியாய் இலங்கும் மொய்தீன்-என ஓதினார் கனவிலே சொல்லிடுவார் காரிகையை வாழ்த்திடுவார்"
என்று பாடியுள்ளனர். சமயப் பெரியோர்களின் பிறப்பு கனவின் மூலம் கூறப்படுவதையும், பிறக்கும் குழந்தைக்கு இன்ன பெயர் வைக்க வேண்டுமென்று முன்னறிவிப்புச் செய்யப்படுவதையும் கதைப்பாடல்களில் ஒரு கூறாக இருப்பதைக் காணமுடிகிறது.
3.மசலா இலக்கியம்
விடுகதை வடிவிலான இலக்கியம்.இவ்விலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஒன்றான நூறு மஸாலாவை இசுலாமியர்கள் பெரும்பாலானோர் விரும்பும் வண்ணம் பக்கீர்கள் பாடியுள்ளனர். இப்பாடலில் சமயஞ் சார்ந்த கேள்விகளைப் புதிர் வடிவில் பாடியுள்ளனர். "எத்தனை வஸ்தைக் கொண்டு இன்சானைப் படைச்சான்? சொல்லு-மன்னா எத்தனை வஸ்து மன்னா?
என்று கேள்வி கேட்க, அதற்குப் பதிலளிக்கையில்,
"மண்ணு தண்ணி காத்து நெருப்பு நாலக் கொண்டு படைத்தாண்டி"
என்று பாடியுள்ளனர்.பாமர மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் மனிதப் படைப்புக் குறித்துப் பாடப்பட்டுள்ளது
முடிவுரை:
இசுலாமிய சமயத்தைப் பின்பற்றிச் செல்கின்ற பக்கீர்கள் தனித்த அடையாளங்களைக் கொண்டுள்ளனர். ஊடகங்களின் ஆதிக்கமில்லாத அன்றைய காலங்களில்(சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு) மக்களுக்குப் பொழுதுபோக்காகவும், சமயங்குறித்தச் செய்திகளை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அவர்களின் பாடல்கள் அமைந்துள்ளன.