பயனர்:Kajendrathas/மணல்தொட்டி

தவளக்கிரி முத்துமாரியம்மன் ஆலயம்

சைவமும் தமிழுந் தழைத்தோங்கும் ஈழவளநாடு தக்ஷிண கைலாசம் என்னுஞ் சிறப்புப் பெயருங் கொண்டுள்ளது. ஊர்கள் தோறும் கோவில்கள் பக்தி மணம் பரப்பி நிற்கின்றன.

இவ் ஈழநாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த எம் ஊர் வயலும் வயல் சார்ந்த பண்ணைகளும் வளஞ் செழித்த பச்சைப் பசேலென்றும் என்றும் காட்சியளிக்கும். இவ்வூர் ஆன்றவிந்தடங்கிய கேள்விச் சான்றோர் பலர் வாழ்ந்த பெருமை பெற்றது. இங்கு வாழ்ந்த வடமொழி, தென்மொழி வல்லுனரான வைத்தியநாத முனிவர் வியாக்கிரபாத புராணம், புலியூர்ப் புராணம் என்னும் நூல்களை ஆக்கி சைவ நல்லுலகிற்குத் தந்திருக்கிறார்கள். சங்கீதம், நாட்டியம், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய இன்கலைகளின் இருப்பிடம் இவ்வூர்.

நகுலேஸ்வரத்திற்கு நேர் தெற்கே இரண்டு கல் தொலைவில் தெல்லிப்பழை பண்டத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதி மிகு சூழலில் ஓமெனும் மந்திரத்தின் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் தவளக்கிரித் திருத்தலம் அமைந்திருக்கிறது.

தவளக்கிரி

தவளக்கிரித் திருத்தலத்தின் வரலாற்றைச் சரிவரச் சொல்லக்கூடிய சரித்திர புராணச் சான்றுகளோ சாசன ஏடுகளோ எவையுமில்லை. கர்ண பரம்பரைக் கதைகளே ஓரளவுக்குக் கைகொடுக்கின்றன. கோவிலின் பழமையை அன்னையின் திருவுருவ அமைப்பும் முன்பிருந்த தூண்களும் கட்டடம் அமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் எடுத்துச் சொல்லுகின்றன.

முணுமுணுத்த அம்மன்

அன்னை முத்துமாரி அளவெட்டியில் கோயில் கொண்ட வரலாறே அதிசயமானது. நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பு வட்டுக்கோட்டை சுழிபுரம் வாழ்மக்கள் கடலிலிருந்து எடுத்த அன்னையின் திருவுருவச் சிலையை வீடொன்றில் வைத்து ஆதரித்து வந்திருக்கிறார்கள். இரவு நேரங்களில் அன்னையை வைத்திருந்த இடத்திலிருந்து முணுமுணுக்கும் சப்தம் வந்து கொண்டிருந்தது. இதனால் அச்சமும் அதிசயமுங் கொண்ட அடியவர்கள் பொங்கலென்றும் பூசையென்றும் பக்தி பரிமளிக்க சிறப்பாகச் செய்து வந்தார்கள். இருந்தம் முணுமுணுப்பு நிற்கவேயில்லை. அதேவேளை அன்னை பேசியது யாருக்கும் புரியவுமில்லை. நிறைவில் முணுமுணுத்த அம்மன் என்று பெயர் சூட்டி விட்டார்கள்.


காத்தவராயர் கோவில்


இத் தவளக்கிரிக் கோவில் கூடத்தம் மனைப் பிரதிஷ்டை செய்ய முன்பு காத்தவராயர் கோவில் என்றே வழங்கி வந்திருக்கின்றது. இன்றும் தூரத்திலிருப்பவர்கள் காத்தவராயர் கோவில் என்றே கூறுகிறார்கள். மரபு வழி வந்த மாவைக் கந்தன் காவடிப் பாடல் ஒன்றில் “செங்கழனி சூழ் அளவை நடுவண் கோவில் அமர் காத்தவராயன் சந்நிதியிலிருந்து துங்கமிகு காவடியை எடுத்து” என்று இக் காத்தவராயர் கோவிலிருந்து காவடிகள் புறப்பட்டு மாவிட்டபுரம் சென்றதாகப் பாடப்பட்டுள்ளது. இன்னும் காத்தவராயர் உற்சவ மூர்த்தியும் கழுமரமும் இன்றுங் கோவிலில் உள்ளன. பலியிடும் வழக்கமும் நீண்ட காலமாக இருந்திருக்கிறது. எதுஎப்படியாயினும் இப்போது தேவி முத்துமாரி கருவறையில் வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள்.
அன்னையின் கருவறையமைந்த பகுதி அளவையூரைச் சேர்ந்தது. ஆயினும் வடக்கு வீதி பன்னாலையூரைச் சேர்ந்தது. அன்னையை முதன் முதலில் வணங்கி வந்தவர்கள் வட்டுக்கோட்டை சுழிபுரம் வாழ் மக்கள். வட்டுக்கோட்டை, சுழிபுரம், அளவட்டி, பன்னாலை ஆகிய நான்கு ஊரவர்களும் தேவியை தங்கள் குல தெய்வமாகக் கொள்ளுவதில் வியப்பேது மில்லை. அயல் ஊரவர்கள் மட்டுமன்றி தொலைவிலிருந்தும் அன்னையின் அருள் வேண்டி வந்து கொண்டிருப்பவர்களுக்கு அளவேயில்லை.


பலியிடுதல்


நீண்ட காலமாக இக்கோவிலில் வேள்விக் கொடியேற்றி பலியிடும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நாமறிந்த வரையில் 1918ம் ஆண்டளவில் ஒரு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இக் கும்பாபிஷே கத்தைக் கோணேசர் கோவிலைச் சேர்ந்த சிவஸ்ரீ சரவணமுத்துக் குருக்களவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள். 1924, 1925 அளவில் பலியிடுதல் நிறுத்தப்பட்டு மகோற்சவம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரையில் மகோற்சவம் நடந்திருக்கின்றது. ஆயின் திரும்பவும் பலியிடும் வழக்கத்தைக் கொண்டுவரும் முயற்சியில் சிலர் ஈடுபட்டமையால் பெரிய குழப்பநிலை தோன்றி மகோற்சவம் தடைப்படலாயிற்று. பலியிடும் முயற்சியும் பலிக்கவில்லை. 1935ம் ஆண்டளவில் தூபியின் திருத்த வேலைகள் செய்யப் பெற்று இரண் டாவதாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சில ஆண்டுகளின் பின்னர் திரும்பவும் மகோற்சவம் நடைபெறத் தொடங் கியது. கொடியேற்றத்திலிருந்து பத்தாம் நாள் தேரும் பதினொராம் நாள் ஆனி உத்தரத் தன்று தீர்த்தமும் நடைபெறலாயிற்று.கும்பாபிஷேகத்தையும் மகோற்கவத்தையும் பண்டித சிவஸ்ரீ மாணிக்கத்தியாகராஜக் குருக்களவர்கள் செய்து வைத்தார்கள். 1965ம் ஆண்டு தை மாத அத்த நட்சத்திரத்தில் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் கோவிலில் செய்யப் பெற்ற பல திருத்த திருப்பணி வேலை களைத் தொடர்ந்து நடைபெற்றது. இக் கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ ஐயம்பிள்ளைக் குருக்களவர்கள் செய்து வைத்தார்கள்.

வீர சைவக்குருக்கள் மட்டுமன்றி பிரா மணக் குருமாரும் சில சந்தர்ப்பங்களில் மகோற்சவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள். 


இதுவரையில் இக் கோவிலில் குருமாராகப் பணிபுரிந்தோர்.



•சிவஸ்ரீ சரவணமுத்துக் குருக்கள் •பிரம்மஸ்ரீ சதாசிவக் குருக்கள் •இரத்தினம் குருக்கள் •சிவஸ்ரீ சி.மாணிக்கத்தியாகராஜா குருக்கள் •ச.தற்பானந்தம் குருக்கள் •ச.சொக்கலிங்கம் •இராசையா •கந்தையா •ஐ.செல்வரத்தினம் •சி.ஐயம்பிள்ளை •செ.வைரவநாதன்


இங்கு ஐந்து வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாகப் பூசை உரிமை பெற்றிருக்கிறார்கள். சமீப காலத்தில் இங்கு பூஜை செய்பவர்கள் வீரா கமவிதிப்படி இலிங்க தாரணம் செய்தவர்களாக இருக்க வேண்டு மென்று விதிக்கப்பட்டிருக்கிறது.

இக்கோவிலுக்குரிய தலவிருட்சம் சரக்கொன்றை. இது வடக்கு வெளிவீதியில் வானுற வளர்ந்து நிற்கிறது. ஆனி மகோற்சவ காலத்தில் பொன் போலப் பூச்சொரிந்து தேவியைப் பூசித்து நிற்கிறது. வயல் நிலங்களும் தோட்டக்காணிகளும் இக்கோவிலுக்குத் தர்ம சாசனம் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நிலமொன்றில் தவளக்கிரி கோவிலின் பின் புறமாக ஆதி வீரபத்திர சுவாமி ஆலயம் 1982ம் ஆண்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

 கோவிலின் முன்புறமும் வலப்புறமும் கோவில் தொண்டு செய்யும் இசையாளர் மரபினரும், மலர்மாலை புனைவோரும், வேளாண் பெருமக்களும் ஏனையோரும் வாழ்கின்றனர். சிற்ப சித்திர நுண்கலை வல்லு நர்களும் இங்கு வசிக்கின்றனர். அன்னையின் அடித்தொண்டே வாழ்க்கையில் ஆக்கமெலாந் தருமென்று உறுதியாக நம்புகின்றனர்.


உற்சவமூர்த்தி


முன்பு விநாயகர், காத்தவராயர், அம்பிகை மூவரும் உற்சவ காலங்களில் பவனி வரும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்போது அம்பிகை மட்டுமே உற்சவ காலங்களில் வீதி வலம் வருகிறாள். 1935ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகத்துக்கு சிறிது காலம் முன்னதாக இப்போதிருக்கும் உற்சவ மூர்த்தி உருவாக் கப்பட்டது. இவ் அம்பிகையின் அழகும் ஒளியும் அருட்பொலிவும் மிகமிகச் சிறப்பாக அமைந் திருக்கிறது. இந்த வகையில் சிற்ப சிறப்பம்சம் பொருந்திய தேவி திருவடிவம் இப்பகுதியில் இல்லையென்று சிற்ப நூல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இச்சிலையை வடிவமைத்த சிற்பி மூன்று முறை முயன்றும் ஏதோ ஒரு ஊனம் சிலையில் ஏற்பட்டு வந்தமையால் மனம் சோர்ந்து இருந்த போது அம்பிகையே ஒரு மூதாட்டி உருவில் வந்து ஆறுதல் கூறி ஆசி வழங்கிய பின் நான்காவதாக வடித்த திருவுருவம் தான் இது என்றும் இம்மூதாட்டி நிழல் கருவறையில் பதிந்திருந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது.

நடராஜப் பெருமானுக்கு இங்கு தனிச் சந்நிதி இருக்கிறது. இது தெற்கு நோக்கி அமைக்கப் பெற்றிருக்கிறது. வருடத்தில் ஆறு விசேட அபிஷேக தினங்களோடு ஏனைய இரு தினங்களில் மட்டும் நடராஜப் பெருமான் வீதி வலம் வருகிறார். பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகன், நாகேஸ்வரர், வைரவர் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன.


சில வழக்கங்கள்


இக்கோவிலுக்கே சிறப்பாக அமைந்த சில வழக்கங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. சிவராத்திரி தினத்தன்று இரண்டாம் ஜாமப்பூசை முடிவுற்றதும் பூசகர் மூலஸ்தானத் திலிருந்து கற்பூரச்சட்டி ஒன்றை ஏந்தி வருகிறார். மங்கள வாத்தியங்கள் ஒலிக்க அது எதிரே சிறிது தூரத்திலிருக்கும் ஐயனார் ஆலயத்துக்குக் கொண்டு வரப்பட்டு வீதி வலம் வந்து மூலஸ்தானத்தில் வைக்கப் பெற்ற பின்னரே அங்கு பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படுகிறது. விஜயதசமி அன்று தேவி கும்பிழாவளைப் பிள்ளையார் கோவிலுக்குச் செல்கிறாள். அங்கு வாழை வெட்டி மகா நோன்பு விழா முடிந்து திரும்பி வரும் போது ஐயனார் ஆலயத்திலும் வாழை வெட்டும் வழக்கம் இருந்திருக்கிறது.

பங்குனி மாதம் கோவில் குளிர்த்திக்கு வரும் பண்டங்களிலிருந்து சிறிய அளவில் சேர்த்து அயலிலுள்ள ஆலயங்களுக்கு முதல் நாள் மாலையிலேயே அனுப்பப்படுகிறது. குளிர்த்தி தினத்தன்று அதிகாலை நான்கு ஐந்து மணியளவில் சோறு ஆக்கும் முதல் அண்டா அடுப்பேற்றப்படுகிறது. இந்த அடுப்பேற்றும் வைபவத்தை ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வர்களே பரம்பரையாகச் செய்து வருகின்றார்கள். இவ் வழக்கங்கள் எப்போது ஏற்பட்டன என் பதைச் சொல்ல வல்லவர்கள் எவருமில்லை.


புகழ் பாமாலைகள்


அன்னையின் அருட்பெருக்கினைப் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் சில நயமிக்கவை. ஆக்கியவர் யாரென்று தெரியாத தவளக்கிரி முத்துமாரியம்மை பதிகம், வழிவழி அண்ணாவிமார் போற்றிப் பரவிய துதிப்பாடல் தொகுப்பு, வைத்தியர் அம்பலவாணர் கதிரித்தம்பியவர்கள் செய்த தவளக்கிரி முத்து மாரியம்மன் இரட்டை மணிமாலை, பன்னாலையூரைச் சேர்ந்த அறிஞர் மு.பொன்னம்பல மவர்கள் இயற்றிய முத்துமாரியம்மன் திருவூஞ்சல், கவிஞர், செ.கதிரேசர்பிள்ளையவர்களின் திருப்பள்ளியெழுச்சி தவளக்கிரி முத்துமாரியம்மன் அந்தாதி என்பன குறிப் பிடத்தக்கவையாகும்.


அற்புதங்கள்


அன்னை முத்துமாரியின் அருளுக்கு எல்லையேது. அவள் அருட்பார்வை பெற்ற இவ்வூரில் விடந்தீண்டி மாய்ந்தவர்கள் எவரு மில்லை. தொற்று நோய்களும் மக்களைத் துன்புறுத்தியதில்லை. மரத்திலிருந்து விழுந்தோ, நீரில் மூழ்கியோ எவரும் இறந்ததில்லை. அம்மையைத் தஞ்சமடைந்தவர்களுக்கு அல்லல் எதுவுமில்லை. பக்தியுடன் அணுகு வார்க்கு அவள் ஒரு கற்பகம். கேட்டதெல்லாம் தருவாள். பிள்ளை வரம் வேண்டுவார்க்கு அவள் பேரருளால் கிடைத்துவிடும். தீராத பிணிகளெல்லாம் அவள் திருவடிகள்; தீர்த்து வைக்கும். அம்மை செய்த அற்புதங்கள் அனேகம். சிவராத்திரி தினத்தன்று விரதமனுஷ்டிக்க வந்தவர்களில் சிலர் தேவி வெண்பட்டுடுத்தி மின்னுமொளியுடன் சர்வாலங்கார பூஷிதையாக மூலஸ்தானத்தில் உலவியதை நேரில் கண்டிருக்கின்றனர். பூசகர் கணபதிப்பிள்ளையின் மகள் மறுநாள் புதிய வெண்பட்டு எடுத்து வந்து தேவிக்கு அணிவித்த பின்னரே உணவு உட்கொண்டாராம். தேவியின் வாயிலில் வந்து பொய்ச் சத்தியம் செய்தவர் அனுபவித்த தண்டனைகள் சொல்லுந் தரமன்று. மகோற்சவத்தில் ஒரு விழாவைச் செய்பவர் விழா பற்றி ஏனோ தானோ என்றிருக்க பின்னிரவு இவர்கள் தோட்டத்துக்கு இறைத்த நீர் முழுவதையும் மாடாக வந்து பருகிய மாயமும், விழாவொன்றுக்கு அலங்கரிக்க வாழை தருபவர் ஒருதரம் மறுத்த போது அப்போது வீசிய சிறு காற்றில் அவர் தோட்டத்தில் மட்டும் நின்ற வாழைகள் அத்தனையும் சாயச் செய்த அதிசயமும் அம்மை செய்த திருவிளையாடல்கள். சமீப காலத்தில் குளிர்த்திக்கு இளநீர் கேட்டுச் சென்ற போது தர மறுத்த ஒருவரின் தென்னையில் இருந்த இளநீர் மட்டுமன்றி குரும்பை முதலாக அத்தனையும் மறுநாள் விடிகாலை வீழ்ந்து விட்டன.

அன்னையிடம் ஆரா அன்பு பூண்ட தவில் மேதை தெட்சணாமூர்த்திக்கு வித்வத் சபையில் வெற்றி கிடைக்க கனவில் தோன்றி அவர் கைவிரலில் புதுப்புது வித்தைகளைப் புகுத்திய விந்தையும் உண்டு. அன்னை தனக்கு அளிக்கும் வாசிப்புக்களை மீள வாசிக்க முடிவதில்லை எனவும் இவர் கூறுவார். கோவில் “உல்”லுக்கு ஈயம் வார்க்கும் போது கண்களில் ஈயம் தெறித்து அதனால் கண்பார்வை இழந்த  கரக ஆட்ட வல்லுநர் ஐயாத்துர
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Kajendrathas/மணல்தொட்டி&oldid=3779100" இலிருந்து மீள்விக்கப்பட்டது