பயனர்:Keerthi nivashini/மணல்தொட்டி

தேசிய ஒருமைப்பாடு

         
 இந்தியர்கள் அனைவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் என்னும் ஒற்றுமை உணர்வுடன், சாதி, சமயம்,  இனம், இடம், மொழி முதலான வேறுபாடுகள் இன்றி உயிரும் உடலும் பொல் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு ஆகும். நாடும் மொழியும் நமதிரு கண்களாகும். ஒரு நாட்டின் சீரும் சிறப்பும் அந்நாட்டு மக்களிடமுள்ள ஒற்றுமையைப் பொறுத்தே அமையும். நாட்டுக்கு வலிவும் பொலிவும் தருவது ஒற்றுமையாகும். மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதையே ஒருமைப்பாடு என்கிறோம். நாட்டு ஒற்றுமையை வலியுறுத்திய தேசியக் கவிஞர் பாரதியார்,
 
“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு”
 
என்று எடுத்துக் காட்டுகிறார்.
 
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞரான பாவேந்தர்
பாரதிதாசன்,  'இங்கு, வாழ்கின்றார் முப்பத்து முக்கோடி மக்கள் எனின், சூழ்கின்ற பேதமும் அந்த தொகையிருக்கும்' என்றார். இந்திய நாட்டில் உள்ள பிரிவுகளை இது சுட்டிக் காட்டுகின்றது. இது மட்டுமன்று; கட்சிப் பிரிவு முதலியனவும் இந்நாட்டை அலைக்கழித்து வருகின்றன. எனினும் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டியது நம் கடமையாகும்.
 
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வாணிகம் புரிய வந்த சமயத்தில் இந்தியா பல்வேறு குழப்பங்கள் நிறைந்த நாடாக இருந்தது. இந்திய அரசர்கள் பதவி ஆசை, போட்டி, பொறாமை, பகை ஆகியவற்றால் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்; மக்களோ சாதி, சமய, இன வேறுபாடுகள் கொண்டு தமக்குள் பூசலிட்டுக் கொண்டிருந்தனர்.
 
“ஊர் இரண்டுபட்டால்
கூத்தாடிக்குக் கொண்டாட்டம்”
 
 என்பதற்கேற்ப இந்தியரின் இவ்வேற்றுமையை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள் இந்திய அரசர்களைப் பிரித்தாண்டு சிறிது சிறிதாக இந்தியா முழுவதையும் கைப்பற்றி ஆண்டனர். இந்தியா அன்னியர் பிடியில் அடிமைபட்டுத் திணறியது. ஆங்கிலேயரை எதிர்த்து விரட்டும் அறிவும், ஆற்றலும் இருந்தும் ஒற்றுமையின்மையால் இந்தியர் அடிமைப்பட்டு அல்லலில் அகப்பட்டுத் திண்டாடினர்.
 
 ‘அயலார் நம்மை ஆள்வதா?' என்ற எண்ணம் தோன்றியது. அப்போது வலுவான ஒருமைப்பாட்டு உணர்ச்சி மலர்ந்தது. இந்திய மக்கள் தம்மிடையே உள்ள வேற்றுமையை மறந்தனர். பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, காந்தியடிகள் போன்ற தலைவர்களால் ஒற்றுமை உணர்ச்சி எழுச்சி பெற்றது. இங்ஙனம் ஓர் ஒருமைப்பாடு ஏற்பட்டிருப்பினும், இன்று இன்னும் சில வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
                     “ஒன்றே குலம் ஒருவனே தேவன்”
 
என்பது பழமொழி. முற்காலத்தில் வேற்றுமைகள் பல இருப்பினும், இதில் ஒருமைப்பாட்டைக் காணப் பேரரசர்களும் சிற்றரசர்களும் முயன்று வந்துள்ளனர். அசோகர் போன்ற மன்னர் தம் முயற்சியால் இந் நாட்டினிடைப் பிணைப்பை உண்டாக்குவதில் ஓரளவுக்கு வெற்றி கண்டனர். பதினான்காம் நூற்றாண்டில் முகமதியர் ஆட்சி நாட்டில் நிலவியதில் இரு வகையான பண்பாடு உருப்பெற்றன. ஆங்கிலேயர் இந்நாட்டை ஆள முற்பட்ட பின்பு, ஆட்சியின் வன்மை காரணமாக இந்நாடு ஒருமை பெற்றது. பொருளாதாரத்திலும், கல்வியிலும், பிறவற்றிலும் ஒரு பிணைப்பு உண்டாயிற்று. 'நாம் இந்தியர்' என்று எண்ணுமாறு ஆங்கிலேயர் தம்மையறியாமலே நம்மைச் செய்து விட்டனர்!.
 
       வேடனது வலையில் அகப்பட்ட புறாக்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இறகைவிரித்து அசைத்து வலையோடு பறந்துசென்றன. தப்பிப் பிழைத்தன. நான்கு காளைகள் ஒன்று சேர்ந்து வாழ்ந்ததால் வலிமை வாய்ந்த சிங்கம் அவற்றை எதிர்த்த போது தோற்றோடியது. இவை ஒற்றுமையின் வலிமையை விளக்கும் பஞ்சதந்திரக் கதைகள், இதே போல் திலகர், காந்தியடிகள், வல்லபாய்படேல், வஉசி போன்றோர் இந்தியரை ஒன்றுபடுத்திப் போராடினர். அண்ணல் காந்தியடிகள் இந்து, முஸ்லீம்களை ஒற்றுமைப் படுத்தினார். தீண்டாமையை ஒழித்தார். இந்தியர் காந்தியடிகளின் தலைமையில் ஒன்று பட்டனர். போராடினர்; வன்மையான ஆங்கிலேயரை வென்று விடுதலை பெற்றனர். ஆகவே
 
“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”
 
என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
 
        இந்தியாவில் பல மொழிகள் பேசுகின்றனர்; பல மதத்தினர் வாழ்கின்றனர். அவர்கள் மொழியால், மதத்தால், உடையால், உணவால், வேறுபட்டிருந்தாலும், 'இந்தியர்' என்னும் உணர்வால் ஒன்றுபட்டிருத்தல் இன்றியமையாதது. இதையே பைந்தமிழ்ப் புலவர் பாரதி,
 
"செப்புமொழி பதினெட்டு உடையாள் எனின்
சிந்தனை ஒன்றுடையாள்."
 
என்று பாடி மகிழ்கிறார். 'உடலால் வேறு வேறு உருவம் படைத்திருந்தாலும் உள்ளத்தால் உயிரால் ஒருவரோ என்றும் கூறி மகிழ்கிறார். ஆகவே மாநிலங்கள் தம் குறுகிய பிரிவினைப் போக்கை நீக்கிவிட்டு வலிமை வாய்ந்த பாரதத்தை உருவாக்க உறுதுணையாக நிற்க வேண்டும். 
 
             ஒருமைப்பாட்டுணர்வு மக்கள் மனத்தில் பதிந்து நிற்க வேண்டும் அதிலும் மாணவராய் உள்ளவர் உள்ளத்தில், இவ்வுணர்வு ஆழப் பதிந்து நிற்க வேண்டுவது மிக மிக இன்றியமையாதது. அவர்கள் ஒருமைப் பாட்டுக்காகப் பாடுபட வேண்டும்.
 
            மாணவர்கள் மனத்தில் இத்தகைய உணர்வை உண்டாக்கக் கல்வித் திட்டத்தில் மாற்றம் வேண்டும். அதாவது, ஒரே மாதிரியான கல்வித் திட்டம் தேவை. மக்களுக்குக் கிடைக்கத்தக்க வாய்ப்புகள், வசதிகள் ஆகியவை அனைத்து மாநிலத்தவர்க்கும் ஒன்றாய் அமைதல் வேண்டும்; இதில் வேறுபாடு கூடாது. மாணவர் ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்குச் சென்று கல்வி பயிலச் செய்யலாம். மாணவர் இயக்கங்கள் நாடு முழுவதற்கும் ஒன்றாய் அமையலாம். ஒரு மாநில மாணவர் மற்ற மாநில மாணவருடன் கலந்து பழகினால் வேற்றுமை மறையும்.
             மேலும் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்: சாதியின் பெயராலும், இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் சங்கங்கள், கழகங்கள் தோன்றுகின்றன. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும். அப்போதுதான் ன் ஒற்றுமையுணர்வு ஓங்கும்.
 
            சீனாவும், பாகிஸ்தானும் படையெடுத்த போது அரசியல் கட்சிகள் அனைத்தும் தத்தம் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டுப் பகைவரை வீழ்த்த முன்வந்தன. போர்க்காலத்தில் தோன்றிய அந்த ஒற்றுமை உணர்ச்சி அமைதிக் காலத்திலும் நின்று மொழிப்பற்று. இனப்பற்று. மதப்பற்று நிலவவேண்டும். ஆகியவை வெறியாக மாறி விடக் கூடாது; ஒவ்வொரு மாநிலமும் தத்தம் வளர்ச்சியோடு அண்டை மாநில வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் : இந்தியா இந்தியரின் உடைமை : அதைக் காப்பது நமது கடமை' என உணர்ந்து ஒன்று கூடி நன்று வாழ வேண்டும்.
 
 
 
 
 
  
 
 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Keerthi_nivashini/மணல்தொட்டி&oldid=3608037" இலிருந்து மீள்விக்கப்பட்டது