பயனர்:Kema Satkunanathan/நாவற்குழியூர்

{{multiple issues| {{cleanup|reason=wikify|date=சனவரி 2017}} {{essay-like|date=சனவரி 2017}} {{unreferenced|date=சனவரி 2017}} }} தொழுதுண்டு பின் செல்லாது உழுதுவாழும் உயர்தொழில் செய்யும் நெல் விளையும் பூமியையும், அதனிடையே நீர் நிரம்பி வழியும் குளங்களும், தென்னை, பனை போன்ற வானுயர்ந்த மரங்களும் கனிதரு மரமாம் மா, பலா, வாழை, தோடை என்றிற்ற மரங்களும், ஊரின் கல்வியறிவை ஊட்டிவளர்க்கும் பாடசாலைகளையும்,  மேன்மைகொள் சைவ நீதியை பரப்ப வல்ல சைவக்கோவில்களையும், பரிசுத்த மாதா கோவில்களையும் தன்னகத்தே கொண்டதே நாவற்குழிப்பதி என்றால் அதுமிகையாகாது. இவ்விதமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாழ்ந்து வருவது உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்து வரும் மக்களிலும் பார்க்க கற்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவது தமிழ்பேசும் இனத்தின் தனிச்சிறப்பு என்றே கூறவேண்டும்.

கிராமத்தின் நன்மை தீமையான கருமங்கள் நேரிடின் கிராமமே ஒன்றுகூடி விருந்துண்டு சுகதுக்கங்களிலே யாவரும் பங்கேற்று பிறருக்கு வரும் சுகதுக்கங்களை தங்களுக்கு வந்தவையாக கருதி பங்கேற்று செல்வது தமிழ் மக்களுக்குள்ள தனிப் பெரும் சிறப்பு எனக் கூறலாம்.

கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கிவிட்டால் போதும் ஒவ்வொரு வீடும் திருவிழாக்கோலம் பூண்டு காட்சி அளிக்கும். தாய் தந்தையர் தங்கள் குழந்தைகளுடன் கோவில் சென்று ஆண்டவனை தொழுகின்ற காட்சியை பார்ப்பதென்றால் கல்நெஞ்சமும் கனிந்து உருகும் என்றே கூற வேண்டும். பிறநாடுகளில் வாழும் தங்கள் பிள்ளைகளையும், இனபந்துகளையும் இராணுவத்தினரால் பிடித்து செல்லப்பட்டு பிழையான பதமாகிய "காணாமல்போனோர் " என்ற திடுக்கிடும் பெயர் சூட்டப்படத்தை நினைத்து நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமாக உருக்குலைந்த நிலையில் தள்ளாடிவந்து ஆண்டவனிடத்தில் அழுது புலம்பி முறையிடும் தாய் தந்தையர் உறவினர்கள் எத்தனை எத்தனை பேர். தங்கள் மனச்சாந்திக்காக அர்ச்சனை செய்தல் ,  திருவிழாக்கள் செய்தல் மற்றும் தானதருமங்களை செய்தல் என்றிற்ற வழிகளில் அவர்கள் ஈடுபடுவதை காணமுடிகிறது.  இதை விட இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு பின் கொடூரமான வழிகளில் கொலை செய்யப்பட்டும், இனப்பிரச்சனைகாரணமாக வீடுவாசல்களை இழந்தோரதும் அவலக் குரல்களையும் கோவில்களில் கேட்க முடிகிறது. மன நிம்மதி தமிழன் வாழ்வில் எங்கே எப்போது காணமுடியும்? என்ற நிலையில் இன்று அல்லல் பட்டு சொந்த நாட்டில் இருக்க தகுதி அற்று அகதிகளாக்கப்பட்டு மனம் தடுமாறி தம்சொத்துக்களை விற்று வெளிநாடு சென்று அரசியல் தஞ்சம் கோர இலங்கையின் தலைநகராம் கொழும்பு சென்றாலோ பயங்கரவாதிகள் என்று கூறி சிறையில் அடைத்து சித்திரவதை பல புரிந்து தரகர்களை கொண்டு அவர்களை விடுவிக்க பேரம்பேசி உழைக்கும் பாதுகாப்பு படையினரின் அட்டகாசங்களை ஒருகணம் சிந்திக்கின்ற வேளை  மறு பிறப்பு என ஒன்றிருப்பின் இலங்கையில் பிறவாதிருக்கவும், பிறந்துவிட்டால் ஒரு தமிழனாக பிறவாதிருக்கவரம் தரவேண்டும் என்றே இறைவனை வேண்டத் தோன்றும். இவ்விதம் நினைத்து உருகும் நெஞ்சங்கள் ஏராளம். இலங்கையில் உல்லாசப்பிரயாணத்தை மேற்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் "இலங்கை ஓர் அழகான நாடு " என்று கூறும் போது எமது உணர்வலைகள் ஒரு கணம் சந்தோஷத்தையும் பெருமையையும் அடைகின்றது. நாட்டின் உண்மை நிலைமை தெரிந்த எமக்கு மறுகணம் மாறிவிடுகின்றது. புலம் பெயர்ந்து உலகின் பலபகுதிகளிலும் வாழுகின்ற எமது உறவுகளே உங்களை அன்புடன் நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன். எமது பிறந்த பகுதியின் சிறப்புக்களை ஓரளவு காண்பதற்கு.

ஈழத்திருநாட்டின் எழில்சேர் வடக்கின் யாழ்ப்பாண நகரில் இருந்து கண்டிவீதி வழியாக சென்றால் நாவற்குழியூர் அதிக தூரமில்லை, ஆகக்கூடின் ஆறு கிலோமீற்றர் தூரம் ஆகும். நடந்தே போனால் இடிந்தும் சரிந்தும் விழுந்து கிடைக்கும் வீடுகளையும் விருட்ச்சங்களையும் கண்டு கலங்கலாம். அன்று யானையை வடம் மாட்டி இழுத்து வந்து வீட்டு முற்றத்தில் கட்டிவைத்து விலை பேசிய ஈழத்தமிழன்; வேலெறிந்து புலியின் விலாவுடைத்து அதன் வலிய பல்லைப் பிடிங்கி மார்பணிந்து,  தோலை உரித்து விரித்து படுத்த விரத்தமிழன்; ஆழ் கடலில் குதித்து அதனடியில் முத்தெடுத்து மாலையாக்கி அன்பு மனையாள் மார்பணிந்து மனமகிழ்ந்த மறத்தமிழன்; கப்பல் கட்டி கடல் கடந்து அற்புதங்கள் செய்த அருந்தமிழன்; இன்று பிறந்தபதி துறந்து பாரில் பல பாகங்களிலும் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

தேன் பாய்ந்து நாடு விட்டு புள்ளிமான் பாய்ந்த காடு மறைந்து நீர் மீன்பாயும் கடல் கடந்து வாழுகின்றான்.  சிலர் மாளுகின்றான். இன்னல்கள் வலையாய் இழுக்க, தொல்லைகள் தொடர்ந்து துரத்த, பல்லை கடித்திருந்து பணிபுரிகின்றான் அங்கே; பணம் வருகிறது இங்கே. பிறந்த மண்ணை மறக்கவில்லை, பெற்றாரை மறக்கவில்லை, சுற்றத்தை மறக்கவில்லை, தன் சொந்தச் சுகம் நாடவில்லை.

கொடியபஞ்சம் குடைபிடித்து வந்து ஆட்சி செய்த காலம் அடுப்படியில் இருக்க வேண்டிய அத்தனையும் ஆனைவிலை, குதிரைவிலை, போனகாலம், எரிக்கும் எண்ணெய், அம்மாடி எட்டியும் பார்க்க முடியாத ஏற்றத்தில் நின்றகாலம் பிஞ்சு குழந்தை கஞ்சிக்கழுதது;  பள்ளிப்பிள்ளை விளக்குக்கழுதது; கட்டியதுணி சவர்க்காரம் காண அழுதது. இந்த இழி நிலையின் இங்கிருந்தானின் இன்னல்கள் போக்கியவன் இவனே- வெளிநாடு சென்றவனே. அவன் பணம் இங்கே வந்து சேர்ந்திராவிட்டால் பாதிப் பேரின் உடல்கள் பட்டினி சாவில் பதுங்கு குழிகளில் மூடப்பட்டிருக்கும்.

இப்பொழுது இங்கெல்லாம் ஓரளவுக்கு பொருட்கள் வாங்கக்கூடிய நிலைமை வந்திருப்பினும் அந்நாட்களை வதங்கித் தவித்திருந்த எம்மவர்க்கு வாழ்வளித்தவர்கள் வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள்; அவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

யாழ்நகரையும் எமது கிராமமாகிய நாவற்குழியூரையும் பிரிக்கும் எல்லை வரவேற்பு வளைவு மூலம் காட்டப்பட்டுள்ளது. "யாழ்ப்பாணம் வரவேற்கிறது"  என்று ஆரம்ப காலத்தில்  வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது "வருக யாழ்நகர் வரவு நல்வரவாகுக" என்று மாற்றம் பெற்று காணப்படுகின்றது.

உப்பளங்களும் வயல்வெளியும் குளுகுளுவென வீசும் காற்றும் கீழே துள்ளிப்பாயும் மீன்களும் காணப்படும். இது நன்நீர் ஆறல்ல; பறவைக்கடல்; உப்பளங்கழி எனவும் அழைப்பர். கோடை காலத்தில் நீரின் அகலம் இப்படித்தான் குறைந்திருக்கும்.  ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் 750 மீற்றர் வரை அகன்று நீர் நிறைந்து பாயும். பலத்துடன் சேர்ந்தாற்போல அரைவட்ட வடிவில் கொங்கிறீற்கட்டும், பலகை அடைப்புக்களும் இரும்புக்கதவுகளுமாக அமைந்திருப்பது நீர்ப்பாசன இலாக்காவின் மிக நன்மை பயக்கும் நீண்ட காலத்திட்டம் இது. உவர்தன்மை செறிந்துள்ள இப்பகுதியினை நன்னிலமாக்கும் திட்டம். அவர்களுக்கு எமது நன்றிகளை கூறிக்கொண்டு வரவேற்பு வளைவிலிருந்து வடகிழக்காக வளைந்து வரும் கண்டிவீதியின் சிறிய வளைவோடு கிழக்குநோக்கி திரும்பினால் ஓர் முக்கியமான இடம் மோட்டார் வாகனங்கள் எமது நாட்டிடை எட்டிபார்ப்பதற்கு முன்னர் குதிரை பயணம் செய்த காலம் அது.

பாலம் கட்டப்படாதிருந்த அந்த காலத்தில் உப்பளங்கழியை கடப்பதற்கு தென்னை, பனைமரக்குற்றிகளால் பாலம் போன்ற ஒன்றை பயணிகளிடம் இருந்து தலைக்கு இரண்டு சதம் வாரியாக அறவிடப்பட்டதாம். வரி வசூலிப்பதற்காகவும், பயணிகள் தரிப்பதற்காகவும், குதிரை கட்டுவதற்காகவும் கோட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதனை  "ஆயம் " என்று கூறுவர் . ஆயம் இருந்த இடம் இன்றும்  "ஆயத்தடி" என கூறப்படுகின்றது .வடக்கு பக்கம் ஆலத்திவெளி என அழைக்கப்படுகிறது.

ஆயம் இருந்த இடத்தையும் ஆலாத்தி வெளியையும் தாண்டி கிழக்குநோக்கி திரும்பினால் வீதியின் இரு மருங்கிலும் விண்தொட்டு விளையாடும் தென்னைகளும் , தோப்புக்களாகப் பனைகளும் தோன்றுகின்றன.  தென்னை, பனை உபயோகம் எல்லாம் உலகிற்கு தெரிந்தவையே .ஆயி னும் பனை பற்றி கூறினால் நுங்கு,  பழம் ,பதநீர் , கள் , கிழங்கு,  இவை அனைத்தும் மூளை விருத்திக்கு சிறந்தவை . நீர் இறைக்கும்  "சிக்மா" இயந்திர உதிரிப்பாக தொழிற்சாலை, இறால் கணவாய் பதனிட்டு  வெளிநாடுகளுக்கு அனுப்பிய தொழிற்சாலை, சவர்கார தொழிற்சாலை,  கண்ணாடிதொழிற்சாலை, மின்விசை கம்பித்தொழிற்சாலை (Wire Factory), தேங்காய் எண்ணெய்தொழிற்சாலை , பழக்கூழ்தொழிற்சாலை (Jam Factory), அரச உணவுக்களஞ்சியம் ,அரிசி ஆலைகள் இரண்டு இப்படி எத்தனையோ உள்நாட்டு போரினால் உருக்குலைந்து உபயோகம் அற்றுபோனதை காணமுடியும். சிறிய ஊர் ஆயினும் பெருந்தொகையானோருக்கு வேலைவாய்ப்புக்களை கொடுத்த இடம் முடியிழந்த மன்னன் போல் , பதியிழந்த பாவையை போல் வடிவிழந்து போயிற்று.

அதனை தாண்டி நாவற்குழி சந்தி. கண்டி வீதியின் சிறு வளைவொன்று வடக்குபக்கம் திரும்புகிறது. இவ்விடம் நாவற்குழி சந்தி என்று இன்றும் கூறப்படுகிறது . சாவங்கோட்டை என்று சொன்னால் பலருக்கு தெரியாது . எங்கள் கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் இருக்கின்ற முதியவர்களுக்கு தெரியும் . அவர்கள் இவ்விடத்தை இன்றும் சாவங்கோட்டை என்றே கூறுகின்றனர்.

யாழ்ப்பாண சரித்திரத்தில் சாவங்கோட்டையும் முக்கியஇடம் பெறுகின்றது. 13  ஆம்  நூற்றாண்டில் சந்திரபானு என்னும் சாவுகமன்னன் யாழ்ப்பாண குடாநாடு, வன்னிப்பிரதேசம், திருகோணமலை ஆகிய இடங்களை ஆட்சிசெய்தான் என வரலாறு கூறுகின்றது .(யாழ்ப்பாண இராட்ச்சியம்  பக்கம்  31  பதிப்பாசிரியர் – கலாநிதி .சி .க .சிற்றம்பலம் )  சாவக்காடு, சாவங்கோட்டை , சாவகச்சேரி என்பன இதற்கு சான்று பகர்க்கின்றன. பாண்டியனின் படையெடுப்பில் சந்திரபானு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டன என சரித்திரம் கூறும் வேளை, சாவுகரின் ஆட்சி காலத்திலும் அதன் பின்னரும் சாவங்கோட்டை என பெயர் வாங்கப்பட்ட இந்த இடத்தில் சவுகர்கல்லாலும் களி மண்ணாலும் சிறிய கோட்டை ஒன்று கட்டியிருந்தார் என்றும் அக்கோட்டை பாண்டியனால் அழிக்கப்பட்டதென்றும் இங்குள்ள முதியோர் இன்றும் கூறுகின்றனர். இதற்கு தகுந்த ஆதாரம் அகப்படவில்லை.  ஆயினும் கோட்டையினை இடித்தெறிந்த பாண்டியர் நிர்சிங்கமல்லன் என்பவனை காவலனாக நியமித்து இருக்க இடமும் ஏனைய வசதிகளும் கொடுத்தார்கள் எனவும் பிற்காலத்தில் அவனுக்கு நினைவாலயம் ஒன்று சாவகன்கோட்டைக்கு அருகாமையில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

"முச்சந்தி" என்றும் சாவங்கோட்டை என்றும் பெயர் பெற்றுள்ள இடம் உண்மையிலேயே நாற்சந்தியே.  நான்கு வீதிகள் சந்திக்கின்றன. யாழ்ப்பாணம் செல்லும் வீதி , கண்டிவீதி, கேரதீவுவீதி, புகையிரதவீதி. புகையிரத நிலையம் வரை செல்லும் வீதி மிகச்சிறியது. சந்தியில் இருந்து தெற்குபக்கமாக சென்றால் சம்பத்வங்கியினால் அமைக்கப்பட்ட மிகவும் அழகான புதியகட்டடம். அதுவே நாவற்குழி  "ரெயில் வேஸ்ரேசன் " போர் தொடங்குவதற்கு முன்னர் கைதடி என்னும் பெரிய கிராமத்தவர்களுக்கும்,  நாவற்குழி, தச்சன்தோப்பு போன்ற சிறிய கிராமத்தவர்களுக்கும் பிரயாணத்துக்கு அத்தியாவசியமாக விளங்கிய புகையிரதநிலையம் இது. இக்கிராமங்களில் உற்பத்தியான பிரதான பணவரவு தந்த புகையிலை சிற்பம் சிற்பமாக இந்த புகையிரத நிலையத்தில் ரயில் பெட்டிகளில் மலைநாட்டுக்கு அனுப்பப்பட்டன. இக்கட்டடத்துக்கு தென்பகுதியில் பெருந்தொகையான வீடுகள் காணமுடியும் . அவை UNP ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட  300  வீடுகள் ஆகும்.

இவ்வீட்டுத்திட்டத்தின் மேற்கு, தெற்கு எல்லைகளாக உப்பகங்கழியும் கிழக்கெல்லையாக செம்பாட்டு தோட்டவெளியும்  (புகையிலை,  வெங்காயம் , மிளகாய் , காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்ட இடம்) வடக்கு புகையிரத பாதையும் அமைந்துள்ளது. மேற்கெல்லையாக உப்பளங்கழிக்கு மேலாக புகையிரத பகுதியினரால் இரும்புபாலம் ஒன்று புகையிரதபாதை அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் இருந்து காணப்படுகின்றது.  இந்த இடத்தை "ஆனைவிழுந்தான் பாழி " என இங்குள்ளோர் கூறுவர்.

யாழ்ப்பாண நல்லூரை இராசதானியாக கொண்ட தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி செய்த காலத்தில்  அவனுடைய ஆட்கள் ஆனையிறவுக்கு அப்பால் இருந்த அடர்ந்த காடுகளில் ஆனை பிடித்து வருவார்களாம். வரும் வழியில் இவ்வழியில் வழுக்கிவிழுந்த ஆனை ஒன்று எழுந்திருக்கமுடியாது மடிந்தமையால் 'ஆனைவிழுந்தான் ஆழி' யாகி  (ஆழி = கடல் ) காலப்போக்கில் ஆனைவிழுந்தான் பாழியே நிலைத்துள்ளது.

நிற்சிங்கமல்லன் ஆலயம்

தொகு

சந்தியில் இருந்து கிழக்கு திசை நோக்கி போவது கேரதீவுவீதி. முன்னாளில் இது பிரதான வீதியாகவும் பூநகரிக்கு தரை வழிபாதையாகவும் இருந்ததாக கூறுவர். கேரதீவு வீதிக்கு வடபுறம் இருந்து பார்க்கும் போது கற்குவியல் ஒன்று இருந்தது. இப்போது அது தெரியவில்லை.  பற்றைகள் வளர்ந்து மூடிவிட்டன. அக்கற்குவியல் இருக்கும் இடத்திலே நிற்சிங்கமல்லனுக்கு நினைவாலயம் எழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆலயமாக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன . வெள்ளி, செவ்வாய் தோறும் விளக்கேற்றுதல் பூசை முதலியன நடந்தன . மாட்டுவண்டியில் புதுப்பானை பொங்கல்சாமானுடன் வந்து எம்மூரவர்கள் பொங்கி படையல் செய்தது நாற்பதுகளில் முதியோர் கண்டதாக கூறப்படுகிறது.

நிற்சிங்கமல்லன் ஆலயத்துக்கு அருகில் காணப்படுவது  "ஆயிலிப்பிட்டி " கேரதீவு வீதியில் மிக உயரமான இடம் இது தான். ஏன் நாவற்குழியிலும் சரி இதுவே பெரும்பிட்டி. இரண்டு பெரிய ஆலமரங்கள் வீதியோரம் நின்று நிழல் கொடுத்தவை தறிக்கப்பட்டுவிட்டன.  

அதனை அடுத்து மேற்கு நோக்கி சென்றால் மக்கள் செறிந்து வாழும் இடம். வீதியின் இரு மருங்கிலும் வீடுகளையும் வீட்டு முகப்பினில் பூத்துக்குலுங்கும் மரம் செடிகளையும்  காணமுடியும்.

சித்தி விநாயகர் ஆலயம்

தொகு

கேரதீவு வீதிக்கு தெற்கு பக்கம் சென்றால் சித்தி விநாயகர் ஆலயம் நாற்புறமும் வீடுகளும் தென்னந்தோப்புகளும் போற்றும் சுவையுடைய பொன்னிறம் சேர்கனிமாவும் , நாவல் , வேப்பமரங்களும், செந்நெல் விளைவயலும், செந்தாமரை குளமும், கந்தனுடைய அண்ணனாம் கணபதியின் ஆலயமும், வாசிகசாலையும், வளரும் சிறார்களுக்கு கல்வி வழங்கிட பாலர் பள்ளியும் கொண்ட இந்த குறிச்சியினை  "பந்தெறிந்தான் வெளி " என்றும் தீப்பாய்ந்த பள்ளமென்றும் கூறுவர் .முன்னையோர் கூற்றுப்படி "பந்தெறிந்தான் வெளி", "தீப்பாய்ந்த பள்ளம்"என்பன காரணப் பெயர்களே.

பந்தெறிந்தான் வெளியில் பத்தாய வளவில் சப்த மாத்திரிகர்கள்  (ஏழுபெண்கள்) வழிவந்த நாச்சியாருக்கு இன்னும் செழிப்புடன் நிற்கும் திருக்கொன்றை மரத்தின் கீழ் சிறிய ஆலயம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தனரென்றும் , பின்னரே விநாயகப் பெருமான் பிரதிட்டை செய்யப்பட்டு, அவர் மூலமூர்த்தியாகவும், நாச்சிமார் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் விளங்க இவ்வாலயம் சித்தி விநாயகர் தேவஸ்தானம் என பெயர் வழங்கப்படுவதாகவும் வரலாறு.

சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆண்டு தோறும் மகோட்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஒன்பதாம் நாள் தேரும் பத்தாம் நாள் தீர்த்தோற்சவமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நாச்சிமார் திருக்கொன்றை மரத்தின் கீழ் கோயில் கொண்ட ஆரம்ப நாட்களில் மாத்திரிகர்கள் இவ்வெளியில் பந்தெறிந்து விளையாடினார்கள் .எனவும் அதனாலேயே இவ்வெளிக்குப்  "பந்தெறிந்தான் வெளி "எனப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகின்றது.

சாவுகர் இவ்விடங்களை கைப்பற்றிய காலத்தில் அழகும் இளமையும் கொண்டிருந்த பெண்கள்மேல் ஆசை கொண்டதாகவும் பயங்கொண்ட பாவையர் தீ மூட்டி அதில் பாய்ந்து தம்முடலை மாய்த்ததாகவும் இச்சம்பவம் காரணமாகவே இவ்விடம்  "தீப்பாய்ந்த பள்ளம் "  ஆகியதாகவும் ஐதீகம் உண்டு.

சித்திர வேலாயுதர்  கோவில்

நாவற்குழியூரின் தெற்கு எல்லையில் காணப்படும் மணல் குன்றுகளிற்கு அருகே சில நாவல்மரங்களின் அடிப்பாகம் மணலில் புதையுண்டு கிளைகள் மணளோடு கொஞ்சி விளையாடும் ஆவணி, புரட்டாதி மாதங்களில் நாவல் கொத்து கொத்தாக பழுத்திருக்கும். அம்மதங்களில் இவ்விடம் வந்தால் சுட்டபழம் புசிக்கும் அவசியம் இருக்காது. நின்றபடியே பறித்து சுவைக்கலாம். பருத்து கறுத்துக்கனிந்த பழங்களின் சுவையே அலாதி.

மணல் குன்றுகளிடையே பள்ளத்தில் நிற்கும் பனைகள் தாமீன்ற நுங்கு குலைகளின் பாரத்தை தாங்கி கொண்டே சாமரை வீசி எம்மை வரவேற்பது போல் காட்சி அளிக்கும். பருவமடைந்த வடலியொன்று தான் இன்னும் கன்னியல்ல என்பதை காட்டுவதற்கு நுங்குக்குலை தள்ளி நிற்கிறது. அவ்விடத்தை இருந்து பார்த்தால் வயல் வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் தென்படும். யாட்டாவளை என அழைக்கப்படும் இவ்வயல்வெளியில் சித்திர வேலாயுதர் கோயில் காணப்படுகிறது . ஏறக்குறைய  250 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோவிலாக இது காணப்படுகிறது.

கிளைகள் ஒன்றோடொன்று பின்னி, சூரிய ஒளி விழா வண்ணம் குடை பிடித்து நின்ற பெருவிருட்சங்கள் நிறைந்து இவ்விடத்தில் கொட்டில் அமைத்து வேல் வைத்து பூசை வழிபாடு செய்து வந்தனர்.

1818  இல் சுப்பிரமணியமுதலி என்பவர் கற்கொண்டு கட்டடம் அமைத்து அந்தணர் நித்திய நைமித்திய பூசை செய்ய ஒழுங்குகள் செய்தார்.

கந்தசஷ்டி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆறாவது நாள் சூரசங்காரமும் ஏழாவது நாள் திருக்கல்யாணம் நடந்தேறி அலங்கரிக்கப்பட்ட இணைந்த வள்ளங்களில் சித்திர வேலாயுதர் தெய்வானை வள்ளி சமேதராய் எழுந்தருளி ஆலய திருக்குளத்தில் உலாவரும் பொழுது தாமரை இலைகளில் எரியும் கற்பூரம், தீ வட்டிகள் நிறைந்துள்ள தடாகத்து நீரில் மேலும் கீழுமாக தோன்றும் காட்சியின் அழகே அழகு.

ஆறுமுகநாவலர் காலத்தில் ஆரம்பமான கந்தபுராணகலாச்சாரம் நாவற்குழியில் வாழ்ந்த சைவபெரியோரால் பேணி வளர்க்கப்பட்டது எனக்கூறின் மிகையாகாது.     

கந்தசஷ்டி நாட்களில் சித்திர வேலாயுதர் ஆலயத்தில் கந்த புராண படனம் நடைபெறும் . காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னத்தம்பு, விசுவலிங்கம் சுப்பிரமணியம்,  சொக்கநாதர்கார்த்திகேயன், தாமோதரம் வேலுப்பிள்ளை ஆகியோர் இசையோடு பாடிபொருள் கூறியதை என்றும் மறக்க முடியாது என்று இங்கே கூறுகின்றனர்.

கவிஞர் அம்பி மற்றும் எழுத்தாளர் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை

தொகு

கவிஞர் அம்பி 

தொகு

சித்திர வேலாயுதர் கோயில் வடக்கு வீதியில் இருந்து பார்க்கும் போது வடதிசையில் குலைக்கட்டிகாய்த்து நிற்கும் தென்னைகள் தோன்றும் அந்த இடம்  ஈழத்து புகழ் பூத்த கவிஞர் ஒருவரது பிறந்தகமாய் அமைந்ததென்று கூறினால் எமது  கிராமத்துக்கே பெருமை . அவர்தாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாட்டில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "அம்பி".

கவிஞர் அம்பியை யாவரும் அறிந்ததே அவர் யாழ்ப்பாணம் சுண்டிக்குளிப் பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றவர். ஆங்கிலத்தில் கல்வி பயின்ற அவர் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு உடையவராக விளங்கியவர் . Inter  Science சித்தியெய்தி தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிந்த இவர் குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதிக்குவித்து "குழந்தை கவிஞர்"  ஆனார்.

உலகத்தமிழ் ஆராய்ச்சி மகா நாடு ஒவ்வொன்றிலும் அம்பி எழுதி வாசித்தளித்த கட்டுரைகள் தமிழ் உள்ளங்களில் நீங்காது நிலைத்திருப்பதை உலகறிந்ததே. பூம்புகாரில்  நடைபெற்ற உலகத்தமிழ்  ஆராய்ச்சி மகாநாட்டில் அம்பி தான் கவிதை எழுதி வாசித்த போது கரகோசம் வானை பிளந்தது. புகழ் கடல் கடந்தது. தங்கப்பதக்கம் மார்பில் அணிவிக்கப்பட்டது.

கல்வி வெளியீட்டு திணைக்களத்தில் வெளியீட்டு குழுவில் ஒருவராக இருந்த அம்பியின் கவிதைகள் சில ஆரம்ப வகுப்பு தமிழ் பாட நூல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கவியரங்குகளில் கவிஞர் அம்பியின் குரல் கணீர் என ஒலித்ததை கற்றோரும் கவியுள்ளம் படைத்தோரும் மறந்திருக்க மாட்டார்கள்.  அம்பியின் 'அம்பிப்பாடல்கள்' 'கொஞ்சும் தமிழ்' ஆகிய கவிதை தொகுதிகளும் , 'வேதாளம் சொன்னகதை' கவிதை நாடகமும் வெளிவந்ததை தொடர்ந்து மேலைத்தேய மருத்துவத்தை தமிழில் கற்பிக்க அடிகோலியவரான அமெரிக்க பாதிரியார்  ''கிறீன்" என்பவரை பற்றி 'கிறீனின் அடிச்சுவடு ', 'மருத்துவ தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன்' ,'Lingering Memories ' என்பனவும் வெளியாகின.கடல் கடந்து இந்நாளில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும்  'அம்பி' என்னும் பெயரில் மறைந்துள்ள இராமலிங்கம் அம்பிகை பாகரின் எழுதுகோல் எழுதிக்கொண்டே இருக்கிறது.

சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை

தொகு

அம்பியின் வீட்டிற்கு மேற்கே தென்னை,  மா,  கொய்யா,  மாதுளை, வாழை, நிறைந்த சோலையின் நடுவே அமைந்துள்ள வீடு முதுபெரும் எழுத்தாளர் சு.வே யினதாகும். சித்திர வேலாயுதர் ஆலயத்தில் புராண படனம் செய்து வந்த நான் குசைவபெரியார்களின் பெயர் மேலே சுட்டிக்காட்டிடப்படுள்ளது.அவர்களில் ஒருவரான விசுவலிங்கம் சுப்பிரமணியத்துக்கும் தையல் நாயகி அம்மையாருக்கும் சிரேஷ்ட புத்திரனாக பிறந்தவரே சு. வே.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியர் மட்டுமல்ல பண்டிதரும் கூட  'கிடைக்காத பலன்' என்னும் சிறுகதையினை கன்னிப்படையாக கொண்டு எழுத்துலகில் பிரவேசம் செய்தவர் தொடர்ந்து எழுதினார் . சிறுகதைகளும்,  உருவாக்ககதைகளும், கட்டுரைகளும், 'ஈழகேசரி', 'வீரகேசரி', 'தினகரன்' பத்திரிகைகளில் வெளிவந்த அதேவேளை தமிழக பத்திரிகைகளான 'கிராமஊழியன்', கலாயோகினி' போன்ற பத்திரிகைகளிலும் இவருடைய படைப்புக்கள் வெளியாகின.

'ஈழத்தமிழ் உருவாக்கக் கதை எழுதுவதில் முன்னோடி'  என போன மன்னர்களாலும் இராசிகமணி கனகசெந்தில்நாதன் அவர்களாலும் பாராட்டுக்கள் கிடைக்கும் அளவுக்கு சு.வே  .யின் உருவாக்ககதைகள் அடங்கிய தொகுதியொன்று நூலுருவம் பெற்று விரைவில் வெளிவர இருப்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதை இட்டு பெருமை அடைகிறேன். அறுபது தொடக்கம் எழுபதுகளிலும்  "கிராமராஜ்யம்",  "பொன்னொச்சிக்குளம்", "நவயுகம்" போன்ற தொடர் நாடகங்களும் பல உரைச்சித்திரங்களும் இலங்கை வானொலியில் ஒளிபரப்பப்பட்டத்தோடு , " இலக்கியரசனை", "திருக்குறட் சரித்திரங்கள்", என்னும் தலைப்புக்களில் தொடர் பேச்சுக்களும் நிகழ்த்தியிருக்கிறார்.

இவர் எழுதி பரிசு பெற்ற நாடகங்கள் சிலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.

1965  இலும்  1966  இலும் இலங்கை கலைக்கழகம் நாடத்திய நாடக்கப் போட்டிகளில்  'வஞ்சி' யும் ,'எழிலரசி' யும் அதே  1966 இல் இலங்கை வானொலி நடாத்திய போட்டியில் 'மண்வாசனை'யும் முதலாம் இடத்தை பெற்றன. 1968 இல் "ஒருமை "நெறித்தெய்வம்" மூன்றாம் இடத்தை பெற்றது. நூலுரு பெற்று வெளிவந்த "மண்வாசனை"சிறுகதைத் தொகுதிக்கு சாகித்தியமண்டலம்  1972 இல் பரிசு வழங்கியது. 1967 ஆம்  ஆண்டு  கல்வி வெளியீட்டு திணைக்களம் பாடநூல்  ஆக்கக்  குழுக்களை நியமித்த போது சு.வே.யும்  அக்குழுவில் இணைக்கப்பட்டு  1981  வரை தனது பங்களிப்பை செய்து ஓய்வு பெற்றார் ஆயினும் எழுது கோலை ஒயவிடாது உப பாட நூல்கள் எழுதி வெளியீட்டாளர்களுக்கு வழங்கி கொண்டே இருக்கின்றார். "வாசகர் மனதில் பதியும் வண்ணம் சுவையாகவும் இரத்தினச் சுருக்கமாகவும் எழுத்தாளர் தமது படைப்புக்களை அமைக்க வேண்டும்"

என அடிக்கடி கூறும் இவர் தனது பெயரும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்னும் எண்ணத்தில் போலும் சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை என்பதனை 'சு.வே' ஆக்கிக் கொண்டார்.

'அம்பி' 'சு.வே' அவர்களின் ஆக்கங்களை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கின்றோம். இம்மண்ணில் பிறந்து வளர்ந்து இலக்கிய சேவை செய்தவர்கள் இன்னும் இவர்கள் இருக்கிறார்கள் எனும்போது நாம் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். 

நெணியன் வயல்வெளி

தொகு

சித்திரவேலாயுதர் கோவிலை  தொடர்ந்து வடக்கு நோக்கி சென்றால் நெணியன் வயல் வெளியை காண முடியும். நடுவே வயல்வெளியும் நாலு பக்கங்களிலும் வீடுகளும், பயன் தருகின்ற மரங்களும் அழகாக தோன்றும். எனது கிராமத்தில் கூடுதலான நெற்பரப்பை கொண்டது மட்டுமல்ல கூடுதலான விளைவை தருவதும் இந்த நெணியன் வயல் வெளியே.

வயல் நடுவே விரிந்து பரந்து நிற்கும் மருத மரத்தினையும் மருத மரத்தின் கீழே தெரிவது ஓர் ஆலயம். அதுவே மருதடி வைரவர் கோவில். அதற்கு அருகே ஓர் சிறிய குளமும் உண்டு. ஆண்டு தோறும் பத்து நாட்கள் அலங்கார திருவிழாவும் கடைசி நாள் அன்னதானமும் நடைபெறுகின்றது. இவ்வயல் வெளியில் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் வைரவ பெருமானுக்கு அருவி வெட்டு காலங்களிலும் பொங்கல் படையல் என வயல் உரிமையாளர்களால் செய்யப்படுகின்றது.

வேலம்பிராய்   கண்ணகை அம்மன் ஆலயம்

நாவற்குழியின் கிழக்கெல்லையில் கலைப் புதைக்கும் வெண்மணல் மேட்டில் கபட்டப்பட்டுள்ள இவ்வாலயம் மிகவும் பழமையானது; புகழ்பூத்தது. ஆலய முன்பக்கத்தில் பிரமாண்டமான ஆலவிருட்சம் ஒன்று விழுதுகள் வேரூன்ற விட்டு, வருகின்ற வருகின்ற பக்தர்கள் பொங்கிப் படைத்து உண்டு உறங்கிப் போவதற்கென்றே நிக்குமாய் போல தோன்றுகின்றது. நாகங்களும் இம்மரத்தில் குடிகொண்டிருப்பதாக சிலர் பார்த்ததாகவும் கூறப்படுகின்றது.

பங்குனி மாதத்து திங்கட் கிழமைகள் தோறும் திருக்குளிர்ச்சி நடைபெறும். அயல் கிராமங்களில் இருந்தும் தூரவுள்ள இடங்கங்களில் இருந்தும் பெருந்தொகையான பக்தர்கள் மோட்டார், கார், வான், துவிச்சக்கர வண்டி, கால் நடையாகவும் வந்து அம்பாளின் அருள் வேண்டி பொங்கலிட்டு சுவைத்து, திருகுளிர்ச்சியிலும் பங்குகொண்டு போவார்கள். இரவு நேரங்களில் நிலாவெளியில் ஆலயத்தின் அழகே அழகு. பாற்கடலில் அலங்கரிக்கப்பட்ட கப்பல் மிதப்பது போலல்லவா தோன்றும்.

இக்கோவிலில் ஆண்டு தோறும் கொடியேற்றம், தேர், தீர்த்தம், என மகோட்சவம் நடைபெறுகின்றது. வைத்த காலை எடுக்க முடியாத அளவுக்கு காலை புதைக்கும் வீதியில் தேரோட்டத்தை காண வரும் பக்தர்கள் ஏராளம்.

மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து நேராக நாகதீவு வந்து நாக தீவிலிருந்து கோப்பாய், மட்டுவில், வேலம்பிராய், கச்சாய் வழிசென்று நாகர் கோவிலடைந்து, பின்னர் கரைச்சியிலுள்ள புளியம் பொக்கணை தங்கி ஈற்றில் வற்றாப்பளை அடைந்ததாக கூறப்படுகின்றது.

மதுரை எரியுண்டதும் ஐந்தலை நாகமாக மாறிய கண்ணகி தெற்கு நோக்கி நகர்ந்து முதலில் நயினாதீவிலே தரித்து ஈற்றில் வற்றாப்பளை சென்றதாக கொள்வோரும் உண்டு. 

இக்கூற்றின் மூலம்  வேலம்பிராய்   கண்ணகை அம்மன் ஆலயத்தின் தொன்மையை புரிந்து கொள்ள முடியும்.

நாவற்குழி மகாவித்தியாலயமும் நாவற்குழியூர் நடராசனும்

தொகு

அந்நியர் ஆட்சிக்கலத்தில் நிறுவப்படட இப் பாடசாலை ஆங்கிலேயர் தமது சமயத்தை பரப்புவதற்காகவும் தமது நிர்வாகத்தை இலகுபடுத்துவற்காகவும் கட்டப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று.1868 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அக்காலம் கல்வி கற்ற மாணவர் தொகை இருபத்திரண்டே கிளப்பிரிவு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையே நடைபெற்றது. சீ.எம்.எஸ் பாடசாலை என்னும் பெயருடன் (Christian Mission School ) யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி (St. John 's  College) இன் கிளையாக காணப்பட்டது.

தத்தை வேகத்தில் முன்னேறி வந்த இப்பாடசாலை 1946.5.1 இல் இருந்து அரசினால் கையேற்கப்பட்டு "நாவற்குழி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" யாக பெயர் மாற்றப்பட்டது. கட்டடங்கள் கட்டப்பட்டு மாணவர் தொகையும் அதிகரித்து 1959 ஆம் ஆண்டு "நாவற்குழி சிரேஷ்ட தமிழ் கலவன் பாடசாலை" யாக தரமுயர்ந்து க.பொ.த சாதாரணம் வரை வகுப்புக்கள் நடைபெற்றன.  தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வந்த இப் பாடசாலை 1961 இல் இருந்து க.பொ.த உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன் விஞ்ஞான கூடமும் அமைக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கு முன்னே தோன்றும் திறந்த வெளி அரங்கினை காட்டியவர், உலகறிந்த தமிழ் கவிஞர் வரிசையில் உயர்ந்து நிற்போரில் ஒருவர். அவர் தான் நாவற்குழியூர் நடராசன். அவர் பற்றி கூறினால் தன்னுடைய நாமத்துடன் 'நாவற்குழியூர்' என தான் பிறந்த ஊரின் பெயரை சேர்த்திருப்பது இந்த ஊருக்கு உயர்ச்சி என்றே கூறவேண்டும். பிறந்து வளர்ந்து துணைதேடி பொருள்தேடி பிள்ளைகளை பெற்று பின்னர் அவர்களுக்காயும் அல்லும் பகலும் அலைந்துலைக்கும் இவ் உலகில் பணம், பொருள், பட்டம், பதவி வரும்போது வந்த பாதையை மறந்து மண்ணினை மறந்து வாழும் உலகில் அனைத்தும் இருந்தும் பிறந்த மண்ணையும் பேசி வளர்ந்த தாய்மொழியையும் இறுதிவரை நேசித்து வாழ்ந்து காட்டியவர் நாவற்குழியூர் நடராசன்.

இலங்கைத்தலை நகரில் இல்லங்கொண்டிருந்து பணி செய்த காலத்தில் இந்த திறந்த வெளி அரங்கினை நிறுவிக் கொடுத்தமை இதனை நின்று பறைசாற்றுகின்றது. தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழர்தம் உயர்சிக்கும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி நிற முதுபெரும் எழுத்தாளர். "வரதர்" போன்றோருடன் தானும் சேர்ந்து 'மறுமலர்ச்சி சங்கம்' நிறுவி மறுமலர்ச்சி என்னும் மாத இதழ் வெளியிட்டு அதன் ஆசிரியராகவும் அயராது பனி புரிந்தவர். "மறுமலர்ச்சி காலம்"  என அழைக்கப்படும் காலம் ஈழத்து எழுத்துலகை பொறுத்தவரை ஈழத்தமிழரின் பொற்காலம் என்றே குறை வேண்டும். மறுமலர்ச்சிக்கு முன்னரே ஊற்றெடுக்க துவங்கிய நாவற்குழியூர் நடராசனின் கவிதை படைப்புக்கள் மறுமலர்ச்சி காலத்தில் இருந்து பொங்கிப் பிரவாகமானது.

இலங்கை வானொலியின் ஆரம்ப காலத்திலிருந்து "தமிழ் நிகழ்ச்சி அதிகாரி " யாக பணிபுரிந்தவர். கொழும்புத் தமிழ் சங்கத் தலைவராகவும் சேவை செய்திருக்கின்றார்.  ஓய்வு பெற்ற பின்னரே 'ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு 18ஆம் நூற்றாண்டு வரை' என்னும் நூலினை எழுதி வெளியிட்டமை. கலாநிதி பட்டம் பெற்றமை விடாமுயற்சியின் வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும்.

யாழ்ப்பாண சரித்திரத்தை கூறும் செய்யுள் நூலான "வையாபாடல்" என்னும் நூலை ஆராய்ந்து வெளியிட்டு "முது கலைமானி " பட்டமும் பெற்ற அவரை கனடா நாட்டில் வாழுகின்ற பிள்ளைகள் அவர் தம்முடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்னும் அன்புக் கட்டளையை மறுக்க முடியாது அங்கு சென்ற அவர் அங்கும் தனது தாய் மொழிமேலும் தமிழ் மக்கள் மீதும் கொண்டிருந்த பற்று காரணமாக அறுநூற்றுக்கு அதிகமான பாடல் கொண்ட "உள்ளதான ஓவியம்" என்னும் காப்பியத்தை எழுதி முடித்தார். அது நூலுருப் பெறுவதற்கு முன்னர் அவர் மறந்து விட்டார். காலன் அவரை எம்மிடம் இருந்து பிரித்தபோதும் "உள்ளதான ஓவியம்" அச்சுவாகனமேறி வெளிவந்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த பெரும் பேறாகும்.