பயனர்:Kowshiya/மணல்தொட்டி
சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம்
சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம் (National Museum of Singapore) சிங்கப்பூரிலேயே அதிகப் பழமையான அரும்பொருளகமாகும். அதன் வரலாறு 1849-ஆம் ஆண்டு தொடங்கியது. பல இட மாற்றங்களுக்குப் பிறகு, இந்த அரும்பொருளகம், 1887-ஆம் ஆண்டு முதல் தற்போதைய ஸ்டாம்ஃபோர்டு சாலையில் இயங்கி வருகிறது.
|
1. வரலாறு
இந்த அரும்பொருளகம், 1849-ஆம் ஆண்டில், இப்போது ராஃபிள்ஸ் கல்வி நிலையம் (Raffles Institution) என அழைக்கப்படும், சிங்கப்பூர்க் கல்வி நிலையத்தில் (Singapore Institution) இருந்த ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அரும்பொருளகம் (Raffles Library and Museum) என்று பெயரிடப்பட்ட இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூர்க் கல்வி நிலையக் குழு உருவாக்கிய அந்நூலகத்தில் சிங்கப்பூரிலிருந்தும், ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட வரலாற்று அல்லது தொல்பொருள் மதிப்புமிக்க பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நூலகம் அமைப்பதற்கான நோக்கம் பற்றிய குறிப்புகளை, 1823-ஆம் ஆண்டில் சர் ஸ்டாம்ஃபோர்டு ராஃபிள்ஸ், அவ்வட்டாரத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்குப் புத்துயிர் அளிப்பதைப் பற்றி விவாதிக்க நடத்திய கலந்துரையாடலில், காணலாம்.
பிற்காலத்தில் இந்த அரும்பொருளகம் பல இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டது. உதாரணத்திற்கு, 1863-ஆம் ஆண்டில், இப்போது விக்டோரியா அரங்கம் (Victoria Theatre) என்று அழைக்கப்படும் டௌன் ஹாலிற்கு (Town Hall) இடமாற்றப்பட்டது. 1874-ஆம் ஆண்டில் ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அரும்பொருளகம் காலனித்துவ அரசாங்கத்திடம் (Colonial government) ஒப்படைக்கப்பட்ட பின் 1876-ஆம் ஆண்டில், அரும்பொருளகத்தில் பெருகிக் கொண்டிருந்த சேகரிப்பின் காரணமாக, மீண்டும் சிங்கப்பூர்க் கல்வி நிலையத்தில் வேறொரு பகுதிக்கு இடம் மாற்றப்பட்டது. இறுதியாக, 1882-ஆம் ஆண்டில் ஸ்டாம்ஃபோர்டு சாலையில், காலனித்துவ அரசாங்கம் அமைத்த ஒரு புதிய கட்டடத்திற்கு இடம் மாறி, 1887-ஆம் ஆண்டு அக்டோபர் பன்னிரண்டாம் தேதியன்று ராஃபிள்ஸ் நூலகம் மற்றும் அரும்பொருளகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. பின், 1960-ஆம் ஆண்டில் ராஃபிள்ஸ் நூலகத்திலிருந்து அந்த அரும்பொருளகம் பிரிந்து, ஸ்டாம்ஃபோர்டு சாலைக்கு மாறி, இன்றுவரை அதே இடத்தில் இயங்கி வருகிறது. 1985-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கட்டட மறுசீரமைப்பின் போது, மீண்டும் சாயம் பூசப்பட்டதோடு, அதன் தனித்துவமான அம்சங்களும் மீட்கப்பட்டன. அதற்குப் பிறகு தான், 1992-ஆம் ஆண்டு பிப்ரவரி பதினான்காம் தேதி அன்று நம் தேசிய அரும்பொருளகம் தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின், 1993-ஆம் ஆண்டில் தேசிய அரும்பொருளகம், தேசிய மரபுடைமைக் கழகத்தின் (National Heritage Board) கட்டுப்பாட்டுக்குள் செயல்பட ஆரம்பித்த பிறகு, சிங்கப்பூரின் நான்கு தேசிய அரும்பொருளகங்களில் முதன்மையானதாகத் திகழ்ந்தது. இக்காலக்கட்டத்தில் இது சிங்கப்பூர் வரலாற்று அரும்பொருளகம் என்றும் பெயர் மாற்றம் கண்டது. மேலும், மறுசீரமைப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகளுக்காக அரும்பொருளகம் மூன்றரை ஆண்டுகளுக்கு மூடப்பட்டுத் தற்காலிகமாக ரிவர்சைட் பாயிண்ட் (Riverside Point) என்னும் இடத்திற்கு மாறியது. அருகிலுள்ள ஃபோர்ட் கேன்னிங் மலையிலிருந்த (Fort Canning Hill) ஒரு பகுதியில் அரும்பொருளகத்தின் புதிய நீட்டிப்புப் பகுதி கட்டப்பட்டது. 2004-ஆம் ஆண்டு, நவம்பர் இருபத்து ஐந்தாம் தேதி அன்று ஓர் அடிக்கல் விழா நடைபெற்றது, சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம் மீண்டும் உருவாக்கப்பட்டதை முதன்முதலில் பொது அறிவிப்பின் வழி தெரிவித்தனர். 2005-ஆம் ஆண்டு, நவம்பர் இருபத்து எட்டாம் தேதியன்று அரும்பொருளகத்தின் கட்டுமானம் நிறைவடைந்தது. இறுதியாக, 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதோடு, அதே ஆண்டில் டிசம்பர் மாதம் ஏழாம் தேதி, சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு எஸ்.ஆர். நாதன் அவர்களாலும், தகவல், தொடர்பு மற்றும் கலைகள் அமைச்சராலும் அரும்பொருளகம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2. மறுசீரமைப்புப் பணிகள்
போதிய இடமில்லாததால் 1906, 1919, 1926, 1934 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன. இந்த வளர்ச்சியினால், ஏற்கனவே இருந்த கட்டடத்தின் அளவு இரண்டு மடங்காக அதிகரித்து, 1,200 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்தது. அரும்பொருளகத்தின் அடித்தளத்தில், தற்காலிகக் கண்காட்சிகள் நடத்த ஒரு பத்தியிலில்லாத 1,200 சதுர மீட்டர் கண்காட்சிக் கூடம் ஒன்று உள்ளது. பொருட்காட்சிகளை ஒளி, வெப்பம் அல்லது ஈரப்பத மாற்றங்களிலிருந்து பாதுகாக்க, சன்னல்கள் இல்லாத சுவர்களும் அரும்பொருளகத்தில் உள்ளன. 1942-இலிருந்து 1945 வரை, ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில், ராஃபிள்ஸ் சேகரிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளின் சிறப்புத் தன்மையினால், ஜப்பானிய இராணுவம் அந்த இடத்தை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், அரும்பொருளகத்தின் பெயரை மட்டும் ‘சியோனான் அரும்பொருளகம்’ என மாற்றினர். பின், 1965-ஆம் ஆண்டில், சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற பிறகு, ‘சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்’ என்ற பெயர் இதற்கு மீண்டும் சூட்டப்பட்டது.
3. காட்சிப் பொருள்கள்
=ஆரம்பக் காலத்தில், இரண்டாம் உலகப் போருக்கு முன், தென்கிழக்கு ஆசியாவில் குறிப்பாக, மலேயா மற்றும் பிரிட்டிஷ் போர்னியோவின் விலங்கியல் மற்றும் இனவரைவியல் [ethnographic] சேகரிப்புகளுக்குப் பெயர்போன இந்த அரும்பொருளகம், இயக்குநர்களுக்கும் நல்ல ஆராய்ச்சி சாதனைகளைப் புரிந்த நிபுணர்களுக்கும் ஆராய்ச்சி மற்றும் அறிவுக்கான ஒரு மையமாகவும் திகழ்ந்தது. மேலும், அரச ஆசியக் கழகத்தின், மலாயா கிளையின், பத்திரிகை ஆசிரியர் அலுவலகம் அமைந்துள்ள இடமாக இது இருந்ததால், மலேயாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் பயணித்துக்கொண்டிருந்த பல அறிஞர்கள் இந்த அரும்பொருளகத்திற்கு வருக புரிந்தனர். அதற்குப் பிறகு, 1895-ஆம் ஆண்டிலிருந்து 1919-ஆம் ஆண்டு வரை அரும்பொருளகத்தின் இயக்குநராக இருந்த ஆர். என். ஹேனிட்ச், அரும்பொருளகத்தை மறுசீரமைத்து, அறிவியல் ஆராய்ச்சித் திசையில் அதைக் கொண்டு சென்றார். இன்று நம் சிங்கப்பூர்த் தேசிய அரும்பொருளகம் சிங்கப்பூர் வரலாறு தொடர்பான காட்சிகளில் கவனம் செலுத்துகிறது.
1969-ஆம் ஆண்டில், விலங்கியல் சேகரிப்புகளில், பதினொன்று காட்சிப்பொருள்களை மட்டும் உயிரியல் துறை பகுதிக்கும், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்திற்கும் இடம் மாற்றிவிட்டு, மற்றவற்றை இந்தியாவிலுள்ள கொல்கத்தா மற்றும் மலேசியாவிலுள்ள கோலாலம்பூர் ஆகிய நகரங்களின் சில அரும்பொருளகங்களுக்கு நம் அரும்பொருளகம் வழங்கியது. தேசிய அரும்பொருளகத்தின் மிக முக்கியமான காட்சிப்பொருள் ஒரு நீலத் திமிங்கிலத்தின் எலும்புக்கூடாக இருந்தது. அந்தத் திமிங்கிலம் மலாக்கா அருகில் 1892-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எலும்புக்கூடு 1903-இலிருந்து 1969 வரை அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இப்போது கட்டிடத்தில், அமைந்துள்ள ஒரு வள மையத்தில் பழைய புத்தகங்கள், புகைப்படங்கள், நெகட்டிவ்கள் மற்றும் முத்திரைகள், பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
4. கட்டடக்கலை
விக்டோரியா பாணியிலான கண்ணாடி வடிவங்களைக் கொண்ட பழைய ரொட்டுண்டா, டோமின் நவீன பொருள்விளக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடியிலான ரொட்டுண்டா தான், புதிதாக உருவாக்கப்பட்ட அரும்பொருளகத்தின் முக்கிய அம்சமாகும். பதினாறு மீட்டர் உயரத்துடனும், இருபத்து நான்கு மீட்டர் விட்டத்துடனும் 2,800 சதுர மீட்டர் இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கண்ணாடி ரொட்டுண்டா, சிங்கப்பூர் வரலாற்றுக் காட்சிக்கூடத்தின் நுழைவாயிலாக அமைகிறது. இது, பகலின் போது, 360 டிகிரி அளவிலுள்ள திரையில் உருவங்களையும் படங்களையும் பதினாறு காணொளி ப்ரொஜக்டர்களில் நிழலாட வைத்து, அங்கு வருகை தருபவர்களைக் கவர்ந்திழுக்கும். இரவில், கண்ணாடி ரொட்டுண்டா ஒரு விளக்காக மாறி, உள்ளே திரையில் நிழலாடும் உருவங்களை, வெளித் திரையில் காண்பித்து, நகர வான ஒளியை ஒளிரச் செய்யும். இன்று, இந்த உருளைப் பட ஒளியிடு, வெளிப்புறத்தில் நிழலாடும் படக்கருவிகளிலேயே, மிகப் பெரிய, கடினமான அமைப்புடன் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். வருங்காலத்தில், கலைஞர்களுக்குப் புதிய 360 டிகிரி காணொளிப் படைப்புகளை உருவாக்குவது ஒரு சவாலாக இருப்பதால், சிங்கப்பூரிலேயே, மிக அதிகமாகக் கலையை வெளிப்படுத்தும் தளமாகக் கண்ணாடி ரொட்டுண்டா திகழ, அதிக சாத்தியம் உள்ளது.
மேற்கோள்கள்
Wikipedia - National Museum of Singapore: https://en.wikipedia.org/wiki/National_Museum_of_Singapore
National Museum of Singapore Official Page: http://nationalmuseum.sg/about-nms/history
|