பயனர்:Laalirajagopal/மணல்தொட்டி
தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947ல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 15வது இந்திய நாடாளுமன்றத்தில் 206 உறுப்பினர்களை பெற்றிருக்கும் இக்கட்சி, அதிக உறுப்பினர்களை கொண்டிருக்கும் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது. இந்திய துணைக்கண்டம் முழுவதும் எழுந்து நின்ற "ஆங்கிலேயர்" எதிர்ப்பை ஒருங்கிணைக்க "இந்திய தேசிய காங்கிரஸ்" 1885-ல் உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கான அமைப்பாக 1947 வரையிலும் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1947-க்குப் பின்பு இந்திய ஒன்றியத்தின் முக்கியமான - ஒரே ஆளும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரசு கட்சியின் உள் முரண்டுபாடுகளே இந்தியாவின் இன்றைய பல கட்சிகள் உருவாகக் காரணமாயிருந்தன. காங்கிரசு கட்சி துவங்கிய 1885லிருந்து 1920 வரை "தலைவர்" என்கிற பதவி அகில இந்திய அளவில் முறைப்படுத்தப்படவில்லை. அதேபோல் மாகாண காங்கிரசு (மாநில அமைப்புகள்) அமைப்புகள் தொடக்ககாலத்தில் உருவாக்கப்படவில்லை. 1920-ல் நாக்பூரில் நடந்த காங்கிரசின் இந்திய அளவிலான மாநாட்டில் மொழி வழி மாநிலங்கள் அடிப்படையிலான அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதையடுத்து 1921 முதல் மொழிவாரி மாநிலக் குழுக்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மாற்றமடைந்தது. அப்போதைய சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ராசாசி, பெரியார் ஈ.வெ.ரா. பொறுப்பேற்றிருந்தனர். தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோருக்கான இயக்கம் 1916-ல் உருவான பிறகு காங்கிரசின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக தடைபடத் தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டு காங்கிரசுக்குள் பிராமணரல்லாதோரைக் கொண்டு "சென்னை மாகாண சங்கம்" உருவானது. நீதிக்கட்சி அல்லது ஜஸ்டிஸ் கட்சி என அழைக்கப்பட்ட அக்கட்சி 1921 முதல் 1926-வரை சென்னை மாகாண ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1920 முதல் 1935 வரை தமிழ்நாடு காங்கிரசு அமைப்பில் பெரியார், திரு.வி.க., ராசாசி, வ.வே.சு. அய்யர், சோமசுந்த பாரதியார், சர்க்கரைச் செட்டியார், சிங்காரவேலர், வரதராசுலு நாயுடு, ஜீவா போன்றோர் தீவிர ஈடுபாட்டில் இருந்தனர். 1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் கூடிய 31-வது மாகாண காங்கிரஸ் மாநாட்டின் பிராமணரல்லாதோருக்கான "வகுப்புவாரி" உரிமைக்கான தீர்மானத்தை பெரியார் ஈ.வெ.ரா. கொணர்ந்தார். 1919-ல் நடைபெற்ற 25-வது மாகாண காங்கிரசு மாநாட்டிலிருந்து தொடர்ந்து இத்தீர்மானத்தை நிறைவேற்ற பெரியார் முயன்றார். 1925-லும் இம்முயற்சி தோற்றுப் போகவே காங்கிரசிலிருந்து தந்தை பெரியார் வெளியேறினார். 'பெரியார்' வெளியேறியது தமிழ்நாட்டில் காங்கிரசு வளர்ச்சியை கடுமையாக பாதித்தது. பெரியாரின் சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும் செல்வாக்கு பெற்றிருந்த காரணத்தாலும், காங்கிரசின் குழு மோதல்களும் காங்கிரசை தமிழ்நாட்டின் பேரியக்கமாக உருவெடுக்க இயலாமல் செய்தது. 1935-ல் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 1937-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றது. ராசாசி தலைமையில் செயல்படத் தொடங்கிய அந்த அமைச்சரவை 21.4.1338-ல் "இந்தி கட்டாயமாக்கப்படும்" என்று அறிவித்து தமிழர்களின் பெரும் அதிருப்திக்குள்ளானது. ஆங்கிலேய அரசுடனான முரண்பாடுகள் கூர்மையடைந்ததையடுத்து காங்கிரசு பதவி விலகியது. 1940ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக கு.காமராசர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942-ல் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்து ராசாசி, அக்கட்சியிலிருந்து வெளியேறினார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற இக்காலத்தில் 1944-ல் காங்கிரசு கட்சி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டது. பல நூறு காங்கிரசார் சிறைப்படுத்தப்பட்டனர். காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கிய முத்துரங்க முதலியார், "காங்கிரஸ்காரர்கள் சங்கத்தை" உருவாக்கி நடத்தினார். (1944 அக் 31). இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த போது "இந்தியாவில் சட்டப்பூர்வமானத் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது" என ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. இதையடுத்து 1946 ஏப்ரல் 30-ல் பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை தமிழ்நாட்டு ஆட்சி பொறுப்பேற்றது. (1945-ல் ராசாசி மீண்டும் காங்கிரசில் இணைந்தார்) பிரகாசம் ஆட்சி திறமையற்று இருப்பதாகக் காங்கிரசாரே கூறி 1947 மார்ச் 23-ல் ஓமந்தூர் இராமசாமியை முதல்வராக்கினார். தமிழ்நாட்டில் "மீண்டும் இந்தி" கட்டாயச் சிக்கல் எழுந்தது. 1949 ஏப்ரல் 6-ல் குமாரசாமி ராஜாவும், 1952-ல் இந்திய அளவிலான, இந்திய விடுதலைக்குப் பின்னாளைய தேர்தலில் ராசாசியும் தமிழ்நாட்டு காங்கிரசின் முதல்வரானார்கள். 1926-க்குப் பிறகு நீதிகட்சி தேர்தலில் தோற்றாலும் 1939-ல் தந்தை பெரியார் தலைமையேற்று 1944ல் திராவிடர் கழகமாக்கினார். அது தேர்தலில் போட்டியிடாத அமைப்பாக இயங்கியதாலும், தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கம் வளரத் தொடங்கியதாலும் காங்கிரசு ஆட்சிப் பொறுப்பை எளிதில் ஏற்றுக் கொள்ள முடிந்தது. 1952ல் ராசாசி தலைமையில் அமைந்த காங்கிரசு அரசு புதிய கல்விக் கொள்கையாக "குலக்கல்வித்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. "பெற்றோர்களின் தொழிலை பிள்ளைகள் அரைநாள் செய்ய வேண்டும்" என்ற அக்கொடிய கல்விமுறையை திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து 1954-ல் இராசாசி முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 1954 ஏப்ரல் 13-ல் தமிழ்நாட்டு முதல்வராக காமராசர் பொறுப்பேற்றார். 1957-ல் நடைபெற்ற தேர்தலிலும் காமராசர் தலைமையில் காங்கிரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. 1949ல் உருவான திமுக 1952 தேர்தலில் போட்டியிடவில்லை. 1957 தேர்தலில் தான் முதன் முதலில் போட்டியிட்டது. 205 இடங்களில் போட்டியிட்ட காங்கிரசு 151 இடங்களைக் கைப்பற்றியது. 1960-ல் காங்கிரசுக்கான அதிகாரப்பூர்வ ஏடாக "நவசக்தி" ஏற்படுத்தப்பட்டது. 1962 தேர்தலிலும் போட்டியிட்டு ஆட்சிப் பொறுப்பை காமராசர் ஏற்றுக் கொண்டார். இந்த காலகட்டங்களில் தமிழ்நாடு காங்கிரசில், ம.பொ.சிவஞானம், சி.சுப்பிரமணியம், இராமசாமி, படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர், முத்துராமலிங்க தேவர், சா.கணேசன், கோவை சுப்பையா, பக்தவத்சலம், குமாரசாமி ராஜா ஆகியோர் முக்கிய தலைவர்களாகச் செயல்பட்டனர். "ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தமது பதவிகளிலிருந்து விலகி காங்கிரசைப் பலப்படுத்த வேண்டும்" என்று இந்திய காங்கிரசிடம் காமராசர் வலியுறுத்தினார். இந்திய அரசியல் வரலாற்றில் புகழாரம் சூட்டப்படும் "காமராஜ் திட்டம் (பிளான்)" இதுவே. தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பிலிருந்து 1963 செப்டம்பர் 20-ல் காமராசர் பதவி விலகினார். 1963 அக்டோபர் 2-ல் தமிழ்நாட்டு முதல்வராக பக்தவத்சலம் பொறுப்பேற்றார். இந்திய அரசுப் பொறுப்பில் இருந்த காங்கிரசு அரசு, 1965 சனவரி 26 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக "இந்தி" இருக்கும் என அறிவித்தது. இதையடுத்து 1953 முதல் 1965 வரை தமிழ்நாட்டில் மாணவர்களே முன் நின்று நடத்திய "மொழிப் புரட்சி" நடைபெற்றது. பல நூறு மாணவர்களை காங்கிரசு அரசு கொன்றது. காங்கிரசு அரசின் இக்கொடிய செயல்பாடுகளால் 1967ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரசு, பெரும் தோல்வியைச் சந்தித்தது. இத்தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் காங்கிரசின் சுவடு மெல்ல மெல்ல தேய்ந்தது. திராவிடர் இயக்கத்தின் 'தோன்றல்கள்' எனக் கூறுகிற திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்திய மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டிலிருந்து பெரும் இடங்களைப் பெற்று வந்தது. 1960களில் ஈ.வி.கே.சம்பத், கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆகியோர் காங்கிரசில் ஈடுபடலாயினர். 1963 நவம்பர் 3, 4-ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற மாநாட்டில் தமிழரான "காமராசர்" இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பசு வதை தடுப்பு கோரி இந்து மத வெறியர்கள் தில்லியில் காமராசர் இல்லத்துக்கு தீ வைத்தனர். இருப்பினும் அக்கொலை முயற்சியானது, "பார்ப்பனர்களின் பொறுப்பிலிருந்தே காங்கிரசு தலைவர் பதவி தமிழருக்கு கிடைத்த வெறுப்பில் காங்கிரசாரே" மேற்கொண்ட நடவடிக்கை எனவும் அந்நாளைய ஏடுகள் கூறின. 1954ல் காமராசர் பதவி ஏற்ற காலத்திலிருந்து 1967-ல் திமுக வெற்றி பெறும் வரையிலான காங்கிரசு கட்சியின் குறிப்பிடத்தகுந்த செயல்பாடுகளாக மதிய உணவுத் திட்டம் (1956), கல்வி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கியது, 11 நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்டவைகளைக் குறிப்பிடலாம். இருப்பினும் 1957-ல் சனவரி 23-ல் "தமிழ்" ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றியது தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்ததாக இன்னமும் இருக்கிறது. தந்தை பெரியார் காலத்திலிருந்து காங்கிரசில் 'குழு'க்கள் உருவாக்கம் தொடர்ந்து இருந்தது. சத்தியமூர்த்தி, ராசாசி போன்றோர் தொடர்ந்து இக்குழு மனப்பான்மையை உருவாக்கி வளர்த்தனர். பெரியாரின் விலகலுக்குப் பிறகு 1969ல் காங்கிரசு மீண்டும் பெரிய பிளவைச் சந்தித்தது. இது இந்திய அளவில் நிகழ்ந்தது. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சஞ்சீவரெட்டியை, அந்நாளைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தியின் ஆதரவு பெற்ற வி.வி.கிரி தோற்கடித்தார். இதையடுத்து இந்திராகாந்தி, காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டார். காங்கிரசு கட்சியானது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என பிளவுப்பட்டது. அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற போதும் தமிழ்நாட்டில் காமராசர் தலைமையிலான "ஸ்தாபன" காங்கிரசே செல்வாக்கு பெற்றிருந்தது. 1974ல் புதுவையில் நடைபெற்ற தேர்தலில் இரு காங்கிரசும் இணையும் நிலை உருவானது. 1975ல் காமராசர் மறைந்தார். 1976-ல் அவசரநிலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுகவுடன் இந்திரா காந்தி கூட்டணி அமைத்தார். தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ஆர்.வி. சுவாமிநாதன், செயலராக பழ.நெடுமாறன் ஆகியோர் பொறுப்பில் இருந்தனர். தமிழ்நாட்டு கமிட்டியை ஆலோசிக்காமல் இந்திய தேசிய காங்கிரசின் தில்லி தலைமை மேற்கொண்ட இம்முடிவை எதிர்த்து பழ.நெடுமாறன் தலைமையிலான ஒரு பிரிவினர் "காந்தி காமராஜ் தேசிய காங்கிரசை" உருவாக்கினர். 1980களுக்குப் பிறகு எம்.பி.சுப்பிரமணியம், பழனியாண்டி, மூப்பனார், வாழப்பாடி இராமமூர்த்தி, குமரி ஆனந்தன், தங்கபாலு போன்றோர் காங்கிரசின் முக்கிய பொறுப்பாளர்களாகப் பணியாற்றினார். 1984-ல் இந்திரா மறைவையடுத்து சில ஆண்டுகளில் சிவாஜி கணேசன் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியை உருவாக்கினார். 1991 முதல் 1996 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக கடுமையான ஊழல் புகாருக்கு உள்ளாகியிருந்தது. இருப்பினும் இந்திய தேசிய காங்கிரசின் தலைமை, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் காங்கிரசு கூட்டணி அமைக்கும் என 1996 தேர்தலின் போது அறிவித்தது. ஜி.கே.மூப்பனார் தலைமையிலான காங்கிரசு பிரிவினர் இக் கூட்டணியை ஏற்க மறுத்து திமுகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்திய விடுதலைக்குப் பிறகு ஆர்.கே. சண்முகம், ராஜகோபாலாச்சாரி, என்.கோபால்சாமி அய்யங்கார், கே. சந்தானம், ஓ.வி. அழகேசன், மரகதம் சந்திரசேகர், மோகன் குமாரமங்கலம், சி.சுப்பிரமணியம், செளந்திரம், இராமச்சந்திரன், ஆர்.பிரபு, எம்.அருணாசலம், ரங்கராஜன் குமாரமங்கலம், தங்கபாலு, ப.சிதம்பரம் ஆகியோர் காங்கிரசு அமைத்த இந்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டு காங்கிரசின் சார்பில் அமைச்சர்களாக இருந்தனர். 1996 தேர்தலில் காங்கிரசு அல்லாத அய்க்கிய முன்னணி அமைச்சரவையில் தமிழ்மாநில காங்கிரசின் ப.சிதம்பரம், எம்.அருணாசலம், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், ஜெயந்தி நடராசன், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். 1998 இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா அரசில் வாழப்பாடி இராமமூர்த்தி தலைமையிலான "தமிழ்நாடு ராஜுவ் காங்கிரஸ்" பங்கேற்றது. 1998 இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா அரசில் வாழப்பாடி இராமமூர்த்தி தலைமையிலான "தமிழ்நாடு ராஜுவ் காங்கிரஸ்" பங்கேற்றது. 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் உடன்பாடு வைத்துக்கொண்டதை கண்டித்து அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியது. அதிமுகவுடன் கூட்டணி சேராமல் மூன்றாவது அணி அமைத்து தமிழ் மாநில காங்கிரசு தேர்தலில் போட்டியிட்டது. 2001 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அண்ணா திமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்தது. இந்த உடன்பாட்டை எதிர்த்து தமாகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரசு கட்சி ஜனநாயகப் பேரவையை உருவாக்கினார். இந்த பேரவை, திமுகவை ஆதரித்தது. மூப்பனாரின் மறைவிற்குப் பிறகு ஜீ.கே. வாசன் தலைமையில் செயல்பட்டு வந்த த.மா.கா மற்றும் சிதம்பரம் தலைமையில் இயங்கி வந்த த.மா.கா ஜனநாயகப் பேரவை ஆகியவை காங்கிரஸ¤டன் இணைந்தன. சோனியாவை அ.தி.மு.க தலைவர் விமர்சித்தது தொடர்பாக எழுந்த சர்ச்சையால அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய காங்கிரஸ் 2004 ஆம் ஆண்டு நாடஆளுமன்றத் தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தது. 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கூட்டணி தொடர்கிறது. காமராஜரின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒவ்வொரு தேர்தலிலும் காமராஜர் ஆட்சியை நிச்சயம் அமைத்தே தீருவோம் என்று முழங்க காங்கிரஸ்காரர்கள் தயங்குவதே கிடையாது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ஒவ்வொரு நாளும் வெடித்துவரும் கோஷ்டிப் பூசல்களால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் எந்த ஒரு தேர்தலையும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தனியாக எதிர்கொள்வது என்பது தற்போதைய நிலையில் காங்கிரசுக்கு முற்றிலும் சாத்தியம் இல்லாத ஒன்றாகும். தேர்தலையே தனியாக சந்திக்க இயலாத காங்கிரஸார் காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைப்போம் என்று முழங்கிவது மக்களிடையே நகைப்பிற்குள்ளான விஷயங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.