பயனர்:Manoj2005/மணல்தொட்டி

கரிகாலன் கட்டிய கோயில்.....! கட்டக் காரணமாயிருந்த சித்தர் யார் தெரியுமா?

கரிகாற்சோழன் இன்றும் உலகே வியக்கும் கல்லணையை அன்றே - முதலாம் நூற்றாண்டிலேயே கட்டிய மன்னன். அகண்ட காவிரிக்குப் பெருமை சேர்த்த சோழ அரசன். "சோழ வள நாடு சோறுடைத்து" என பெயர் படைக்க அரசாண்ட மாமன்னன். இமயம் வரை படையெடுத்துச் சென்று வழிநெடுக நாடுபல வென்று இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட புகழ்மிகு சக்கரவர்த்தி.

கரிகாற் பெருவளத்தான் அப்போதுதான் இமயமலையிலிருந்து நாட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தான். வடபுலத்திலும் வெற்றி வாகை சூடி வீரத்திருமகனாக...!

தஞ்சை நோக்கிய பயணத்தில் இடையே திருவையாறு. சித்தர் பெருமான்களுக்கு பிரியமான ஊரு திருவையாறு. அந்த ஊர் முழுக்க ஆன்மீகக் சேறு. தெய்வீக மணம் கமழும் தேன்தமிழ்ப் பேரு.

திருவையாறில் மன்னனின் தேர்ச்சக்கரம் மண்ணில் புதையுண்டது. எவ்வளவு முயன்றும் இம்மியளவும் இடம்பெயரவில்லை. போர் பல புரிந்து எதிரிகளை காலடியில் விழச் செய்த கரிகாலனின் வீரமிகு வீரர்கள் பிரம்ம பிரயத்தனம் செய்தும் தேர்க்காலை நகர்த்த முடியவில்லை.

கரிகாலன் வியந்தான். ஏதோ என்னவோ என மனம் குழம்பினான். "இறைவன் மறைவாய் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறாரோ"

அவன் மனதில் பட்டது.

தேர் அடிவரை மண் அகற்றியும் தேர் நகர மறுக்க இன்னும் ஆழமாய் வெட்டிப் பார்த்தனர் சலிப்படையா சோழ வீரர்கள். மன்னவன் மனதில் பட்டது சரிதான். ஆழத்தில் ஒரு சிவலிங்கம். கூடவே அம்மன், விநாயகர், முருகன், சத்தமாதங்கன், சண்டர், சூரியன் முதலான தெய்வச் சிலைகள் புதையுண்டிருந்தன.

புத்தம் புதிதாய் அப்போதுதான் வடித்தது போல் ஒளி சிந்தின. ஓடித் தேரடி பணிந்தான் ஒப்பிலா தமிழ் மன்னன். வணங்கி மெய்சிலிர்த்தான். சிலைகளைச் சிதைவுபடாமல் எடுக்கச் செய்தான். கண்களால் ஒற்றினான். கண்ணீர் மல்கினான்.

   "என்னே என் பாக்கியம்...!"

சிலைகளை எல்லாம் எடுத்த பின்னர் மேலும் மண் பரப்பில் உற்றுப்பார்த்தான். ஒரு முடியின் நுனி தென்பட்டது. அந்த முடியை லாவகமாய் எடுத்தான் முடிமன்னன். நுனி முடி சடைமுடியாய் தொடர்ந்தது. முடிவில் சடாமுடியாய்... பயத்துடன் பார்த்தான் .....ஒரு ஜடாமுனி.

முனிவர் நிஷ்டையில் இருந்தார். கரிகாலன் மட்டுமல்ல பரிவாரமும் அவர் பாதம் விழுந்தது. மெல்லக் கண் விழித்த முனிவர் மெலிதாய் சொன்னார்.. "மன்னா.. தமிழ் போற்றும் பெரும் மன்னா... இச்சிலைகளைக் கொண்டு கோயில் ஒன்று அமைப்பாயாக...! குடமுழுக்கும் செய்வாயாக....!

மூத்த சித்தர் நந்தீசரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட சிலைகள் இவை. இந்த மகாலிங்கத்தின் பூரண சக்தி பூமியில் பரவட்டும். கோயில் கட்ட பெரும் பொருள் குவியல் இந்த நந்தியின் காலடியில் கிட்டும்." தேரடி முனிவர் வாழ்த்தினார்.

ஓரடி தள்ளி திகைத்திருந்த மன்னன் மெய்மறந்தான். முனிவர் தொடர்ந்தார்...

"தமிழ் கூறும் நல்லுலகில் உன் பெயர் என்றும் நிலைத்திருக்கும் சோழ மன்னர்களில் உன் பெயர் எப்போதும் உயர்ந்திருக்கும் காவிரி உள்ளளவும் காவிரித் தாய் கருணை உள்ளளவும் உன் பெயர் நீங்காது நிலைத்திருக்கும்" வாழ்த்தினார் மகாமுனி.

"இதோ... உனக்கு என் அன்பு பரிசு" தண்டம் ஒன்றை கரிகாலனிடம் வழங்கி ஒளி போல் பெருகி கணத்தில் மறைந்தார் இறை போலிருந்த அந்த சித்தர்.

அந்த தண்டம் எவராலும் வெல்ல முடியாத ஆயுதம். சித்தர் பிரான் அருளிய சீர்மிகு போர்த்தண்டம். உடனடியாக அதுபோதே சித்தர் வாக்கை செயலாக்க கோயில் பணி துவக்கினான் கரிகாலன்.

போரில் கிட்டாத பூரிப்பு.. வெற்றியில் எட்டாத செருக்கு... கோயில் கட்டுவதில் கிட்டிற்று அவனுக்கு. அற்புதமான கோயில்.. அதன் பெயர் "அய்யாரப்பன் கோயில்" அமைந்த இடம் தேர் புதையுண்ட அதே திருவையாறு.

திருக்கோயிலின் இன்றைய பெயர் "திருவையாறு அருள்மிகு பஞ்ச நந்தீஸ்வரர் என்னும் அய்யாரப்பன் கோயில்"

எல்லாம் சரியப்பா .....! வந்த சித்தர் யாரப்பா...? அருள்தந்த அம்முனி யாரப்பா.....? கரிகாலன் பெயர் விளங்கச் செய்த சித்தர் பிரான் பெயர் என்னப்பா... ..?

அந்த சித்தர் தான் அகிலம் வணங்கும் அகப்பேய்ச் சித்தர். அகப்பைச் சித்தர் என்றும் அவரை அழைப்பர். நிய மேசர் என்ற தவப் பெயரும் அவருக்கு உண்டு. அவர் அருளிய பாடல்களின் இறுதியில் அகப்பேய் என வருவதால் அகப்பேய் சித்தர் என அழைத்து சித்தர் உலகம் தலைமேல் வைத்து கொண்டாடி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manoj2005/மணல்தொட்டி&oldid=3600468" இலிருந்து மீள்விக்கப்பட்டது