இலங்கை அரசாங்கத்தின் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்று அரசவர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட ‘அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு’(Incorporated by Act Parliament No 46 of 2009) என்ற நிதியத்தின் மாண்புமிகு தலைவர்.
இந்நிதியத்தின் கீழ் பள்ளிவாயல்கள், அறபுக்கலாசாலை, அறபு நூலகம், குர்ஆன் மத்ரஸாக்கள், நலன்புரிச்சங்கங்கள், தர்ஹாக்கள் போன்ற 15இற்கும் மேற்பட்ட ஸ்தாபனங்கள் இயங்கிவருகின்றது.
இலங்கை அரசின் அகில இலங்கை சமாதான நீதவான் பதவியில் வகிப்பவர்.
குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஉ, கியாஸ் ஆகிய மூலாதாரங்களைப் பின்பற்றி அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத் கொள்கை மற்றும் ஸூபிஸ இறைஞான வழி அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக்கலாபீடத்தின் நிறுவனர்.
மார்க்க-அரசியல்-சமூக ரீதியான அநீதிகளையும் சவால்களையும் அகிம்சையாலும் பொறுமை மன்னிப்பாலும் வெற்றிகொண்டதால் 2009இல் அகில இலங்கை சமாதான மன்றத்தால் கலாநிதி, சாமசிறீ பட்டம் பெற்றவர்.
2007ல் நடந்த ஆயுததாரிகளின் கொலை முயற்சியிலிருந்து அதிசயமாகக் காப்பாற்றப்பட்டவர்.
உண்மை நேர்மை சத்தியப் பாதையில் சென்று 40 வருடங்களாக தன் சொற்கேட்டு நடக்கும் பெரும் சமூகத்தை வழி நடத்துபவர்.
அஷ்ஷெய்ஹ் அப்துல் காதிர் ஸூபி ஸித்தீகீ காதிரி காஹிரி (றஹ்) அவர்களால் காதிரிய்யஹ், நக்ஷபந்திய்யஹ் தரீக்காக்களினது ஷெய்ஹாக நியமிக்கப்பட்டவர்.
“தஸவ்வுப்” எனும் இஸ்லாமிய ஸூபிஸக் கலையை தரீகத், ஹகீகத், மஃரிபத் அடிப்படையில் பேசுவதுடன் “ஷரீஅத்” சட்டங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றவர்.
காதிரிய்யஹ் திருச்சபையினை நிறுவி காதிரிய்யஹ் தரீக்கா வழியில் மக்களுக்கு ‘‘பைஅத்” கொடுத்து ஆத்மீகத்தின் மூலம் மக்கள் நெஞ்சக் கறையினை துடைத்து இறைவனிடம் சேர்த்து வைக்கும் பணியில் வாழும் இறைஞானகுரு.
பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட முரீதீன்கள் இலங்கை, இந்தியா, மலேசியா இன்னும் பிற நாடுகளிலும் உள்ளனர்.
1978இல் இலங்கை உலமாஉகளால் ‘ஈழத்தின் சொற்கொண்டல்’ என்று பட்டம் வழங்கப்பட்டது போல் “ஷம்சுல் உலமா (மார்க்க அறிஞர்களின் சூரியன்) என்று இந்திய உலமாஉகளாலும் இந்தியாவில் வைத்து பட்டம் வழங்கப்பட்டவர்.
1000க்கு மேற்பட்ட ஒலி,ஒளிப்பேழைகளில் பதியப்பட்ட உபதேசங்களை நிகழ்த்தியவர். https://www.youtube.com/user/shumsmedia
இறைஞான ஸூபிஸ துறையிலும் மார்க்க விடயங்கள் பற்றியும் அறபு, தமிழ் மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர். தற்போதும் எழுதிக்கொண்டேயிருப்பவர். http://www.shumsmedia.com/
பல அறபுக்கலாபீடங்களில் அதிபராகக் கடமையாற்றியதோடு சில ஆண்டுகள் அரச பாடசாலைகளிலும் மௌலவீ ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
05.02.1944இல் இலங்கையின் கிழக்குமாகாணத்தில் காத்தான்குடி என்ற ஊரில் பிறந்தவர். ஆறாவது தலைமுறையாக வந்துதித்த ஆலிம் இவர்.
இவரது அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் பெரிய ஆலிம் (றஹ்) அவர்கள் ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல்லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். பத்ரிய்யஹ் ஜும் அஹ் பள்ளிவாயலினது நிறுவனர் இவர்களாவர். ஆண்டு 1908இல் மகன் பிறந்த அதே திகதி அதே மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள்.
தந்தையார் அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் (றஹ்) அவர்கள் போல் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற வேட்கையால் தந்தையிடம் பயின்ற பின்னர் காலி பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, பாணந்துறை அல் மத்ரஸதுத் தீனிய்யா போன்ற அறபுக்கலாபீடங்களில் கற்று பின்னர் இந்தியா சென்று மிஸ்பாஹுல் ஹுதா போன்ற கல்லூரிகளில் கல்வி பயின்றார்கள். சவுதிஅரேபியா சென்று அங்கும் கல்வி பயின்றவர்.
அறபுமொழி, அறபு இலக்கியம், சொல்லிலக்கணம், மொழியிலக்கணம்,தப்ஸீர், ஹதீஸ், தர்க்கசாஸ்திரம், “பிக்ஹு”சட்டக்கலை, யாப்பிலக்கணம், அணியிலக்கணம்’ ஆகிய கலைகளிலும் குறிப்பாக “தஸவ்வுப்’’ “ஸூபிஸ’’ (மனிதனின் உளக்கறையை நீக்கி அவனை இறைவனிடம் சேர்த்து வைக்கும்)கலையிலும் புலமைபெற்றவர்.
தனது வாழ்நாள் முழுக்க இஸ்லாமிய சன்மார்க்கத்திற்காகவும் சமூகத்திற்காகவும் அர்ப்பணம் செய்து வாழ்ந்துவருகின்றவர்.