பயனர்:Nivatharan/மணல்தொட்டி
தமிழின் புகழும் தொழினுட்ப யுகத்தில் அதன் பயன்பாடும்
தொகு“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்” எனப் புகழாரமிட்டனர் நம் சங்கத்தமிழர்.கி.மு 3,000ம் ஆண்டளவில் சங்ககாலம் தொடங்கி இன்றைய காலம் வரை பற்பல நூற்றாண்டுகளாக காதல், வீரம், அறம், பக்தி, பண்பாடு போன்றவற்றின் வழியாக பல களம் கண்டு வெற்றிகள் பல கொண்டு தொடர் அறா இலக்கண, இலக்கிய சக்கரம் கொண்டு கால மாற்றத்திற்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் சிம்மாசனம் ஏறி கம்பீரமாய் ஆட்சி செய்து கொண்டிருக்கும் மொழி தமிழ் மொழி ஆகும்.
சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபொருமானாலும் பின் அவர் வழி முருகக் கடவுளாளும் பின் இக் கடவுளர்களின் தலைமையின் கீழ்ப்பட்டு அகத்தியர், ஒளவையார், நக்கீரர் போன்ற இன்னும் பல மெய் கண்ட ஞானியர் வாயிலாகவும் முத்தமிழ் சங்கம் வைத்து சேர, சோழ, பாண்டிய மன்னர் முதல் பாமரர் வாயிலாகவும், இன்றளவில் தமிழ் மொழிமூல படைப்பாளர்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் வழியாகவும் சரமாரியாக தன் படையெடுப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும் மொழியாகத் திகழ்கிறது தமிழ்.
“அனுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி
குறுகத் தறித்த குறள்”
எனப் புகழப்படும் திருக்குறளை பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவர் வாயிலாக உலகிற்குத் தந்தது..
“நட்ட கல்லை தெய்வமென்று நாளு புஸ்பம் சாத்தியே
சுற்றிவந்து மொட… மொட…. என்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ! நாதன் உள்ளிருக்கையில்”…
எனக் கூறி ஆண்மிக விழிப்பை உலகிற்குப் பறைசாற்றிய மொழி
“பறத்தியாவது ஏதடா?
பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும்
இலக்கமிட்டிருக்குதோ?”
எனக் குமுறி…… அடக்குமுறை அல்லது ஏற்றத்தாழ்வை ஒழிக்க எழுந்த மொழி
“பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
மாதர் அறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றை
குத்தி காட்சி கெடுத்திடலாமோ”
எனப்பாடி பெண்கள் சமத்துவத்தை பெற்றெடுத்த தமிழ்
“யாதும் ஊரே: யாவரும் கேளிர்:
தீதும் நன்றும் பிறர் தர வாரா:”…
என இயம்பி உலக ஒற்றுமை, சகோதரத்துவம் என்பவற்றை வலியுறுத்திய மொழி
மேற்சொன்னவாறான இன்னும் பற் பல சான்றாதாரங்கள் வாயிலாக நூற்றாண்டு தோறும் ஆதிக்கம் செலுத்தி வரும் நம் தாய் மொழி தமிழ் இன்றைய தொழிநுட்ப யுகத்தில் இதன் பயன்பாட்டை எந்த விதத்தில் விஸ்தரித்துள்ளது? எனும் கேள்வி நம் மத்தியில் எழுவது இயல்புதான். அதனையே நாம் இங்கு நோக்கவுள்ளோம்.
ஆம்! தொழிநுட்பத்தின் தொடக்க காலத்தில் தமிழின் பயன்பாடு அறவே இல்லாமலிருந்தது ஆனால் தற்போது அதன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இன்று நாம் பயன்படுத்தும் தொழினுட்ப சாதனங்களில் எங்கெல்லாம் ஆங்கிலத்தை காண முடிகிறதோ அங்கெல்லாம் தமிழைப் பதிலீடாக மாற்றிப் பயன்படுத்தவும் முடியும். நம் நடைமுறை பேச்சுவழக்குத் தமிழில் சரலமாக தட்டச்சிட்டு குறுஞ்செய்திகள் பல அனுப்பவும் முடியும். இத்தகு வாய்ப்பை தற்காலத்தில் யுனிக்கோட் (Unicode) எனும் மிகப் பிரபலமான இலக்க முறைமையின் ஊடாக இவற்றை நிகழ்த்த முடிகிறது. யுனிக்கோட் (Unicode) முறைமை தற்கால மென்பொருள்களில் உட்பொதித்து வெளியிடுவதனால் நாம் தமிழை இதன் ஊடாக பயன்படுத்துவது இலகுவாகியுள்ளது.
அது மட்டுமன்றி தமிழ் மொழி மூலத்தில் அமையப்பெற்ற மென்பொருட்கள் பலவும் மென்பொருள் களஞ்சியத்தில் ஏராளம் உண்டு. அத்துடன் மின்-கற்றல், கற்பித்தல் செயற்பாட்டையும் நம் தமிழ் மொழியில் நிகழ்த்தவும், கற்கவும் வாய்ப்புக்கள் பல உள்ளன. விஞ்ஞானம், தொழிநுட்பம், மருத்துவம்… இது போன்று இன்னும் பல துறை சார்ந்த சந்தேகங்களை தமிழ் மொழி மூலம் காணொளிகள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக நாம் ஐயம் தெளிவுறக் கற்கவும் வாய்ப்புண்டு.
ஈண்டு கூறியவாறான பிறமொழியில் உள்ள விடயங்களை தமிழில் மொழிமாற்றம் செய்து அவற்றையெல்லாம் “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக” வளர்ச்சி கண்டு வரும் தொழிநுட்பத்தின் ஊடாக தமிழில் விளக்கித் தரும் வகையில் தமிழ் வளர்ந்துள்ளது என்றால் அது மிகப்பெரும் சாதனை தான்… மேலும் தமிழ் இத்தகு சாதனையுடன் மட்டும் வரையறுத்து நின்றுவிடவில்லை, தற்காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வரும் தொழிநுட்பக் கூறுகளுள் ஒன்று குரல் உணரி (Voice reorganization) ஆகும். (அதாவது சாதனங்களை குரல் வழியான உள்ளீடுகள் மூலம் முகாமை செய்தல் என்பர்) இத் துறையிலும் தன் பயன்பாட்டை நிறுவ முயல்கிறது எனலாம். அத்துடன் செய்நிரலாக்கத் துறையில் ஆங்கில மொழி மூலம் செய்நிரல்கள் எழுதப் படுவது போன்று தமிழ் மொழியைப் பயன்படுத்தி செய்நிரல் எழுதும் வகையினை சாத்தியப்படுத்தவுமான முயற்சிகள் தமிழக அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எனவே இப் புதிய தொழிநுட்பத்திற்குள்ளும் தமிழ் விரைவில் அடி பதிக்கும் என்பதில் ஐயப்பாடு கிடையாது.
இவ்வாறு ஆதிக்கத்தை பரப்பிவரும் தமிழ் மொழியின் வேகமான வளர்ச்சிக்கு தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் நாம் செயற்கரிய செயல் என்ன? தமிழ் மொழி மூலமான தட்டச்சு உரையாடல்களை மின்னஞ்சல், குறுஞ்செய்தி, அரட்டை போன்றவற்றில் மேற்கொள்ளல். தேடுதளங்களில் தமிழில் தட்டச்சிட்டு தமிழ் ஆக்கங்களை, கானொலிகளை தேடுதல். முடியுமானவரையில் நாம் பயன்படுத்தும் சாதனங்களில் உள்ள மென்பொருட்களின் மொழிமூலத்தை தமிழிற்கு மாற்றிவைத்தல். அவ்வாறு தமிழ் மொழி இல்லாத பட்சத்தில் அம் மென்பொருளில் உள்ள பின்னூட்டல் அல்லது முறைப்பாடு வாயிலாக தமிழ் மொழியை மொழித்தெரிவினுள் இணைக்குமாறு சிபாரிசு செய்தல். கூடுமானவரை நம்மிடமிருந்து மென்பொருள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் பின்னூட்டல்களை தமிழில் அனுப்புதல் சாலச்சிறந்தாகும். இணையவெளியில் வினவப்படும் சில சந்தேகங்களுக்குரிய தெளிந்த விடைகளை தமிழ் மொழில் முன்வைத்தல் போன்ற செயற்பாடுகள் மூலம் தமிழின் பயன்பாட்டுப் பரம்பலை மிகவிரைவில் தொழிநுட்ப துறையுள் அதிகரிக் முடியும்.
மேற்படி செயற்பாடுகளை நிகழ்த்தும் போது ஆங்கில விசைப்பலகையின் ஊடாக தமிழை தட்டச்சிடாமல் தமிழ் எழுத்துக்களின் ஊடே அவற்றை தட்டச்சிட்டு நாம் ஒவ்வொருவரும் தமிழ் வளர்க்க ஓர் தாய் பெற்ற குழந்தைகள் போல் ஒன்றுதிரல்வோமாயின் தொழினுட்ப யுகத்தில் தமிழின் பயன்பாடு மீண்டும் ஒரு புரட்சிகர சரித்திரம்படைக்கும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
“மொழியால் ஒன்றானோம்: இனி
நம் மொழிகாக்க ஒன்றாவோம்.”