பயனர்:Pechchi/மணல்தொட்டி

குமரகுருபரன்

குமரகுருபரன் (1974 - 2016) தமிழகக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். கால்நடை மருத்துவரான குமரகுருபரன் ஆனந்த விகடன், குமுதம், தினமலர், விண்நாயகன் ஆகிய இதழ்களில் முக்கியப் பொறுப்பு வகித்தவர். இவருடைய முதல் கவிதை தொகுப்பான 'ஞானம் நுரைக்கும் போத்தல்' (2015) புத்தகத்திற்கு நாகர்கோயில் நெய்தல் அமைப்பால் வழங்கப்படும் ராஜமார்த்தாண்டன் விருது அறிவிக்கப்பட்டது. இவரது இரண்டாவது கவிதை தொகுப்பான "மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது" என்ற நூலுக்கு கனடா, தமிழ் இலக்கியத் தோட்டம் 2015 ஆம் ஆண்டுக்கான கவிதைப் பரிசை வழங்கிக் கௌரவித்தது.

வாழ்கை குறிப்பு

தொகு

குமரகுருபரனின் தந்தை பெயர் ஜெயராமன். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள சிறிய கிராமம். உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தாயார் பெயர் குருப்ரசாதவல்லி. இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றியவர். குருப்ரசாதவல்லியின் தந்தையார் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும், சித்த மருத்துவராகவும் இருந்துள்ளார். சொந்த ஊர் திருவேங்கடநாதபுரம் கிராமம், திருநெல்வேலி. ஜெயராமன், குருப்ரசாதவல்லி இருவரும் தற்போது திருவேங்கடநாதபுரத்தில் வசிக்கின்றனர்.

குமரகுருபரன் 1974-ம் வருடம் ஜூன் 10-ம் தேதி பிறந்தார். ஜெயராமன் மற்றும் குருப்ரசாதவல்லியின் தமிழ்ப்பற்று காரணமாகவே இவருக்கு குமரகுருபரன் என்று பெயர் சூட்டப்பட்டது. இவர் மூன்று வயது வரை கோவையிலும், அதற்கு பிறகு ராஜபாளையத்திலும் வசித்தார். பள்ளிப் படிப்பு முழுவதும் ராஜபாளயத்திலேயே முடித்த இவர், கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்தார். பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறிய குமரகுருபரனுக்கு, ஒரு மதிப்பெண் குறைவு காரணமாக மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாமல் போனது. பல் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, விவசாயக் கல்லூரி, இந்த மூன்று கல்லூரிகளிலிருந்து அழைப்பு வந்த சூழலில், குமரகுருபரன், விவசாயப் படிப்பை தேர்ந்தெடுத்தார்.

மதுரையில் உள்ள விவசாயக் கல்லூரியில் மூன்று மாதங்கள் பயின்ற குமரகுருபரன், சென்னை கால்நடைக் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து, அவர் விவசாயப் படிப்பிலிருந்து, கால்நடை மருத்துவத்திற்கு மாறினார். சென்னை வரும் பொருட்டே கால்நடை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்ததாக குமரகுருபரன் பலமுறை கூறியுள்ளார்.

கால்நடை மருத்துவக்கல்லூரி இறுதியாண்டில்,தமிழின் பிரபல வார இதழ்களான ஆனந்த விகடன், குமுதம், போன்றவற்றில் மாணவ எழுத்தாளராக எழுதத் தொடங்கிய குமரகுருபரன், பட்டப்படிப்பு முடிந்ததும், கால்நடை மருத்துவ மேல்படிப்பிற்காக கேரளா சென்றார். அதன்பின், முழு நேர பத்திரிகையாளராக மாறினார். குமுதம் ஸ்பெஷல் புத்தகத்தின் ஆசிரியராக பணியாற்றிய இவர், பின்னர் விண் நாயகன் பத்திரிகையின் துணை ஆசிரியராக பொறுப்பு வகித்தார். அதன் பின்னர் தினமலர் நாளிதழின் இணைப்பாக வெளிவந்த எட்டு புத்தகங்களுக்கான ஆசிரியராக பணியாற்றினார்.

பத்திரிகைகளில் ஆசிரியராக பணிபுரிந்தபோது குமரகுருபரன் கண்டெடுத்து பணிக்கு அமர்த்திய இளம் திறமையாளர்கள், இன்று பிரபல தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள் ஆகியவற்றில் பரவலாக பணி புரிந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலரில் இருந்து வெளியே வந்து, தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து அளிக்கும் Media 4 U என்கிற நிறுவனத்தை தொடங்கினார். குமரகுருபரனின் ஆக்கத்தில், இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, விஜய் தொலைகாட்சியின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வழங்கினார். அப்துல் கலாம், அன்புமணி ராமதாஸ், உதயகுமார் ஐஏஎஸ், இயக்குனர் அமீர், உள்ளிட்ட பலர் பங்கேற்ற அந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.

பின்னர், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் நிறுவனம் ஒன்றில் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய குமரகுருபரன், அதிலிருந்து விலகி முழுநேர எழுத்தாளர் ஆனார்.

எழுத்துலக அறிமுகம்

தொகு

தந்தை ஜெயராமன் மூலமாக தமிழின் செவ்விலியக்கியங்களை சிறுவயதிலேயே வாசிக்கும் வாய்ப்பினைப் பெற்ற குமரகுருபரன், தமிழின் நவீன இலக்கிய உலகிற்குள் சென்னை கால்நடைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அந்திமழை இளங்கோவன் மூலமாக அழைத்து வரப்பட்டார். நான்காமாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, கால்நடை மருத்துவக் கல்லூரி இதழான அந்திமழைக்கு குமரகுருபரன் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். அப்போது ஆனந்த விகடனில் நடத்தப்பட்ட 'சிறந்த கல்லூரி இதழ்'களுக்கான போட்டியில் கால்நடைக் கல்லூரி சார்பாக அந்திமழை இதழும் போட்டியிட்டது. அதில் சிறந்த ஆசிரியருக்கான விருது குமாரகுருபரனுகு அளிக்கப்பட்டது. விகடனின் இணைப்பு இதழாக வெளிவந்த அந்திமழை புத்தகத்தில்தான் குமரகுருபரனின் முதல் கவிதை அச்சேறியது. கணையாழி கடைசி பக்கங்கள் பத்தியில், குமரகுருபரனின் கவிதையை எழுத்தாளர் சுஜாதா அறிமுகப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து, குமுதத்தில் இணைந்து பணியாற்றிய குமரகுருபரன், பல முக்கிய கட்டுரைககள், தொடர்களை எழுதியுள்ளார். அதில் முக்கியமானதும், பரவலான வாசக பாராட்டை பெற்றதுமான "பயணிகள் கவனிக்கவும்" தொடர், இப்போதும் குமுதம் பதிப்பகத்தின் சார்பாக வெளி வந்துகொண்டிருக்கிறது.

விண் நாயகன் பத்திரிகையில் துணை ஆசிரியாராக பொறுப்பு வகித்த குமரகுருபரன், அங்கிருந்து தினமலருக்கு சென்றார். அங்கு வாரமலர், சிறுவர் மலர், பெண்கள் மலர், உள்ளிட்ட தினமலரின் எட்டு இணைப்பு புத்தகங்களுக்கு ஆசிரியாக பொறுப்பேற்றார். ஆங்கில பத்திரிக்கைகளுக்கு நிகரான தரத்தில் அந்த இணைப்புகளை தரமுயர்த்தினார். அந்தக் காலகட்டத்தில் வாரமலரில் அவர் எழுதிய தொடர்கதை ஒரே நேரத்தில் பெரும் வரவேற்ப்பையும் பெரும் எதிர்ப்பையும் எதிர்கொண்டது.

வெளிவந்த நூல்கள்

தொகு

குமரகுருபரனின் முதல் கவிதைத் தொகுப்பான 'ஞானம் நுரைக்கும் போத்தல்' 2014-ம ஆண்டு வெளிவந்தது.

புனைவும் கவிநயமும் கலந்து எழுதப்பட்ட உலக சினிமாக்கள் பற்றிய 'இன்னொருவனின் கனவு' கட்டுரைத் தொகுப்பும் அந்திமழை வெளியீடாக அதே ஆண்டில் (2014) வந்தது.

இரண்டாம் கவிதைத்தொகுப்பான 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' 2016 ஆண்டில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பயணிகள் கவனிக்கவும் என்கிற பயண நூல் குமுதம் வெளியீடாக வந்துகொண்டிருக்கிறது.

இணையத்தில் படிக்க

தொகு

குமரகுருபரனின் 'ஞானம் நுரைக்கும் போத்தல்' மற்றும் 'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை 'குமரகுருபரன் கவிதைகள்" என்ற பெயரில் செயல்பட்டு வரும் முகநூல் பக்கத்தில் பதியப்பட்டுள்ளன.

https://www.facebook.com/jkbpoetry

குமரகுருபரன் எழுதிய 'பேரரசரின் கோவம்' என்ற சிறுகதை உட்பட கட்டுரை, கவிதை ஆகியவை அவருடைய 'குமாரசம்பவம்' என்கிற பிளாகில் இடம்பெற்றுள்ளன.

https://kumaraasambavam-kumaragurubaran.blogspot.com/?view=timeslide

விருதுகள்

தொகு

'மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது' தொகுப்பு சிறந்த கவிதை நூலுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது பெற்றது

சிறந்த முதல் கவிதைத் தொகுப்புக்கான 2015 ராஜமார்த்தாண்டன் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் குமரகுருபரன் அதனை வாங்க மறுத்து விட்டார்.

குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது

தொகு

50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை கொண்ட குமரகுருபரன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2017-ம் ஆண்டு முதல் இளம் கவிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

முதல் விருது கவிஞர் சபரிநாதன் பெற்றார். இரண்டாமாண்டு விருது கவிஞர் கண்டராதித்தனுக்கு, மூன்றாமாண்டு விருது கவிஞர் ச.துரை ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது பெற்ற இளங்கவிஞர் , சபரிநாதன் 2019-ம் வருடத்தில் யுவபுரஸ்கார் விருது பெற்றது குறிபிடத்தக்கது.

2020-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது கவிஞர் வேணு வேட்ராயனுக்கு அறிவிக்கப்பட்டது.

மறைவு

தொகு

குமரகுருபரன் தனது 42-வது வயதில், 2016 ஜூன் 19 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்

மேற்கோள்கள்

தொகு

https://www.jeyamohan.in/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/#.Xuxq_GgzY2w


https://www.youtube.com/watch?v=_p1VBDLZ9as

https://www.youtube.com/watch?v=JGAC7XMb_Fc

https://www.youtube.com/watch?v=KXSilnQk-MM

https://www.youtube.com/watch?v=NLZbzP894_E

https://www.youtube.com/watch?v=DUp5xu95pOg

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pechchi/மணல்தொட்டி&oldid=2990637" இலிருந்து மீள்விக்கப்பட்டது