வ. உ. சிதம்பரனார் துறைமுகம் (V.O.Chidambaram Port Trust) முன்னதாக தூத்துக்குடி துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.தமிழ்நாட்டின் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம்1974ஆம் ஆண்டு சூலை 11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் கொள்கலன் முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், மும்பை மற்றும் சென்னைத் துறைமுகங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் துறைமுகமாகவும் விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை மேலாண்டுள்ளது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.