பயனர்:Ravidreams/உரைகள்/இந்திய மொழி விக்கிப்பீடியாக்களை ஒப்பிட தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சி

இந்திய மொழிகளை ஒப்பிட தமிழ் விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சி என்னும் இவ்வுரை ஆகத்து 8-9, 2015 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒருங்கிணைக்கும் கணித்தமிழ் வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

பார்க்க: Powerpoint / PDF கோப்பு

--

பங்களிப்பாளர்கள், கட்டுரைகள், பக்கப் பார்வைகள் அடிப்படையில் இந்திய மொழி விக்கிப்பீடியா திட்டங்களின் வளர்ச்சி நிலையைக் கீழே காணலாம் ( http://stats.wikimedia.org/EN_India/Sitemap.htm ).

ஆங்கிலம், இந்தி, வங்காள மொழிக்கு அடுத்து பயன்பாடு அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியா ( https://ta.wikipedia.org/ ) நான்காம் இடத்தில் இருக்கிறது. ஆங்கிலம் உலக மொழி. வங்காள மொழியின் பயன்பாடு பெருமளவு வங்காளதேச நாட்டில் அமைகிறது. இந்தப் பின்னணியில், ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையைக் கொண்ட தமிழும் மலையாளமும் பயன்பாட்டில் முந்துவது கவனிக்கத்தக்கது. பல்வேறு மனித வளச் சுட்டிகளில் தமிழகமும் கேரளமும் முந்துவதோடு ஒப்பிட்டு இப்போக்கினைப் புரிந்து கொள்ளலாம். இவை தவிர, தமிழின் வளர்ச்சிக்கான சிறப்பான காரணிகளும் உள்ளன. அவையாவன:

  • உலகளாவிய தமிழர் பரவல். தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் பங்களிப்பாளர் திரு. இ. மயூரநாதன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். உலகெங்கும் பரந்து வாழும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்குக் கணிசமான பங்களிக்கிறார்கள். பயன்படுத்துகிறார்கள்
  • தமிழ்நாடு தவிர இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாட்டு அரசுகள் தமிழுக்கு அளித்து வரும் ஆதரவு.
  • மற்ற பல இந்திய மொழிகள் இன்னும் தட்டச்சு, விசைப்பலகை, ஒருங்குறி முறைக்கு மாறுதல், எழுத்துரு உருவாக்குதல் என்று அடிப்படைகளில் தேங்கி இருக்கும் போது 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் இச்சிக்கல்களைத் தீர்க்க முனைந்து வெற்றி கண்டிருக்கிறோம்.
  • உலகம் முழுக்க பரவி இருந்தாலும், தமிழர்கள் உணர்வளவில் ஒன்றியுள்ளனர். அரசியல் காரணிகளை முன்னிட்டு கசப்புணர்வோ ஒன்றுபட்டுச் செயல்பட முடியாத நிலையோ இல்லை. ஆனால், மேற்கு வங்காளம் - வங்காள தேசம் பகுதிகளில் உள்ள வங்க மொழி பேசுவோர், இந்தியா - பாக்கித்தான் நாடுகளில் வாழும் உருது, பஞ்சாபி மொழி பேசுவோர் ஆகியோர் இடையே இந்த ஒருங்கிணைவைக் காண இயலவில்லை. பஞ்சாபி மொழியின் எழுத்து முறையே இரு நாடுகளிலும் வேறுபடுவதால் ஒரே மொழி பேசுவோர் இரு திட்டங்களாகச் சிதறி உள்ளனர். தமிழ்நாட்டுத் தமிழ் நடை, இலங்கைத் தமிழ் நடை ஆகிய இரு நடைகளையும் அரவணைத்துப் பொதுவான திட்டம் ஒன்றில் இணைந்து ஈடுபடுவதில் தமிழ் விக்கிப்பீடியர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
  • அடிப்படையில், விக்கிப்பீடியா ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இயங்கும் திட்டம் ஆகும். ஆசிய சமூக அடுக்கில் உள்ள படிமுறை அதிகார முறைகளுக்கு மாறாக, இங்கு அனைத்துப் பங்களிப்பாளர்களும் சமத்துவமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் 37 பேர் நிருவாகப் பொறுப்பு கொண்டுள்ளனர். இந்தியில் 6 பேர் மட்டுமே இத்தகைய பொறுப்பில் உள்ளனர். இது உலக அளவிலான 280க்கும் கூடுதலான விக்கிப்பீடியா திட்டங்களில் நிருவாகிகள் எண்ணிக்கை அடிப்படையில் 13 ஆவது இடம் ஆகும். இவ்வாறு பொறுப்புகளைப் பரவலாக பகிர்ந்து இயங்குதல் பங்களிப்பாளர்களைத் தக்க வைத்து மேலும் முனைப்பான பங்களிப்புகளைத் தரத் தூண்டுகிறது. தமிழகத்தின் சமூக நீதித் திட்டங்கள் அதிகாரப்பரவலுக்கும் சீரான சமூக வளர்ச்சிக்கும் உதவி வருவதையும் இதனுடன் ஒப்பு நோக்கலாம்.
  • பன்மொழி அகரமுதலியான தமிழ் விக்சனரி ( https://ta.wiktionary.org/ ) மூன்று இலட்சம் சொற்களைக் கொண்டு இந்திய மொழி விக்சனரிகளுள் முதல் விக்சனரியாகவும் உலக மொழிகளில் முதல் 20 திட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகம் கொடையாக அளித்த ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரையாக்கப் பணிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன. மற்ற மொழிகள், இக்கலைச்சொல் உருவாக்கக் கட்டத்தைத் தாண்டி வர வேண்டியுள்ளன.
  • மதுரைத் திட்டம் போன்ற ஆவணப்படுத்தல் திட்டங்கள், தமிழ் இணையக் கல்விக் கழக இணைய நூலகம், சமூக ஊடகங்களில் தமிழ் பரவல் என்று பல்வேறு இணையச் சுற்றுச் சூழல் காரணிகள் அதன் ஒரு பகுதியாக தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவுகின்றன.

இந்நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவும் வகையில் பின்வரும் முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம். இப்பரிந்துரைகள் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தின் முறையான கொள்கை ஏற்பு பெற்றவையும் ஆகும் ( https://ta.wikipedia.org/s/2qz6 ).

தமிழ்நாட்டு அரசுக்கு முன் வைக்கும் பரிந்துரைகள்

1. தமிழ்த் தட்டச்சுப் பயிற்சியும் கட்டாய தமிழ் விசைப்பலகைகளும்

தமிழ் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கணினியில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு அரசு ஏற்பு பெற்ற தமிழ்99 தட்டச்சு முறையைப் பயன்படுத்த வேண்டும். தமிழ் நிலப்பகுதிகள் விற்பனையாகும் கணினிகளில் ஆங்கிலம் / தமிழ்99 முறை தமிழ் விசைப்பலகைகள் இரண்டும் கலந்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அல்லது, அத்தகையை கணினிகள் / விசைப்பலகைகள் விற்போருக்குச் சலுகை அளிக்க வேண்டும். குறைந்தது, அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளில் தமிழ்99 விசைப்பலகையைக் கட்டாயமாக்க வேண்டும்.

2. கட்டற்ற உள்ளடக்கங்கள்

அரசு நிதியில் உருவாகும் அறிவாக்கங்கள் அனைத்தையும் கட்டற்ற உரிமத்தில் தர வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, பல்கலைக்கழக வெளியீடுகள், அருங்காட்சியக ஆவணங்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள், அறிவியற் கலைக்களஞ்சியம் போன்றவை. கட்டற்ற உரிமத்தில் அறிவிக்கப்படும் அனைத்து ஆக்கங்களையும் http://www.tamilvu.org/library/libindex.htm , http://textbooksonline.tn.nic.in/ போன்ற தளங்கள் மூலம் பொதுப்பயன்பாட்டுக்குத் தர வேண்டும். இவை PDF ஆவணமாக மட்டுமன்றி, ஒருங்குறி முறையில் உரை வடிவில் கிடைக்கப்பெற வேண்டும்.

3. பொதுக் கல்வி / பாட நூலில் விக்கிப்பீடியா

பள்ளிக் கல்வியில், தமிழ் அல்லது சமூக அறிவியல் நூலில் (தற்கால வரலாறு, குடிமையியல்) விக்கிப்பீடியாவைப் பற்றி ஒரு பாடம் இடம் பெற வேண்டும். தற்போது கல்விசார் கூடுதல் பயிற்சிகளில் விக்கிப்பீடியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முறையாக ஊக்குவிக்க ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா குறித்து சிறப்புப் பயிற்சிகள் தரப்பட வேண்டும். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலும் தமிழாசிரியர் (புலவர்) கல்வித்திட்டத்திலும் முதலில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

4. அரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் யாவும் தமிழிலும்

அரசு / கல்வி நிறுவன வலைத்தளங்கள் தகவல் தரும் முதன்மை மொழியாக தமிழ் இருக்க வேண்டும். இது ஒருங்குறி உரை வடிவில் இருக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.