பயனர்:Ravidreams/grantha
கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்த எனது எண்ணங்கள்:
- thamiழ், thiruஞaanasambandhar, vaள்ள்i, faன், hஆட், jஓக், shஅவர், பs என்று எழுதுவதற்கும் விஜய், ஹாரி, ஜெய் என்று எழுதுவதற்கும் என்ன வேறுபாடு? ஆங்கிலத்தோடு தமிழ் கலந்து எழுதுவது உறுத்துகிறது, பிழை என்றால் கிரந்தத்தோடு தமிழ் கலந்து எழுதுவது மட்டும் ஏன் உறுத்த வில்லை? பழகிப் போவதால் ஒரு பிழை சரியாகுமா?
- டாய்ட்ச், நெதர்லாந்து மொழிகளில் ஜ ஓசை இல்லை. ramanujan என்று எழுதினால் ராமானுயன் என்று தான் வாசிப்பார்கள். அது அவரை மரியாதைக் குறைவாகச் சொல்கிறார்கள் என்று ஆகுமா? தமிழில் இராமானுசன் என்று எழுதினால் மட்டும் ஏன் மரியாதைக் குறைவு என்று நினைக்கிறார்கள்?
- thamil என்று கூட எழுதாமல் tamil என்று ஆங்கிலேயர் எழுதுவது தமிழரை அவமதிப்பதாகுமா?
- இந்து, பௌத்த, இன்னும் பல சமய மந்திரங்களின் ஒலிப்பில் மந்திர ஆற்றல் உள்ளதாகவும் அதைக் காக்க கிரந்தம் அவசியம் என்றும் சொன்னால், சீன, சப்பானிய மொழிகளில் இந்த ஒலிப்புகளுக்குத் தொடர்பே இல்லாமல் இம்மந்திரங்கள், பெயர்களைச் சொல்லி வழிபடுகிறார்களே? அவர்களுக்கு அருள் கிடைக்காதா?
- கிரந்தம் கலக்காமல் தமிழ் எழுத்துகளில் மட்டும் எழுத வேண்டும் என்று சட்டம் இல்லை. அதே போல், கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்றும் சட்டம் இல்லை. தமிழ் இலக்கணப் படி பள்ளியில் சொல்லித் தரப்பட்ட தமிழ் எழுத்துகளை மட்டும் கொண்டு எழுதுவதற்கு எவருக்கும் முழு உரிமை உண்டு.
- கிரந்த எழுத்துகளைப் பொது ஊடகங்களில் பயன்படுத்துவது என்பது ஒரு சிலர் முடிவு எடுத்த, ஒருவரைப் பார்த்து இன்னொருவர் கண்மூடித்தனமாகப் பின்பற்றிய மரபு. கிரந்த எழுத்துப் பயன்பாடு என்பது திறந்த முறையில் மொழியிலாளர்களைக் கலந்துரையாடி எடுக்கப்பட்ட இறுதி முடிவு அல்ல. கிரந்த எழுத்து அறிமுகத்தில் பிற மொழி, சமய, இனத்தினர் நலமே மிகுந்துள்ளதே தவிர தமிழ், தமிழர் நலம் காக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
- "தமிழ் இயல்புக்கு ஏற்ப ஒலிகளை உள்வாங்கியும் கிரந்தத் தவிர்த்தும் எழுதுவது தங்களை, தங்கள் நம்பிக்கைகளை அவமதிப்பதாகும்" என்று எவரும் சொல்வது ஒரு தொன்மையான இனத்தின் தன்மானத்துக்கு விடப்படும் நேரடி மிரட்டலாகும்.
- கிரந்த எழுத்துகளே கலக்காமல் பாடல் பாடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் வீடுபேறு அடையவில்லையா? பக்திக்கு ஒலிப்பு எவ்விதத்தில் முக்கியமாகிறது? மொழியின் இயல்பு காரணமாகவோ கவனக் குறைவு காரணமாகவோ இயலாமை காரணமாகவோ ஒருவர் ஒலிப்புப் பிசகிப் பேசினாலும் பாடினாலும் பக்தனின் உள்ளத்தை அறிந்து அருள இயலாத மூடரா கடவுள்? ஒரு கடவுளுக்குப் பல அவதாரங்கள், ஒவ்வொரு அவதாரத்துக்கும் பல பெயர்கள், ஒவ்வொரு மொழி, நாட்டிலும் ஒவ்வொரு ஒலிப்பு என்று இருக்கையில் ஒரு கடவுளின் பெயரை ஒலிப்பு கெடாமல் எழுதுவது அவசியமா? எல்லாம் கடந்த ஒரு ஓசையில் தான் தங்கி இருக்கிறாரா? ஒலிப்பை மாற்றிச் சொன்னால் மதிப்புக் குறைவு என்று கோபப்படுவரானால், பக்கத்துத் தெரு அரசியல்வாதிக்கும் கடவுளுக்கும் அவரது தூதர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு?
- கிரந்தம் கலந்து ஒலிப்புப் பிசகாமல் எழுதி ஒருவரைக் காறித் துப்பவும் முடியும். கிரந்தம் தவிர்த்து எழுதி ஒருவரைப் போற்றவும் முடியும். ஒருவரைப் போற்றவோ தூற்றவோ ஒலிப்பு ஒரு பொருட்டே இல்லை.
- பல நாடுகள், சமயங்கள் தோன்றுவதற்கு முன்பே தமிழ் தோன்றியது. பல நாட்டினரும் பல சமயத்தினரும் தமிழ் பேசுகின்றனர். ஒரே பிறப்பில் நாட்டையும் சமயத்தையும் ஒருவர் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால், தாய்மொழியை மாற்றிக் கொள்ள இயலாது. எனவே, நாடுகள், சமயங்களைக் காட்டிலும் மொழி பெரிது என்று கருதாவிட்டாலும், அவற்றுக்குத் தருவதற்கு ஈடான மதிப்பை மொழிக்கும் தர வேண்டும்.
- கிரந்த ஒலிகள், எழுத்துகள் தேவைப்படுவோரைக் காட்டிலும் அவற்றின் தேவையின்றி வாழும் தமிழர் எண்ணிக்கை மிகக் கூடுதல். கிரந்தத்தை வலியுறுத்துவது தான் அவர்கள் மேலான உண்மையான திணிப்பு.
- தமிழரைத் தமிழில் எழுதும் போது தமிழ் ஒலிகளை மட்டும் பயன்படுத்துங்கள் என்று சொல்வது எவ்வாறு திணிப்பாகும்?
- பிற மொழி ஒலிப்புகள், அதை எழுதுவதற்கான தேவை ஏதோ புதிதாய் எழுந்தது இல்லை. தொல்காப்பியக் காலத்தில் தமிழருக்கு பிற மொழி, வட மொழியனருடன் தொடர்பு உண்டு. அதனாலேயே அச்சொற்களை எப்படி ஆள்வது என்று இலக்கணம் இயற்றப்பட்டது. வரலாற்றுக் காலம் நெடுகிலும் உலகம் முழுக்க வணிகத் தொடர்புகளைத் தமிழர் கொண்டிருந்திருக்கின்றனர். இத்தனைக் காலமும் கிரந்தம் இன்றி இருக்க வல்லதாய் இருந்தத் தமிழுக்குத் தற்போது மட்டும் கிரந்தத்தின் தேவை என்ன?
- புஷ்பா, ஹரீஷ் என்று எழுதினாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு புசுப்பா, அரீசு என்றே அழைக்க வருகிறது. அதை ஏன் புசுப்பா, அரீசு என்றே எழுதி விட்டுப் போகக்கூடாது?
- கண்ணன், திருமகள் என்று கிரந்த எழுத்துத் தேவையின்றி பிற மொழிச் சமயப் பெயர்களையும் தமிழாக்கி எழுதலாமே?
- சார்ச்சு புசு, சாக்கி சான் என்று எழுதினாலும் அவர்கள் யாரும் நம்மோடு சண்டைக்கு வரப் போவதில்லை. அவர்களே கண்டு கொள்ளாத போது நாம் ஏன் விழுந்து விழுந்து ஒலிப்புத் துல்லியம் காட்ட வேண்டும்?
- அச்சூடகங்களைக் காட்டிலும் இணைய ஊடகத்தில் ஒலிப்பைச் சுட்ட எழுத்துகளின் தேவை குறைவு. ஒலிக்கோபுகள் மூலமே ஒலிப்பை எளிதாகச் சுட்ட முடியும். வருங்காலம் முழுக்க முழுக்க இணைய மயமான உலகாக இருக்கும் என்பதால் ஒலிப்பைக் கற்பதற்கு எழுத்துகளை மட்டும் தங்கியிருக்கத் தேவை இல்லை.
- ஆங்கிலத்தில் 26 எழுத்துகள் மட்டும் இருப்பது கற்றுக் கொள்ள குழந்தைகளுக்கு இலகுவாக இருப்பதாகவும் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது சிரமமாக இருப்பதால் அதைக் குறைத்து எழுத்துச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் சொல்பவர்கள் மேற்கொண்டும் கிரந்த எழுத்துகளுக்காக (ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ) 66 மேலதிக எழுத்துகளைக் கற்கச் செய்வது ஏன்?