பயனர்:S.Parvatha krishnammal/மணல்தொட்டி
தமிழரின் அறிவியல் சிந்தனைகள்
முன்னுரை: கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி. ஒரு மொழியின் உயிர்ப்பு அம்மொழியில் தோன்றும் இலக்கியங்களையே சார்ந்து அமைகிறது. நம் தமிழ்மொழி,காதலின் மொழியாக, வீரத்தின் மொழியாக, நீதியின் மொழியாக இருந்த நிலை மாறி, இன்று எதனையும் ஆராய்ந்து மெய்ப்பொருளை அறியும் அறிவியல் மொழியாக நிலைபெற்று நிற்கிறது. "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"1
என்னும் அறிவியல் கோட்பாட்டைக் கூறும் வள்ளுவர் காலத்துக்கு முந்தைய சங்கத்தமிழ் இலக்கியங்கள் முதற்கொண்டு தற்கால இலக்கியங்கள் வரையிலும் தமிழரின் அறிவியல் உணர்வும், சிந்தனையும் விரவிக் கிடக்கின்றன.
பண்டைத் தமிழர்கள் உயிரியல்,இயற்பியல்,வேளாண்துறை,பொறியியல், மின்னணு பொறியியல், வானியல் முதலான பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கியமைக்குச் சான்றுகள் பல உள்ளன.
உலகம் பற்றிய சிந்தனை:
இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆகியது என்பதனைத் தொல்காப்பியர், "நிலம்தீ நீர்வளி விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்"2
என்கிறார்.
"மண்திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை"3
என்ற புறநானூற்றுப் பாடல் வரிகளும்,வானிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றின என்று கூறுகிறது. உயிரியல்:
உயிர்களின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை,டார்வின் "கூர்தல் அறம்"என்னும் கொள்கையால் விளக்குகிறார்.உயிரினங்கள் படிப்படியாகத் தோன்றி வளர்ந்து பரிணாம வளர்ச்சியின் இறுதியில் மனித இனமாக நிலைத்தது என்பது தொல்லாசிரியர்கள் கூறும் முடிபு. ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான உயிர்களை ஆராய்ந்து அறிந்திருந்தனர் தமிழர்கள் என்பதனை, "புல்லும் மரனும் ஓரறி வினவே நந்தும் முரளும் ஈரறி வினவே சிதலும் எறும்பும் மூவறி வினவே நண்டும் தும்பியும் நான்கறி வினவே மாவும் புள்ளும் ஐயறிவினவே மக்கள் தாமே ஆறறி வுயிரே"
என வரும் தொல்காப்பிய வரிகளால் அறியலாம். மாணிக்க வாசகரும் இதனை அடியொற்றியே,
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்"
என்று கூறுகிறார். இயற்பியல்:
திடப்பொருட்களை அளப்பது போலத் திரவப் பொருட்களைச் சுருக்கி அளக்க இயலாது. நீர்ப் பொருளுக்குச் சுருங்கும் தன்மை இல்லை என்பதை அறிவியல் பூர்வமாகக் கண்டு கூறியவர் 'பாஸ்கல்' என்னும் அறிவியல் அறிஞர். ஆனால் அவருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றிய ஔவையார், "ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது"
என்னும் அடிகளில், திரவப் பொருளின் தன்மையை எடுத்துக்கூறியுள்ளார்.