பயனர்:S.Sargurunathan/மணல்தொட்டி

ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரம்

காலத்தை வென்ற களப்பிரர் குடைவரையா ???

பல்லவரின் மற்றொன்றா?

குடைவரைக் கோவில்கள் என்றாலே நம் நினைவுக்கு வருபவர்கள் பல்லவர்களே. பல்லவ மன்னர்களிலும் குறிப்பாக விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி  என்ற பல பட்டங்களுக்கு உரியவரான மகேந்திரவர்மன் படைத்த குடைவரைகள் அனைத்துமே காலக் கலைப்பெட்டகங்கள் எனலாம். அவரே, மண்டகப்பட்டில் உள்ள லக்சித யதானனம் என்ற குடைவரையினை மரமும் செங்கல்லும் உலோகமும் இன்றி புதிய வகையில் படைத்த கோயில் எனக் கூறுவதன் மூலம் ஒருவகையில் அதுவே முதல் குடைவரையாக இருக்கக் கூடும் என்றே பலரும் கூறுவர். ஆனால், அக்கூற்றுக்கு மாற்று உரைக்கும் வகையில் தொல்லியல் அறிஞர் பெருமக்கள் கே.ஆர்.சீனிவாசன், நடன.காசிநாதன் போன்றவர்களுக்கு ஐயத்தைத் தந்துள்ள கோவில் ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரமேயாகும்.

மாற்றுக் கருத்துக்கள் ஏன்?

    இக்கோவில் பல்லவர் பாணியில் இருந்தாலும் மகேந்திரவர்மனின் தாமரைச் சின்னமோ, இடையில் இருக்கும் எண்பட்டைகளோ இல்லாமல் உள்ளது. நரசிம்மனின் சிங்கங்களும் இல்லை. குறிப்பாக தரையில் இருந்து குறைந்தது ஒரிரு அடிகள் உயரத்தில் அமைக்கப் பெறவில்லை. இப்படி பலவற்றைக் கூறினாலும் மாமண்டூர், விளாப்பாக்கம் குடைவரைத் தூண்கள்  நான்கு பக்க வடிவிலேயே உள்ளதைக் காணமுடியும். மேலும் உருத்ரவாலீச்வரம் என்றழைக்கப் பெறும் மாமண்டூர் குடைவரையும் இக்குடைவரை போன்றே தரைமட்டத்தில் அமைக்கப் பட்டுள்ளதையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால் இது பல்லவர் குடைவரையே எனக் கூறமுடியும். அதேசமயம் ,இக்குடைவரைக்கு வரும் பாதையும் மண்டபங்கள் உள்ள இடங்களும் மேடாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம் என்ற கருத்தோடு எண்ணினாலும் பல்லவர் குடைவரை என்பதை மறுக்க முடியாது.

    இவையெல்லாம் ஒருபுறமிருக்க அறிஞர்களின் கருத்து மாற்றத்திற்குக் காரணமாக உள்ளது அதிலுள்ள கல்வெட்டேயாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் சார்வபௌமனான சந்த்ராதித்யன் என்ற மன்னன்  ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரம் என்ற இக்குடைவரையினை சிவனுக்காக சிங்கபுரத்தில் படைத்தான் என இக்கல்வெட்டினைப் படித்து சந்திராதித்யன் என்ற பல்லவ சிற்றரசன் வெட்டிய கோவில் என முடிவெடுக்கிறார். ஆனால், கே.ஆர். சீனிவாசன் அவர்களோ சந்த்ராதித்யன் என்ற பெயரில் எந்த பல்லவ மன்னனும் அறியப்படவில்லை. மேலும் ஸ்ரீ சிகாரி என்ற பெயர் பல்லவர் பெயரில்லை. ஆதித்யன் என்பதும் சாளுக்கிய மரபினைச் சார்ந்தது. குறிப்பாக, சந்திராதித்யன் என்பவன் பல்லவர்களின் முதன்மை எதிரியான இரண்டாம் புலிகேசியின் மகன் என்றிருப்பதால் இக்கருத்து ஆய்வுக்குரியது. சாளுக்கியரின் பட்டயம் ஒன்றில் விஜயமாகாதேவி என்ற இளவரசியை போத்தி  (போத்தன் – பல்லவர் பெயருள் ஒன்று) என்று அழைப்பதன் மூலமாக , ஒருவேளை பல்லவருடன் ஏற்பட்ட மணவினை காரணமாக இக்குடைவரை அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறார். அதனோடு, இக்கல்வெட்டின் எழுத்தமைதியும் நரசிம்மன் காலத்தைச் சார்ந்தது என ஃபிரெஞ்சு ஆய்வாளர் துப்ராயில் அவர்கள் கருதுவதால் இக்குடைவரை நரசிம்மன் காலத்தில் அமைக்கப் பெற்றிருக்கலாம். சிங்கபுரம் என்ற பெயரே நரசிம்மன் அல்லது அவன் பாட்டனான சிம்மவிஷ்னுவின் பெயரால் அமைந்திருக்கலாம். மேலும்,இக்குடைவரை மகேந்திரன் காலத்திய அழகின்றி எளிமையாக உள்ளது. சிவலிங்கமும் மகேந்திரனின் குடைவரைகளில் வேறெங்கும் இல்லாத வகையில் கருவறையில் உள்ள பாறையிலேயே ஆவுடையாருடன் செதுக்கப் பெற்றுள்ளது. ஆகவே, பல்லவ நாட்டில் உள்ள குடைவரை என்று மட்டுமே இதனைக் கூறமுடியும் எனக் கூறுவதன் மூலம் காலத்தை அறுதியிடாது, இது பல்லவர் குடைவரையில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்.

    அறிஞர்.நடன.காசிநாதன் அவர்களோ, பொன்னிவாடி, வெள்ளலூர் ஆகிய இடங்களில் சந்திராதித்யன் என்ற களப்பிர மன்னனின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளதால்  , குறிப்பாக, களப்பிரரை வென்ற சிம்மவிஷ்னுவின் காலத்தில் களப்பிர சிற்றரசன் சந்திராதித்யன் மனைவி ஸிக்வரி என்பவளால் பேரரசன் சிம்மவிஷ்னுவின் நல்வாழ்வை முன்னிட்டு அமைக்கப் பெற்றிருக்கலாம் எனக் கருதுகிறார். இக்கருத்து உண்மையானால் வடதமிழகத்தின் முதல் குடைவரை என்ற பெருமை மண்டகப்பட்டிலிருந்து சிங்கபுரம் என்ற தற்போதைய மேலச்சேரிக்கே உரித்தாகும். பல்லவர் குடைவரைகளைக் காட்டிலும் ஒரு சில பாண்டியர் குடைவரைகள் காலத்தால் முந்தியவை எனக் கருதப்படுவதால் வட தமிழகம் எனக் குறிப்பிட்டுள்ளேன்.

    இத்தனை கருத்து மாறுபாடுகளை எழுப்பி நிற்கும் இக்கோவில் செஞ்சிக்கு வடதிசையில் திருநாதர் குன்று மற்றும் சிங்கவரம் அரங்கநாதர் குடைவரை ஆகியவற்றைக் கடந்து மேல்மலையனூர் செல்லும் பாதையில் உள்ளது. தற்போது மேலச்சேரி என்றழைக்கப்பெறும் ஊரின் வெளியே, ஒரு பாறைக்குன்றின் மேற்கு திசையில் உள்ள இக்குடைவரைக்கு  வழியறிந்தோர் உதவியின்றி செல்லுதல் சற்று கடினமே. ஆனால், வருத்தம் பாராது வழியிடைச் சென்றால் வரலாற்றின் மௌன சாட்சியாக காலங்களைக் கடந்து பொலிவிழந்து காணப்படும் இக்கோவிலக் காணலாம். காணும் போதே அவலநிலையை வெளிப்படுத்தினாலும், காலங்காலமாக இக்குடைவரையில்  தொடர்ந்து வழிபாடு நடந்துள்ளதை பல்வேறு கட்டுமானங்களும் காட்டுகின்றன.

          மாமல்லபுரம், மாமண்டூர், வல்லம் போன்ற ஊர்களில் உள்ள சில குடைவரைகளின் முகப்பில் ஆழ்ந்த குழிகள் இருப்பதை பலரும் கண்டிருப்போம். எதற்காக என்று அறிய முடியாமல் தவித்து, ஒருவேளை முன்பக்கத்தில் கட்டுமானங்கள் இருந்திருக்குமோ என்ற ஐயுற்றோருக்கு சிறந்தவிடையாக இருக்கப்போவது இக்குடைவரை. ஏனெனில், தற்போது வழிபாட்டில் இருக்கும் பல குடைவரைகளைப் போல இங்கும் ஒரு மகாமண்டபம் உள்ளது. அதுவும் இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதால் மண்டபம் இருந்ததற்கான அடையாளத்தோடு பழைய நிலைக்கேச் செல்ல குடைவரை  காத்திருக்கிறது. ஒருவேளை மண்டபம் இல்லாதிருப்பின் குடைவரை வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். வருத்தம் ஏற்படாது. ஆனால் ,இருந்த ஒன்றை இழக்கும்போது நெருடல் ஏற்படத்தானே செய்யும்.

          மண்டபத்தை அடுத்துள்ள முன் மண்டபத்தின் வலப்பக்கத்தில் பிற்கால புடைப்புச் சிற்பம் உள்ளது. மேலும், இடப்பக்கமாக செங்கல் சுவருக் கிடையே தனிக் கல்லில் செதுக்கப்பெற்ற பிள்ளையார் சிற்பமும் இடம் பிடித்துள்ளது. கோவிலுக்கு வெளியே அழகிய நந்தியும் உள்ளது. இதன், முன்னங்காலுக்கருகில் உள்ள சிறிய லிங்கமும் கழுத்திலுள்ள கொம்பு / பல் போன்ற அணிகலனும் மற்ற நந்திகளிடமிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. நந்தியின் பின்னர்  அகல்களை ஏற்றி வைக்க இடமளித்துள்ள கொடிமரமும் பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை நினைவூட்டும் வகையில் சாய்ந்து வருகிறது. கோவிலையொட்டியே ஒரு காலத்தில் சிறந்தோங்கி யிருந்த மண்டபம் ஒன்றும் முற்றிலும் சிதைவடைந்த நிலையில் காட்சி யளிக்கின்றது. மாமண்டூரில் உள்ள பல்லவர் குடைவரைக்கு அருகில் உருவாக்கப்பட்ட சித்திர மேக தடாகம் போன்றே, தற்போது சந்நியாசி ஏரி என அழைக்கப் பெறும் ஒரு ஏரியும் இங்குள்ளது. அந்த ஏரியும் இல்வாழ்க்கை யைத் துறந்து சந்நியாசம் போனவர்களைப் போல நீராழி மண்டப்பத்தைத் தவிக்கவிட்டு இக்கார் காலத்திலேயே நீரற்ற நிலையில் உள்ளது. இவைதவிர, இறைவுருவங்கள் ஏதுமின்றி இரு சிறு கோவில்களும் உள்ளன. காண்பதற்கே வருத்தமளிக்கும் வகையில் உள்ள இக்கோவிலை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமையாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.Sargurunathan/மணல்தொட்டி&oldid=2501891" இலிருந்து மீள்விக்கப்பட்டது