பயனர்:Subiksharaman1/மணல்தொட்டி

முன்னுரை

சிங்கப்பூர்-சீன சூசௌ தொழிற்பூங்கா எனப்படும் எஸ் ஐ பி, சீனாவின் சூசௌ நகரத்தில் அமைந்துள்ள தொழிற்றுறைப் பூங்கா ஆகும். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்துடன், 30 பில்லியன் வெள்ளிச் செலவில் உருவான இத்தொழிற்பூங்கா, சிங்கப்பூர்-சீன இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. சிங்கப்பூரில் தழைத்திருக்கும் நவீன தொழில்நுட்பத்தையும், புத்தாக்கத் திறன்களையும் சீனாவின் ஊழியரணிக்கு இடம் மாற்றுவதன்மூலம் இரு நாடுகளின் பலங்களான மென் திறன்களையும் உடல் உழைப்பையும் ஒருங்கிணைத்து லாபங்களைப் பெருக்கலாம். இந்த உத்தியைக் கருத்தில் கொண்டே சூசௌ தொழிற்பூங்காவை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

பின்னணி

1980களில் சீனா மேன்மேலும் நாகரீக வளர்ச்சி காணத் துவங்கியபோது, பல துறைகளிலிருந்தும் சீன அதிகாரிகள் சிங்கப்பூருக்கு வருகை புரிந்தனர். சுதந்திரம் பெற்ற முப்பது ஆண்டுகளில் மீன்பிடி கிராமத்திலிருந்து தென்கிழக்காசியாவின் பொருளாதாரப் புலியாய் சிங்கப்பூர் மாபெரும் வளர்ச்சியடைந்திருந்தது. அத்தகைய சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி உத்திகளையும் வழிமுறைகளையும் கற்க சீனா விரும்பியது. அதே சமயத்தில், சிங்கப்பூரும் ஆசிய பொருளாதாரத்தில் முக்கிய இடம்பெற விழைந்ததால், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வழிமுறைகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் திட்டமிட்டுக்கொண்டிருந்தது.

சிங்கப்பூரில் கடைப்பிடிக்கபட்டிருந்த சமூக ஒழுங்கையும் ஊழியரணியின் பட்டறிவையும் சீனாவின் அக்காலப் பிரதமர் டெங் சியாவ் பிங் கண்டார். அவர் சிங்கபூரின் நிர்வாகத் திறன்களைச் சீனாவின் உழியரணியோடு பகிர்ந்துகொள்ளும் திட்டத்தையும், நவீன தொழிற்றுறைப் பூங்கா ஒன்றைச் சிங்கப்பூருடன் உருவாக்கும் திட்டத்தையும் 1992இல் நடந்த தம் தெற்குச்சீனப் பயணத்தின்போது முன்வைத்தார். சிங்கப்பூரின் சமூக, பொருளாதார வளர்ச்சியிலிருந்து சீனா கற்கவேண்டியது நிறைய உள்ளது என்றும் அவர் கூறினார்.

பல கலந்துரையாடல்கள் மற்றும் இட ஆய்வுகளுக்குப் பின்னர், 18 டிசம்பர் 1992 அன்று, இரு அரசாங்கங்களும் கைகோர்த்து சூசௌ நகரத்திற்குக் கிழக்கில் ஒரு நவீன தொழிற்றுறைப் பூங்காவை அமைக்கச் சம்மதித்தன. இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அன்றைய பிரதமர் திரு லீ குவான் யூ அவர்கள், தொழிற்றுரை பூங்காவின் உருவாக்கத்தில் சிங்கப்பூர் முன்னர் கையாண்டுள்ள உத்திகளையும், சிங்கப்பூர் ஊழியரணியிடம் இருந்த திறன்களையும் சீனாவுடன் பகிர்ந்துகொள்ளச் சம்மதித்தார். இவ்வாறு, 26 பிப்ரவரி 1994இல், சீனத் துணைப் பிரதமர் லீ லான் ஜிங்கும் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவும் கையெழுத்திட்டு சம்மதம் தெரிவிக்க, சிங்கப்பூர்-சீன சூசௌ தொழிற்பூங்கா உருவானது. இதே நாளன்று, முதலீடுகளின் பங்கில் 65 விழுக்காடு ‘சிங்கப்பூர்-சூசௌ பட்டண வளர்ச்சி’ எனும் சிங்கப்பூர் தனியார் நிறுவனத்திற்கும், மீதம் 35 விழுக்காடு ‘சூசௌ ஒருங்கிணைந்த வளர்ச்சி நிறுவனம்’ என்ற சீன நிறுவனத்திற்கும் செல்லவேண்டும் என்று விதிக்கப்பட்ட ஒப்பந்தத்திலும் அரசுபூர்வமாகக் கையெழுத்திடப்பட்டது. எஸ் ஐ பீயின் தொடக்கத்திற்குச் சில வருடங்கள் கழிந்த பிறகு, சீனப் பிரதமர் வூ யீயும் சிங்கப்பூர் துணைப் பிரதமர் வோங் காங் செங்கும் இணைந்து முன்னணி வகுக்கும் சிங்கப்பூர்-சீன கூட்டு சபை, எஸ் ஐ பீயின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஆணைகளைப் பிறப்பிக்க ஒவ்வொரு வருடமும் கூட்டம் ஒன்றை நடத்தும் என்று முடிவு செய்யப்பட்டது.

தொழிற்றுறைப் பூங்காவை உருவாக்க சூசௌ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலில், அக்காலத்தில் சூசௌ நகரத்தின் பொருளாதாரம் இன்னும் அதன் உச்சியைத் தொடவில்லை. பெய்ஜிங், ஷாங்ஹாய் முதலிய பெரிய நகரங்களில் பொருளாதாரம் ஏற்கனவே தழைத்து ஓங்கியிருந்தது. பொருளாதாரம் மங்கியிருந்த சூசௌ நகரத்தில் தொழிற்றுறைப் பூங்காவை அமைத்தால், வர்த்தகமும் வணிகமும் அதிகரித்து சூசௌ நகரம் பயன்பெறும் என்ற எண்ணத்துடன் இவ்விடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மொத்தம் 288 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ள எஸ் ஐ பீயில் 80 சதுர கி.மீ. பரப்பளவு சிங்கப்பூர்-சீன அலுவலகங்களால் பயன்படுத்தப்படுகிறது. இதில், மக்கள் தொகை 1.2 மில்லியனை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.

ஜிஞ்சி ஏரி (சீனத்தில் “பொன் கோழி ஏரி” என்று பொருள்) சூசௌ தொழிற்பூங்காவின் நடுவில் அமைந்திருக்கும் நன்னீர் ஏரியாகும். 7.18 சதுர கி.மீ. பரப்பளவும், ஏறக்குறைய 2.5 முதல் 3 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது இந்த ஏரி. அதோடு, ஜிஞ்சி ஏரியில் இரண்டு செயற்கைத் தீவுகளும் அமைந்துள்ளன.

தொழிற்பூங்காவின் தொடக்கம்

தொழிற்பூங்கா நிறுவப்பட்ட தொடக்கத்தில், அது இயங்குவதற்குத் தேவையான நீர், எரிசக்தி மற்றும் மின்சாரம் இல்லை. அதனால், தூய்மையான நீரைத் தேடுவது, நீண்டகாலம் நீடிக்கும்படியான எரிசக்தியை சேமிப்பது, மற்றும் வீண்பொருட்களை மின்சக்தியாக மாற்றும்வதற்கான வசதிகளை உருவாக்குவது, ஆகிய பணிகளை முதலில் செய்துமுடிக்கவேண்டியிருந்தது.

12 மே 1994ஆம் தேதியன்று துவங்கிய பணிகள், சூசௌ நகரத்திலிருந்து மின்பயன்பாட்டுக் கம்பிகளைத் தொழிற்பூங்காவுடன் தொடர்பு செய்யும் வேலையுடன் தொடங்கின. 8 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இடம், எஸ் ஐ பீயின் வளர்ச்சியின் முதல் கட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 22 மே 1995இல், எஸ் ஐ பீயின் முதல் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் அவ்விடத்தில் ஆரம்பித்தன.

1997க்குள் எஸ் ஐ பீயின் கட்டுமானப்பணிகள் பெரும்பாலும் முடிவடைந்திருந்தன. சிங்கப்பூர் சுற்றுச்சூழலைப் போலவே, மரங்களும் செடிகளும் இருமருங்கும் சூழ்ந்திருக்கும் சாலைகளுடன், இயற்கை வளமும் நவீன கட்டமைப்பும் சந்திக்கும் இடமாக எஸ் ஐ பீ காட்சியளித்தது.

முதலீடுகள்

செப்டம்பர் 1994இல் எஸ் ஐ பீயின் முதல் 14 முதலீட்டாளர்கள் ஒப்பந்தங்களின்மூலம் எஸ் ஐ பீயுடன் வர்த்தகம் நடத்த சம்மதித்தனர். அவர்களில், சிங்கப்பூரிலிருந்து ஏழு பங்குதாரர்களும், அமெரிக்காவிலிருந்து மூன்று பங்குதாரர்களும், தென் கொரியா, நியூசிலாந்து, ஹாங் காங், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் நான்கு பங்குதாரர்களும் அடங்குவர். இவர்களுள் ஆகப் பெரிய முதலீட்டாளர் தென் கொரியாவின் சாம்சங் மின்னிலக்க நிறுவனம் ஆகும்; அதற்கடுத்து, நியூசிலாந்தின் லயன் நேதன் எனும் மதுபான உற்பத்தி நிறுவனம் வரிசையில் இரண்டாவதாகும்.

தூஷூ ஏரி மேற்கல்வி பட்டணம்

எஸ் ஐ பீயில் கல்வி பயில்வதற்காக சூசௌ தூஷூ மேற்கல்விப் பட்டணத்தைச் சீன அரசாங்கம் அமைத்துத்தரத் திட்டமிட்டிருந்தது. தூஷூ ஏரிக்குக் கிழக்கில் அமைந்துள்ள இக்கல்விப் பட்டணம், 25 சதுர கி.மீ. பரப்பளவுடனும் 2016ஆம் ஆண்டில் 400,000 மக்கட்தொகையுடனும் திகழவிருக்கும். இவர்களில் 100,000 பேர் மாணவர்களாவர். பயிலும் மாணவர்களுக்குத் தரமான கல்வி, வேலையிடத்தில் உதவும் புத்தாக்கத் திறன்கள், நவீன தொழில்நுட்ப வசதிகள், சுகமாக வாழ்வதற்கான சுற்றுச்சூழல், முதலியவற்றை அளிப்பதே இக்கல்விப் பட்டணத்தின் முழுமுதல் நோக்கமாகும். அத்துடன், பட்டப்படிப்பும், முதுகலைப்படிப்பும் வழங்கும் பல உள்ளூர் மற்றும் வெளியூர் பல்கலைக்கழகங்களும் இப்பட்டணத்தில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்காக, நூலகங்கள், பொழுதுபோக்கு வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு நிலையங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் போன்ற பலதரப்பட்ட வசதிகளும் இப்பட்டணத்தில் அடங்கும். குறிப்பாக, வென்சிங் பிளாசாவும் ஹான்லின் பிளாசாவும், உணவகங்களும் கடைகளும் நிறைந்த பிரபல இடங்களாகும்; தூஷூ ஏரி நூலகம், தேசிய மின்னிலக்க நூலகத்தின் பரிசோதனை நூலகமாகும். 

சீயான் ஜியாவ்டோங்-லிவர்பூல் பல்கலைக்கழகம்

சீன கல்வி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட முதன்முதல் சீன-பிரிட்டிஷ் (Sino-British) பல்கலைக்கழகம் சூசௌ தொழிற்பூங்கா மேற்கல்வி பட்டணத்தில், மே 2006இல் திறக்கப்பட்டது. சீயான் ஜியாவ்டோங் பல்கலைக்கழகமும் லிவர்பூல் பல்கலைக்கழகமும் இணைந்து துவங்கிய இந்த சுயேச்சைப் பல்கலைக்கழகத்தில், உயிரியல், வேதியியல், பொதுச் சுகாதாரம், கட்டுமானக் கல்வி, நகரக் கட்டமைப்புக் கல்வி, மின்னிலக்கவியல், கணிதம், பொறியியல், தொடர்பியல், கணினி அறிவியல், வர்த்தகக் கல்வி, நிர்வாகக் கல்வி, சீனக்கல்வி, ஆகிய பாடங்கள் வழங்கப்படுகின்றன. முழுமையாக இயங்கத் துவங்கியபின் 14000 மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயில்வர் என்று யூகிக்கப்பட்டுள்ளது. 

சூசௌ புது வட்டாரம்

சூசௌ தொழிற்றுறைப் பூங்கா கட்டப்பட்டுக்கொண்டிருந்த அதே வேளையில், சூசௌ நகர அரசால் திட்டமிடப்பட்ட சூசௌ புது வட்டாரமும் உருவாகிக்கொண்டிருந்தது. சூசௌ நகர அரசு எஸ் ஐ பீயில் 35 விழுக்காடு மட்டுமே பங்கு கொண்டிருந்ததால், அது 1997இலிருந்து சூசௌ புது வட்டாரத்தின் வளர்ச்சிக்கும், அதிலிருந்து வரும் முதலீடுகளைப் பெருக்குவதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, எஸ் ஐ பீயின் மேம்பாட்டைப் பெரிதும் நிராகரித்து வந்தது. இதனால் சூசௌ புது வட்டாரத்திற்கும் எஸ் ஐ பீக்கும் இடையே வர்த்தகப் போட்டி அதிகரித்தது; அத்துடன், ஜப்பானிய நிறுவனங்களிலிருந்து கிடைத்த பெரும் ஆதரவினால் சூசௌ புது வட்டாரம் எஸ் ஐ பீயை விட அதிக அளவு லாபங்களை ஈட்டியது. இதன் விளைவாக, 1997இல் நிகழ்ந்த ஆசிய பொருளாதார மந்தநிலையின்போது, எஸ் ஐ பீ பெருமளவில் பாதிக்கப்பட்டது. மற்ற நாடுகளிலிருந்து முதலீடுகள் வெகுவாகக் குறைந்ததோடு மட்டுமல்லாமல், சூசௌ புது வட்டாரம் எற்படுத்திய போட்டித்தன்மையினால் எஸ் ஐ பீ ஐந்து வருடங்களில் சுமார் 90 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இழப்பீடுகளையும் எதிர்கொண்டது.

டிசம்பர் 1997இல், சீன அரசியல்வாதிகளுடன் இப்பிரச்சனையைப்பற்றி கலந்தாலோசிக்க, திரு லீ குவான் யூ அவர்கள் சீனாவுக்குப் பயணித்தார். திரு லீயின் கோரிக்கைக்கு இணங்கி சீன அதிபர் ஜியாங் ஜேமின் தமது நாடு எஸ் ஐ பீக்குப் பங்களிப்பதாக வாக்களித்தார்; அதோடு, எஸ் ஐ பீயில் பங்கு வகிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தி, அவர் எஸ் ஐ பீயின் வளார்ச்சியை ஊக்குவித்தார்.

இதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் எஸ் ஐ பீயின் முன்னேற்றத்திற்காக சூசௌ புதிய வட்டாரத்தின் வளர்ச்சியை ஐந்து வருடகாலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தது. ஆனால் சீன அரசு இதற்கு சம்மதிக்கவில்லை.

பிறகு, சிங்கப்பூர் அரசாங்கமும் சீன அரசாங்கமும் 28 ஜூன் 1999இல் புரிந்துணார்வு படிவம் ஒன்றின்மூலம் ஒரு முடிவெடுத்தனர். சிங்கப்பூர் எஸ் ஐ பீயில் வகித்த பங்கு 65 விழுக்காட்டிலிருந்து 35 விழுக்காட்டிற்குக் குறைந்தது; அத்துடன், சீன அரசின் பங்கு 35 விழுக்காட்டிலிருந்து 65 விழுக்காட்டிற்கு அதிகரித்தது. இதனால், தொழிற்பூங்காவில் சிங்கப்பூருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடப்பரப்பளவு 70 சதுர கிலோமீட்டரிலிருந்து 8 சதுர கிலோமீட்டருக்குக் குறைந்தது. இதைத் தொடர்ந்து, எஸ் ஐ பீயின் பெரும்பாலான பொறுப்புகள் சிங்கப்பூரிடமிருந்து சீன அரசங்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன. சீன அரசாங்கம், சூசௌ நகரத்தின் துணைத் தலைவரும், சூசௌ புதிய பட்டணத்தின் முந்தைய தலைவருமான வாங் ஜின்ஹுவா அவர்களை எஸ் ஐ பீயின் புதிய தலைவராக நியமித்தது. இந்த மாற்றங்களால் சூசௌ நகர அரசு எஸ் ஐ பீயின் வளர்ச்சிக்கே முதலுரிமை கொடுக்கவேண்டியிருந்த சூழல் உருவாகியது.

அண்மைய வளர்ச்சிகள்

2001இல் எஸ் ஐ பீ வெளிநாடுகளிலிருந்து பெரும் முதலீடுகளைப் பெறத் துவங்கியது. உதாரணத்திற்கு, டச்சு பன்னாட்டு நிறுவனமான ஃபிலிப்ஸ், எஸ் ஐ பீயில் தனது முதல் தொழிற்சாலையைத் திறந்தது; தைவானிலிருந்து வந்த பல வர்த்தக முதலீடுகளின்மூலம் கோடிக்கணக்கான லாபங்களைச் சேர்த்தது. அவ்வருடம்முதல், எஸ் ஐ பீ லாபங்களையே சந்தித்து வருகிறது.

24 ஆகஸ்ட் 2006 அன்று சிங்கப்பூரின் அன்றைய துணைப் பிரதமர் வாங் காங் செங்கும் அன்றைய சீன துணைப் பிரதமர் வூ யீயும் 70 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டிருந்த எஸ் ஐ பீயை இன்னும் பெரிதாக்க ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். தொழிற்பூங்காவிலிருந்து வெளியேயும், வெளியிலிருந்து உள்ளேயும் செல்லும் விளைபொருட்களின் பரிமாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான சேவைகளுக்காக இடம் தேவைப்பட்டதால் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

மார்ச் 2011க்குள், சூசௌ தொழிற்பூங்காவின் பங்குதாரர்களில் சுமார் 50 விழுக்காட்டினர் அமெரிக்க அல்லது ஐரோப்பிய நிறுவனங்களாக இருந்தன; 22 விழுக்காட்டினர் தைவான், ஹாங் காங் அல்லது மகாவ்வைச் சேர்ந்த நிறுவனங்கள்.

இன்று, எஸ் ஐ பீ மாபெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது. நவீன, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கும் சூசௌ தொழிற்பூங்காவின் கட்டமைப்பு, வர்த்தக செயல்திட்டங்கள் ஆகியவை, நாண்டோங், சூசியென் போன்ற பல்வேறு சீன நகரங்களின் பொருளாதார வளார்ச்சிக்காக இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.     

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Subiksharaman1/மணல்தொட்டி&oldid=2251147" இலிருந்து மீள்விக்கப்பட்டது