பயனர்:SuriaNilaven/மணல்தொட்டி

சிங்கப்பூர் இராட்டினம் (Singapore Flyer)

சிங்கப்பூர் இராட்டினத்தின் ஆரம்ப கால வரலாறு

     சிங்கப்பூர் இராட்டினத்தின் அடிக்கல் நாட்டுவிழா 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய அபிவிருத்தி அமைச்சர் திரு மாஹ் பவ் டான் கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 13-ஆம் தேதி உலகிலேயே மிகப்பெரிய சுழல் சக்கரம் நிறுவப்பட்டது. 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி சிங்கப்பூர் இராட்டினத்தின் விளிம்பு கட்டி முடிக்கப்பட்டது. 2007-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தேசியக் கட்டுமான ஆணையம் பச்சைப் புள்ளி கொடுத்து விருது வழங்கிச் சிறப்பித்தது.

2008ஆம் ஆண்டு பிப்ரவரி 11 முதல் 13 வரை உள்ள நாள்களில் சீனப் புத்தாண்டிற்காகச் சிங்கப்பூர் இராட்டினம் அந்நிறுவன வாடிக்கையாளர்களுக்கு முதன்முறையாகச் செயல்பட்டது. அதற்குப் பிறகு, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாகச் சிங்கப்பூர்ப் பிரதமர் திரு லீ சியன் லுங் 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி சிங்கப்பூர் இராட்டினத்தைத் திறந்து வைத்தார். திறந்து வைத்த பிறகு சிங்கப்பூர் இராட்டினத்தின் நுழைவுச்சீட்டுகளின் விற்பனை சுமார் ஒரு மில்லியன் புள்ளிகளைக் கடந்தது. சிங்கப்பூர் இராட்டினம் தன் முதல் பிறந்த நாளை 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி கொண்டாடியது. அன்றைய தினம் 1.9 மில்லியன் பார்வையாளர்கள் சிங்கப்பூர் இராட்டினத்தைப் பார்வையிட்டனர்.

உலகிலேயே பெரிய இராட்டினமான சிங்கப்பூர் இராட்டினம் 2008 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு 28 ஜூலை மாதத்தில் இராட்டினம் சுற்றும் திசை மாற்றப்பட்டது. முன்பு மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசை நோக்கிச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலிருந்து மேற்குத் திசை நோக்கிச் சுற்றுமாறு மாற்றப்பட்டுள்ளது.

கட்டமைப்பும் வடிவமைப்பும்

இராட்டினம் கிஷோ டாக்டர் குரோகவா என்பவராலும் (Dr. Kisho Kurokawa) ‘டீ.பி’ வடிவமைப்பாளர்களாலும் வடிவமைக்கப்பட்டது. இதன் கட்டுமானப் பணி இரண்டரை வருடங்கள் வரை நீடித்தது. இதன் கட்டுமானத்திற்கான தொகை 240 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளியாகும். சிங்கப்பூர் இராட்டினம் 165 மீட்டர் உயரத்தையும் 150 மீட்டர் அகலத்தையும் கொண்டது. இந்த இராட்டினம் உள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 33,700மீ2. அதாவது, 172 டென்னிஸ் மைதானத்தின் அளவுடையது. சிங்கப்பூர் இராட்டினத்தின் ஒரு பயணம் அதாவது ஒரு முறை சக்கரம் சுழன்று வர 32 நிமிடங்கள் வரை நீடிக்கும். 784 பயணிகள் இந்த இராட்டினத்தில் ஒரே நேரத்தில் பயணிக்கலாம். மேலும், அதில் 28 குளிரூட்டப்பட்ட பெட்டிகள் உள்ளன. சிங்கப்பூர் இராட்டினத்திலுள்ள ஒரு பெட்டியில் 28 நபர்கள் அமரலாம். இரவு நேரத்தில், இராட்டினத்தில் அரை மணி நேர சுழற்சியில் மலேசியா, இந்தோனேசியா போன்ற இரண்டு நாடுகளையும் பார்க்குபடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது இந்தச் சிங்கப்பூர் ராட்டினம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SuriaNilaven/மணல்தொட்டி&oldid=2251096" இலிருந்து மீள்விக்கப்பட்டது