பயனர்:TNSC RAJESWARI NIL/மணல்தொட்டி

எழில்மிகு பந்தலூர்

தொகு

முன்னுரை

தொகு

வரலாறு என்பது ஒருவருடைய பிறப்பில் ஆரம்பித்து இறப்பில் முடிவதில்லை. இறந்தகாலத்தில் வேர்பாய்ச்சி நிகழ்காலத்தில் துளிர்த்து செழித்து வளரும் மரம் போன்றது. "நீங்கள் எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டுமெனில் கடந்தகாலத்தை படியுங்கள்" என்றார் கி.மு. 500ல் வாழ்ந்த சீன தத்துவஞானி கன்பூசியஸ். எனவே உண்மையான வரலாற்றை பற்றி கற்பதும் விவாதிப்பதும் அவசியமாகிறது.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகைமனிதனின் மரபணுவானது 99.7% தற்கால மனிதனைப்போலவே இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அப்படியானால் அவன் வாழ்ந்த வாழ்வும், கற்ற அறிவும், அனுபவங்களும் நம் ஒவ்வொருவரின் அணுவிலும் இருக்கும் எனில் நாம் அனைவரும் ஒரு பெரும் வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதில் ஐயமில்லை. எனவே வரலாற்றை அறிவதென்பது நம்மைப்பற்றி நாமே அறிவது, நம் வாழ்க்கையை அர்த்தமாக்கக்கூடியது எனலாம். வரலாறு என்பது வெறும் அரசர்களின் வாழ்க்கையும் , போர்களும், அவற்றின் வர்ணிப்புகளும், வருடங்களும் அடங்கிய தொகுப்புகள் மட்டுமல்ல. அது நம் முன்னோர்களின் வாழ்விடத்தையும், வாழ்வியலையும், போராட்டங்களையும், நம்பிக்கைகளையும், அவர்களின் தனித்துவத்தையும் உள்ளடக்கிய காலபெட்டகம். கடந்தகாலத்தை நம்மோடு இணைத்து நம்மில் பயணம் செய்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் காலயந்திரம்.

பந்தலூர்

தொகு

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அடர்த்தியான காடுகளும், பல்லுயிர் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களும், இவைகளோடு இணைந்து வாழ்ந்த பழங்குடியின மக்கள் என அமைதியாய் இருந்த குறிஞ்சி நிலம் பந்தலூர். பழமொழிகள் மற்றும் வாய்மொழி கதைகள் பல இருப்பினும், தரவுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு வரலாற்றை பதிவுசெய்யும் முயற்சி. (அப்பகுதியின் நிலப்பரப்பு, மக்களின் வாழ்க்கை சூழல், உணவு பழக்கவழக்கங்கள், மன்னர்களின் ஆட்சி, ஆங்கிலேயர்களின் வருகையையொட்டி உருவான பணப்பயிர் தோட்டங்கள், மானிட இடப்பெயர்ச்சி, அதனால் விளைந்த பருவ மாற்றங்கள், வாழ்வியல் போராட்டங்கள் என இவ்விடத்தின் வரலாற்று பதிவுகளுக்கான வலைதளம். )

18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பந்தலூரில் நீதிமன்றம் , குதிரை பந்தைய மைதானம் , குடியிருப்பு வளாகம், ராணுவ முகாம் , காவல் நிலையம் மற்றும் அங்காடிகள் ஆகியவை இருந்தன. ஆங்கிலேயர்களின் மீள்மம்*, காப்பி மற்றும் தேயிலைத்தோட்டங்களிலும், தங்கம் மற்றும் மைகா சுரங்கங்களிலும் உள்ள புதிய வேலை வாய்ப்புக்களும், பஞ்சத்தின் காரணமாக அன்றைய சென்னை மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்து தமிழ், மலையாள மற்றும் கன்னட மக்களின் இடப்பெயர்ச்சியின் தொடர்ச்சியாகத்தான் இன்றும் முக்கிய அரசு அலுவகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பந்தலூரில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தக்கது.

உலகில் உள்ள அதிக பல்லுயிர்ப் பெருக்க பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையும் இடம்பெறுகிறது. 1986 ஆம் ஆண்டு யுனஸ்கோவால் அறிவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகம் நீலகிரி மலைதான். சுமார் 5560 ச.கி.மீ பரப்பளவுடன் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் என மூன்று மாநில எல்லைப்பகுதிகளை உள்ளடக்கிய இந்த உயிர்க்கோள காப்பகத்தில் முட்பதர்காடு, வறண்ட இலையுதிர்காடு, பசுமைமாறாக்காடு, மலைக்காடுகள், சோலைவனம், புல்வெளிகள் மற்றும் ஈரப்புலங்கள் என பல்வகைக்காடுகள் காணப்படுகிறது. இந்த உயிர்க்கோள் காப்பகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் பந்தலூரிலும் இவ்வகை காடுகளை காண முடியும்.

விலங்குகள்

தொகு

நீலகிரி வரையாடு, நீலகிரி குரங்கு, தேவாங்கு, மலபார் மலை அணில், வெளிமான், புலி, குரைக்கும் மான், காட்டெருமை மற்றும் ஆசிய யானை போன்றவை பொதுவாக காணப்படும் விலங்குகள் ஆகும். இங்கு ஒரே வாழிடத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிய யானைகள் வாழுந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பறவைகள்

தொகு

கொண்டைக்குருவிகள், ஈப்பிடிப்பான்கள், சில்லைகள், சிட்டுகள், காகங்கள், மரங்கொத்திகள், வானம்பாடிகள், பஞ்சரட்டைகள், கிளிகள், காட்டுக்கோழிகள், குண்டுகரிச்சான்,நீலகிரி காட்டுப்புறா போன்ற பறவையினங்களை இங்கு காணமுடியும்.

தாவரங்கள்

தொகு

பெருநெல்லி, சிலைவாகை, நாவல், பலா மற்றும் தோதகத்தி போன்றவை பொதுவாக காணப்படும் மரங்களாகும். பல்வேறு மூலிகைகளும், மிளகு போன்ற கொடிகளும், மிகுந்து காணப்படுகிறது. நீலகிரியின் சிறப்பம்சங்களுள் ஒன்றான, 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவை இங்கு காணமுடியும்.

தேயிலை

தொகு

பந்தலூர் தாலுக்காவின் பெரும்பகுதி தேயிலைத்தோட்டங்களால் நிறைந்தது. குறு மற்றும் பெரு விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள், தொழிற்சாலைகள், அதனை சார்ந்து இயங்கும் தொழில்கள் என தேயிலை இந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மலைகள், குன்றுகள் என எங்கு பார்த்தாலும் தேயிலைத்தோட்டங்கள், அதனிடயே தொழிலாளர்களின் குடியிருப்புக்கள், தோட்டங்களை ஒட்டிய புல்வெளிகள், அதன் தொடர்ச்சியாக அடர்ந்த சோலைக்காடுகள், அதிலிருந்து வரும் சில்லென்ற காற்று, மலையிடுக்குகளில் பாய்ந்து கொட்டும் அருவிகள், மலைமுகடுகளை தொட்டு தவழும் முகில்கள், அவ்வப்போது பொழியும் மழை, இவைகளை சார்ந்து வாழும் பல்லுயிரினங்கள் என பந்தலூர் இயற்கையின் தொட்டிலாக இருக்கிறது என்றால் மிகையாகாது.

முடிவுரை

தொகு

எனினும் தேயிலைத்தோட்ட வேளாண்மை, வேட்டையாடுதல், கட்டுமானப்பணிகள், ஆக்கிரமிப்புகள் மற்றும் காட்டுத்தீ போன்ற காரணங்களால் வனங்கள் அழிக்கப்படுவதோடு, மணவளம் மற்றும் பல்லுயிர்களின் உணவுச்சங்கிலி பாதிப்படைந்த வண்ணம் உள்ளது. இயற்கையை நேசிப்பதும், காப்பதும், மீட்டெடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை என கருதுவோம் பந்தலூரின் வரலாற்றைப்போலவே.

  • மீள்மம்- ரப்பர்

குறிப்பு: இது எனது சொந்த படைப்பு அல்ல.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSC_RAJESWARI_NIL/மணல்தொட்டி&oldid=2345752" இலிருந்து மீள்விக்கப்பட்டது