பயனர்:TNSE JEYANTHI ARY/மணல்தொட்டி


வரலாற்றில் மெரினா புரட்சி

1965 ஆம் ஆண்டு, தங்கள் மொழியை காப்பாற்ற, தங்கள் இனத்தைக் காப்பாற்ற தங்கள் இன்னுயிரையும் இழக்கும் அளவுக்குப் பல தியாகங்களை செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள் யாரென்று கேட்டால் மாணவர்களும், இளைஞர்களும் தான் என்பதை வரலாறு இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பதை போல, கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் ஒன்று திரண்டு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்கள். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே"

.என்பது புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வரிகள்.. ஆனால் இது கவிதையல்ல.. சென்னை மெரினா கடற்கரையில் தொடங்கி தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் நடக்கும் அணைத்து பண்பாட்டு உரிமை மீட்புக்கான வரலாற்று புரட்சி இந்த வரிகளை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதி மன்ற தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பெரும் எழுச்சியாக காட்டு தீ போல் பரவி கொண்டிருக்கின்றன எத்தனையோ பிரச்னைகளுக்கு எல்லாம் போராட்டம் நடந்துள்ளது. கூட்டத்தை கூட்டியுள்ளார்கள். ஆனால், இந்த போராட்டத்துக்கான மக்கள் சக்தி எங்கிருந்து வந்தது? என்பது குறித்து அறிவதற்காக தங்களது அறிவை ஆய்வுக்கு உட்படுத்தி கொண்டிருக்கிறார்கள் பலரும். வரலாறு படைத்த பல போராட்டங்களிலும் அதன் தொடக்கம் தெரிந்துள்ளது, ஆனால், இந்தப் போராட்டத்தில் தொடக்கப் புள்ளியும் இல்லை, கரும்புள்ளியும் இல்லை. தமிழன் என்ற ஒற்றை உணர்வு மட்டுமே இந்தப் போராட்ட வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறது. இதற்கு முழுமையான காரணங்களை கூட நம்மால் சொல்ல முடியாது, சில காரணங்களை வேண்டுமானால் சொல்ல முடியும். போராட்டக் களமே உணர்வுகளால் சூழப்பட்டுள்ளது. போராட்டக்களத்துக்கு செல்லக்கூடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழன் என்ற ஒற்றை சிந்தனை ஆட்சி செய்கிறது கட்டுக்கடங்காத கூட்டத்தில் ஆண், பெண் அருகருகே இருந்தபோதும் தவறான பார்வையோ, உரசலோ இல்லை. “மேடம், சிஸ்டர் ” என்ற கண்ணியமான வார்த்தைகளே தொடர்பு மொழியாக இருக்கிறது. பொது இடங்களுக்கு செல்லும்போது கயவர்களின் பார்வை, செயல்களில் பெண்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை நாட்டின் பல இடங்களில் இருக்கின்றன. ஆனால், இந்தப் போராட்டக்களத்தில் லட்சக்கணக்கான ஆண்கள் சூழ இருந்தும் மிக சுதந்திரமாக பெண்களால் பங்கேற்கமுடிகிறது. இந்தப் போராட்டத்தில் யாருமே தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயலவில்லை. தலைவனாக யாரையும் முன்னெடுப்பதை அவர்கள் விரும்பவும் இல்லை.செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது, ‘அனைவருமே இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். யாரையும் முன்நிறுத்துவது ஒற்றுமையை குலைக்கும் செயல்’ என்றனர். வரும் உணவுகளை மிக நேர்மையாக பகிர்ந்து கொண்டனர். ‘குப்பைகளை இங்கே போட வேண்டாம்’ என்று கேட்டுக் கொண்டனர். வாகனங்களை வரிசையாக நிறுத்த அவர்களே போக்குவரத்து போலீசாராக மாறினர். சாலைகளில் நின்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அப்புறப்படுத்தினர். சாலையில் நின்று கொண்டிருந்த காவலர்களை தேடிப்போய் உணவு, தண்ணீர் கொடுத்தனர். நீ, நான் என்ற பாகுபாடின்றி நாம் என்ற சொல் தமிழனுக்கானதாக மாறிய ஒற்றுமையைக் காண முடிந்தது. எத்தனையோ அரசியல் போராட்டங்களில், அசம்பாவிதங்கள் நிகழ்ந்த வரலாறு உண்டு. ஆனால், இந்தப் போராட்டத்திலோ குழந்தைகள் காணவில்லை என்றால் உடனே ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டு குழந்தைகள் மீட்கப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் செய்ய முடியாத அனைத்தையும் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த இளைய தலைமுறையினர் தமிழர்களின் ஒற்றுமையை ஜல்லிக்கட்டு போராட்டம் உலகுக்கு எடுத்துரைத்துள்ளது. தலைவனே இல்லாமல் தானாக வந்து சேர்ந்த கூட்டம், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தப் புரட்சி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குடும்பம் குடும்பமாக திரண்டுள்ளனர். கடும் வெயிலிலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவை நோக்கி குடும்பம் குடும்பமாக மக்கள் வெள்ளம் படையெடுத்து வருகிறது. ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளிக்கின்றன. ‘ஏறு தழுவுதல்’ என்ற பதப்பிரயோகத்திலேயே பரிவும் பாசமும் வெளிப்படுவதை நாம் உணர வேண்டும். பண்டைத் தமிழரின் வீரம் செறிந்த விளையாட்டாக அது விளங்கியது. திமிறிப் பாயும் காளையை ஒருவர் மட்டும் அடக்கும் வகையில்தான் அது தொடக்கத்தில் நடந்தது. காலநடையில் ‘ஏறு தழுவுதல்’ ஜல்லிக்கட்டாக மாறிக் காளைகளின் பின்னால் பல இளைஞர்கள் துரத்திப் பிடிக்கும் விளையாட்டாக வேறு வடிவம் பெற்றுவிட்டது. ‘ஏறு தழுவுதல்’ தமிழினத்தின் தனித்துவம் மிக்கப் பண்பாட்டின் அடையாளங்களுள் ஒன்று. தொன்றுதொட்டு பயின்று வரும் பண்பாட்டு அடையாளங்களை எந்த இனமும் எந்த நிலையிலும் எதன் பொருட்டும் எவர் பொருட்டும் இழந்து விடலாகாது.

மேலும் பீட்டா அமைப்புக்கு நம் காளைகளின் மீதுள்ள கரிசனத்தை விட, நாட்டு மாடுகளை நம் வீட்டில் இல்லாமல் செய்து விடவேண்டும் என்ற உள் நோக்கம் இருப்பதை மாணவர்களும், இளைஞர்களும் மிகச் சரியாக இனம் கண்டுகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. நம் முன்னோர் ‘மாடு‘ என்றால் ‘செல்வம்’ என்றே பொருள் கண்டனர். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு; மாடல்ல மற்றை யவை’ என்பது வள்ளுவர் வழங்கிய குறள். அரசியல் கலப்பின்றி மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு, அறவழியில் கட்டுப்பாடு கலையாமல் முன்னெடுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டமாக மலர்ந்த நிலையில், மத்திய-மாநில அரசுகள் அவசர சட்டத்தின் மூலம் அடிபணிந்த செயல், காந்தியப் போராட்ட முறை காலாவதியாகிவிடவில்லை என்பதை உலகிற்கு மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறது. இந்த தருணத்தில் நம் இளைஞர் சமுதாயம் தங்ளுடைய அதிருப்தியை

-ஈழத்தில் நம் இனம் அழிக்கப்பட்ட போதும் -மாநிலம் முழுவதும் மது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சேதங்களையும் உயிர் இழப்புகள் நிகழும் போதும் -காவேரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தின் பரிந்துரையை கர்நாடகம் நிறைவேற்றாத போதும் - ஊழல் லஞ்ச லாவண்யம் தலை விரித்து ஆடிய போதும்

இது போன்று ஓன்று திரண்டு இருந்தால் தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கும் பொன் விடியல் புலர்ந்து இருக்கும் என்பது அனைவரின் விருப்பமாக இருப்பதை அறிய,,,முடிகிறது.

நாம் பல போராட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றோம். தொழிலாளர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களை, மாணவர்களின் போராட்டங்களை பார்த்து இருக்கிறோம். ஏன் சுதந்திரத்திற்காக நடைபெற்ற போராட்டங்களை படித்து அறிந்திருக்கிறோம். அன்று "ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது". இன்று "மாட்டைச் சின்னமாக்கி நடந்த அறப்போராட்டமும் துணிச்சலான இளைஞர் பட்டாளம் வென்று காட்டி உள்ளது"

இப்படி பலவித போராட்டங்களின் வரிசையில், இரவு பகல் பாராமல் கண்ணியத்துடன் அறவழியில், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல், யாருக்கும் இடையூறு தராமல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நமது கார்குலத்தின் சார்பிலும் மற்றும் ஒப்புரவின் சார்பிலும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற அத்தியாயத்தில் முதலாவது மிக வீரமான கடற்கரை என்ற பெருமையை நம்முடைய மெரீனாவுக்கு இன்றைய இளைய சமுதாயம் வழங்கி இருக்கிறது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் 'மெரினா புரட்சி' வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_JEYANTHI_ARY/மணல்தொட்டி&oldid=2364749" இலிருந்து மீள்விக்கப்பட்டது