பயனர்:Vayishu/மணல்தொட்டி

என் பள்ளி ‘கிரசண்ட் பெண்கள் பள்ளி’

வைஷ்ணவி உயர்நிலை 3

“ஒருமைக்கண் தான்கற்றக் கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து”

என்று வள்ளுவர் கல்வியின் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார். இந்தச் சிறப்பை மாணவர்களுக்குக் காட்டும் பல பள்ளிகளுள் கிரசண்ட் பெண்கள் பள்ளியும் ஒன்றாகும். இந்தப் பள்ளியில் நானும் ஒரு மாணவி என்ற பெருமை எனக்கு உண்டு. என் பள்ளிக்கு ஒரு பெரிய வரலாறும் உண்டு.

கிரசண்ட் பெண்கள் பள்ளி முன்பு ‘அலக்ஸாண்டிரா எஸ்டேட் பள்ளி’ என்னும் பெயரில் 1955 ஆம் ஆண்டு தன் வரலாற்றைத் தொடங்கியது. அப்போது 127 மாணவர்களும் 53 மாணவிகளும் கல்வி பயின்றனர். அடுத்த ஆண்டு இங்குப் பயின்றுகொண்டிருந்த மாணவர்கள்(ஆண்கள்) எல்லாரும் பாசிர் பாசாங் உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் இப்பள்ளி பெண்களுக்கு மட்டுமான சிறப்புப் பள்ளியாக மாற்றப்பட்டது. அன்று முதல் இதன் பெயரும் கிரசண்ட் பெண்கள் பள்ளி என்று வழங்கப்பட்டது. அதன்பின்னர் 1990-1994 வரை பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்காக குவின்ஸ்வே பகுதியில் செயல்பட்டு வந்தது. புனரமைப்பு பணிகளுக்குப் பிறகு 1994 ஆம் ஆண்டு பள்ளி தன் பழைய வளாகத்தில் புதுப்பொலிவுடன் செயலாற்றத் தொடங்கியது.

1996 –இல் கிரசண்ட் பெண்கள் பள்ளி தன்னாட்சிப் பெற்ற பள்ளியாக செயல்படத் தொடங்கியது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பள்ளி கல்விப்பணியை ஆற்றி 2007 –இல் எதிர்காலப்பள்ளி (@FutureSchool) என்ற பெருமையைப் பெற்றது. அதன் பின்னர் கற்றல் கற்பித்தலில் பல்வேறு தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது.

பள்ளியின் முக்கியக் குறிக்கோள் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்ப்பதேயாகும். நாளைய சமூகத்திற்குச் சிறந்த தன்னம்பிக்கை உடைய தலைவர்களை உருவாக்குவதே பள்ளியின் நோக்கமாகும். இதற்கு உதாரணமாக நாம் இன்றைய பிரபலங்கள் பலரைக் காணலாம்.

இப்போது உயர் பதவியில் இருக்கும் இப்பெண்களின் துணிவிற்கும் அறிவுக்கும் காரணம் அன்று கிரசண்ட் பெண்கள் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்டவையே ஆகும். இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு மாணவர்களிடையே வளர்க்கப்படும் ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் ஆளுமைத்திறன் போன்றவையே சிறந்த தலைவர்களை உருவாக்குகின்றது. இப்பள்ளி சமூகத்தில் ஓர் ஒழுக்கமான பொறுப்பான கருணையுள்ள சமூகத்தின் மீது அக்கறை உள்ள குடிமக்களை உருவாக்கும் கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இவ்விலக்கை அடைவதற்காக பல பாடதிட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தி வருகின்றது.

மயில் நில வண்ணப் பாவாடையும் மஞ்சள் நிற சட்டையும் சீருடையாக அணிந்து பள்ளிக்கு வரும் பெண்கள் இப்பள்ளியின் அழகுக்கு அழகு சேர்க்கின்றனர். இத்தகைய சிறப்புகள் மிக்க பள்ளியில் நானும் பயில்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் அளிக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vayishu/மணல்தொட்டி&oldid=2250663" இலிருந்து மீள்விக்கப்பட்டது