பயனர்:Venimani/மணல்தொட்டி
மன்னர்கள் கண்ட நீர் மேலாண்மை நீர் வளத்தைப் பெருக்கலும், சரியான முறையில் மேலாண்மை செய்தலுமே ஒரு நாட்டின் வளத்தை மேம்படுத்துவதில் நிலையான பங்களிப்பைக் கொண்டுள்ளன. மன்னர்கள் தங்கள் நாட்டின் நீர் வளத்தைப் பெருக்கவும் மேலாண்மை செய்யவும் முறையான கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதற்கேற்றவாறான சரியான வரிவிதிப்பு முறை, சட்ட முறைகளை நடைமுறைப்படுத்தி செம்மையான நீர் வளத்தை நிலைபெறச் செய்தனர். மழைநீர், அருவியிலிருந்து இறங்கி வந்து ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்ந்து வளம் செய்த ஆற்று நீரை, வளைத்துக் குளங்களில் தேக்கி வைத்து, முறையான மேலாண்மைக்குட்படுத்தி, நிலையான வேளாண்மைக்கு நம் முன்னோர்களும், மன்னர்களும் பாடுபட்டமையே சரியான வேளாண் அறிவியல் வளர்ச்சிநிலைத் தொடக்கம் எனலாம். நீர்மேலாண்மையை முறையாகக்; கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை நம் முன்னோர்களின் நேர்த்தியான பங்களிப்பின் மூலம் நாமுணரலாம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களிலும் இயற்கையாக அமைந்த நீர்நிலைகளும், செயற்கையாக அமைக்கப்பெற்ற நீர்நிலைகளும் காணப்பெற்றன. இவற்றைக் கொண்டே நம் முன்னோர்கள். சரியான பருவத்தில், செம்மையான சாகுபடி முறைகளைக் கண்டு, முறையான கருவிகளைக் கொண்டு, வளமையான வேளாண்மையை நிறைவாக மேற்கொண்டனர.; குறிஞ்சி - இயற்கையான நீர்நிலை - அருவி, சுனை முல்லை - இயற்கையான நீர்நிலை - கான்யாறு மருதம் - இயற்கையான நீர்நிலை - ஆறு,பொய்கை நெய்தல் - செயற்கையான நீர்நிலை - மணற்கேணி (கடல் சார்ந்த பகுதியாதலின் செயற்கையான நீர்நிலைகளை உருவாக்கினர்) நீர் மேலாண்மையும் அரசின் கடமையும் : அரசே நீர்நிலைகளை அமைத்து நிர்வகித்தமையால், மன்னர்களின் முதற்கடமைகளுள் ஒன்றாக நீர் மேலாண்மை விளங்கியது. ஆகையினால், நீர்நிலைகளைத் தனிமனிதர்கள் சொந்தம் கொண்டாட முடியாது எனும் நிலை காணப்பட்டது. குறைவிலாத, நிலையான நீர்வளமிக்க நிலப்பகுதியே வளமான, செம்மையான வேளாண்மை நிலைத்த பகுதிகளாகக் காணப்பட்டன. இத்தகைய நிலங்களில் நன்செய்ப் பயிர்களே விளைவிக்கப்பட்டன. நன்செய் நிலங்களே மன்னர்களின் பெருமைக்குரிய நிலங்களாகவும், அப்பகுதிகளையே மன்னர்கள் தங்களின் இருப்பிடமான தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தமையையும் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. வரகும், தினையும் விளையும் புன்செய் நிலமே, சீறூர் மன்னர்களின் இருப்பிடமாக விளங்கின.புலவர்கள், மன்னர்களை வாழ்த்தும்போதும், அறிவுரைகள் வழங்கும்போதும் நாட்டில் நீர்வளம் பெருக்க வேண்டியதன் அவசியத்தை, “ இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருந” எனும் புறநானூற்றுப் (70-9) பாடலடி மூலம் உணரலாம். சோறும் நீரும் ஆகிய இருமருந்து விளைவிக்கும் நன்னாட்டுப் பொருந என்றதிலிருந்து அறியலாம். நிலையான வேளாண்மைக்குக் குறைவிலாத நீர்வளம் அவசியம் என்பதனை உணர்ந்த அரசர்கள், மக்களின் உயிர் ஆதாரமாகிய உணவுத் தேவையை நிறைவு செய்ய வேண்டுமெனில், நீர் மேலாண்மையை வலுப்படுத்த வேண்டுமென்பதனைத் தம் கடமையாகக் கொண்டு இயங்கினார்கள். “ நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளியவென ஆளும் வேந்தே” (புறம் 58.10) என்றதனை, ‘உயிரை ஆக்கும் நெல்லும் நீரும் உளவாவது மன்னன் முறை செய்து காப்பான் என்றதாம்,’ என உ.வே.சா. உரை எழுதியுள்ளார்.உணவு உற்பத்தியும், நீர் மேலாண்மையும் மன்னனின் அரசியல் கடமைகளுள் முதன்மையானது என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. சங்ககால நீர்ப்பாசன முறைகள் : சங்க இலக்கியத்தில், நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் பாசனக்கருவிகள் குறித்த செய்திகளையும் நாம் காணலாம். வேளாண்மைக்கான பாசன வசதிகள் குறித்து நோக்க, குளம், பொய்கை, வாவி, ஏரி, கிணறு, கேணி, கூவம் போன்ற அமைப்புகளும் இவற்றினின்று வெளியேறும் நீரின் வேகத்தையும், அளவையும் கட்டுப்படுத்தப் பயன்படும் மதகு, மடை, புதவு போன்ற சாதனங்களின் பெயர்களும் புழக்கத்தில் காணப்பட்ட நீர்மேலாண்மை நடைமுறைகளை விளக்குவதாகக் கொள்ளலாம். நீர்ப்பாசனத்தின் அடிப்படை ஆதாரங்களான ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம், குளத்துப் பாசனம், ஆற்றுப்பாசனம் என நீர்வரத்தின் அடிப்படை ஆதாரத்திலிருந்து தொடங்கி நீரை சேமித்து வைத்துப் பக்குவமாய்ப் புழங்கும் பயன்பாட்டு நிலைவரை அறிவியல் தொழில்நுட்ப அணுகுமுறைகளே கையாளப்பட்டு வந்திருக்கின்றன என்பதின்; அடிப்படையில் சில இலக்கியச் சான்றுகளைப் பின்வருமாறு காணலாம். நிறைவாக நீரைப் பெருக்கித் தரும் ஊற்றுக்கண் இருக்கும் நிலப்பரப்பைத் தேர்வு செய்து கிணறு அமைக்கும் வழக்கம் சங்ககாலம் முதலே புழக்கத்தில் இருந்திருக்கின்றன. மணற்பாங்கான நிலப்பரப்புகளில் அமைக்கப்பெறும் உறை கிணறு குறித்த செய்தியை “உறை கிணற்றுப் புறஞ்சேரி” (பட்.பா-76) எனும் பட்டினப்பாலை அடி மூலம் காணலாம். தேவைக்கேற்ப நீரிறைத்துக் கொள்வதற்கான அமைப்புகளுடன் கூடிய இயந்திர இயக்கிக் கிணறுகள் குறித்துப் பெருங்கதையில், “ அந்தக்கிணறும் எந்திரக் கிணறும்”எனவாகவும், மணிமேகலையில், “எந்திரக் கிணறும் இடுங்கற் குன்றமும்” எனவாகவும் இயந்திர இயக்கிக் கிணறுகள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன. “நெடுங்கிணற்று வல்லூற்று உவரித் தோண்டி” எனும் பெரும்பாணாற்றுப்படை அடியானது, கிணற்றிலே, ஆழமான (வலிய) ஊற்று தோண்டப்பட்டுள்ளது. அவ்வூற்றிலிருந்து பெருகும் நீர், என்றதிலிருந்து, (நெடுங்கிணறு என்றதற்கு ஆழமான கிணறு என்று பொருள்), ஆழக் கிணற்றில் தோண்டப்படும் ஆழமான சிறு துளையிலிருந்து நீர் பெருகும் என்று குறிக்கப்பட்டுள்ளது. நற்றிணையில், வெயிலால் வெப்பமுற்ற பருக்கைக் கற்கள் மிக்கப் பள்ளத்தின் ஒருபுறத்தில் ஆன் கூட்டத்தை மேய்க்கும் ஆயர் குலக் கணிச்சியால் தோண்டிக் குழி செய்த ஊற்றிலிருந்து பெருகும் நீரை யானைக்கூட்டம் அருந்திய செய்தியை நற்றிணையிலிருந்து அறியலாம். “கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி, ஆன்வழிப் படுநர் தோண்டியப் பத்தல்” (240,7-8) என்றதிலிருந்து ஆழக்கிணற்றில் தோண்டப்படும் ஊற்று குறித்த செய்தியை அறியலாம். சீறூர் சமுதாயமும் நீர்ப்பாசன முறைமையும் : சீறூர் நிலத்தில் வேளாண்மை என்பது புன்செய்ப் பயிர்களை மட்டுமே உள்ளடக்கியதாகக் காணப்பட்டது. ஏனெனில், நன்செய் நிலங்களையெல்லாம் பேரரசர்களே தங்களின் ஆட்சி பீடங்களாகக் கொண்டு அரசாட்சி செய்து பெருமை தேடிக்கொண்டனர். சீறூர் மன்னரின் முல்லைநிலச் சமுதாயம் புரவுவரி செலுத்துவதற்கும் இயலாத ஊராய் காணப்படுவதாகப் புறநானூறு இயம்புகிறது.
“பாடிச் சென்றோர்க்கு அன்றியும்வாரிப் புரவிற்கு ஆற்றாச் சீறூர்” (புறம் :5-6)
சீறூர் விளைநிலங்களுக்குப் பாய்ச்சுவதற்குப் போதிய நீர்நிலைகளும், நீர்வரத்து வசதிகளும் இல்லாத காரணங்களினால் தேங்கி நிற்கும் சிறிதளவு நீரே அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரித்தானதாயிற்று. “பூவற் படுவிற் கூவல் தொடீஇய செங்கண் சின்னீர் பெய்த சீறில்” (புறம்:319-1,2) – எனும் பாடலடியானது, ‘செம்மண் நிலத்திலுள்ள மடுவைத் தோண்டினால் சிறிதளவு நீரேயுள்ளது. பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட நிலத்தில் புதிதாகப் பெய்த பெருமழைக்குப் பின்னர், பள்ளங்களில் தேங்கியுள்ள சிறிதளவு நீரைப் பசுக்கள் பருகுகின்றன. இந்த எஞ்சிய கலங்கல் நீரைப் பன்றி வேட்டையாடிய வீரர் உண்ணுவதாகப் புறநானூறு (325,1-6) காட்டுகின்றது. விளைச்சல் பேரளவில் இல்லாத இத்தகைய சீறூர் தலைவர்கள், வேந்தனின் விடுதொழிலுக்கு ஆட்படுவதைப் புறநானூற்றின் பல பாடல்களில் ( 316,318, 324) காணலாம். நன்செய் என்பது பேரரசர்களின் இருப்பிடமாகவும், புன்செய் என்பது சீரூர் தலைவர்களின் இருப்பிடமாகவும் இருந்ததெனக் கொள்க. சீறூர்களில் செய்யப்பட்ட புன்செய் வேளாண்மை, அச்சீறூர்க்கு உரிய போதுமான விளைச்சலைத் தரவில்லை. அவ்வளவே விளைந்த அச்சிறிய அளவு வரகு, தினை போன்றவற்றைப் பொதுவில் வைத்து உண்ணப்பட்டதையும், விருந்தாய் வந்த வேந்தனும், இரவலர்களும் பெறும் உணவாக வரகு இருந்ததனைப்(புறம்:333, 328) பாடல்கள் விளக்குகின்றன. மன்னர்களும் நீர் மேலாண்மையும் : பாசனவரத்து முறைகள,; நீர்நிலைகள் மற்றும் அணைக்கட்டுக்கள் குறித்த செய்திகளை, மன்னர்கள் காலத்திய கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும், பட்டயங்களிலும்; நாம் காணலாம். பல்லவ மன்னர்கள், நந்திவர்மன், இராஜேந்திர சோழன், கரிகாற்சோழன் போன்ற மன்னர்கள் அணைகளைக் கட்டுவித்து, ஏரிகளைத் தோற்றுவித்த பல செய்திகள் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளன. பல்லவர் காலத்திய, ‘மார்பிடுகுப் பெருங்கிணறு’, குறித்த நந்திவர்மனின் கல்வெட்டில் காணப்படும் செய்தியில் ‘ஸ்வஸ்திக்’ அமைப்பிலான நான்கு பக்கங்களைக் கொண்ட படிக்கட்டுக்களுடன் கூடிய நான்கு வாயில்களையும் கொண்ட நிலா வடிவிலான மிகப் பெரிய கிணறு, திருவெள்ளறையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாளைப் போலவே அந்நாளிலும் பூமிக்கடியில் நீரூற்று அமைந்துள்ள இடத்தைத் தேர்ந்தெடுப்பவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும், அதையே தம் தொழிலாகக் கொண்டவர்கள், ‘கூபதர்சகர்கள்’ என்றழைக்கப்படுகிறார்கள் என்பதனைப் பல்லவ மன்னன் சிம்மவர்மனின் விலாவட்டிச் சாசனம் மூலம் அறியவருகின்றது. இதைத் தவிரவும் இவர்கள் கிணறுகளை மேற்பார்வையிடுகின்ற கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டுள்ளார்கள். (பாசனத் துறையில் பழந்தமிழரின் பொறியியல் அறிவியல்- நிரஞ்சனாதேவி) இது போலவே குடிநீர்க் குளங்கள், அன்றாட இதர தேவைகளுக்கான நீர்நிலைகள், கால்நடைகளுக்கான குடிநீர்க் குளங்கள் போன்றவற்றை அரசே காவலர்களை நியமித்துக் கண்காணித்து வந்ததனை,“எறிதிரை திவலை தூஉம், சிறுகோட்டுப் பெருங்குளம் காலவன்,”எனும் அகநானூற்றுப் பாடலால் அறியலாம். குடிநீர்க் குளங்களை மாசுபடுத்துவோர்க்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. குடிநீர்க் குளங்களில் பிறர் குளிக்கவோ, அசுத்தம் செய்யவோ இயலாத வண்ணம் காவலாளிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். மீறுவோர்க்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த விவரங்கள் கல்வெட்டுக்களில் பொறித்து வைக்கப்பட்டிருந்தன. பண்டைய காலத்தில் இராஜேந்திர சோழனால் கட்டுவிக்கப்பட்ட ‘சோழகங்கம்’ எனப்படும் பொன்னேரியின் வடிகாலாக வீராணம் ஏரி விளங்கியிருப்பது நமக்கு வியப்பை அளிக்கின்றது. வீராணம் ஏரியானது, எழுபத்துநான்கு மதகுகளைக் கொண்டு விளங்குகின்றது. பொன்னேரியானது பதினாறு மைல் நீளக் கரைகளுடன் சுமார் அறுபது மைல் நீளக் கால்வாய் மூலம் பள்ளத்திலிருந்து மேட்டிற்குத் தண்ணீரைக் கொணர்ந்து தேக்கும் வசதியுடன் காணப்பட்டது. (“கல்வெட்டில் நீர்ப்பாசனம்,” கட்டுரை, கி.ஜெ.அமலநாதன்,1968.) பழங்காலக் கல்வெட்டுக்களில், ஏரிகள், குளம், அணைக்கட்டு மேலாண்மையில் தேர்ச்சி பெற்ற சிறப்பான தொழில்நுட்பம் வாய்ந்த வல்லுனர்களை “ஜலசூத்ரதாரிகள்”, என அழைக்கப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகின்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணையே ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் மாறாத வலிமையுடன் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது. நீரின் வேக விசையையும், நீரின் அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான எட்டாம் பிறைச் சந்திரனைப் போன்று கல்லணையானது, நாகவடிவில் வளைவாகக் கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றினின்று பல கால்வாய்கள் வெட்டப்பட்டு, அணைக்கட்டினால் தேக்கி வைக்கப்பெற்ற நீரானது, இக்கால்வாய்கள் மூலமாக சரியாக, முறையாக விளைநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நீர் முழுமையும் சரியான அளவில் பயன்படுத்தப்படும் வகையிலான மதகு அமைப்புகளும் சோழ மன்னர்களின் நீர் மேலாண்மைக்கான செம்மையான சான்றாக விளங்குகின்றது. அது போலவே நொய்யல் நதிக்குக் குறுக்கே 96 அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணையின் இரு பக்கங்களிலும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன. மழையின் காரணமாகக் காணப்படும் அதிகப்படியான நீர்வரத்து, இந்தக் கால்வாய்களின் மூலம் வடிந்து அருகே உள்ள ஏரி, குளங்களில் சென்று நிறைந்துவிடுகின்றன. நீர்த் தேக்கப் பராமரிப்பு : நீர்த் தேக்கத்தைப் பாதுகாத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளே நீர்த்தேக்கப் பராமரிப்புப் பணிகளாகும். ஏரி, குளங்கள் போன்றவை நாளடைவில் பழுதடையும்போது அவற்றின் கரைகளை உயர்த்துதல், கரை உடைப்புகள் மற்றும் நீர்க்கசிவுகள் ஆகியவற்றை சீர்ப்படுத்துதல், நீர்த் தேக்கங்களில் நீர் வறண்ட காலங்களில் பாசி, தூர் மற்றும்; பழைய நீர் ஆகியவற்றை அகற்றி, புதுநீர் நிரப்புதல், ஆழப்படுத்துதல், மதகுகளை பழுதுபார்த்தல், வெள்ள அபாயக் காலங்களில் நிரம்பி வழியும் நீரை வெள்ளக்கால்களை அடைத்து அதன் வழியாக செலவிடுதல் ஆகியவை முக்கியப் பணிகளாகும். நீர்த்தேக்கங்களில் தூர் எடுத்து ஆழப்படுத்தும் பணியை ‘ஏரிக்குழித்தல்’ என வழங்கினர். இப்பணிகள் யாவும் மன்னனால் மக்களுக்காகச் செய்யப்பட்டவையே. மறக்களம் பேணும் மன்னர்களேயாயினும் மக்களின் நலத்தைப் பேணும் அறம் செறிந்த நல்லாட்சியோடு, நீரையும் உணவையும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு தந்தையாகவே விளங்கினார்கள் என அறியலாம். ‘பகைவரிடம் தோற்றால் புன்செய்நிலக் காவலனாக மர்றுவேனாக’(புறம்:17-19) என வஞ்சினம் கூறியதிலிருந்து புன்செய் நிலம,; வேந்தர் சமுதாயத்தில் மதிப்பிழப்பைப் பெறுகின்றது. மன்னர்கள், காட்டையழித்து நாடாக்கிக் குளம் தோண்டி நீர்நிலையைப் பெருக்கி, நன்செய் விளைநிலங்களைப் பேணினர். மேற்சொன்னவற்றை உற்றுநோக்குகையில், இன்றைய காலகட்டத்தில்;, ஒரு ஆறு, ஒரு குளம், ஒரு கிணறு, ஒரு வாவி என ஒன்றையாவது நாம் நிர்மாணித்திருக்கிறோமா? நம் முன்னோர்கள் நமக்களித்துள்ள இந்த நீர்க்கொடைகள், தூர்ந்து போகாமலும், சிதைந்து போகாமலும் காத்தலோடு, அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் பல்கலைக்கழகங்களாகவும் மாறிவரும் நீர்நிலைகளை மீட்டெடுப்பதுவும், புதுப்பிப்பதுவும் காலத்தின் கட்டாயமாகும்.