பராசர பட்டர்

பன்னிரண்டாவது நூற்றாண்டின் முன்பாதியில் ஸ்ரீராமானுசரால் தெரிந்தெடுக்கப்பட்டு அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியாராக ஆக்கப்பட்டவர் பராசர பட்டர் என்ற சிறந்த வைணவர். வைணவ குருபரம்பரை ஏடுகள் பராசரரைப்பற்றி நிறையவே சொன்னாலும் அவைகளுக்குள் சில மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவருடைய காலம் பொ.ஊ. 1078–1175 என்று ஒரு சாராரும் பொ.ஊ. 1123–1151 என்று வேறொரு சாராரும் கூறுவர்.

பராசர பட்டர்
பிறப்புபராசரர்
திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு

பெயர் காரணம்

தொகு

சுபகிருத் என்ற தமிழ் ஆண்டில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில், இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மூத்த மகனாக பிறந்தார். இளையவர் வேத வியாச பட்டர். குருபரம்பரையில் இவருடைய பிறப்பைப் பற்றிச் சொல்லப்படும் கதை வெகு சுவையானது. ஸ்ரீரங்கத்தில் தன் வழக்கப்படி பிட்சைக்காக செல்லவேண்டிய கூரத்தாழ்வான் கொடு மழையால் வெளியில் போகமுடியாமல் இருந்தார். அவரும் அவருடைய மனைவியார் ஆண்டாளும் அன்று பட்டினி. ஆனால் அவர்கள் பக்தியுடன் போற்றி வந்த அரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீரங்கம் கோயிலின் மூலவர்) அவர்கள் பட்டினி கிடப்பதைப் பொறுக்காமல் அசரீரியாக கோயிலின் பட்டர் உத்தமநம்பி என்பவர் மூலம் அவர்களுக்கு உணவு அனுப்பி வைத்தார். அதில் மூன்றில் ஒரு பங்கை தான் உண்டு மீதி இரண்டு பங்கை தன் மனைவியான ஆண்டாளை உண்ணச் செய்தார் ஆழ்வார். காலக்கிரமத்தில் ஆண்டாள் இரு மகவை ஈன்றெடுத்தாள். இராமானுசர் தன் குருவான ஆளவந்தாருக்கு செய்துக்கொடுத்த இரண்டாம் வாக்கின்படி விஷ்ணுப்புராணம் பாடிய பராசர முனிவரின் பெயரும், பாகவதம் பாடிய வேதவியாசரின் பெயரும் விளங்குவண்ணம் கூரத்தாழ்வரின் மக்களுக்குள் முதலாமவருக்கு "பராசர பட்டர்" என்றும், இளையவருக்கு "வேத வியாச பட்டர்" என்றும் பெயரிட்டார்.

ஸர்வக்ஞ பட்டரின் ஆசிர்வாதம்

தொகு

நான்கு வயது சிறுவனாக இருக்கும்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான் பராசரன். ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியாரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்தார். கூட வந்தவர்கள் அவருடைய புலமையையும் எல்லாமறிந்த வல்லமையையும் புகழ்ந்து பேசிக்கொண்டே வந்தனர். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் பராசரன் கையில் ஒரு பிடி மணலை எடுத்தான். பல்லக்கில் இருந்த பெரியார் முன் சென்று 'உமக்கு எல்லாம் தெரியுமாமே, இந்தப் பிடி மணலில் எவ்வளவு மண் இருக்கிறது என்று சொல்லமுடியுமா?' என்று கேட்டானாம். ஸர்வக்ஞப் பட்டர் திகைத்துப் போனார். அவரிடம் பதிலில்லை என்பதை உணர்ந்த பட்டர் 'கைப்பிடி மண்' என்று தன் கேள்விக்கான பதிலை உரைத்தான். தன் தவற்றை உணர்ந்த ஸர்வக்ஞ பட்டர் பையனைக் கட்டித் தழுவி அவனை மனமார ஆசீர்வதித்துவிட்டுச் சென்றாராம்.

கல்வியும் தேர்ச்சியும்

தொகு

வடமொழி நூல்களையும் மற்ற எல்லா சாஸ்திரங்களையும் தந்தையிடமிருந்தும் மற்றும் தன்னுடைய குருவான எம்பார் இடமிருந்தும் கசடறக் கற்றார். எம்பார் என்பவர் இராமானுசராலேயே துறவறம் கொடுக்கப் பெற்று, 'மந்நாதர்' என்று வடமொழியிலும் அதற்குரிய தமிழ்ச்சொல்லான 'எம்பெருமானார்' என்று தமிழிலும் பெயர் சூட்டப்பட்டவர். அத்தமிழ்ப் பெயரின் சுருக்கம் தான் 'எம்பார். ஜகந்நாதக்ஷேத்திரத்திலுள்ள புகழ்பெற்ற வைணவ மடம் அவர் பெயரைத் தாங்குகின்றது. வைணவ ஆழ்வார்களுடைய பிரபந்தங்களையெல்லாம் கற்றபோது பராசரர் அவைகளில் பொதிந்திருந்த இன்னிசையினாலும் கருத்தாழம், திருவன்பு இவைகளினாலும் ஈர்க்கப்பட்டு பகலிரவு பாராமல் அவைகளுடனேயே தன் நேரத்தைக்கழித்தார். அவருடைய கல்வித் திறனையும் அவர் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவருக்கிருந்த உற்சாகத்தையும் பார்த்து இராமானுசர் அவரையே வைணவத் தலைவராகவும் ஆக்கினார்.

பராசரர் இயற்றிய நூல்கள்

தொகு

ஒன்பது நூல்கள் பராசரருடைய பெயரைத் தாங்குகின்றன. ஆனால் சிதையாமல் நமக்குக் கிடைத்திருப்பது கீழேயுள்ளவற்றில் முதல் ஐந்து தான்:

விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம்.
ரங்கநாத அஷ்டகம்.
ஸ்ரீரங்கராஜஸ்தவம்.
அஷ்டச்லோகீ.
ஸ்ரீகுணரத்னகோசம்.
தத்வரத்னாகரம்
நித்ய கிரந்தம்
லக்ஷ்மீகல்யாணம்.
அத்யாத்ம-கண்ட-த்வய-விவரணம்
பகவத் குணா தர்பணம்
மைவண்ண நருங்குஞ்சி பாசுரம் வியாக்யானம்
கைசிக புராண வியாக்யானம்
நம்பெருமாள் மீது பல திருமஞ்சன கட்டியம்
அர்ச்சாவதார அனுபவம்

நம்மாழ்வாரைப்போற்றி இரு தமிழ் வெண்பாக்கள்

தொகு

இவையிரண்டும் பராசரர் தமிழில் இயற்றியது:

வான்திகழும் சோலைமதிள் அரங்கர் வண் புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும், -- ஈன்ற
முதல் தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் -- தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழின் இசை வேதத்தியல்.

துணைநூல்கள்

தொகு
  • Sri Vishnu Sahasranama with the Bhashya of Parasara Bhattar. Tr. by Prof. A. Srinivasa Raghavan. Sri Vishishtadvaita Pracharini Sabha, Mylapore, Madras. 1983.
  • Life of Sri Ramanuja . Sri Ramakrishnananda. Tr. from Bengali by Swami Budhananda. Sri Ramakrishna Mutt, Mylapore, Madras.1977
"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசர_பட்டர்&oldid=3783508" இலிருந்து மீள்விக்கப்பட்டது