பரிமாற்று விசை

பரிமாற்று விசை (exchange force) என்பது துகள் இயற்பியலில் விசை ஏந்திகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் ஏற்படும் விசையைக் குறிக்கிறது.

அணுக்கருவுக்குள் நேர்மின் கொண்ட புரோட்டான்களும், மின் நடு நிலையான நியூட்டரான்களும் இருப்பதாக 1930 களின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நேர்மின் கொண்ட புரோட்டான்களை அணுக்கருவைப் போன்றதொரு சிறிய இடத்தில் நெருக்கி வைக்கும்போது அவற்றுக்கிடையில் மகத்தான விலக்கு விசைகள் தோன்றும். அப்படியிருக்கையில் அணுக்கருவுக்குள் அவை எப்படி ஒன்றாகக் கூட முடிந்தது என்பது புதிராக இருந்தது. 1932ஆம் ஆண்டில் வெர்னர் ஐசன்பர்க் புரோட்டான்களும் நீயுட்ரான்களும் மிக விரைவாக மின்களைப் பரிமாறிக் கொள்வதால் அணுக்கரு ஒன்றாய்க்கூடியிருக்கிறது என்ற கருத்தை வெளியிட்டார்.[1] இத்தகைய பரிமாற்றம், மின்களின் விலக்கு விசைகளைச் சமாளித்துத் துகள்களை ஒன்றாய்ச் சேர்த்து வைப்பதாக இருக்கலாம். மின்களை பரிமாறிக் கொள்ளப்படும்போது ஒரு கவர்ச்சி விசை உண்டாவதாய்த் தெரிகிறது. ஆனால் மின்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதால் மட்டுமே ஓர் அணுக்கருவில் துகள்களைப் பிடித்து வைக்கப் போதுமான அளவுக்கு விசை தோன்ற முடியுமென்று அவரால் நிரூபிக்க முடியவில்லை. 1935ஆம் ஆண்டில் ஹிடேகி யுகாவா என்ற ஜப்பானிய இயற்பியலார் மேசான் என்ற துகள் இருப்பதாகக் கருத்து வெளியிட்டார்.[2] மின்களுடன் மெசான்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டால் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அணுக்கருவுக்குள் கூட்டி வைக்கப் போதுமான கவர்ச்சி விசை தோன்ற முடியுமெனக் கணக்குகள் காட்டின.

வேறு பல விசைகளுக்கும் இத்தகைய துகள் பரிமாற்றம் காரணமாக இருக்கலாம். ஒளியணுக்கள் உமிழப்படுவது அல்லது உட்கவரப்படுவதன் காரணமாக மின்காந்த விசைகளும், ஈர்ப்பியான் (graviton) என்ற துகள்கள் பரிமாறிக் கொள்வதால் நிறையீர்ப்பு விசைகளும் தோன்றுவதாக இருக்கலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Heisenberg, W. (1932). "Über den Bau der Atomkerne. I". Zeitschrift für Physik 77 (1–2): 1–11. doi:10.1007/BF01342433. Bibcode: 1932ZPhy...77....1H. 
  2. Yukawa, Hideki. "On the interaction of elementary particles. I." Nippon Sugaku-Buturigakkwai Kizi Dai 3 Ki 17.0 (1935): 48-57.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிமாற்று_விசை&oldid=2056646" இலிருந்து மீள்விக்கப்பட்டது