பல் வெளுப்பாக்கம்

பல் வெளுப்பாக்கம் என்பது பற்களில் ஏற்படக்கூடிய கறைகளைப் போக்கி அவற்றை வெண்மை ஆக்குவதற்காக பொதுப் பல்மருத்துவத்தில் கையாளப்படும் ஒரு முறையாகும். இதனைப் பல் வெண்மையாக்கம் என்றும் கூறலாம். சிறப்பாக இது அழகூட்டல் பல்மருத்துவத் துறையிலேயே பெரிதும் பயன்படுகின்றது. குழந்தைகளின் உதிர் பற்கள், வளர்ந்தோரின் பற்களை விட வெண்மையானவை. அத்துடன், பற்களின் கனிமக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களினால் பல்மிளிரியின் நுண்துளைத் தன்மை குறைவதால் வயது ஏறும்போது பற்களின் நிறமும் கடுமை அடைகின்றது. பக்டீரியத் துகள்கள், உணவுப் பொருட்கள், புகையிலை போன்றவற்றாலும் பற்களில் கறைபடிவதுண்டு. டெட்ராசைக்கிளின் (tetracycline) போன்ற சில நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளினாலும் பற்களில் கறை படியலாம் அல்லது அவற்றின் ஒளிர்வு குறையலாம்.

வீட்டுப் பயன்பாட்டுக்கு உரிய பல்வெளுப்பாக்கி


பற்களை வெண்மையாக்குவதற்குப் பல முறைகள் உள்ளன. வெளுப்பிப் பட்டி, வெளுப்பிப் பேனா, வெளுப்பிக் களிம்பு, லேசர் வெளுப்பாக்கம், இயற்கை வெளுப்பாக்கம் என்பன இவற்றுள் அடங்குவன. வீடுகளில் வெளுப்பிக் களிம்புகளைப் பயன்படுத்திப் பற்களை வெண்மையாக்குவது உண்டு. தவிர, வெளுப்பிப் பட்டிகளை முன் பற்களில் ஒட்டிக் கொள்வதன் மூலமும் பற்களை வெண்மையடையச் செய்யலாம். ஐதரசன் பேரொட்சைடு, கார்பமைடுப் பேரொட்சைடு போன்ற ஒட்சியேற்று பொருட்களும் பற்காளை வெளுக்கச் செய்வதில் பயன்படுகின்றன. ஒட்சியேற்று பொருட்கள், பல்மிளிரிகளில் காணப்படும் படிகக் கட்டமைப்பின் நுண்துளைகளூடாகச் சென்று படிக அமைப்புக்களுக்கு இடையில் காணப்படும் கறைகளை ஒட்சியேற்றுகின்றன. குறித்த காலத்துக்குப் பின் பல்மிளிரிக்கு அடியில் உள்ள பற்திசுப் படலத்தையும் சென்றடையும் ஒட்சியேற்றிகள் அவற்றையும் வெளுப்பாக்குகின்றன. வெளுப்பாக்கத்தை விரைவு படுத்துவதற்காக ஒளியும் பல் மருத்துவத்தில் பயன்படுகின்றது. இந்த வெளுப்பாக்க விளைவுகள் பல மாதங்கள் நீடித்திருக்கக் கூடும் எனினும், நோயாளியின், பழக்க வழக்கங்களைப் பொறுத்தே இதனைக் கூறமுடியும். புகை பிடித்தல், காப்பி, தேனீர் போன்ற கறைப்படுத்தும் நீர்மப் பொருட்களை உட்கொள்ளுதல் என்பன பற்களின் நிறம் மங்குவதை விரைவு படுத்துகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்_வெளுப்பாக்கம்&oldid=1355516" இலிருந்து மீள்விக்கப்பட்டது