பழனிசெட்டிபட்டி அணை

பழனிசெட்டிபட்டி அணை என்பது தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியின் கிழக்குப் பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள ஒரு தடுப்பணை ஆகும். பழனியப்பன் செட்டியார் என்பவரால் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மேற்பகுதியில், பழனிசெட்டிபட்டி பகுதியிலுள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரைக் கொண்டு செல்வதற்கான வாய்க்கால் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த அணையைக் கட்டுவித்த பழனியப்பன் செட்டியார் குடும்பத்தினருக்கு இந்த அணையிலிருந்து தேவையான நீரை எடுத்துக் கொள்ளவும், அணையைப் பராமரிக்கும் பொறுப்பும் செப்புப் பட்டயமாக எழுதி வழங்கப்பட்டு இருப்பதாக பழனியப்பன் செட்டியார் வாரிசுகள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த அணையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இந்தக் குடும்பத்தினருக்கு வழங்கியதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரை பழனியப்பன் செட்டியார் வாரிசுகளால் அமைக்கப்பட்டுள்ள பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பால் நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள், தடுப்பணைகள், மதகுகள் போன்றவை அமைக்கப்பட்டு அவர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் மேற்பகுதியில் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கான குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழனிசெட்டிபட்டி அணை

நீர்ப்பாசனத்திற்கான வாய்க்கால்கள்

தொகு
 
மணல்வாரி தடுப்பணைப் பகுதியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் சிறு நீர்வீழ்ச்சிகளும் வாய்க்காலும்
 
முருகிப் பகுதி தடுப்பணையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் நீர்

விவசாய நிலங்களுக்கு நீர் அளிக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தாலும், இந்த ஊரில் பழனியப்பா பாசன பரிபாலன சபை எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. பழனிசெட்டிபட்டி அணையின் மேல் பகுதியில் பிரிக்கப்படும் வாய்க்கால் வழியாக கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதலில் மணல்வாரி என அழைக்கப்படும் பகுதியில் தடுக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீரின் ஒரு பகுதி பிரிக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் மதகுகள் வழியாகக் கீழ்பகுதிக்குக் கொண்டு வரப்படுகிறது. இப்பகுதியிலுள்ள வாய்க்காலில் சலவைத் தொழிலாளர்கள் சலவை செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மணல்வாரியிலிருந்து பிரிந்து வரும் நீர் சிறிய அருவி போல் கீழே விழுகிறது. இது பார்க்க அழகாக இருப்பதுடன், குளிப்பதற்கும் வசதியுடையதாக இருக்கிறது. மணல்வாரிப் பகுதிக்கு அடுத்ததாக முருகிப் பகுதி என அழைக்கப்படும் இடத்தில் ஒரு தடுப்பணை கட்டி அங்கிருந்து வயல்களுக்குத் தேவையான நீர் கொண்டு செல்லும் வாய்க்காலுக்குச் செல்வதற்கேற்றவாறு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீரேற்று நிலையங்கள்

தொகு
 
தேனி- அல்லிநகரம் நகராட்சி இயல்நீர் குடிநீரேற்று நிலையம் முன்பகுதி
 
தேனி- அல்லிநகரம் நகராட்சி இயல்நீர் குடிநீரேற்று நிலையக் கிணற்றுப் பகுதி

இந்த அணையின் மேற்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்கான இயல்நீர் குடிநீரேற்று நிலையம் உள்ளது. இந்தக் குடிநீரேற்று நிலையத்திலிருந்து எடுக்கப்படும் நீர் சுத்திகரிக்கப்பட்டு தேனி - அல்லிநகரம் நகராட்சிப் பகுதி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது தேனி நகரின் 75 சதவிகிதக் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகிறது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கான குடிநீர்த் தேவையினை நிறைவு செய்ய பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கான உறைகிணறு குடிநீரேற்று நிலையமும் இங்கு அமைந்துள்ளது. இது தவிர வேறு சில கிராமங்களுக்கான குடிநீரேற்று நிலையங்களும் அணையின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

கருப்பசாமி கோயில்

தொகு

பழனிசெட்டிபட்டி அணையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பனைமரத் தோப்பினுள் கருப்பசாமிக் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் தெய்வமான கருப்பசாமி இவ்வூரின் காவல் தெய்வமாக உள்ளதாக இந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனிசெட்டிபட்டி_அணை&oldid=4155982" இலிருந்து மீள்விக்கப்பட்டது