பாட்டுடைத் தலைவன்
பாட்டு நூலில் போற்றப்படும் தலைவனைப் பாட்டுடைத்தலைவன் எனக் குறிப்பிடுவது வழக்கம்.
தமிழ்ப்புலவர்கள் பாடிய பாடல்கள் ஏதாவது ஒரு தலைவனையோ, பொருளையோ மையமாகக் கொண்டு பாடப்பட்டிருக்கும்.
கி.பி. முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சங்ககாலப் புலவர்கள் தாம் பாடிய பாடல்களிலும், பாட்டுகளிலும் அரசர்களையும், வள்ளல்களையும் பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர்.
- மதுரைக்காஞ்சி நூலின் பாட்டுடைத்தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் அரசன்.
- சிறுபாணாற்றுப்படை நூலின் பாட்டுடைத்தலைவன் ஓய்மானாட்டு நல்லியக்கோடன்.
அதற்குப் பின்னர் சமயம் தலைதூக்கி நின்ற காலத்தில் இறைவனை மட்டுமே பாட்டுடைத் தலைவராகக் கொண்டனர்.
- சைவத் திருமுறைகள் நூல்களின் பாட்டுடைத்தலைவன் சிவன்
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல்களின் பாட்டுடைத்தலைவன் திருமால்
பத்தாம் நூற்றாண்டில் தலைதூக்கிய பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின்னர் இறைவன், அரசன் ஆகிய இருவருமே பாட்டுடைத் தலைவராக மாறினர்.
- கம்பராமாயணம் நூலின் பாட்டுடைத்தலைவன் இராமன்
- மூவருலா நூலின் பாட்டுடைத்தலைவர்கள் விக்கிரம சோழன், அவனது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன், பேரன் இரண்டாம் இராஜராஜ சோழன் ஆகிய மூவர்.