தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் பாதீடு என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். பாதீடு என்னும் சொல் பிரித்துக் கொடுத்தல் என்னும் பொருளைக் கொடுக்கும். பாதீடு என்பது வெட்சி வீரர்கள் கைப்பற்றிக் கொண்டுவந்து ஊரின் நடுவே (அம்பலத்தே) செலுத்திய பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவர்களுடைய படைத்தலைவன் அவரவர் ஆற்றிய தொழிலின் தகுதிக்கேற்ப அவற்றைப் பிரித்துக் கொடுத்தல் பாதீடு என்பதாகும்.

விதி தொகு

கவர்கணைச் சுற்றும் கவர்ந்த கணநிரை

அவரவர் வினைவயின் அறிந்தீந் தன்று

சான்றுப் பாடல் தொகு

ஒள்வாண் மலைந்தார்க்கும் ஒற்றாய்ந்து உரைத்தார்க்கும்

புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை

மாறட்ட வென்றி மறவர்தம் சீறூரிற்

கூறிட்டார் கொண்ட நிரை.

பாடல் விளக்கம் தொகு

வாட்போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும் பகையிடத்தே ஒற்று அறிந்து வந்து சொன்ன ஒற்றர்களுக்கும். தவறில்லாமல் சரியாக நிமித்தம் பார்த்து சொன்ன அறிஞர்களுக்கும் தம்முடன் வேறுபடும் பகைவரை வென்ற வெற்றியையுடைய வெட்சி மறவர்கள் தாம் கைப்பற்றிக் கொண்டுவந்த பசுக்களை பகுத்துக் கொடுத்தனர் என இவ்வெண்பாவில் கூறப்பட்டுள்ளதால் இது பாதீடு துறைக்குச் சான்றாகும்.

உசாத்துணை தொகு

முனைவர் கு.முத்துராசன், எளிய உரையில் புறப்பொருள் வெண்பாமாலை, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, சூலை 2004, பக்.23-24.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதீடு&oldid=3728039" இலிருந்து மீள்விக்கப்பட்டது