பாயமைப்பு
பாய்க்கப்பல்களில் பாயமைப்பு (Rig) என்பது, பாய்க்கப்பல்களை முன்னோக்கிச் செலுத்துவதற்குக் காற்றின் வலுவைப் பயன்படுத்துவதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது ஒரு கப்பலில் பாய்மரங்களும், பாய்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும் விதத்தைக் குறிக்கும்.[1] இவ்வமைப்பு பாய்மரங்கள். பாய்க்கம்புகள், பாய்கள், வடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
சொற்களும் வகைப்பாடுகளும்
தொகுபாயமைப்பு, முழுக் கப்பலையும் செலுத்துவதற்காக கப்பலின் உடலில் பொருத்தப்படும் பொறிமுறை அமைப்பு ஆகும். இந்த அமைப்பில், வடத்தொகுதி (நிலைகளையும், வடிவத்தையும் மாற்றுவதற்காக பாயுடனும், பய்க்கம்புகளுடனும் இணைக்கப்படும் வடங்கள்), பாய்கள் (வளித்தகடு, தடித்த துணியாலானது, காற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுவது), கம்புகள் (பாய்களை இணைப்பதற்கான பாய்மரங்களும், பிற வளைகளும் கம்புகளும்) என்பன அடங்கும். வடங்கள் என்னும் சொல் பொதுவாகக் கப்பலில் பயன்படுத்துவதற்கு முன் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வடங்கள், கயிறுகள் போன்றவற்றுக்கே பயன்படுத்தப்படுகின்றது. பயன்படுத்தப்பட்ட பின்னர் அது பாயமைப்பின் ஒரு பகுதியாகிறது.
சில பாய்த் திட்டங்கள் அவற்றின் காற்றியக்க இயல்புகளைக் கருத்திற்கொண்டு குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன. எல்லாப் பாய்க்கப்பல்களும் அவற்றின் உடலமைப்பு, பாயமைப்பு என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
பழங்காலத்தில் கப்பல்கள் போர்களின்போது துடுப்புக்களை மட்டுமே பயன்படுத்தின. போர்க்கப்பல்கள் முன்னேறிச் செல்லும்போது விரைவாகத் திசையை மாற்றுவதற்குப் பாய்கள் தடையாக அமையக்கூடும். முதன்மைப் பாயமைப்பை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டதால், முதன்மைப் பாயமைப்பை விட விரைவாக இயக்கத்தக்கதாக இன்னொரு பாயமைப்பையும் உருவாக்கினர். இது அவசரப் பாயமைப்பு எனப்பட்டது. இன்னல்கள் ஏற்பட்டு விரைவாக விலகிச் செல்லவேண்டிய நேரங்களில், முதன்மைப் பாயமைப்பைப் போதிய அளவு விரைவாக விரிக்க முடியாவிட்டால், மேற்குறித்த பாயமைப்பைப் பயன்படுத்த முடியும். இதனாலேயே இது அவசரப் பாயமைப்பு எனப்பட்டது.