பாரிசு அமைதி உடன்படிக்கைகள் (1783)

1783ன் பாரிசு அமைதி உடன்படிக்கைகள் என்பது, அமெரிக்கப் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஒரு தொகுதி உடன்படிக்கைகளைக் குறிக்கும். 1783 செப்டெம்பர் 3ம் தேதி பெரிய பிரித்தானியாவின் அரசர் மூன்றாம் ஜார்ஜின் பிரதிநிதிகள், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பிரதிநிதிகளுடன், பாரிசு உடன்படிக்கை (1783) எனப் பொதுவாக அறியப்படும் உடன்படிக்கை ஒன்றில் பாரிசில் கைச்சாத்திட்டனர். அத்துடன், பிரான்சின் அரசர் பதினாறாம் லூயியின் பிரதிநிதிகளுடனும், எசுப்பெயினின் அரசர் மூன்றாம் சார்லசின் பிரதிநிதிகளுடனும் வெர்சாய் உடன்படிக்கைகள் (1783) என அறியப்படும் இரண்டு உடன்படிக்கைகளிலும் வெர்சாயில் கைச்சாத்திட்டனர். முதல் நாள் நான்காம் ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முதல்நிலை ஒப்பந்தம் ஒன்று டச்சுக் குடியரசின் பிரதிநிதிகளுடன் கைச்சாத்தானது. எனினும் இதன் இறுதி உடன்படிக்கை 1784 மே 20ம் தேதிவரை கைச்சாத்திடப்படவில்லை.

பிரித்தானியா தனது பதின்மூன்று குடியேற்றங்களை இழந்தது. அத்துடன் இத்தோல்வி முதலாவது பிரித்தானியப் பேரரசின் முடிவாகவும் அமைந்தது. ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிர்பார்த்ததற்கு மேலாகவே கிடைத்தது..[1] ஏனைய கூட்டாளிகளுக்கு குறிப்பிடத்தக்க பயன்கள் கிடைக்கவில்லை. பிரான்சு, ஏழாண்டுப் போரில் தான் பெற்ற தோல்விக்கு பிரித்தானியாவைப் பழிவாங்கியது. ஆனால், அது பெற்ற இலாபம் மிகக் குறைவே (தொபாகோ, செனகல், இந்தியாவில் சிறிய பகுதிகள்). ஆனால், பிரான்சின் நிதி இழப்பு மிகவும் அதிகம். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் இருந்த பிரான்சு போருக்காகவும் ஏராளமாகக் கடன் பெற்றதால் மேலும் நெருக்கடிக்கு உள்ளானது. இது 1780களின் நிதிப் பேரிடருக்குள் அதனை இட்டுச் சென்றது. வரலாற்றாளர்கள் இந்நிலைமையை பிரெஞ்சுப் புரட்சியுடன் தொடர்புபடுத்துவர்.[2] ஒல்லாந்து போரின் இறுதியில் எவ்வித இலாபத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. எசுப்பெயினுக்குக் கலப்பு விளைவே ஏற்பட்டது. அவர்கள் பிரித்தானிய மேற்கு புளோரிடாவைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால் சிப்ரால்ட்டர் பிரித்தானியர் வசமே இருந்தது. நீண்ட கால நோக்கில் இப்புதிய பகுதியால் எவ்வித பயனும் இல்லை.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Richard Morris, The Peacemakers: The Great Powers and American Independence (1983)
  2. Jack P. Greene; J. R. Pole (2008). A Companion to the American Revolution. John Wiley & Sons. p. 527.
  3. Lawrence S. Kaplan, "The Treaty of Paris, 1783: A Historiographical Challenge," International History Review, Sept 1983, Vol. 5 Issue 3, pp 431-442